Monday, October 31, 2011

நூடுல்ஸ் - சிறுகதை (வம்சி சிறுகதை போட்டிக்கு)


                                                      பிரகாஷ் வீட்டிற்குள் வந்ததும், சற்றுமுன் பணி முடிந்து வீட்டிற்கு வந்து. தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த விஜி சட்டென எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள், உடை மாற்றிவிட்டு அவனும் சமயலறைக்குள் வந்தான், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், அவனாக பேசுவான் என்று அவள் எதிர்பார்த்தாள், அவளாக பேசுவாள் என்று அவன் எதிர்பார்த்தான் இருவரும் பேசிகொள்ளவில்லை, தண்ணீரை குடித்து விட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தான் பிரகாஷ்
                                                             
                                                      விஜி பிரகாசுடன் பேசி இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது! இருவரும் ஒரே மென்பொருள் துறையில் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கும் காதல் தம்பதிகள், பிரகாஷ் விஜியை விட அந்த நிறுவனத்தில் மூன்று வருடம்  சீனியர்,  ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது அவ்வப்போது நட்பாக பேசிகொண்ட பழக்கம்.  புத்தகம்,கதை, கவிதை, திரைப்படம் என பல விதங்களில் ஒரேவித ரசனை கொண்டவர்களாக இருந்ததால் நாளடைவில் அது காதாலாக மாறியது! முதலில் இருவர் வீட்டிலும் மறுத்தாலும் சில நண்பர்கள் உதவியுடன் சமாதானம் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இணைந்தனர்.

                                                      இப்பொழுது இருவரும் அதிக சம்பளத்திற்காக வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறிவிட்டனர். காதலிக்கும்போது பிடித்த குணங்களை மட்டும் கவனித்து ரசித்தவர்கள் திருமணமாகி சில மாதங்களுக்கு பிறகு பிடிக்காத குணங்களை குறை சொல்லி கண்டிக்கத்தொடங்கும்போது   பிரச்சனைகள் ஆரம்பமானது, ஒரே ரசனை கொண்டவர்கள் என்பது காதலுக்கு காரணமாக இருந்தது போல் அதுவே பிரச்சனைகள் பெரிதாகவும் காரணமாக இருந்தது, அவளுக்கு கோபம் வந்தால் அவனுக்கும் கோபம் வருகிறது, சண்டைக்குப் பின் அவள் முதலி இறங்கி சமாதானத்திற்கு வராமல் அவன் இறங்கி வரட்டும் என நினைப்பாள் , அவளும் அவன் இறங்கி வரட்டும் என நினைப்பான், இருவருக்குமே ஈகோ அதிகம்.

                                       இப்படியே ஒரு வாரம் கூட ஒரே விட்டிற்குள் பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள், பிரகாஷ் வெளியில் சாப்பிட்டு வருவான், விஜி அவளுக்கு மட்டும் சமைத்து சாப்பிட்டுக்கொள்வாள், ஒரு வாரத்திற்கு பிறகு அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு வரும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது வீட்டிற்கு வரும்போது எதுவுமே நடக்காதது போல் பேசிக்கொண்டு அதை அப்படியே தொடர்ந்து இணைந்துகொள்வார்கள், அவ்வப்போது பிரிதல் சேர்தல் என சில மாதங்களாக இது தொடர்கிறது, அந்த பிரிவுக்காலம் இருவருக்குமே மிக இம்சையானதாவே இருக்கும் ஆனால் இருவ்ரும் அதை வெளிகாட்டமாட்டார்கள், 
                                                                                   மற்ற தம்பதிகளைப்போல் அன்றைய சண்டைக்கு அன்றே சமாதானமாகிவிடவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கு தான் முதலில் இறங்கிச்செல்ல வேண்டும் எண்ணத்தை, இத்தனை வருடங்களாக அவர்களுடன் வளர்ந்து வந்த ஈகோ எண்ணம் தடுத்தது! இதற்கு ஏதேனும் தீர்வு காணவேண்டும் என்று நினைத்த படியே தொலைக்காட்சியில் இருவருக்கும் பொதுவாக பிடித்தமான, எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அந்த சேனலுக்கு மாற்றினான் பிரகாஷ். அந்த சேனலின் அன்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல புதுக்கவிதை மற்றும்  நவீனத்துவ எழுத்தாளர் தமிழன்பனும், அவரது மனைவி மரபு கவிதை மற்றும் பாரம்பரியம் பற்றி எழுதும் கவிதாயினி ரமணிகா வும் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். 

                                                      அவர்களிடம் பேட்டியாளர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் சொல்லிகொண்டிருந்ததை, விஜி, பிரகாஷ் இருவருமே சற்று தள்ளி அமர்ந்து ஆர்வமாக ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சியின் பேட்டியாளர் " தம்பதிகளாக இருந்தாலும் எழுதுவதில் இருவரும் நிறைய முரண்பாடுகளுடன் இருக்கிறீர்கள், உங்களுக்கு நிச்சயம் சண்டை வரும் எப்படி சமாதானம் ஆவீர்கள்" என்று கேள்வி ஒன்றை கேட்டார், அதற்கு தமிழன்பன் சில நேரங்களில் அவுங்களே வலிய வந்து பேசிருவாங்க நாங்க சமாதானம் ஆகிடுவாங்க, சில நேரங்களில் என் மீதே அதிக தவறு இருக்கும் அப்போது அவுங்க பேச மாட்டாங்க, எனக்கு கொஞ்சம் ஈகோ அதிகம், அதானல் நானும் வலிய போய் பேச மாட்டேன் அதுக்கு பதிலா அவுங்களுக்கு ரொம்ப பிடிச்ச எதாவது ஒன்ன வாங்கிட்டு போவேன், அது நான் மன்னிப்பு கேட்பதாக அர்த்தம், , "வார்த்தைகளால் மன்னிப்பு கேட்க முடியாத சில இடங்களில் செயல்களால் மன்னிப்பு கேட்பது சுலபம்!" என்னை அவுங்க புரிஞ்சுகிட்டு சிரிச்சுடுவாங்க,அப்புறம் சகஜமாகிடுவோம் என்றார்'. அடுத்த சில நிமிடங்களில் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டாலும் அவர் சொன்ன விசயம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடக்க ஆரம்பித்தான் பிரகாஷ், 

                                                     இனி நாமும் அவளுக்கு பிடித்ததை வாங்கிகொடுத்து உடனே சமாதானமாகிவிட வேண்டும், அவளுக்கு என்ன பிடிக்கும் என யோசித்தான் பெரிய பட்டியலே வந்தது, அதில் இப்பொழுது உடனே வாங்கக்கூடியது என்ன என்று நினைத்தபோது "நூடுல்ஸ்" நியாபகம் வந்தது, காதலிக்கும்போது உணவகத்திற்கு செல்லும்போது பலநேரங்களில் நூடுல்ஸ்தான் ஆர்டர் சொல்லி சாப்பிட்டிருக்கிறார்கள்!, திருமணமான புதிதில் வீட்டில் சாதம் சமைக்காத நேரங்களில் நூடுல்ஸ்தான் சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள், உடனே அருகில் இருந்த கடையில் ஒரு நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்தான் பிரகாஷ்,
                                                           முதலில் எதாவது பேசி அவளிடம் இதை கொடுப்போமா? அல்லது இதை வாங்கி அவள் சிரித்த பின்பு எதாவது பேசுவோமா? என்று யோசித்துகொண்டே சாப்பிடும் மேசையில் அமர்ந்தான், அப்பொழுது விஜி சமையலறையிலிருந்து சூடாக ஆவிபறக்க அவனக்கும் பிடித்தமான சமைத்த நூடுல்ஸுடன் அவன்முன் வந்து நின்றாள், அவன் கையிலிருந்த நூடுல்ஸ் பாக்கெட்டை அவள் பார்த்தாள், அவள் கையிலிந்த சூடான நூடுல்ஸை அவன் பார்த்தான்.சற்றே கலங்கிய கண்களுடன் இருவரும் சிரித்துக்கொண்டார்கள். அதன்பின் அவர்களின் சண்டைகளை அப்போதே தீர்க்கும் அவர்களுக்கு பிடித்தமான "நூடுல்ஸ்" இப்பொழுது அவர்களின் குழந்தைக்கும் பிடிக்கிறது!

-- 

(குறிப்பு:- ஒரேவித  ரசனைக்காக மட்டும் காதலிப்பவர்களின் வாழ்க்கையில் அதே ரசனையே பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்ற ,எப்போதோ ஏதோ ஒரு கதையில் படித்த கருத்தை  இதில் சேர்த்திருக்கிறேன்)

9 comments:

சாகம்பரி said...

நல்ல செய்தியை சொல்லியிருக்கீங்க கதை ஆர்பாட்டமில்லாமல் அழகாக சென்றது

ஷைலஜா said...

, "வார்த்தைகளால் மன்னிப்பு கேட்க முடியாத சில இடங்களில் செயல்களால் மன்னிப்பு கேட்பது சுலபம்!" என்னை அவுங்க புரிஞ்சுகிட்டு சிரிச்சுடுவாங்க,//


இந்த வரிகளில் கதை பேசுகிறது மனசில் பதியும் கதை வாழ்த்துகள்!

rajamelaiyur said...

அருமையான கதை நல்ல முடிவு

பாலா said...

மிக லைட்டான ஒரு சிறுகதை. அருமை.

Radhakrishnan said...

அருமையாக காதலை கதையில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

நிலாமதி said...

வார்த்தைகளால் மன்னிப்பு கேட்க முடியாத சில இடங்களில் செயல்களால் மன்னிப்பு கேட்பது சுலபம்!"

கதை மிக மிக அருமை அழகான எழுத்து நடை பாராட்டுக்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
ஏன் இந்த ஈகோ ?

அம்பாளடியாள் said...

கதை நன்று .வாழ்த்துக்கள் வெற்றி பெற .மிக்க நன்றி பகிர்வுக்கு .

நம்பிக்கைபாண்டியன் said...

வருகை தந்து கருத்தை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்!