அழகிய பொய்கள்!
'புத்தகத்து மயிலிறகு
குட்டி போடும்!
மழை பெய்யும்
திசை சொல்லும் விட்டில் பூச்சி!
வெள்ளை கொக்கு
கையில் மச்சம் போடும்!
எறும்பின் கண்களுக்கு
நாமெல்லாம் அரக்கர்கள்!
பழவிதையை தின்றால்
வயிற்றில் மரம் முளைக்கும்!
ரயிலேற்றிய
தண்டவாளக்காசு காந்தமாகும்!
பசுஞ்சாணத்தில்
இடி விழுந்தால் தங்கமாகும்!
இரவில் விசில் ஊதினால்
பாம்பு வரும்!
கடவுள் குளிப்பதால்தான்
மழைபெய்கிறது
பனிரெண்டு மணிக்கு
புளியமரத்தில் பேய் வரும்!
சுடுகாட்டு சாம்பல் பூசி
மண்டை ஓட்டுடன் வருவான்
நள்ளிரவு குடுகுடுப்பைகாரன்!
கொடிக்காய் பழவிதையை
பழுதின்றி உரித்து
ஜன்னலில் வைத்தால்
வீட்டிற்கு விருந்தாளி வருவார்கள்!
கோவில் சுவற்றில்
தேர்வுஎண் எழுதினால்
கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்!
திரைப்படத்தில் வாகனங்கள்
வேகமாகசெல்லும் காட்சிகளுக்கு
படச்சுருளை வேகமாகசுற்றுவார்கள்!
விமானத்தில் செல்பவர்கள்
எல்லோரும் வெள்ளைகாரர்கள்!
இரண்டாயிரமாவது ஆண்டில்
உலகம் அழியும்! 'என
இப்போது நினைத்தாலும்
அழகாகவே இருக்கின்றன!குழந்தை பருவத்தின்
குற்றமில்லாத பொய்கள்!
10 comments:
சிறுவயது ஞாபகங்கள்
அருமை! குழந்தைகளுக்கு பொய் எது உண்மை எது எனதெரியாது. தெரிந்ததெலாம் உண்மைதான்! வளர்ந்தபிறகுதான் பொய் மெய்யில் வந்து ஒட்டிக்கொள்கிறது ! நல்ல கவிதை பாண்டியன்.
பொய்களின் பொக்கிஷயம்
குழந்தைகள்..
அந்த நாட்கள் திரும்பாது...
ஆமாம் நம்ப முடியாவிட்டாலும், நம்ப விரும்பும் அழகான பொய்கள்
அழகிய பொய்கள் :)
சிரிப்புத்தான் வருகிறது ஒவ்வொரு வரிகளை வாசிக்கும்போதும் !
சிறுவயதின் எண்ணப் பகிர்வு .அழகாய் உங்கள் வரிகளில்.
பாராட்டுக்கள்
/இப்போது நினைத்தாலும்
அழகாகவே இருக்கின்றன!
குழந்தை பருவத்தின்
குற்றமில்லாத பொய்கள்!/
உண்மை தான்
'குற்றமில்லா பொய்கள்' அருமையான வார்த்தை! மனதை கவர்ந்திழுக்க வைத்த வார்த்தை..!! கவிதையின் முடிச்சு இங்குதான் இருக்கிறது..!!!
சில பொய்களுக்காக நிஜமாகவே தொடர்கிறோம் ! இனிய கவிதைகளையும் நினைவுகளையும் வார்த்தைகளாக்கியமைக்கு வாழ்த்துக்கள் !
Post a Comment