( சிறுகதை) ~(நம்பிக்கைபாண்டியன்)
புவனாவின் பேச்சைக் கேட்க விருப்பமில்லாமல் எழுந்து, நடந்துகொண்டே சிகரெட் ஒன்றை பற்றவைத்தபடி கடல் அலைகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்! புவனா இதைக கண்டதும் "நான் இவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட நீ யோசிச்சது மாதிரி தெரியல ரமேஷ்!என் பேச்சுக்கு இவ்வளவுதானா நீ கொடுக்கும் மரியாதை" என்றாள் கோபமாக!
"புவனா நான் உன்னை காதலிக்கிறது என்னவோ உண்மைதான்,அதற்காக நீ சொல்லும் எல்லாவற்றையும் கேட்க வேன்டுமென்று நினைப்பதில் நியாயமில்லை! இது என் தனிப்பட்ட சுதந்திரம்! இதில் தலையிடாதே! நான் சிகரெட் பிடிப்பது முன்பே தெரிந்துதானே என்னை காதலித்தாய்! இப்போது மட்டும் ஏன் நிறுத்த சொல்லுகிறாய்!என்று சொல்லிக்கொண்டே மனதிற்குள்" ச்சே என்ன பெண்கள் இவர்கள், காதலின் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் பெண்கள், நாட்கள் செல்லச் செல்ல அதிகாரம் செய்ய ஆசைப்படுகிறார்கள்!" என நினைத்துக்கொண்டான்!
ரமேஷின் பேச்சுக்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் மொளனமாக இருந்தாள் புவனா! சற்று கோபம் தணிந்தவனாய் " என்னால சிகரெட்ட நிறுத்த முடியாது புவனா எட்டு வருட பழக்கம்! இப்போதாவது ஒரு பாக்கெட்தான்,முன்னாடி தினமும் இரண்டு பாக்கெட் காலி செய்த காலமெல்லாம் இருக்கு! கெட்ட பழக்கங்களை பழகுவது சுலபம் ஆனால் நிறுத்துவது மிக மிக கடினம்! தவறென்று தெரிந்தாலும் தவிர்க்க முடியாத நிலமை என்னுடையது! புரிந்துகொள் புவனா!" என்றான்.
"பேசுற அளவுக்கு யோசிக்கப் பழகு ரமேஷ்! உன் நல்லதுக்கு தானே சொல்லுறேன்,இதானால் எவ்வளவு கெடுதல்னு புக்ஸ்ல படிச்சிருக்கேல!நீ சொல்லுற மாதிரி, "திருத்திக்கொள்ள முடியாத தவறுகள் என்று எதுவுமே இல்லை!! இருக்கிறது என்று நீ சொன்னால், திருந்துவதற்கு உன் மனம் தயாராக இல்லை என்றுதான் அர்த்தம்!"
"நான் உன்னை உடனே நிறுத்த சொல்லலியே முதல்ல பாதியாக குறை! அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த முயற்சி செய்!" "சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன்! அப்புறம் உன் இஷ்டம்! நேரமாச்சு போகலாம்!"என்றாள் அவன் பதிலை எதிர்பாராதவளாக! இருவரும் புறப்பட்டு சென்றனர்,
கோபத்தில் மறுநாள் ரமேசிடம் புவனா சரியாக பேசுவதில்லை, செல்பேசியில் அழைத்து கேட்டால், அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் என்று சொல்லிவிட்டாள்! கோபத்தில் இவனும் "நீ எப்போ ப்ரீயா இருக்கியோ அப்போ நீயா கூப்பிட்டு பேசு!" என்று இணைப்பை துண்டித்தான்! இரண்டு நாட்களாக இருவருமே பேசுவதில்லை!சம்பிரதாயத்திற்கு காலையிலும் இரவிலும் SMS அனுப்பிக்கொள்வதோடு சரி!
ரமேஷ் தனியார் வங்கி ஒன்றில் உயர்பணியில் இருப்பவன். பள்ளி ஒன்றில் நடக்கும் விழாவிற்கு அந்த வங்கியின் சார்பில் விளம்பரத்திற்காக ஸ்பான்சர் செய்திருந்தார்கள், அது பற்றி பேச உணவு இடைவேளை நேரத்தில் வருமாறு தலைமை ஆசிரியர் அழைத்திருந்தார்! அதன்படியே சென்றான்.
தலைமை ஆசிரியருடன்விழா பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இரண்டு மாணவர்களை பிடித்து இழுத்தபடி உள்ளே வந்த உடற்பயிற்சி ஆசிரியர்" சார் இவனுக ரெண்டுபேரும் நம்ம ஸ்கூல் மொட்டை மாடியில் சிகரெட் பிடிச்சுட்டு இருக்கப்போ பார்த்து கையோட இழுத்துட்டு வந்தேன் சார்!" என்று புகார் செய்தார்!
தலைமை ஆசிரியர் அம்மாணவர்களை பார்த்து முறைத்தபடியே" ஏன்டா அறிவு கெட்ட பயலுகளா!இந்தவயசிலேயே சிகரெட்டா? காசக் கரியாக்கி உடம்பையும் கெடுத்துக்காதிங்கடா" என்று திட்ட ஆரம்பித்தார்! ஒரு மாணவன் என்ன செய்யபோகிறாரோ என்ற பயந்தபடியே நின்றிருந்தான்! இன்னொருவன் எந்த பயமுமின்றி அலட்சிய மனோபாவத்துடன் நின்றிருந்தான்!
திட்டிக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர், அதில் ஒருவனை வேதியியல் ஆய்வகத்திற்கு சென்று சுடர்விளக்கு ஒன்றையும், கண்ணாடித்துண்டு ஒன்றையும் வாங்கிவரச் சொன்னார்! என்ன செய்யப்போகிறார் என்று ஆர்வமாக கவணித்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.
அவன் வாங்கி வந்தததும்,"சிகரெட் குடிப்பது ஏன் தப்புனு சொல்லுறேன்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்கடா!" என்று சொல்லி, முதலி சுடர்விளக்கை பற்ற வைத்தார், அதில் எரிந்த தீச்சுடருக்கு சற்று மேலே கண்ணாடித்துண்டை தூக்கி பிடித்தார், தீச்சுடரிலிருந்த வந்த புகை தொடர்ந்து கண்ணாடியில் படிந்ததும், பளபளப்பாக இருந்த கண்ணாடித்துண்டு கருப்பாக மாறியது!
மாணவர்களிடம் அதைக்காட்டி" சுத்தமாக இருந்த இந்த கண்ணாடி ஏன் இப்படி அழுக்கு பிடித்து கருப்பாகா மாறியதுனு தெரியுமா?" என்றார்!
"தொடர்ந்து புகைபட்டதால் இப்படி அழுக்காச்சு சார்!" என்றான் அலட்சியமாக இருந்த மாணவன்,"
"ம்ம்ம் அதே மாதிரிதாண்டா நம்ம உடலின் உள் உறுப்புகளும், சுத்தமாக இருக்கும் உடலுக்குள் தொடர்ந்து புகையை இழுப்பதால் அந்த புகையில் உள்ள நச்சுப்பொருட்கள் உள் உறுப்புகளுக்கு தற்காலிக இதமளித்தாலும், பெரிய அள்வில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது! நிறைய நோய்களை உருவாக்குகிறது!
இந்த வயசுல உடம்புல தெம்பு இருக்குறப்போ ஒன்னும் தெரியாது! பின்னால ரொம்ப கஷ்டப்படுவீங்க! இனிமேல் சிகரெட் குடிக்காதீங்க! என்று தெளிவாக மனதில் பதியுமாறு சொன்னதும், உண்மை புரிந்தவர்களாக மாணவர்கள் இருவரும் "இனி நெஜமாவே சிக்ரெட் குடிக்க மாட்டோம் சார்" என்று மனப்பூர்வமாக சொன்னார்கள்!
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ரமேசுக்கு மனதிற்குள் ஏதோ ஒன்று சுருக்கென்றது தைத்தது போல இருந்தது!தெளிவாக உணர்த்திய ஆசிரியரை ஆச்சர்யமாக பார்த்தான், புவனாவும் இதை, என் நலத்திற்காகாதானே சொன்னாள்! அதை கேட்பதில் என்ன தவறு!இனி நானும் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என மனதிற்குள் மன்னிப்புக் கேட்டுகொண்டே!பேசி முடித்துவிட்டு வெளியே வந்ததும் தன் செல்பேசியில் "செல்லம்" என்ற பெயரில் சேமித்துவைத்திருந்த புவனாவின் எண்ணை அழைக்க அழுத்தினான்!
No comments:
Post a Comment