Tuesday, November 07, 2006

ஆரோக்கியமே அழகு!

(தேன்கூடு இணைய‌த‌ள‌ம் ந‌ட‌த்தும் போட்டிக்கான‌ சிறுகதை(க‌ரு த‌லைப்பு--இல‌வ‌ச‌ம்)

"அம்மா பசிக்குது சாப்பாடு ரெடியா?" என்ற கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தாள் அருணா.
அடுப்படியில் அம்மாவின் இருமல் சத்தம் கேட்டது.

"மழையில் நனைஞ்சதால விறகு சரியா எரியமாட்டேங்குதுடி! இப்பதான் சாதம் அடுப்புல இருக்கு இன்னும் நேரமாகும்"

"சரிம்மா, நீ போய் குழம்புக்கு மசால் அரைச்சுடு! அடுப்ப நான் பார்த்துக்குறேன்" என்று அடுப்பில் நெருப்பை ஊதுகுழலால் ஊதி எரியும் வேகத்தை அதிகப்படுத்தி விட்டு காய்களை நறுக்கத் துவங்கினாள்.

சாதம் வடித்துக்கொண்டிருந்தப்பொழுது "அருணா வேகமா வாடி நாடகம் ஆரம்பிக்க போறாங்க" என்று பக்கத்து வீட்டு தோழி ப்ரியா அழைப்பது கேட்டது.
"அம்மா நீ குழம்பை பார்த்துக்கோ, நான் டி.வி யில நாடகம் முடிஞ்சதும் வந்து சாப்பிட்டுக்குறேன்"

"முதலில் சாப்பிடு! அப்புறம் உன் துணியெல்லாத்தயும் துவை; அழுக்கு நிறைய இருக்குது, நாடகம் ஒரு நாள் பாக்காட்டி ஒண்ணும் குறைஞ்சிடமாட்ட!" என கோபித்தாள் அம்மா

"ஏம்மா இப்படி இருக்கெ?" நல்ல மார்க் வாங்கியும் என்னெ மேல படிக்க அனுப்பாம நம்ம ஊரு மில்லுல வேலைக்கு சேர்த்துவிட்டுட்டடெ! என்கூட படிச்சவளுக எல்லாம் காலேஜ் முடிக்க போறாங்க, வேலை முடிச்சு வீட்டுக்கு வர 6.30 மணி ஆகுது. வந்து வீட்டு வேலையும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன். ஏதோ இந்த நாடகத்தை மட்டும் பக்கத்து வீட்டு பிரியா கூட போய் பாக்கலாம்னா அதுக்கு கூட விடமாட்டேங்கறியே? போகவேண்டாம்னா அப்பாவ முதலில் டி.வி வாங்க சொல்லு".

"நான் என்னடி செய்ய?, நம்ம சூழ்நிலை அப்படி இருக்கு. அவர் சம்பளம் சாப்பாட்டுக்கும் உன் தம்பி தங்கச்சி படிப்புக்கும் சரியா இருக்கு. உன் சம்பளத்தில் காசு சேர்த்தாதான் உன் கல்யாணத்த‌ நடத்தமுடியும். எனக்கு மட்டும் உன்ன நல்லா படிக்க வைக்கணுங்கற ஆசை இல்லையா என்ன? நம்ம சூழ்நிலை அப்படி இருக்கு. ம்ம் சரி சரி போய்ட்டு சீக்கிரமா வா."

"அடியே! இப்போதானெ பசிக்குதுன்னு சொன்ன‌. நாடகம் பார்த்தா பசி அடங்கிடுமா? முதலில் சாப்பிடு. நேரத்துக்க்கு சாப்பிடாம அப்புறம் வயிறு வலிக்குதுனு சொல்லாதேடி!" என்று அக்கறையான கோபத்துடன் திட்டினாள் அருணாவின் பாட்டி!

அருணாவின் முதிய தோழி என்று சொல்லலாம் பாட்டியை! அம்மாவுக்கும் பாட்டிக்கும் சரிப்பட்டுவராது. அம்மா திருமணமாகி வந்த புதிதில் பாட்டி அம்மாவிடம் கடுமையாக நடந்துகொள்ளும்போது, அம்மா பொறுமையாக இருந்தாள், இன்று காலம் மாறிவிட்டது. அம்மா பாட்டியிடம் கடுமையாக நடந்துகொள்கிறாள். பாட்டியும் தன் நிலை அறிந்து பொறுமையாக இருக்கிறாள்.

பாட்டிக்கு அன்பான ஒரு துணை என்றால் அது அருணா தான். வயதானவர்களுக்கு அன்பு தான் அவசிய தேவை என்பதை தனக்கே தெரியாமல் பாட்டிக்கு அளித்துக்கொண்டிருந்தாள் அவள்.

படிக்கும்போதும் சரி, இப்போது வேலைக்குப் போகும்போதும் சரி, பாட்டியுடன் அதிகம் இருப்பாள் அவள். வீட்டில் இருக்கும் நேரங்களில் தம்பி தங்கைகளுடன் விளையாடி, சண்டையிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பாட்டியிடம் தான் கதை பேசிக்கொண்டு இருப்பாள். பாட்டி தனது கடந்த கால வாழ்க்கையை கதைபோல சுவாரஸ்யமாக சொல்லுவதை ரசித்துக் கேட்பாள். அவளும் தனது பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளையும், திரைபடங்களைப் பற்றியும் பாட்டியிடம் சொல்லுவாள்.

"அப்புறம் சாப்பிடுறேன் பாட்டி" என்று சொல்லி வேகமாக பிரியாவின் வீட்டுக்கு ஓடி பிரியாவின் அருகே அமர்ந்தாள் . நாடகம் ஆரம்பித்தது. விளம்பர இடைவேளை வந்தது. அருணா விளம்பரங்களை ஆர்வமாக பார்ப்பாள். உலகம் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை விளம்பரங்களை பார்த்துதான் தெரிந்துகொள்வாள்.அப்போது தான் அந்த புது விளம்பரம் வந்தது.

"ஆரோக்கியத்துடன் அழகு இலவசம்" என்ற வாசகத்துடன் அவள் வீட்டில் எல்லோரும் வழக்கமாக பயன்படுத்தும் பதினைந்து ரூபாய் மதிப்புள்ள ஆரோக்கியத்தை பாதுகாக்கும் குளியல் சோப்புடன், ஐந்து ரூபாய் மதிப்பில் முகத்தை அழகு படுத்தும் சிவப்பழகு க்ரீம் இலவசம்" என்று காட்டியது விளம்பரம்.
ஏழே நாட்களில் முகம் சிவப்பாகும் என்ற கூடுதல் வாசகமும் வந்தது. அடுத்த விளம்பர இடைவேளையிலும் அந்த விளம்பரம் வந்து அவள் மனதை பாதித்து விட்டுச் சென்றது.

சாப்பிட்டு படுக்கும் வரை, அந்த விளம்பரத்தையே நினைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவிடம் சொல்லி எப்படியும் அந்த சோப்புடன் இலவசமாக சிகப்பழகு க்ரீமை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அருணாவை அதிகம் கவலை கொள்ளச் செய்வது அவளின் நிறம் தான். சற்று அதிகமான கருப்பு. சிலர் அவளை " கருவாச்சி" என்று சொல்லும் போது அந்த நேரத்தில் அவள் அதை பொருட்படுத்தாவிட்டாலும் வீட்டிற்கு வந்து அதை நினைத்து நினைத்து தனிமையில் அழுவாள்.

அப்போதெல்லாம் அவளின் பாட்டி "அரசனுக்கு உள்ளங்கால் சிவப்பா இருந்தாலும் அதுக்கு கிடைக்கிறது செருப்புதான், உச்சந்தலை கருப்பா இருந்தாலும் கிரீடம் அதுக்குதாண்டி! என்று சொல்லியும் ,"வாழ்க்கை நிறத்தில் இல்லை நினைப்பில் இருக்கிறது! என்றும் ,ராமயணத்தில் ராமனும் கருப்புதான் என்றும், கருப்பாக இருந்த சாதனையாளர்களை பற்றியும் , நிறைய‌ சொல்லி சமாதானப்படுத்துவாள்.

"கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் நாம் இன்னும் கொஞ்சம் சிவப்பா அழகா பிறந்திருக்கலாமே" என்று வேதனையுடன் நினைப்பாள். அம்மாவிடம் முன்பே சிவப்பழகு க்ரீம் வாங்கித் தர சொல்லி பலமுறை கேட்டிருக்கிறாள்.

"குடிகிறது கூழு! குளிக்க பன்னீரா! "நம்ம நிலமைக்கு இருக்கிற அழகு போதும் போய் வேலையப் பாருடி !" என்ற திட்டுதான் கிடைத்தது. அம்மாவுக்கு பிடிக்காதது எது செய்தாலும் அடி தான் விழும்! எனவே அதை அத்தோடு மறந்துவிடுவாள்.
ஆனால் இந்த விளம்பரத்தைப் பார்த்தப் பிறகு இந்தமுறை எப்படியும் சோப்பு வாங்கும் போது இலவசமாய் கிடைக்கும் சிவப்பழகு கிரீமை வாங்கி விடவேண்டும் என்று முடிவு செய்தாள். அம்மா திட்டினாலும் இலவசமாய் கிடைப்பதை காரணமாக சொல்லிவிடலாம். அம்மாவுக்கு தெரியாமல், தனியா இரண்டு சிவப்பழகு கிரிம் வாங்கி சில நாட்களுக்கு தொடர்ந்து வச்சுக்கணும், அம்மா கேட்டா இன்னும் அது தீரலைனு சொல்லி சமாளிச்சுக்கலாம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டே தூங்க ஆரம்பித்தாள். அன்றைக்கு பார்த்து வீட்டிற்கு வெளியே பலத்த மழை பெய்துகொண்டிருந்தது.

காலை விடிந்ததும் விரைவில் எழுந்து அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். அப்போது "அம்மா!!!!!!!!!!" என்ற பாட்டியின் அலறல் சத்தம் கேட்டது, பதற்றத்துடன் ஓடிச்சென்று பார்த்தப்பொழுது பாட்டி இரத்தம் வழிந்த தலையுடன் தரையில் வீழ்ந்து கிடந்தாள்!
மழையினால் ஏற்பட்ட ஈரத்தில் கால் வழுக்கி கீழே விழுந்திருக்கிறாள். விழுந்த இடத்தில் துவைப்பதற்க்கு பயன்படுத்தும் கல் இருந்ததால் தலையில் பலத்த அடி. உடனடியாக எங்கெங்கோ தேடி வண்டி பிடித்து வருவதற்க்குள் நிறைய இரத்தம் வெளியேறியிருந்தது. ஏழைகளுக்கென்றே இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

முதலுதவி மட்டும் செய்து விட்டு "உடனே அருகே இருக்கும் மதுரை பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்ல வண்டி மதுரைக்கு மருத்துவமனைக்கு சென்றது!
அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே இதைவிட இன்னும் மோசமான நிலையில் பலர் காத்திருந்தனர், அவர்களைப்பார்த்த அருணா அதிர்ச்சி அடந்தாள். உடலெங்கும் இரத்த காயஙகள். சிலர் விபத்து என்று சொன்னார்கள். சிலர் சண்டை அடிதடிகளால் என்று சொன்னார்கள். தேவையான விவரங்களை பதிவு செய்தபின் சிகிச்சைக்கு அனுப்பினார்கள்.

மருத்துவர்கள் பாட்டிக்கு உடனடியாக செய்யவேண்டிய சிகிச்சைகளை செய்து தனி பிரிவில் இடப்பற்றாக்குறையால் தீவிர சிகிச்சையில் இருக்கும் பொது பிரிவிற்கு மாற்றினார்கள்.

மருத்துவமனை வாசமும், காட்சிகளும் அருணாவுக்கு புது உலகத்தை அறிமுகப்படுத்தின. இந்த பிரிவில் இருக்கும் எல்லோருமே உயிருக்கு போராடுபவர்கள். ஏழு மாத குழந்தை முதல் எழுபது வயது முதியவர்கள் வரை விதம் விதமான விபத்துகள், விதம் விதமான நோய்கள். பலருடைய உடம்பிலும் பல குறைகள்.

திடீர் திடீரென பலர் சேர்ந்து கதறி அழுவார்கள், போய் பார்த்தால் யாராவது இறந்திருப்பார்கள். பிணத்தின் முகத்தை மூடி பிரேத பரிசோதனைக்கு கைவண்டியில் இழுத்துச் செல்வார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் பாட்டி பிழைக்க வேண்டும் என்று பயத்துடன் அருணா பிரார்தனை செய்வாள்.
மறு நாள் வரை பாட்டியின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை, மருத்துவர்கள் இரண்டு நாட்கள் ஆனால் தான் தெரியும், உறுதியாக எதையும் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டார்கள்.

அப்பா பணத்தேவைக்களுக்கும் வேலைக்கு விடுப்பு சொல்லவும் போய்விட்டார். தேர்வு நேரம் என்பதால் வீட்டு வேலைகளையும், தம்பி தங்கையை பள்ளிக்கு அனுப்பி பார்த்துக்கொள்ளவும் அம்மா போய் விட்டாள்! இருவரும் அவ்வப்போது சாப்பாடு வேளைகளில் ஒருவர் மாறி ஒருவர் வருவார்கள்!அருணாதான் அதிகம் இருப்பாள். அவர்கள் இருக்கும் நேரத்தில் அருணா அங்கிருக்கும் ஒவ்வொரு சிகிச்சை பிரிவாக சுற்றி வருவாள்.

எவ்வளவு பேர் எவ்வளவு பிரச்சனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நம் நிலமை எல்லாம் எவ்வளவோ நன்றாக இருக்கிறது என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தாள்.
நாம் சிவப்பாக அழகாக இல்லையே என்று வருத்தப்படும் போது " நோய் நொடியில்லாம நல்ல மனசோட இருந்தா போதும்டி அதவிடவா அழகு வேணும்" என்று பாட்டி அன்று சொன்ன போது வார்த்தைகளாக மட்டுமே புரிந்த விசயம், இன்றுதான் உணர்வுகளால் அவளுக்கு புரிந்தது.

ஒரு அறையில் படுக்க வைக்கப்பட்டு இருந்த ஒரு வயது குழந்தையின் உடல் முழுவதும் ஏதேதோ கருவிகளை இணைத்து இருந்த காட்சி அவள் மனதை மிகவும் பாதித்துவிட்டது. சத்தமில்லாமல் மனதிற்குள் அழுகை வந்தது. கடவுளின் மேல் ஒரு பக்கம் கோபம் வந்தது. மறு பக்கம் "என்னை இப்படி ஆரோக்கியமாக படைத்திருக்கிறாயே" என்று கடவுளின் மீது நன்றியுணர்வும் வந்தது.

இப்படியே இரண்டு நாட்கள் சென்றன. பாட்டியின் உடல் நிலையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் அன்று மாலை எல்லோரையும் விட்டுவிட்டு கடவுளிடம் சென்றுவிட்டாள். அருணாவால் பாட்டியின் இழப்பை தாங்க முடியவில்லை. அழுதுக்கொண்டே இருந்தாள்.

பாட்டிக்கு செய்யவேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் செய்து விட்டு, இரண்டு நாட்களில் எல்லோரும் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினர்கள். ஆனால் அருணா மட்டும் இன்னும் பாட்டியின் மருத்துவமனை நினைவிலேயே இருந்தாள்.

அப்போது அம்மா அவளிடம் "இந்தாடி ரொம்பநாளா நீ கேட்ட முகத்தை சிவப்பாக்குற க்ரிம். இன்னைக்கு குளிக்கிற சோப்பு வாங்குறப்போ இலவசமா கொடுத்தாஙக" என்று அவள் கையில் திணித்துவிட்டுப்போனாள்.

அருணாவின் கண்கள் மட்டும் அதைப்பார்த்துக் கொண்டிருந்தன.
அழகு குறைந்திருப்பதாக நினைப்பதால் வரும் கவலைகள் தவறானது! ஆரோக்கியமான வாழ்க்கையே உண்மையில் அழகானது! என்ற எண்ணம் மனதிற்குள் வந்தது.

இந்த முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை பலர் பல காலம் கழித்து கஷ்டங்களை விலையாக கொடுத்து ஏகப்பட்ட அனுபவங்களுக்கு பிறகு புரிந்துகொண்டிருக்க அதை தனது வாழ்க்கையின் இறுதி பயணத்தின் போது மிக எளிமையாக இலவசமாகவே புரியவைத்த பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய அவளின் மனம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது.

நட்புடன்
நம்பிக்கை பாண்டியன்

2 comments:

நெல்லை சிவா said...

//அரசனுக்கு உள்ளங்கால் சிவப்பா இருந்தாலும் அதுக்கு கிடைக்கிறது செருப்புதான், உச்சந்தலை கருப்பா இருந்தாலும் கிரீடம் அதுக்குதாண்டி//

நல்ல வரிகள். கதையின் நீளத்தைச் சற்றே குறைத்திருந்தால், இன்னும் அழகாய் இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள்!

மணிவேலன் said...

வாழ்த்துகள்!
பாண்டியன்

கதை அருமை
நம்பிக்கையைத் தூண்டும் யதார்த்த வரிகள்!