என்னை சுற்றி
(சிலநண்பர்கள் சிலபாடங்கள்)
நம் வாழ்வில் எவ்வளவோ நண்பர்களை சந்திக்கிறோம்,அவர்களை கவனித்து பார்த்தால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான குணங்கள் காணப்படுகின்றன, அதில் நல்லவை கெட்டவை என எல்லாம் கலந்திருக்கும்,அப்படி என் நண்பர்கள் சிலரிடம் நான் கண்ட நல்லகுணங்களில் சிலவற்றை நானும் பின்பற்றி இருக்கிறேன்,அதில் ஒன்றை சொல்லுகிறேன்,
கல்லூரி நாட்களில் பாதி நாட்கள் கல்லூரி முடிவதற்கு முன்பே வேகமாக புறப்பட்டு சைட் அடிப்பதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்றுவிடுவோம், மீதி நாட்கள் இரவு வரை கல்லூரியிலேயே இருப்போம், வாரத்தில் 2 நாள் NCC இருக்கும், ஒரு நாள் NSS இருக்கும் சில நாட்கள் மற்ற துறைகளுக்கு இடையே கிரிகெட் போட்டி நடத்துவோம், இதனால் என் வகுப்பு நண்பர்களின் விடுதி அறைக்கு அடிக்கடி செல்வோம், மாணவர்கள் மட்டும் என்பதால் எங்கள் கல்லூரியில் அதிக கட்டுப்பாடுகள் இருக்காது சுதந்திரமாக இருப்போம், சில நண்பர்கள் திருட்டுத்தனமாக மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வாங்கி வந்து தருவார்கள், எப்போதவது வார்டன் பார்த்து விட்டால்" சார் NCCல இருக்கோம் சார் ட்ரெஸ் மாத்த வந்தோம் சார்" என்று ஏதாவது பொய் சொல்லி தப்பித்துவிடுவோம்,விடுதி வாழ்க்கையில் நட்பு மிகமிக சந்தோசமானது,அரட்டை அடிக்க சேர்ந்துவிட்டால், ஒரே சிரிப்பு மயமாகத்தான் இருக்கும், பல நண்பர்களின் உண்மையான குணங்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்,எங்கள் நண்பர்கள் குழுவில் எல்லோரும் பெரிய அரட்டை மன்னர்கள், எனவே விடுதியில் எல்லா துறை மாணவர்களிடமும் எங்களுக்கு நல்ல நட்பு இருக்கும்,
ஒருமுறை வரலாற்று துறையை சேர்ந்த மாணவன் ஒருவன் அறையில் சிலர் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம் அப்போது அவன் கடிதம் எழுதிக்கொண்டிருந்தான்,விடுதி மாணவர்களுக்கும் கடிதங்களுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு,அவர்களின் மனஆறுதலுக்கும் , வீட்டில் அன்பிற்க்கும்,பணதேவைகளுக்கும் கடிதத்தையே அதிகம் சார்ந்திருப்பார்கள், பேசிகொண்டே தற்செயலாக அவனை பார்த்தேன் கடிதம் எழுதிகொண்டிருந்தவன் சட்டென்று எழுதுவதை நிறுத்திவிட்டு சற்று நிமிர்ந்து அமர்ந்து கண்களை மூடி ஏதோ பிரார்த்தனை செய்தான் பிறகு மீண்டும் எழுதுவதை தொடர்ந்தான், எனக்கு அவன் என்ன பிரார்த்தனை செய்தான், யாருக்கு கடிதம் எழுதினான், என்ன எழுதினான் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் தொற்றிகொண்டது,(அடுத்தவர் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதில்தான் மனிதர்களுக்கு எவ்வளவு ஆர்வம்).
அவன் நன்கு பழகிய நண்பன் அதனால் தயங்காமல் அவனிடம் கேட்டுவிட்டேன், இன்னும் ஒட்டாமல் வைத்திருந்த கடிதத்தை என்னிடம் நீட்டினான்,"டேய் யாருக்காக பிரார்த்தனை செய்தனு தெரிஞ்சுக்க கேட்டேன்டா சொன்னா போதும் " என்று தயங்கினேன், "அட சும்ம படிடா மச்சி இது என்ன பெரிய ராணுவ ரகசியமா" என்று கடிதத்தை என் கையில் திணித்தான் அது அவனுடைய பள்ளிபடிப்போடு படிப்பை நிறுத்திவிட்டு வேறு ஊரில் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் நண்பன் ஒருவனுக்கு அனுப்பிய பதில் கடிதம், அவனுடய வேலை மற்றும் பணவிசயங்களில் அந்த நண்பனுடைய கஷ்டங்கள் தீர பிரார்த்தனை செய்வதாக எழுதி இருந்தான், அப்படி எழுதும்போது உனக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்பதை வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல் உடனடியாக கண்களை மூடி சில நொடிகள் மனம்விட்டு உண்மையாகவே கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கிறான் என்பது அவன் சொல்லாமலேயே எனக்கு புரிந்தது, மனம் நெகிழ்ந்து பெருமையாக அவனை பார்த்தேன்,
பிரார்த்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் வலிமை உண்டு என்பதால் யாரிடமாவது "உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று வார்த்தைகளாலோ, எழுத்துக்களாலோ சொல்லும்போது அந்த நல்ல குணத்தை நானும் பின்பற்றுகிறேன்!"" வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் வெளிப்படுத்தும் நல்லகுணங்களை செயல்களாலும் வெளிப்படுத்துவது நல்லது!!
No comments:
Post a Comment