Wednesday, April 25, 2007



அழகிய பொய்கள்!

"புத்தகத்து மயிலிறகு
குட்டி போடும்!

மழை பெய்யும்
திசை சொல்லும் விட்டில் பூச்சி!

வெள்ளை கொக்கு
கையில் மச்சம் போடும்!

எறும்பின் கண்களுக்கு
நாமெல்லாம் அரக்கர்கள்!

பழவிதையை தின்றால்
வயிற்றில் மரம் முளைக்கும்!

ரயிலேற்றிய
தண்டவாள‌க்காசு காந்த‌மாகும்!

பசுஞ்சாணத்தில்
இடி விழுந்தால் தங்கமாகும்!

இரவில் விசில் ஊதினால்
பாம்பு வரும்!

க‌ட‌வுள் குளிப்ப‌தால்தான்
ம‌ழை பெய்கிற‌து

பனிரெண்டு மணிக்கு
புளியமரத்தில் பேய் வரும்!

சுடுகாட்டு சாம்பல் பூசி
மண்டை ஓட்டுடன் வருவான்
நள்ளிரவு குடுகுடுப்பைகாரன்!

கொடிக்காய் பழவிதைகளை
பழுதின்றி உரித்து
ஜன்னலில் வைத்தால்
வீட்டிற்கு விருந்தாளி வருவார்கள்!

கோவில் சுவற்றில்
தேர்வு எண்னை எழுதினால்
கூடுத‌ல் ம‌திப்பெண் கிடைக்கும்!

திரைப்ப‌ட‌த்தில் வாக‌ன‌ங்க‌ள்
வேக‌மாக‌ செல்லும் காட்சிக‌ளுக்கு
ப‌ட‌ச்சுருளை வேக‌மாக‌ சுற்றுவார்கள்!

விமான‌த்தில் செல்ப‌வ‌ர்க‌ள்
எல்லோரும் வெள்ளைகார‌ர்கள்!

இர‌ண்டாயிர‌மாவ‌து ஆண்டில்
உல‌க‌ம் அழியும்! "என‌

இப்போது நினைத்தாலும்
அழ‌காக‌வே இருக்கின்ற‌ன‌!
குழ‌ந்தை ப‌ருவ‌த்தின்
குற்ற‌மில்லாத‌ பொய்க‌ள்!


~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்
அழகிய காதல்!

காத‌லியே!
உன் பிற‌ந்த‌நாள‌ன்று
அழ‌கு நிலைய‌த்தில்
உன் முக‌த்தை
அழ‌குப‌டுத்தி வ‌ந்து
நான் அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்
அழ‌காய் இல்லை!ஆனால்
ப‌ளிச்சென்று இருக்கிறாய்! என்றேன்,

புன்னகையாய் பார்த்துவிட்டு,
புதிய‌ சுரிதார்
உடுத்திவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருகிறேனா? என்றாய்,
அழ‌காய் இல்லை ஆனால்
அருமையாக‌ இருக்கிறாய்! என்றேன்,

அமைதியாய் பார்த்துவிட்டு,
பாவாடை தாவணி
உடுத்திவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்,
அழ‌காய் இல்லை
ஆனால்அற்புத‌மாக‌ இருக்கிறாய்! என்றேன்,

சலிப்பாய் பார்த்துவிட்டு,
ஜீன்ஸ்,டி.ச‌ர்ட்
உடுத்திவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்,
அழ‌காய் இல்லை ஆனால்
க‌வ‌ர்ச்சியாக‌ இருக்கிறாய்! என்றேன்,

முறைத்து பார்த்துவிட்டு,
ப‌ட்டுச்சேலை
உடுத்திவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்
அழ‌காய் இல்லை ஆனால்
ம‌ங்க‌ள‌க‌ர‌மாக‌ இருக்கிறாய்! என்றேன்,

வெறுப்பாய் பார்த்துவிட்டு,
உடல் முழுவ‌தும்
தங்க‌ஆப‌ர‌ண‌ங்க‌ளை
அணிந்துவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்
அழ‌காய் இல்லை ஆனால்
அல‌ங்காரமாய் இருக்கிறாய்! என்றேன்,

குழப்பமாய் பார்த்துவிட்டு,
எப்போதுதான்
அழ‌காய் இருப்பேன்
நீயே சொல்லேன்!என்றாய்

அடி என் இனிய‌வளே!
நீ! அன்பும்
அக்க‌றையும் செலுத்தும்
ஒவ்வொரு நிமிட‌மும்
அழ‌குதான‌டி!
அழ‌கு
தோற்ற‌த்திலா இருக்கிற‌து
வாழும்
முறையில்தானே இருக்கிறது!
என்றும்என‌க்கு
நீ பேர‌ழ‌கிதான்!என்ற‌தும்
அழ‌கை ம‌ற‌ந்து
அன்பாய் சிரித்தாய்
இது மிக‌வும் அழ‌கு!!

--நம்பிக்கைபாண்டியன்
கவலைகள் மறப்போம்!

(சில தத்துவங்களை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை,முத்த‌மிழ் குழும‌த்தின் போட்டியில் ஆறுத‌ல் ப‌ரிசு பெற்ற‌ க‌ட்டுரை)

உலகில் எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒன்றை பற்றிய கவலைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன,இதில் ஆச்சர்யமான விசயம் என்னவென்றால் கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்தே நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம், எத்தனையோ திறமைசாலிகள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவராததற்கு காரணம் கவலைகள் தான். இவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமன கவலைகள், சிலருக்கு பணத்தை பற்றிய கவலைகள்,சிலருக்கு அழகைப்பற்றிய கவலைகள், சிலருக்கு கடந்த காலத்தை பற்றிய கவலைகள் , சிலருக்கு எதிர்காலத்தைபற்றிய கவலைகள் என‌‌் ஒவொருவரின் வாழ்கைக்கும் ஏற்றார்போல் அதன் வடிவம் மட்டுமே மாறுகிறது,கவலைபடுவதால் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடுமென்றால் தாராளமாக கவலைப்படலாம், ஆனால் தீர்வதில்லை,அதற்கு மாறாக கவலைகள் நம்துன்பங்களை வளர்க்கிறது அது நம்வலிமையை அழித்து விடுகிறது, முன்னேற்றப்பாதையில் செல்லும் நம் வேகத்தை குறைத்துவிடுகிறது,நேரத்தை வீணாக்குகிறது, கவலைகளில் இரு முக்கியமான கவலைகள் கடந்தகாலத்தபற்றியதும், எதிர்காலத்தைபற்றியதும்தான்

கடந்த காலத்தை பற்றிய கவலைகள் ,

"எதை நம்மால் மாற்றமுடியாதோ அதை நினைத்து கவலைப்படகூடாது!" மாற்றமுடியாது என ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்படவேண்டும், கடந்த காலம் என்பது கடவுளால் கூட திருப்பிதரமுடியாத ஒன்று, அதில் நாம் எவ்வளவோ சாதித்து இருக்கலாம் , அல்லது தவறுகள் செய்திருக்கலாம் அதனால் நம் வாழ்க்கை முறை எப்படி வேண்டுமானலும் மாறி இருக்காலாம், அதன் நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்த நினைவுகள் நம் இன்றைய நல்ல முயற்சிகளை தடை செய்வதாக இருக்ககூடாது, இன்னும் சிறப்பாக செயல்பட தேவையான மனப்பக்குவத்தையும் தெளிந்த அறிவையும் தருவதாக இருக்க வேண்டும், சிலர் கடந்த காலத்தில் பெற்ற தோல்விகளை சொல்லி, வாழ்வில் முன்னேற கிடைத்த நல்ல வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டோமே என கவலையுடன் இருப்பார்கள்,நம் தோல்விகள்தான் நமக்குஅதிக அறிவைக் கொடுக்கின்றன,வெற்றியை பெற, வெற்றி பெற்றவனுக்கு எதைச் செய்யவேண்டும் என்றுதான் தெரியும், தோல்வியடந்தவனுக்குதான் எதைசெய்யகூடாது என்று தெரியும், எதை செய்யகூடாது என்று தெரிந்தவன் சரியாக செய‌ல்பட்டால் எந்தஒரு முயற்சியில் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம், இழந்த நிமிடங்களை நினைத்து இருக்கும் நிமிடங்களை இழந்துவிடக்கூடாது, இன்னும்சிலரோ, கடந்த காலத்தில் எவ்வளவு நன்றாக இருந்தோம் இப்போது இப்படி துன்பப்படுகிறோமே என்று கடந்தகால சந்தோசங்களை நினைத்து கவலைப்படுவார்கள், மாற்றங்கள் நிறைந்ததுதான் மனிதவாழ்க்கை எதிர்மறைகள் இருக்கும்வரைதான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்,ஆண்,பெண், நீர் நெருப்பு ,நன்மை ,தீமை ,இருட்டு,வெளிச்சம்,என பல வகையான எதிர்மறைகளில் ஏதேனும் ஒன்றுமட்டும் நிறைந்த வாழ்க்கையை கற்பனை செய்து பாருங்கள் அர்த்தமில்லததாக் இருக்கும், எனவே துன்பமும் இன்பபமும் இயல்பாகவே இருப்பது,அது மாறிக்கொண்டே இருக்கும். இலட்சியத்தை நோக்கிபயணம் செல்லும் சாலைகள் சமதளமாக இருக்கவேன்டும் என்று நினைத்தால் எந்த வெற்றியும் பெறமுடியாது எத்தனைமுறை வேண்டுமானலும் தோல்வி எனும் பள்ளங்களில் கீழே விழலாம்,அதற்கெல்லாம் கவலைப்படாமல் எழுந்து நடந்தால்தான் வெற்றிபெறமுடியும் ,தேர்வுக்கு படிக்கும் மாணவன் நேற்றைய தேர்வை எப்படி எழுதினோம் என்று நினைத்துகொண்டிருந்தால் இன்றைய தேர்வுக்கு மனம் ஒன்றி படிக்க முடியாது,எனவே கடந்த காலம் என்பது முடிந்துபோன நினைவுகள், அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும்சரி அதன் நினைவுகளை பாரமாக சுமக்காமல் அவை கற்று கொடுத்த அறிவை மட்டும் பாடமாக கொண்டு நிகழகாலத்திற்கும் வந்துவிடுவோம்,

எதிர்காலத்தைபற்றிய கவலைகள்:

"எதை நம்மால் மாற்றமுடியுமோ அதை நினைத்தும் கவலைப்படக்கூடாது!" மாற்றமுடியும் என்று ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்பட்டு நேரத்தை விணடிக்க வேண்டும், மற்றுவதற்கு தேவையான முயற்சிகளை ஆரம்பிக்கவும், ஒவ்வொருவர் மனதிலும் நம் எதிர்காலம் இப்படி இருக்கவேண்டும் என்ற கனவு இருக்கும்,ஆனால் அது நனவாகுமா என்ற பயம் நிறைந்த கவலைகள் இருக்கும், ஒரு நல்ல செயலை ஆரம்பிக்கும்போதே இதில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் வரக்கூடாது! துன்பங்களால் வரும் வேத்னையை விட துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் தெரும் வேதனை கொடுமையானது!எதயும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்! "இந்த உலகில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நீ மனம் தளர்ந்து நிற்கும்போது ஒன்றை மட்டும் மறந்துவிடாதே உன் எதிர்காலத்தை நீ இன்னும் இழக்கவில்லை என்பதுதான் அது!"என்கிறார் ஒரு அறிஞர்.உலகில் உயிருடன் இருக்கும் அத்தனை மனிதர்களுக்குமே எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறது, இப்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே நம் எதிர்காலத்தை மாற்றமுடியும் நம் கடந்தகால செயல்கள் நம் நிகழ்காலத்தில் பெரிய மற்றத்தை தந்திருப்பதுபோல நம் நிகழ்காலச்செயல்களும் நம் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை கண்டிப்பாக கொடுக்கும், எதிர்கலத்தைபற்றி கனவுகள் மட்டும் கண்டுகொண்டும் , பயந்து கவலைப்பட்டுக்கொண்டும் இருப்பதால் எதிர்காலம் மாறிவிடாது,நாம் தான் மாற்றவேண்டும், சரியானமுறையில் திட்டமிடவேண்டும், திட்டங்களை முழுமையாக செயலுக்கு கொண்டுவரவேண்டும், கவலைகளையும் துன்பங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படவேண்டும் ,கண்ணை முடிக்கொண்டு கயிற்றில் நடப்பது எவளவு ஆபத்தானதோ, அது போல கவலைகள் நிறைந்த மனத்துடன் வெற்றிக்கு ஆசைப்படுவதும் அவ்வளவு ஆபத்தானது, இனி நாம் செல்லும் வழியெங்கும் கவலைகளை மறப்போம்,தோல்விகளை தொலைப்போம், வெற்றிப்பாதையில் நிலைப்போம், -- நம்பிக்கைபாண்டியன்

Wednesday, April 11, 2007

புரிதல்

அளவில்லாத
அம்மாவின்
அன்பைப்போல்!

கருணைமிகு
கடவுளின்
அருளைப்போல்!

மனம் நிறைந்த‌
துணையின்
காதலைப்போல்!

எதிர்பார்ப்பில்லாத‌
நண்பனின்
நட்பைபோல்!
அறிவுக்கு புரியாத‌

சில விசயங்கள்,
மனதிற்கு மட்டுமே
புரிகின்றன!

~நம்பிக்கை பாண்டியன்
மன‌சாட்சி

தவறுகளை
சரி! என்று சொல்லி
மேலும் மேலும்
செய்யும் மனமும்!

இதெல்லாம்
ஒரு தவறா?
எனச் சொல்லி
தன் தவறுகளை
நியாயப்படுத்தும்
உதடுகளும்!

நான் மட்டுமா
செய்கிறேன்,
நிறைய பேர்
செய்கிறார்களே! என‌
குற்ற உணர்விலிருந்து
தப்பிக்க
தன‌க்கு தானே
ஆறுதல் தேடும் அறிவும்

க‌ட‌வுளின் முன்
கைகூப்பிய‌ பிரார்த்த‌னையில்
த‌வ‌றுக‌ளுக்காக‌
மன்னிப்பு கேட்க‌
ம‌ற‌ப்ப‌தில்லை!

~ந‌ம்பிக்கை பாண்டிய‌ன்
ந‌ட்பு கவிதைகள்

1)
உன் கவிதைகளில்
நிறைந்திருக்கும்
அந்தக் காதலி யாரடா? என்ற‌
தோழி உன் கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காகவே
விரைவாக தேடுகிறேன்
எங்கோ மறைந்திருக்கும்
என் காதலியை!

2)
என் வாழ்வின்
வளர்ச்சிக்கு நீயும்!
உன் வாழ்வின்
வளர்ச்சிக்கு நானும்
எடுத்துக் கொண்ட!
முயற்சிகளால்தான்
நம்வாழ்வில் நட்பு‌
உயர்ந்திருக்கிறது நண்பனே!

3)
அங்கும் இங்கும்
தேடித்திரிந்து
ஒருத்தியிடம் மட்டுமே
எதிர்பார்க்கிறேன் காதலை!
செல்லும்
இடமெங்கும்
ஒவ்வொருவரிடமும்
எதிர்பார்க்கிறேன் நட்பை!

~நம்பிக்கைபாண்டியன்