Monday, July 30, 2007

காதல் நிலை!

அழகின் ஆர்வ‌த்தில்
புரியாத வேகத்தில்
பக்குவமின்றி
பரிமாறிக்கொண்ட‌
அவசரக் காதல்கள்!
மழைக் காலத்துக்
காளான்களாக‌
எளிதில் அழிந்து
மறைகின்றன!

சூழ்நிலை உணர்ந்து
பேசிப் புரிந்து
பொறுமையாக வளர்ந்த
சீரான காதல்கள்!
மலைப் பிரதேசத்து‌
மரங்களாக‌,
உறுதியாய் உயர்ந்து
நிலைக்கின்றன!

~நம்பிக்கைபாண்டிய‌ன



பட்டிமன்ற மடல் உரை!


கூகுள் தளத்தின் அன்புடன் குழுமத்தில்(groups)
"""காதல் குளத்தில் கல்லெறிவது "ஆண்களே"! "பெண்களே!"""" என்ற தலைப்பில் இரு அணிகளாக பட்டிமன்றம் நடந்தபோது, "பெண்களே!" என்ற அணியின் சார்பாக நான் எழுதி அனுப்பிய மடல் உரை!

காதல் குளத்தில் கல்லெறிவது பெண்களே!

அழகான த‌லைப்பில் இந்த‌ப‌ட்டிம‌ன்ற‌த்தை சிற‌ப்பாக‌ ந‌ட‌த்திவ‌ரும் அன்புட‌ன் குழுநிர்வாக‌த்திற்கும், ஆர்வ‌மாக‌ ப‌டித்து ர‌சித்துக்கொண்டிருக்கும் குழுந‌ண்ப‌ர்களுக்கும்,காத‌ல் குளத்தையெல்லாம் தாண்டி, காதல் க‌ட‌லில் மூழ்கி முத்தெடுத்து க‌ம்பீர‌மாக‌ வீற்றிருக்கும்ம் ந‌டுவ‌ர் அவர்களுக்கும்! இன்னும் த‌லைப்பிற்கு அர்த்த‌மே புரியாம‌ல் பேசிகொண்டிருக்கும் எதிர‌ணி ந‌ண்பர்களுக்கும்! அருமையான பல‌க‌ருத்துக்க‌ளை சொல்லி, இன்னும் சொல்ல‌ப்போகும் என‌து அணி ந‌ண்பர்களுக்கும்,என் அன்பு வ‌ண‌க்க‌ங்க‌ள்,
எங்கள் அணியின் சார்பாக‌ ஏற்க‌ன‌வே விரிவாக‌, அருமையாக‌ க‌ருத்துக்க‌ளை ச‌ஞ்ச‌ய்காந்தி அவ‌ர்க‌ளும்! மீரான் அவ‌ர்க‌ளும் சொல்லி இருக்கிறார்க‌ள், சுருக்க‌மாக‌ தெளிவாக‌ ம‌துமிதா அவ‌ர்க‌ள் சொல்லி இருகிறார்க‌ள்! எதிர‌ணியின‌ர் அணியின் பலத்தை உயர்த்த என்னென்னமோ சொல்லித்தான் பார்த்தாங்க‌‌! ஆனால் எதிர் பார்த்த‌ ப‌ல‌ம் இல்லை, ரொம்ப வீக்கா இருக்காங்க‌! எங்க‌ள் அணியின் ப‌ல‌த்தை பார்த்து பாதியிலேயே எஸ்கேப் ஆகிடாதிங்க‌‌! கடை‌சி வ‌ரை இருந்து எங்க‌ள் வெற்றிய‌ பார்த்துட்டு போங்க‌!
ந‌டுவ‌ர் அவர்க‌ளே,இங்கே ந‌ம‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் த‌லைப்பு, ச‌ப‌ல‌க்குள‌த்தில் க‌ல்லெறிவ‌து யார் என்ப‌த‌ல்ல!

ஈவ் டீசிங் குள‌த்தில் க‌ல்லெறிவ‌து யார் என்ப‌த‌ல்ல!

காதல் குளத்தில் கல்லெறிவது யார் என்பதுதான்,

உண்மையான காதலுக்கு மனம் தான் முக்கியபங்கு வகிக்கிறது, அப்படி பார்த்தால் யார் முதலில் மனப்பூர்வமாக காதலிக்கிறார்களோ அவர்கள்தான் காதல் குளத்தில் கல்லெறிவதாக அர்த்தம்!இதை எதிர‌ணியிண‌ர் இன்னும் புரிந்துகொள்ள‌வில்லை! ஆண்க‌ள் தான் அதிக‌ம் சைட் அடிக்கிறார்க‌ள், ஆண்தான் பெண்ணின் பின்னால் அலைகிறான், ஆண்தான் பெண்னுக்காக‌ அங்கும் இங்கும் சுற்றுகிறான் என்றெல்லாம் சொல்கிறார்க‌ள்! இதெல்லாம் காத‌லாகி விடுமா??

காத‌ல் என்ப‌து ம‌ன‌தை அடிப்படையாக‌ கொண்ட‌ விச‌ய‌ம், ஆண் பெண்ணின் பின்னால் சுற்றும் போதும் அவ‌ள் ம‌ன‌தில் இட‌ம்பிடிப்ப‌த‌ற்காக, ப‌ல‌ பொய்க‌ளும்,சாக‌ச‌ முய‌ற்சிக‌ளும் செய்யும்போதெல்லாம் அவ‌ன் ம‌ன‌ப்பூர்வ‌மான‌ காதலை உண்ர்வ‌தில்லை!இது மனித இயல்பிற்க்கே உரிய பாலின ஈர்ப்பு,அதனால்தான் ஆண்கள் நிறையபேரை காதலித்துக்கொண்டிருகிறார்கள் !உண்மை காதலை உணரும் முன்பே அவளிட‌ம் காத‌லிப்பதாக‌ உள‌றி கொட்டிவிடுகிறான், இவனுடைய‌ செய‌ல்க‌ள் அவள் மனதிற்கு பிடித்து, முன்பே இவனை காதலிக்க ஆரம்பித்திருந்தாலும் தாம‌த‌மாக‌வே பெண் காதலை வெளிப்ப‌டுத்துகிறாள்! அவ‌ள் ம‌ன‌ம்திற‌ந்து த‌ன் காத‌லை சொல்லும்போதுதான் ஒரு ஆண் உண்மையாக‌வே அவ‌ளை காத‌லிக்க‌ ஆர‌ம்பிக்கிறான்! இதை ஒரு க‌விதையாக‌வே சொன்னால்!

பார்வைகளால்
நான் உன்னை
காதலிக்க‌ ஆர‌ம்பித்த‌
நாட்க‌ளை விட‌
ம‌ன‌தால்
நீ என்னை
காத‌லித்த பிறகுதான்
இத‌ய‌த்தால் உண்ர்ந்தேன்
உண்மைக் காத‌லை!


காத‌லுக்கும், விருப்ப‌த்திற்கும் நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கிற‌து இதைப் புரிந்துகொண்டால், காத‌ல் குள‌த்தில் க‌ல்லெறிவ‌து பெண்கள்தான் என்ப‌து புரியும்!

காத‌லை 4 நிலைக‌ளாக‌ பிரிக்க‌லாம்! என்ப‌து என்னுடைய‌ க‌ருத்து! அதில் மூன்றை ம‌ட்டும் இங்கு சொல்லுகிறேன்!

1) விருப்ப‌ம்!(ஈர்ப்பு)

நாம் ஒவ்வொருவ‌ருமே வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைக‌ளில் வெவ்வேறுவித‌மான‌ ம‌னித‌ர்க‌ளை ச‌ந்திக்கிறோம், அப்ப‌டி ச‌ந்திப்ப‌வ‌ர்க‌ளில் சில‌ர் ம‌ட்டும் ந‌ம்ம‌ன‌தில் ஏதேனும் ஒருவகையில் ஒரு தாக்க‌த்தை ம‌ன‌தில் ஏற்ப‌டுத்திவிட்டுசெல்வதால் அவர்களை!நமக்கு பிடிக்கும்!
சில‌ரை அழ‌கால் பிடிக்கும், சில‌ரை அறிவுத்திறமையால் பிடிக்கும், சில‌ரை ந‌ல்ல‌ குண‌ங்க‌ளால் பிடிக்கும்! சில‌ரை சூழ்நிலைக்கேற்றார்ப்போல் பேசும் க‌ல‌க‌ல‌ப்பான‌ பேச்சால் பிடிக்கும்! இது ந‌ம் வாழ்வில் நிறைய‌பேரிட‌ம் வ‌ரும்!இது காத‌ல் அல்ல!இந்த குளத்தில்தான் ஆண்கள் முதலில் கல்லெறிகிறார்கள்!

2) விருப்ப‌த்தின் பிர‌திப‌லிப்பு!

அவ‌ர்க‌ளை ந‌ம‌க்கு பிடிப்ப‌துபோல! நம்மையும் அவர்களுக்கு பிடிக்கும்! ஆனால் இருவ‌ருமே காதலை சொல்லிகொள்ள‌ மாட்டார்க‌ள்! சாத‌ர‌ண‌மாக‌வோ, போலியான‌ ந‌ட்பாக‌வோ பேசிக்கொள்வார்க‌ள்! பார்ப்பார்க‌ள், சிரிப்பார்க‌ள்,ச‌ம்ப‌ந்த‌மே இல்லாம‌ல் ஏதேதோ பேசிகொள்வார்கள்!சூழ்நிலைகள் பொருந்தாது என்றால் கடைசிவரை சொல்லாமலே பிரிந்துவிடுவார்கள்! எனவே இதையும் காத‌ல் என்று சொல்ல‌ முடியாது, ஆனால் காத‌லுக்கு அடிப்ப‌டை நிலை இதுதான்! இங்கே ஆண்பெண் இருவ‌ருமே சம‌மாக‌வே க‌ல்லெறிகிறார்க‌ள்!

3)புரிந்துகொள்ளுத‌ல்

இந்த நிலையில் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்திக்கொள்வார்கள், மனம்விட்டு நிறைய பேசிக்கொள்வார்கள், ஒருவரை பற்றி ஒருவர் நன்கு பேசி புரிந்துகொள்வார்கள்! ஒருவர் மீது ஒருவர்அதீதமான அன்பும் அக்கைறையும் செலுத்துவார்கள்! எல்லை மீறாமல் நடந்துகொள்வார்கள்! இங்கே காதல் என்பது மனதை மையமாககொண்டிருக்கும்!இங்கேதான் உண்மையான காதல் ஆரம்பிக்கிறது!மனம் என்னும் கல்லை பெண்தான் முதலில் எறிகிறாள்!

எந்த ஒரு காதலிலும் ஒருபெண் என்ன மனநிலையில் இருக்கிறாளோ அதை பொறுத்தே அந்த காதலின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது!காதலர்களுக்குள் மனப்பூர்வமான காதல் என்பது ஒரு பெண்ணில்தான் முதலில் தொடங்குகிறது, வார்த்தைகளால் வேண்டுமானால் ஆண்வெளிப்படுத்தலாம், ஆனால் பெண்கள் பார்வைகளாலும் பேசும்போது மறைமுகமாக சிலவார்த்தைகளாலும் காதலை வெளிப்படுத்துவார்கள்! ஆண் முதலில் சொல்லட்டும் என் எதிர்பார்ப்பார்கள்!சொன்னாலும் உடனே சம்மதிக்க மாட்டார்கள்! (சொன்னால் அவர்கள் இமேஜ் குறைஞ்சுடுமாம், கல்யாணத்துக்கப்புறம் சண்டை வரும்போது "நீங்கதானே என்ன துரத்தி துரத்தி காதலிச்சிங்க!" என்று சொல்லி திட்டுவதற்கும் உதவுமாம்),

சைட் அடிக்கும்போதும், முதல் முதலில் காதலிக்க ஆரம்பிக்கும்போதும் பெண்களின் மாற்றங்களினை கவனித்து பாருங்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கும்! சமீபத்தில் நான் எழுதிய உளறல் கவிதையின் வரிகளின் இடையே இதை எழுதி இருப்பேன்!

.....................
எல்லோருக்கும் தெரியும்படி
முகத்தை திருப்பி
உன்னை பார்க்கிறேன் நான்!
யாருக்கும் தெரியாமல்
கண்களை திருப்பி
என்னை பார்க்கிறாய் நீ!
இயல்‌பாய் இருந்த‌ நீ,
நான் பார்ப்ப‌தை அறிந்ததும்
ப‌ர‌வ‌ச‌மாகி உன்
செய‌ல்க‌ளை மாற்றுகிறாய்!

நான் பா‌ர்க்காத‌போது
மெதுவாக‌ விழிக‌ளை
ந‌க‌ர்த்தி பார்க்கிறாய்
அதை நான் பார்க்கும்போது
மின்ன‌ல்வேக‌மாய் திருப்பி
விழிக‌ளை ம‌றைக்கிறாய்!

ந‌ன்றாக‌ இருக்கும் உடைக‌ளை
ச‌ரி செய்வ‌துபோல் ந‌டிக்கிறாய்!
க‌டிகார‌த்தில் அடிக்க‌டி
ம‌ணிபார்க்கிறாய்!
உன் விர‌ல் ந‌க‌ங்க‌ளை
கடிப்ப‌து போல
பாவ‌னை செய்கிறாய்!

நெற்றியின் முன்னே
இட‌து ப‌க்க‌த்தில்
சுருண்ட‌ முடிக‌ளை
அழ‌காக‌ வ‌ல‌து கைக‌ளால்
பின்னால் இழுத்து விடுகிறாய்!
கழுத்தில் இருக்கும்
மெல்லிய சங்கிலியை
அவ்வப்போது கைகளால்
பிடித்து உருட்டி பார்க்கிறாய்!

உன் தோழியுடன்
பேசிகொண்டே
க‌ண்க‌ளை ம‌ல‌ர‌விட்டு
ப‌ற்க‌ள் தெரியும்ப‌டி
பேசும் வார்தைகளுக்கு
சிறிதும் ச‌ம்ப‌ந்த‌மின்றி
அழ‌காக‌ சிரிக்கிறாய்!
ப‌ள‌ப‌ள‌ப்பு குறையாம‌ல்
உன் உத‌டுக‌ளை அவ்வ‌ப்போது
சுழித்து ஈர‌ப்ப‌டுத்துகிறாய்!

பேச ஆர‌ம்பிக்கும்போது
பேச‌ம‌றுக்கிறாய்!
பேசிப்ப‌ழ‌கிய‌ பிற‌கு
பேச்சை
நிறுத்த‌ ம‌ற‌க்கிறாய்!.........
....................>


காத‌லித்து கொண்டிருக்கும்போது பெண்களின் பேச்சை க‌வ‌னித்துபாருங்க‌ள், ஆண்க‌ள் கேட்கும் பெரிய‌ கேள்விக‌ளுக்கு சுருக்க‌மாக‌ தெளிவாக‌ ப‌தில் சொல்லிவிடுவார்க‌ள்! ஆனால் அவ‌ர்க‌ள் கேட்கும் சிறிய‌ கேள்விக‌ளுக்கு கூட‌ ஆண்க‌ள் ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ ப‌தில் சொல்லவேண்டிய‌திருக்கும்!அவ‌ள் ம‌ன‌தில் உயர்ந்த‌இட‌ம் பிடிக்க‌ ஆண், புகழ்ந்தும்,பாரட்டியும் கெஞ்சியும், கொஞ்சியும் ஏதேதோ முய‌ற்சிகள் செய்துகொண்டிருப்பான்! ஆனால் பெண்க‌ளோ சில‌ பார்வைக‌ளாலும் சில‌ வார்த்தைகளாளும் அவ‌ன் ம‌ன‌தில் மிக‌ உய‌ர்ந்த் இட‌த்தை பிடித்துவிடுவார்க‌ள்!

காதலில் பொறுப்புணர்ச்சியும் பெண்களுக்கே அதிகம் இருக்கிறது! ஆண் நிகழ்காலத்தைப்பற்றியே அதிகம் பேசுவான், பெண்தான் காதலில் எதிர்காலத்தைபற்றி யோசிப்பாள்!காதலிக்கும்போது நிறைய பேசவேண்டும், நிறைய அன்பு செலுத்தவேண்டும், நிறைய அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என பெண்களின் ஆர்வமும் வேகமும்தான் அதிகமாக இருக்கும்!

பெண்களின் காதல் உணர்வை கண்ணதாசன் இரண்டே வரிகளில் அருமையாக சொல்லி இருப்பார்!
""ஆணை விட பெண்ணுக்கு ஐந்து மடங்கு ஆசைகள் அதிகம்! ஆனால் பத்து மடங்கு அடக்கம் அதிகம்!""

நன்றாக காதலித்துவிட்டு பிரச்சனைகள் வரும்போது , காதலை உதறிவிட்டு காதல் தோல்விக்கும் பெண்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள்,காதலில் கடைசிவரை உறுதியாக இருந்து காதலின் வெற்றியிலும் பெண்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்!

இதை எல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் காதலில் எந்த ஒரு நிலையிலும் பெண்தான் சிறந்தவளாக இருக்கிறாள்! சிலபெண்கள் கல்லுடன் சேர்த்து குப்பைகளையும் எறிந்து காதல் குளத்து நீரை பயன‌ற்றதாக்குகிறார்கள், பல பெண்கள் கல்லுடன் சேர்த்து கற்கண்டையும் எறிந்து காதல் குளத்தின் நீரின் சுவையை கூட்டுகிறார்கள்! எனவே காதல் குளத்தில் ஆண்கள் எறிவெதெல்லாம் கல் அல்ல! வெறும் மண்!அவைகள் காதலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதையும் ஏற்படுத்துவதில்லை! பெண்கள் எறிவதுதான் உண்மையான கல்!அவைகள்தான் அலை அலையாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன!

நடுவர் அவர்க்ளே,மனதை மையமாக கொண்ட ""உண்மையான காத‌ல்குள‌த்தில், உண்மையாக‌வே க‌ல்லெறிவ‌து பெண்களே! பெண்களே! பெண்க‌ளே!"" என்று சொல்லி! கருத்துக்களில் எதிரணியை விட நாங்கள் நிறைந்திருந்தாலும் நபர்களின் எண்ணிக்கையில் அவர்களை விட(10)எங்க‌ள் அணி‌ குறை‌ந்துள்ள‌தால்(8) கடைசி க‌ட்ட‌த்தில் பதில் பேச‌ யாரேணும் இருவ‌ருக்கு கூடு‌த‌ல் வாய்ப்பு கொடுக்கும்ப‌டி கேட்டுகொண்டு," உண்மையான‌காதல் எனும் குளத்தில் கல்லெறிவது பெண்களே!" என்ற தீர்ப்பினை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்!

ந‌ண்ப‌ன்
ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

(காதலை
உணர்ந்து எழுதுபவனல்ல !
எழுதி உணர்பவன்!)