Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Monday, November 05, 2012

வீடு! - படக்கவிதை
















வயல்களை அழித்து
வீட்டடி நிலமாக்கி
!
 ஆறுகளை தோண்டி
வீடு கட்ட மணல் அள்ளி!

மலைகளை உடைத்து
ஜல்லி கற்களாக்கி!

நிலங்களை குடைந்து
சுண்ணாம்பில் சிமிண்டெடுத்து!

சுரங்கங்களில் சுரண்டிய‌
தாதுக்களில் கம்பியெடுத்து!

மரங்களை கொன்று!
நிலை கதவு, ஜன்னல் செய்து!

இயற்கை வளங்களை
கொள்ளையடித்து உருவாகிய வீட்டை

சிறிதும் தயக்கமின்றி
கூறிக்கொள்கிறேன்
இது  "என் வீடு" என...!

 

             

Wednesday, August 08, 2012

மழலை கவிதைகள் 2 - படக்கவிதை




இரவுநேர
இரயில் பயணத்திலும்
இயற்கையை 
ரசிக்க முடிகிறது!
எதிர் இருக்கை
குழந்தைகளால்!

*****************************

வராமல் 
சோறு ஊட்டும்
 பூச்சாண்டியும்...

வந்து
சோறு ஊட்டும் 
நிலாவும்...

காற்றிலேயே 
கவர்ந்து செல்கின்றனர்
குழந்தைகளின் முத்தங்களை!

*****************************

தூங்கும்பொழுது
சிரிக்கின்ற‌ குழந்தைகள்
கடவுளுடன் பேசுகின்றவாம்!
கபடமற்ற 
சிரிப்பிருக்கும் இடங்களில்
கடவுள் இருப்பது சாத்தியம்தான்!





Friday, February 24, 2012

அனுமதியற்றவர்கள் - கவிதை

எறும்பு எலி,
பாம்பு  பூரான்
தெருநாய், என
தன் அனுமதியின்றி
வீட்டிற்குள் நுழையும்
எந்த  ஒரு உயிரையும்
அடித்து விரட்டியோ, கொன்றோ
வெளியேற்றுகிறான் மனிதன்!

காடுகளை அழித்து
வயல்களை நகராக்கி
குடியேறும் மனிதர்களை
என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக்கொண்டிருக்கின்றன
விலங்குகளும் பறவைகளும் !


Sunday, February 05, 2012

வானத்தில் ஹைக்கூ - கவிதைகள்

1)
 மேகங்களில்
பொம்மை செய்து
விளையாடும் குழந்தை
காற்று!

     ******
2)
 காற்றில் கரையும்
பலவண்ண  கற்பூரம்
வானவில்!

    ******
3)
 கீழ்நோக்கி வளரும்
மழையின் வேர்கள்
வானத்தில் இருக்கிறது
மின்னலாக!

     ******
4)
 பதினெட்டு பட்டிக்கும்
ஒரே ஸ்பீக்கர்
இடி!







Friday, November 11, 2011

நட்பு மழை! - படக்கவிதை

வெயிலும், மழையும்
எதிரிகளாகவே இருக்கின்றன!

வெயில் வலிமையாக
இருக்கும் பொழுதுகளில்
மேகங்களுக்குள்
 மறைந்துகொள்கிறது மழை!
மழை கடுமையாக
இருக்கும் பொழுதுகளில்
காணாமல் போகிறது வெயில்!

மழையின் சுவடுகளை
அழித்துச்செல்கிறது வெயில்
வெயிலின் காயத்திற்கு
மருந்திடுகிறது மழை!

வெயிலும் மழையும்
சந்திக்கும் 
அரிய மாலைப்பொழுதில் 
பூக்கிறது
வானவில் என்றொரு
அழகிய நட்பு!

!



Saturday, November 05, 2011

கவிதைகளாகவும் இருக்கலாம்! 2 - படக்கவிதை

1

சுவையான உணவை
எங்கு உண்டாலும்
உடனே வந்துவிடுகிறது
அம்மாவின் நினைவு!

2

ஹைக்கூ!

என்ன மகிழ்ச்சியோ
எங்கு விழுந்தாலும்
துள்ளிக் குதிக்கின்றன
மழைத்துளிகள்!

3

நெடுந்தூரம் பறந்துவரும்
பறவைகளின் ஓய்வுக்காகவே
ஆங்காங்கே காத்திருக்கின்றன
சில ஒற்றை மரங்கள்!