Monday, September 22, 2008

உதவி!

(சிறுகதை ~நம்பிக்கைபாண்டியன்)

பாலாவுடன் பேசிகொண்டே கல்லூரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எங்களை நோக்கி ஓடி வந்த செல்வா "டேய் மச்சான் அவசரமா ஒரு ஐம்பது ரூபாய் வேண்டும்! நாளை தந்துவிடுகிறேன்" என்றான் பாலாவிடம்!

பாலாவோ சிறிதும் யோசிக்காமல் "மாதக்கடைசி ஆகிவிட்டது என்னிடமும் பணம் இல்லை"என்றான், அது பொய் என்பதை தெரிந்து கொண்டவனாய் முகத்தை சுருக்கி சலிப்பாய் பார்த்தபடி" பரவாயில்லைடா" என்றபடி நகர்ந்தான் செல்வா!


பாலா அப்படி சொன்னது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்த‌து! வசதியில் சுமாரான குடும்பம்தான் அவனுடையது! ஆனால் வகுப்பில் பாலா நன்றாக படிக்கும் மாணவன், அவன் வீடு இருக்கும் பகுதியில் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து ப‌த்தாம் வகுப்பு மற்றும் ப‌னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் சென்டர் நடத்துகிறான்,நிறைய மாணவர்கள் படிப்பதால் நல்ல வருமானம் வருகிறது அதனால் எப்போதும் பாலவிடம் பணம் இருக்கும்!நான் கூட ஒருமுறை அவசிய செலவிற்கு பாலவிடம்தான் உதவிக்கு நின்றிருக்கிறேன், மறுக்காமல் செய்திருக்கிறான்!


"ஏண்டா பணம் இல்லையென்று சொன்னாய்" என்று கேட்க நினைத்தேன் ஆனாலும் "அவன் பணத்தை அவன் என்ன வேண்டுமானலும் செய்யலாம் நாம் கேள்வி கேட்பது சரியல்ல! எனற எண்ணம் தடுக்கவே கேட்கவில்லை! இருவரும் வகுப்பறைக்குள் நுழைந்தோம்!


வெளியூரிலிருந்து வந்து கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி படிக்கும் லிங்கம் முன் பெஞ்ச்சில் தலைவைத்து சாய்ந்து படுத்தபடி அமர்ந்திருந்தான் !

"என்னடா மச்சான் சாப்பிட போகவில்லையா இன்னும் இங்கே இருக்கிறாய்"என்றேன்,


" பசியில்லைடா அதனால்தான் போகவில்லை" என்றான் லிங்கம்,


"பசிக்கவில்லையா? சாப்பிட பண‌மில்லையா உண்மையை சொல்" என்றான் பாலா!


லிங்கம் தயங்கிய படியே" இன்று தேதி 31 ஆச்சுடா, ஊரில் இருந்து அப்பா வர 2 நாள் ஆகும்!அதானால்தான் செலவை குறைத்துவிட்டேன்!காலையில் லேட்டாகத்தான் சாப்பிட்டேன்!ராத்திரி வேகமா சாப்பிட்டால் பசி தெரியாது" என்றான்.


சட்டென்று தனது சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் ஒன்றை எடுத்து அவனது சட்டைப்பையில் திணித்து" முதலில் போய் சப்பிட்டு வா" என்றான் பாலா.

தயங்கியவனின் தோள்களை பிடித்து வகுப்பறையின் வாசல் வரை தள்ளிச்சென்று "நேரமாகிறது வேகமாக‌ போய் சப்பிட்டு வா"என்றான்.


பாலவின் செயல் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, சற்று முன் செல்வா 50 ரூபாய் கேட்டபோது இல்லை என்றவன், இப்போது லிங்கம் கேட்காமலேயே 100 ரூபாய் கொடுத்தனுப்புகிறான்.என்ன காரணம்? முதலில் தயங்கினாலும் நண்பன் என்ற உரிமையில் ஏன் இந்த வித்தியாசம் என்பதை பாலவிடம் கேட்டுவிட்டேன்.


மெலிதாய் சிரித்துவிட்டு " செல்வா என்னிடம் பணம் கேட்ட போதும் என்னிடம் பணம் இருந்தது, ஆனால் அவன் எதற்காக பணம் கேட்டான் தெரியுமா? நம் வகுப்பில் சில நண்பர்கள் சேர்ந்து இன்று மதியக் காட்சிக்கு திரைப்படம் பார்க்க செல்கிறார்கள்!அத‌ற்கான‌ ப‌ண‌ப்ப‌ற்றாக்குறைக்கு என்னிட‌ம் வ‌ந்தான், நான் ம‌றுத்துவிட்டேன்" ஆனால் லிங்கம் சாப்பிடுவ‌த‌ற்கே ப‌ண‌ம் கேட்க‌ த‌ய‌ங்கி ப‌சியோடு இருந்தான்! அத‌னால்தான் கேட்க‌ம‌லேயே உத‌வி செய்தேன்!


"அடிப்ப‌டைத்தேவைக‌ளுக்காக‌ என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய‌லாம்! ஆனால் அதிக‌ப‌ட்ச‌ தேவைக‌ளுக்காக‌ எந்த‌ உத‌வியும் செய்வ‌தில்லை" என்ற பழக்கம் என‌க்கு எப்போதும் இருக்கிறது! அத‌னால் தான் அப்ப‌டி ந‌ட‌ந்துகொண்டேன் என்ற‌ பாலாவின் கொள்கையும், ந‌ட்பும் என் ம‌ன‌தின் உய‌ர‌த்தில் அமர்ந்திருந்த‌து!

No comments: