என்னைசுற்றி
(இனிமையான குழந்தைபருவம்)
குழந்தைப் பருவம் எல்லோராலும் விரும்பப்படும் பருவம்,கடவுள் கண்முன் தோன்றி என்ன வரம் என்று கேட்டால் மீண்டும் என்னை குழந்தையாக்கு என்று கேட்பதற்கு நிறைய மனிதர்கள் தயாராகவே இருக்கிறார்கள்! குழந்தைப்பருவத்திலும் சிறுவர்களாக இருக்கும்போதும் , ஒவ்வொருவரின் குற்றமில்லாத குறும்புகளும் பேச்சுகளும் நினைக்க நினைக்க அவ்வளவு இனிமையாவை!என் குழந்தை பருவத்து நிகழ்வுகள் எனக்கு அதிகம் நினைவில்லை நான் அறிந்த சிலரின் குழந்தைபருவ நிகழ்வுகள் நன்கு நினைவில் இருக்கிறது!
ஒரு முறை என் சித்தப்பாவின் ஊருக்கு என் வீட்டில் எல்லோரும் சென்றிருந்தோம், நாங்கள் சென்ற மாலைநேரத்தில் டீ அருந்துவதற்கு தயாரானார்கள்,எங்களை பார்தத்தும் இருந்த குறைந்த அளவிலான டீ யை எல்லோருக்கும் பாதி பாதியாக சமமாக பிரித்து ஊற்றி அருந்த கொடுத்தார்கள், அப்போது என் சித்தப்பா இளையவன் விக்னேஷ் (அப்போது 5வயது இருக்கும்) ""ம்ம் போங்க!!எனக்கு அர கிளாஸ்லாம் வேணாம் டம்ளர் நிரையா வேணும்? என்று அடம்பிடித்தான்,திரும்ப கொடுக்க முயன்ற எங்களையும் சித்தி கொடுக்கவிடாமல் தடுத்து கோபத்துடன் அவனிடம் "போடா நாயே!நிறையா வேணும்னா போய் மிச்சத்துக்கு தண்ணி ஊத்திக்க! நிறைய வந்துரும்!"" என்று சொல்ல அவனும் உடனே எழுந்து டம்ளர் நிறையவருமாறு பானையிலிருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி மட மடவென குடித்துவிட்டான், அன்று முழுவதும் அதை நினைத்து நினைத்து சிரித்தோம்!
வைகாசி மாதம் எங்கள் ஊர் திருவிழாவிற்கு அத்தைகள், சித்தப்பா, பெரியப்பா எல்லோரும் குடும்பமாக பாட்டி வீட்டில்தான் இருப்போம், அன்று இரவு முழுவதும் மொட்டை மாடியில் அதிகமான அரட்டை அடித்துக்கொண்டேதான் எல்லோரும் சேர்ந்து தூங்குவோம்,தின்பண்டங்கள் நிறைய தருவார்கள், அத்தைகள், சகோதரிகள் எல்லோரும் இருகைகளில் மருதாணி அரைத்து வைப்பார்கள்,சிறுவர்களாக இருக்கும் எங்களுக்கும் அத்தை பையன்களுக்கும் ஒரு கைகளில் மட்டும் வைத்துவிடுவார்கள், அன்று நடுஇரவு பலரும் தூங்கிவிட சிலர் மட்டும் தூங்காமல் அரட்டைஅடித்து சிரித்து பேசிகொண்டே இருந்தோம், அப்போது கைகளில் மருதாணியுடன் தூங்கிக் கொண்டிருந்த அத்தை பையன் ஒருவன் தூக்கத்திலேயே திடீரென எழுந்தான் கைகளில் இருந்த மருதாணியை லபக் லபக்கென பிரித்து வாயில்போட்டு முழுங்க ஆரம்பித்துவிட்டான், சிறிது நேரத்திற்குபிறகே பார்த்தோம், உடனே தடுத்து ,வாயில் இருந்ததையும் தோண்டி எடுத்துவிட்டார்கள்,மறுநாள் முழுக்க வயிற்றுப்போக்குடன் இருந்தான்,அவர் இப்போது சிலநேரங்களில் அதிககிண்டலுடன் பேசிகொண்டே இருப்பார், அவரின் பேச்சை நிறுத்த"நிறுத்துங்க மச்சான்!உங்களை பத்தி எங்களுக்கு தெரியாதா அரை தூக்கத்தில அரைகிலோ மருதாணிய தின்ண ஆளுதானே நீங்க! என்று சொன்னவுடன் சிர்த்துகொண்டே அமைதியாகிவிடுவார்.
சில ஆண்டுகளுக்குமுன்னால் என் நண்பன் வீட்டிற் சென்றிருந்தேன், அப்போது என் நண்பனின் சகோதரிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது , நானும் என் நண்பனும் குழந்தை அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம், அப்போது முதல் குழந்தை ஷீலா" ஏம்மா பாப்பாக்கு குட்டி கண்ணா இருக்குல, அது பாக்குறப்போ நாமலாம் அதுக்கு பூதம் மாதிரி தெரிவோமா?? என்று கேட்க உடனே அக்கா "அய்யோ!! என் பிள்ளைக்கு அறிவ பாருங்கடா நீங்களும்தான் இருக்கீங்க!! என்று சொல்லி குழந்தையை அணைத்துக்கொண்டார்கள்! அந்தக் குழந்தை சிந்தனையான கேள்வியை கேட்டதும் நாங்கள் சிறுவயதில்! "டேய் எரும்பு கண்ணுக்கு நாம எல்லாரும் அரக்கன்டா! நம்ம தெரு சாக்கடைதான் அதுக்கு கடல், இந்தக் கல்லு எல்லாமே அதுக்கு இமயமலைடா!" என்று சொல்லி விளையாடியது நினைவுக்கு வந்து சென்றது!
என் மாமா வீட்டில் நடந்தது, ஒரு நாள் என் மாமா மகன் மூத்தவர் சரவணன் ஆறு வயதில் முதல் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் அருகே உள்ள பள்ளிக்கு சென்று மழையால் தாமதாமாக வீடு திரும்பியிருக்கிறார்! அத்தை "ஏன்டா!கண்ணு இவ்வளவு நேரம் கழிச்சு வர! என்று கேட்க, அதற்கு!" மழ பேஞ்சுச்சுமா! அதான் கொஞ்சங் கொஞ்சமா வந்தேன்!என்று சொல்ல, அத்தை முதலில் புரியாமல் ,யோசித்த பிறகு மழைக்கு ஒதுங்கி மெதுவாக நின்று நின்று வந்ததை மழலை மொழியில்"கொஞ்சங் கொஞ்சமாக வந்தேன்" என்று சொன்னதை புரிந்து சிரித்தார்களாம்,
இதுபோல் எத்தனையோ வீடுகளில் எத்த்னையோ விதமான குழந்தை பருவத்து சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழ்கின்றன, குழந்தைகளின் செயல்கள் சிலநேரங்களில் கோபத்தை கொடுத்தாலும் பல நேரங்களில் குழந்தைபருவமும் அதன் நினைவுகளும் இனிமையாகவே இருகின்றன. அவர்களின் எண்ணங்களை, பேச்சுக்களை சிரிப்புகளை எல்லாம் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அந்தநேரத்தில் நம் கவலைகள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடுகின்றன!
No comments:
Post a Comment