(சிறுகதை)
இரவு எட்டு மணிக்கே பசியோடு வீட்டிற்குள் வந்ததும் சாப்பாடு எடுத்துவைக்க அர்ச்சனாவைத் தேடினான் சுப்பிரமணி! முழங்கால் வலி என்று சொல்லி உள் அறைக்குள் தைலம் தேய்த்துகொண்டு அம்மா அமர்ந்திருந்தாள்!அவளைக் காணாததால் "அர்ச்சனா............" என்று சத்தமாக குரல் கொடுத்தான், "கொஞ்ச நேரம் பொறுங்க வரேன்" என்று மாடியில் இருந்து குரல் வந்தது!
"பசிக்குது வந்து சாப்பாடு போடு"என்றான், அந்த டேபிள் மேல எல்லாம் எடுத்து வச்சிருக்கேன், எடுத்து வச்சு சாப்பிடுங்க! இதோ வந்திடுறேன்" என்றாள்,
அவனுக்கு கோபமாக வந்தது!கணவனுக்கு சாப்பாடு எடுத்துவைக்க கூட நேரமில்லையா இவளுக்கு!இன்று அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக மதியமும் சாப்பிட வில்லை! அதனால் தான் இந்த பசி! என்று புலம்பிய படியே உணவை எடுத்துவைத்து சாப்பிட ஆரம்பித்தான்.
பாதி உணவை உன்னும்போதே தொண்டையில் லேசாக விக்குவது போல் தெரிந்தது! அருகில் இருந்த தண்ணீர் குவளையில் பார்த்தான், தண்ணீர் காலியாகி இருந்தது!
தண்ணீர் பானைக்கு எழுந்து செல்ல சேம்பேறித்தனப்பட்டு " அர்ச்சனா" என்று குரல் கொடுத்தான்,
"அய்யோ!கொஞ்சம் பொறுக்க மாட்டீங்களா? அதான் வரேன்னு சொல்லுறேன்ல" என்றாள் மேலிருந்தபடியே!
"ச்...சே! சாப்பாடு எடுத்து வைக்கும்போதே தண்ணியும் எடுத்து வைக்கனும்னு தெரியாதா இவளுக்கு!எத்தனை முறை சொல்லியிருக்கேன்" என்று புலம்பியபடியே எழுந்தான்,
அதற்குள் அவன் அம்மா மெல்ல எழுந்துவந்து தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு "சாப்பிடுறப்போ கோபப்படாம சப்பிடுடா! அப்போதான் சப்பிடுற சப்பாடு உடம்புல ஒட்டும்" என்று சொல்லிவிட்டு வலிக்கும் கால்களுடன் மெதுவாக நடந்து சென்றாள்.
"அம்மாக்களுக்கு பிள்ளைகள்மேல் இருக்கும் அக்கறை ஏன் இந்த மனைவிகளுக்கு கணவன்கள் மேல் இருப்பதில்லை" என்று கோபப்பட்டான், இந்த கோபத்தில் சிறிதையாவது அவளிடம் வெளிப்படுத்தினால்தான் அடுத்து இது போல் அலட்சியம் செய்ய மாட்டாள்! என்று நினைத்தபடியே சாப்பிட்ட எச்சில் கையுடன் எழுந்து மாடிப் படிகளில் ஏறினான்!
மாடியில் அங்கே இடுப்பில் குழந்தையுடன்,ஒரு கையில் உணவு தட்டுடன் வானில் இருந்த நிலாவைக்காட்டி "நிலாவுக்கு இன்ன்னொரு "ஆ"...! சொல்லு" என்றதும் வாய் திறந்த குழந்தையிடன் உணவை ஊட்டிகொண்டிருந்தாள்.இவனைப் பார்த்ததும்"இவ்வளவு நேரம் போராடி, இப்போதான் சாப்பிட வைச்சிருக்கேன்! அதான் கொஞ்சம் பொறுங்கனு சொன்னேன்!" நல்லா சாப்பிட்டீங்களா என்றாள் புன்னகையுடன்!
சுப்பிரமணிக்கு தன் அவசர புத்தியை நினைத்து பேச்சற்று அமைதியாகி மனதிற்குள் முன்பு சொன்னதையே சற்று மாற்றி "மனைவிக்கு கணவன் மேல் இருக்கும் அக்கறையை விட அம்மாவுக்கு குழந்தை மேல் அதிக அக்கறை இருக்கிறது!"என்று சொல்லிக்கொண்டான்.
நம்பிக்கைபாண்டியன்
No comments:
Post a Comment