Friday, January 25, 2008



பலன்!

தவறென்று
நினைத்து
தள்ளிவைத்த ஆசைகள்!

நல்லவன்(ள்)
என்று சொல்லி
நழுவவிட்ட வாய்ப்புகள்!

பின்விளைவுகள்
யோசித்து
விலகிவந்த சூழ்நிலைகள்!

கடவுளுக்கு
பயந்து
கடைபிடித்த கட்டுப்பாடுகள்!

அத்தனையும் சேர்ந்து
அற்புதங்கள் உணர்த்தின!
அன்பு கலந்த‌
இல்லற இரவுகளில்!

~நம்பிக்கைபாண்டியன்!

புகைப்ப‌ட‌ ஹைக்கூ...





மனம் நிறைந்த
சிரிப்பில்
எல்லோரிடமும்
இருக்கிறது அழகு!

~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்!

Thursday, January 10, 2008

சில‌ பூக்கள்
அழகிற்காக
வாங்கப்படுகின்றன!

சில பூக்கள்
ம()ணத்திற்காக
‌வாங்கப்படுகின்றன!

இரண்டுமே இல்லாமல்
வாங்குபவர் யாருமற்று
வாடிக்கொண்டிருக்கின்றன‌
சில முதிர்பூக்கள்!

இந்தப்பூக்கள்

அழும் சப்தம்
யாருக்கும் கேட்பதில்லை!
அவைகள்
மெளனமாகவே அழுகின்றன!

~நம்பிக்கைபாண்டியன்

(நண்பர் சிறில் அலெக்ஸ் நடத்தும் "நச்"கவிதை போட்டி"க்கு எழுதியது) http://cyrilalex.com/?p=365

Sunday, December 30, 2007

நட்புக்காக!

(சிறுகதை மாதிரி ஆனால் சிறுகதை அல்ல)!

""நாளைக்கு ராத்திரி எல்லோரும் குற்றாலம் போறோம்டா! இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் குற்றாலத்தில்தான் நம் ஆட்டம்!" "ஜான் அண்ணன் சுமோ கார்லதான் போறோம் நம்ம பசங்க எல்லொரும் வராங்க! ரெடியா வந்திரு மச்சான்! என்று கணேஷிடம் சொன்னான் செல்வா! ...ம்ம் சரிடா! மாசக்கடைசியாச்சுல கையில் 500 ரூபாய்தான்டா இருக்கு" என்றான்! இருக்குறத கொண்டுவாடா! நான் பார்த்துக்குறேன் என்றான்" செல்வா!

கணேஷ் வீட்டிற்கு சென்றதும் எதிர் வீட்டில் குடியிருக்கும் தன் காதலி விமலா செல்பேசியில் அழைத்தாள்! "கணேஷ் என் கூட வேலைபாக்குற அடுத்த‌ தெரு பொண்னோட அக்காவுக்கு பக்கத்து ஊர் சிவன் கோவிலில் கல்யாணம் அம்மா என்ன போக சொல்லீட்ட்டாங்க ! மறக்காம வந்திடு கணேஷ்!" என்றாள் விமலா. "கண்டிப்பா வரேன்" என்று சொல்லி விட்டு, நண்பர்களிடம் எப்படி சொல்வது என யோசித்தான்!

கணேசும் விமலாவும் சிலவருடங்களாக காதலிக்கிறார்கள்!இருவர் வீட்டிலும் தெரிந்து எதிர்த்தபின், ஒரே தெருவில் இருந்தாலும் நேரில் சந்தித்துகொள்வதில்லை! இருவரும் வேலை பார்க்கும் அலுவலகங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல், நீண்ட தொலைவில் இருக்கின்றன! எனவே அதிகம் சந்தித்துக்கொள்வதில்லை!

யாரேனும் எங்காவது இருவரையும் சேர்ந்து பார்த்ததாக் சொல்லிவிட்டால் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக முடியாது என்பதால், ஞாயிற்றுக்க்கிழமைகளில் கூட வீட்டை விட்டு எங்கும் செல்லாத சூழ்நிலையில் இருப்பவள் விமலா!ஆனாலும் பேசும் விதத்தில் பேசினால் அப்பா சம்மதிக்கும் குணம் உடையவர் என்பதால் நம்பிக்கையோடு காதலித்தால்! தொலைபேசி பேச்சு மட்டும் தினமும் நடக்கும்! இது போல அரிதாக கிடைக்கும் சந்தர்ப்பர்களில்தான் சந்தித்துக்கொள்வார்கள்!

செல்வாவுக்கு போன் செய்து" சாரிடா மச்சான் விமல பக்கத்து ஊர் சிவன் கோவிலுக்கு கல்யாணத்துக்கு போறாளாம் வர சொல்லுறா!நான் போகலாம்னு நினைக்கிறேன்! நீங்க மட்டும் குற்றாலம் போய்ட்டு வாங்கடா! நான் அடுத்த முறை வரேன்!"'என்றான் கணேஷ்.

செல்வாவிற்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது! "ஏண்டா மச்சான் இப்படி இருக்க! நீ வரலைனா நம்ம பசங்க பாதி பேரு வரமாட்டானுங்கடா எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லோரையும் ஒன்னுசேர்த்திருக்கென் தெரியுமா! லவ்வுலாம் இன்னைக்கு இருக்கும்! நளைக்கு விட்டுட்டு போனாலும் போய்டும்டா, நம்ம ஃப்ரண்ட்ஷிப் அப்படியாடா"என்றான் செல்வா!
கணேஷ்" சாரிடா மச்சான் என்ன புரிஞ்சுக்க!" என்றதும்,கோபத்தில் செல்வா இணைப்பை துண்டித்தான்!

கணேஷ் வரவில்லை என்றதும் சில நண்பர்கள் வரவில்லை என்றார்கள் அவர்கள் வரவில்லை என்றால் நாமும் போகவேண்டாம் என்றார்கள் மற்ற நண்பர்கள், கடைசியில் குற்றாலம் செல்லும் திட்டமே கைவிடப்பட்டது!
கணேஷ் திருமணத்திற்கு சென்று விமலாவுடன் சில மணிநேரங்கள் நிறைய‌ பேசிவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்ததால் மகிழ்ச்சியுடன் திரும்பினான்!

இடையில் செல்வாவின் எண்ணிற்கு போன் செய்துபார்த்தான், அவன் இன்னும் கோபம் குறையாமல் இருந்ததால் எடுக்கவில்லை! மறுநாள் எதிரே பார்த்தபோதும் கண்டும் காணாததுபோல் போய்விட்டான்!முன்று நாட்களாகியும் பேசவில்லை!SMS அனுப்பியும் எதற்கும் பதில் அனுப்பவில்லை,என்ன செய்வது என்று யோசித்த கணேஷ் அலுவகத்தில் உணவு இடைவேளையின் போது தன் இ_மெயில் முகவரியில் இருந்து செல்வாவின் இ_மெயில் முகவரிக்கு மெயில் ஒன்றை அனுப்பினான்!


""ஹாய்டா மச்சான்!
எப்பிடியிருக்க? ஏண்டா மூணு நாளா பேச‌மாட்டிங்குற!
அவ்ளோ பெரிய ஆளாகிட்டியாடா நீ! நான் வேணும்னே அப்படி செய்யலடா என் சூழ்நிலை அப்படி! உனக்கே தெரியும் நானும் விமலாவும் நேர்ல பேசி ரொம்ப நாள் ஆச்சுனு!அதான் போய்ட்டேன்!நீ கோபிக்கிற அள‌வுக்கு நான் தப்பு எதுவும் பண்ணின மாதிரி எனக்கு தோன‌லடா! உன் கோபத்த மாத்திட்டு எப்ப‌வும் போல பேசுடா!
ஃப்ரண்ர்ஷிப்பவிட காதல் பெரிசுனு நான் நினைக்கலடா! ரெண்டுமே வேற வேற மாதிரி அதுகேத்தமாதிரிதான் நான் நடந்துகிட்டேன், எப்படினு கேக்குறியா?

நீ எனக்கு ரொம்ப வருசமா பெஸ்ட் ஃப்ரண்டு! ஆனா விமலா எனக்கு மூணு வருசமாதான் லவ்வர்! எப்பவும் இதே மதிரி இருக்க முடியாது, அடுத்த வருசமே கல்யாணம் முடிஞ்சா வாழ்க்கை அன்பு ஆசை சண்டைனு எல்லாம் கலந்து நிறையவே மாறிடும்!இப்போ மாதிரி அப்போ இருக்கமுடியாது!ஆனா நம்ம ஃபிரண்ட்ஷிப் அப்படியாடா? எப்பவும் இதே மாதிரி பெஸ்ட் ஃப்ரண்ட்ஸாதானடா இருப்போம்! லவ்வ புரிஞ்சுகிட்டு ஃப்ரண்ஷிப்பா நீ நம்ம சந்தோசத்த விட்டுகொடுப்ப! ஃபிரண்டிஷிப்ப புரிஞ்சுகிட்டு தன்னோட சந்தோசத்த அவ விட்டுகொடுக்கமாட்டா! ஏன் எந்த லவ்வரும் தன்னோட சந்தோசத்த விட்டுக்கொடுக்குறதில்லை!லவ்வு பிடிவாதம் பிடிக்கும்டா!ஃபிரண்ட்ஷிப்தாண்டா ம‌ச்சான் அணுச‌ரிச்சு போகும்! அதுதாண்டா மச்சான் நம்ம ஃபிரண்ட்ஷிப்போட ஸ்பெசலே!

லவ் விசயத்துல எதாவது ப்ரோகிராம்னா வாய்ப்பு கிடைக்கிறப்போவே யூஸ் பண்ணிக்கிட்டாதான்!இல்லாட்டி அவ்ளவுதான்!ஆனா ஃப்ரண்ஷிப் ப்ரோகிராம எப்ப வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் மாத்திக்கலாம் மச்சான்!
எதாவ‌து பிர‌ச்ச‌னைனா நீங்க‌ள்லாம் உத‌வி ப‌ண்ண‌ இருப்பீங்க‌ன்ற‌ தைரிய‌த்துல‌தாண்டா நான் தைரிய‌மா காத‌லிக்கிறேன் நீயே இப்ப‌டி இருந்தா எப்ப‌டிடா? வேலை முடிஞ்ச‌தும் ஏழு ம‌ணிக்கு சிவா க‌டைக்கு வ‌ந்திருடா! நான் அங்கேயே இருக்கேன் ! ம‌ற‌ந்துடாதே!!

உன் ந‌ண்ப‌ன்
க‌ணேச‌ன்


அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளில் செல்வா செல்பேசியில் க‌ணேசை அழைத்தான்!
"டேய் மச்சான் இந்த‌ ஞாயிற்றுக்கிழ‌மை கண்டிப்பா குற்றால‌ம் போறோம்டா! எல்லார் கையில‌யும் ச‌ம்ப‌ள‌க்காசு இருக்கும் நல்லா செல‌வு செய்ய‌லாம்!" என எதுவும் ந‌ட‌க்காத‌துபோல் எப்போதும் போல‌ இய‌ல்பாக‌ பேசிக்கொண்டிருந்தான் செல்வா! மெயில் ப‌டித்ததும் ச‌மாதான‌மாகிவிட்டான் என்ப‌து கணேசுக்கு புரிந்தது!
"ச‌ம‌தான‌மான‌ அடுத்த‌ நிமிட‌மே, சண்டைகளை மறந்துவிடுவதே நட்புக்கு அழகு!" என்ப‌தை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ளாக இருவரும் பேசிகொண்டிருந்தார்க‌ள்!

~நம்பிக்கைபாண்டியன்~
முரண்பாடு
அன்றொரு நாள்
வெளியே
காத்திருப்பவனாய்,
நிறுத்தத்தில் நிற்காத‌

பேருந்தை பார்த்து
சபித்துச் சொன்ன மனசு!

மற்றொரு நாள்
உள்ளே
அமர்ந்திருப்பவனாய்,
நிறுத்தத்தில் நிற்கும்

பேருத்தை நினைத்து
"இத்தனை நிறுத்தங்களா"
என சலித்துக் கொள்கிறது!


~நம்பிக்கைபாண்டியன்
உரை பார்வை பூக்களால் முன்னுரை
எழுதத் தொடங்கிய‌
நம் காதல் கட்டுரைக்கு!
பிரிவு முட்களால்
முடிவுரை
எழுதியதேனடி?


~நம்பிக்கைபாண்டியன்

Friday, December 14, 2007

பாரதியே! எதையாவது
எழுதிவிட்டு
கவிதை
என்று சொல்லும்,
என்
தகுதியில்லா
தலைக்கணத்தில்!
நறுக்கென்று
குட்டியது!
உன்
நல்லகவிதை ஒன்று!
~நம்பிக்கைபாண்டியன்

வருடங்கள் ஓடியதால்
பருவங்கள் மாறியது!
ப‌ருவங்கள் மாறியதால்
உருவங்கள் மாறியது!

உருவங்கள் மாறினாலும்
உள்ளங்கள் மாறாமல்!
அன்றுபோல் இன்றும்
உயர்ந்தே இருக்கிறது
நம் உன்னத நட்பு!

~நம்பிக்கைபாண்டியன்

Wednesday, December 12, 2007

ப‌ல‌ன்! "க‌விதை போட்டிக‌ளில்
சில‌ ஆயிர‌ம் ப‌ரிசுக‌ள்!

ப‌த்திரிக்கை பிர‌சுர‌த்தில்
ப‌ல‌ ஆயிர‌ம் வாச‌க‌ர்க‌ள்!

இணைய‌ தொட‌ர்புக‌ளில்
இனிய நண்ப‌ர்க‌ள்!

முக‌ம‌றியாம‌ல்
பேசும்ந‌ல்ல‌ தோழிக‌ள்!

ப‌ழைய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்குள்
புதிய ம‌‌திப்புக‌ள்!" என‌

உன்னால்
நான் எழுதிய
க‌விதைக‌ளின் ப‌ல‌ன்க‌ளாய்,
நிறையவே கிடைத்தன‌
உன்னைத் த‌விர‌!!


~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்
( சிறுகதை) ~(நம்பிக்கைபாண்டிய‌ன்)



புவனாவின் பேச்சைக் கேட்க விருப்பமில்லாமல் எழுந்து, நடந்துகொண்டே சிகரெட் ஒன்றை பற்றவைத்தபடி கடல் அலைகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்! புவனா இதைக க‌ண்டதும் "நான் இவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட நீ யோசிச்சது மாதிரி தெரியல‌ ரமேஷ்!என் பேச்சுக்கு இவ்வளவுதானா நீ கொடுக்கும் மரியாதை" என்றாள் கோபமாக!

"புவனா நான் உன்னை காதலிக்கிறது என்னவோ உண்மைதான்,அதற்காக‌ நீ சொல்லும் எல்லாவற்றையும் கேட்க வேன்டுமென்று நினைப்பதில் நியாய‌மில்லை! இது என் தனிப்பட்ட சுதந்திரம்! இதில் தலையிடாதே! நான் சிகரெட் பிடிப்பது முன்பே தெரிந்துதானே என்னை காதலித்தாய்! இப்போது மட்டும் ஏன் நிறுத்த சொல்லுகிறாய்!என்று சொல்லிக்கொண்டே மனதிற்குள்" ச்சே என்ன பெண்கள் இவர்கள், காதலின் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் பெண்கள், நாட்கள் செல்லச் செல்ல அதிகாரம் செய்ய ஆசைப்படுகிறார்கள்!" என நினைத்துக்கொண்டான்!



ர‌மேஷின் பேச்சுக்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் மொளனமாக இருந்தாள் புவனா! சற்று கோபம் தணிந்தவனாய் " என்னால சிகரெட்ட நிறுத்த முடியாது புவனா எட்டு வருட பழக்கம்! இப்போதாவது ஒரு பாக்கெட்தான்,முன்னாடி தினமும் இரண்டு பாக்கெட் காலி செய்த காலமெல்லாம் இருக்கு! கெட்ட பழக்கங்களை பழகுவது சுலபம் ஆனால் நிறுத்துவது மிக மிக கடினம்! தவறென்று தெரிந்தாலும் தவிர்க்க முடியாத நிலமை என்னுடையது! புரிந்துகொள் புவனா!" என்றான்.


"பேசுற அளவுக்கு யோசிக்கப் பழகு ரமேஷ்! உன் நல்லதுக்கு தானே சொல்லுறேன்,இதானால் எவ்வளவு கெடுதல்னு புக்ஸ்ல படிச்சிருக்கேல‌!நீ சொல்லுற மாதிரி, "திருத்திக்கொள்ள முடியாத தவ‌றுகள் என்று எதுவுமே இல்லை!! இருக்கிறது என்று நீ சொன்னால், திருந்துவதற்கு உன் மனம் தயாராக இல்லை என்றுதான் அர்த்தம்!"

"நான் உன்னை உடனே நிறுத்த சொல்லலியே முதல்ல பாதியாக குறை! அப்படியே கொஞ்ச‌ம் கொஞ்சமாக நிறுத்த முயற்சி செய்!" "சொல்ல‌னும்னு தோனுச்சு சொல்லிட்டேன்! அப்புறம் உன் இஷ்டம்! நேரமாச்சு போகலாம்!"என்றாள் அவன் பதிலை எதிர்பாராதவளாக! இருவரும் புறப்பட்டு சென்றனர்,


கோபத்தில் மறுநாள் ரமேசிடம் புவனா சரியாக பேசுவதில்லை, செல்பேசியில் அழைத்து கேட்டால், அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் என்று சொல்லிவிட்டாள்! கோபத்தில் இவனும் "நீ எப்போ ப்ரீயா இருக்கியோ அப்போ நீயா கூப்பிட்டு பேசு!" என்று இணைப்பை துண்டித்தான்! இரண்டு நாட்களாக இருவருமே பேசுவதில்லை!சம்பிரதாயத்திற்கு காலையிலும் இரவிலும் SMS அனுப்பிக்கொள்வதோடு சரி!


ர‌மேஷ் தனியார் வ‌ங்கி ஒன்றில் உயர்ப‌ணியில் இருப்பவன். ப‌ள்ளி ஒன்றில் ந‌ட‌க்கும் விழாவிற்கு அந்த‌ வ‌ங்கியின் சார்பில் விள‌ம்ப‌ர‌த்திற்காக‌ ஸ்பான்ச‌ர் செய்திருந்தார்க‌ள், அது ப‌ற்றி பேச‌ உண‌வு இடைவேளை நேர‌த்தில் வ‌ருமாறு த‌லைமை ஆசிரிய‌ர் அழைத்திருந்தார்! அத‌ன்ப‌டியே சென்றான்.


தலைமை ஆசிரியருடன்விழா ப‌ற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ளை பிடித்து இழுத்த‌ப‌டி உள்ளே வ‌ந்த உடற்பயிற்சி ஆசிரியர்" சார் இவனுக ரெண்டுபேரும் நம்ம ஸ்கூல் மொட்டை மாடியில் சிகரெட் பிடிச்சுட்டு இருக்கப்போ பார்த்து கையோட இழுத்துட்டு வந்தேன் சார்!" என்று புகார் செய்தார்!


த‌லைமை ஆசிரிய‌ர் அம்மாண‌வ‌ர்க‌ளை பார்த்து முறைத்த‌ப‌டியே" ஏன்டா அறிவு கெட்ட பயலுகளா!இந்த‌வ‌ய‌சிலேயே சிக‌ரெட்டா? காச‌க் க‌ரியாக்கி உட‌ம்பையும் கெடுத்துக்காதிங்க‌டா" என்று திட்ட‌ ஆர‌ம்பித்தார்! ஒரு மாண‌வ‌ன் என்ன‌ செய்ய‌போகிறாரோ என்ற‌ ப‌ய‌ந்த‌ப‌டியே நின்றிருந்தான்! இன்னொருவ‌ன் எந்த‌ ப‌ய‌முமின்றி அல‌ட்சிய‌ ம‌னோபாவ‌த்துட‌ன் நின்றிருந்தான்!



திட்டிக்கொண்டிருந்த‌ த‌லைமை ஆசிரியர், அதில் ஒருவ‌னை வேதியிய‌ல் ஆய்வ‌க‌த்திற்கு சென்று சுட‌ர்விள‌க்கு ஒன்றையும், க‌ண்ணாடித்துண்டு ஒன்றையும் வாங்கிவ‌ர‌ச் சொன்னார்! என்ன செய்யப்போகிறார் என்று ஆர்வ‌மாக கவணித்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.



அவன் வாங்கி வ‌ந்த‌த‌தும்,"சிக‌ரெட் குடிப்ப‌து ஏன் த‌ப்புனு சொல்லுறேன்னு முத‌ல்ல‌ தெரிஞ்சுக்கோங்க‌டா!" என்று சொல்லி, முத‌லி சுட‌ர்விள‌க்கை ப‌ற்ற‌ வைத்தார், அதில் எரிந்த‌ தீச்சுட‌ருக்கு சற்று மேலே க‌ண்ணாடித்துண்டை தூக்கி பிடித்தார், தீச்சுட‌ரிலிருந்த வந்த புகை தொடர்ந்து கண்ணாடியில் ப‌டிந்ததும், ப‌ள‌ப‌ள‌ப்பாக‌ இருந்த‌ க‌ண்ணாடித்துண்டு க‌ருப்பாக‌ மாறிய‌து!
மாண‌வ‌ர்க‌ளிட‌ம் அதைக்காட்டி" சுத்த‌மாக‌ இருந்த‌ இந்த‌ க‌ண்ணாடி ஏன் இப்ப‌டி அழுக்கு பிடித்து க‌ருப்பாகா மாறிய‌துனு தெரியுமா?" என்றார்!


"தொட‌ர்ந்து புகைப‌ட்ட‌தால் இப்ப‌டி அழுக்காச்சு சார்!" என்றான் அல‌ட்சிய‌மாக‌ இருந்த‌ மாண‌வ‌ன்,"

"ம்ம்ம் அதே மாதிரிதாண்டா நம்ம உடலின் உள் உறுப்புக‌ளும், சுத்த‌மாக‌ இருக்கும் உட‌லுக்குள் தொட‌ர்ந்து புகையை இழுப்ப‌தால் அந்த‌ புகையில் உள்ள‌ ந‌ச்சுப்பொருட்கள் உள் உறுப்புகளுக்கு த‌ற்காலிக‌ இத‌ம‌ளித்தாலும், பெரிய‌ அள்வில் பாதிப்புக‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து! நிறைய‌ நோய்க‌ளை உருவாக்குகிற‌து!


இந்த‌ வ‌ய‌சுல‌ உட‌ம்புல‌ தெம்பு இருக்குற‌ப்போ ஒன்னும் தெரியாது! பின்னால‌ ரொம்ப‌ க‌ஷ்டப்‌ப‌டுவீங்க‌! இனிமேல் சிக‌ரெட் குடிக்காதீங்க‌! என்று தெளிவாக‌ ம‌ன‌தில் ப‌தியுமாறு சொன்னதும், உண்மை புரிந்த‌வ‌ர்க‌ளாக‌ மாண‌வ‌ர்க‌ள் இருவ‌ரும் "இனி நெஜ‌மாவே சிக்ரெட் குடிக்க மாட்டோம் சார்" என்று ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ சொன்னார்க‌ள்!


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த‌‌ ர‌மேசுக்கு ம‌ன‌திற்குள் ஏதோ ஒன்று சுருக்கென்ற‌து தைத்த‌து போல‌ இருந்த‌து!தெளிவாக உணர்த்திய ஆசிரியரை ஆச்சர்யமாக பார்த்தான், புவனாவும் இதை, என் நலத்திற்காகாதானே சொன்னாள்! அதை கேட்ப‌தில் என்ன‌ த‌வ‌று!இனி நானும் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என ம‌ன‌திற்குள் ம‌ன்னிப்புக் கேட்டுகொண்டே!பேசி முடித்துவிட்டு வெளியே வ‌ந்த‌தும் த‌ன் செல்பேசியில் "செல்ல‌ம்" என்ற‌ பெய‌ரில் சேமித்துவைத்திருந்த‌ புவ‌னாவின் எண்ணை அழைக்க‌ அழுத்தினான்!

Sunday, November 04, 2007

காத்திருப்பு பேருந்து
நிறுத்த‌த்தில்
ர‌யிலுக்காக
‌காத்திருக்கும்
ப‌ய‌ணியைப் போல்
நானும்!

பொருத்த‌மின்றி
காத்திருக்கிறேன்
உன்
காத‌லுக்காக‌!
~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

Wednesday, October 03, 2007

அற்புத கடிகாரம்!
அவசிய வேலைகளால்
அதிகாலை எழுவதற்கு
அலாரம் வைத்த‌
அன்றைய உறக்கத்தில்!
அலட்சியம் செய்த‌
அத்தனை முறையும்!
அக்கறையாய் ஒலித்து
அன்புடன் எழுப்பியது!
அம்மா எனும்,
அற்புத கடிகாரம்!

~நம்பிக்கைபாண்டியன்


Tuesday, October 02, 2007

மறைந்த காதல்!சரியா? தவறா?
எப்படி கேட்பது?
என்ன நினைப்பார்கள்?
என்ற தயக்கத்தில்
எனக்குள் தோன்றி
எனக்குள்ளேய
‌மறைந்து போன‌
சில கேள்விகளைப் போல்!
உன்மேல்
நான் கொண்ட‌
காதலும் ஆனதடி(டா)!
nambikaipandian@gmail.com ~நம்பிக்கைபாண்டியன்



Sunday, September 30, 2007

ஓடிப்போலாமா?

அக்கம் பக்கம் கண்ணில் படும்படி யாருமில்லை என்று தெளிவுபடுத்திக்கொண்டு ,வீட்டிற்கு சற்று தள்ளியே பைக்கை நிறுத்திவிட்டு,செல்வியின் வீட்டிற்குள் நுழைந்தான் மூர்த்தி!

உள்ளே அன்றைய செய்தித்தாள்களை புரட்டிக்கொண்டிருந்தாள்செல்வி
!மூர்த்தியை பார்த்ததும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள்!
"என்ன செல்வி! இன்னும் புறப்படலியா நான்தான் நேற்றே சொன்னேன்ல! வேகமா வா உன் அம்மா அப்பா வருவதற்குள் போயிடலாம்!"என்று கெஞ்சும் பார்வையுடன் அழைத்தான்!
"உங்க இஷ்டத்துகெல்லாம் என்னால வரமுடியாது!நம்ம ஒன்னுசேரமுடியும்ங்கிற நம்பிக்கை இப்போ எனக்கு ரொம்ப குறைஞ்சுருச்சு!"
"என்ன மன்னிச்சுருங்க! முதல்ல வீட்டுக்கு போங்க! யாராவது பார்த்தா என்ன தப்பா நினைப்பாங்க!"என்று சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்க்காமல் ஜன்னலின் பக்கம் திரும்பிக்கொண்டாள்!
"உன்ன எனக்கு நிஜமாவே பிடிக்கலைனு சொல்லு நான் போய்டுறேன்!"என்றான்!
அவள் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்!

யாரென்றே அறிமுகமாத நம்மை!நம் இருவருக்கும்தான் திருமணம் என்று சொல்லி! நம் பெற்றோர்கள்தானே நம்மை நேரில் அறிமுகப்படுத்தினார்கள்! மூன்று மாதத்திற்கு முன் பெரியோர்கள் முன்னிலையில் வெற்றிலைபாக்கு வைத்து, தட்டு மாற்றிக்கொண்டு நல்லநாள் மூகூர்த்தம்,திருமண மண்டபம் ,திருமண செலவுக்க்கு இரு தரப்பிலும் தேவையான பணஏற்பாடு, போன்ற காரணங்களால் நான்கு மாதங்கள் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்! என்று சொன்னார்கள்!

எனக்கு தெரியாமல் உங்களிடம் நான் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொன்னது என் பெற்றோர்கள் செய்த தவறு! அதை நம்பி அன்று பெண்ணுக்கு 25 சவரன் நகைபோடுவதாக ஒப்புக்கொண்டுவிட்டு இப்போது "பேசியதை விட நான்கு சவரன் குறைவாகத்தான் நகை போடுவோம் இல்லையென்றால் நீங்கள் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்" தடாலடியாக பதில் சொன்னது உன் பெற்றோர்களின் தவறு! இவர்களுக்கு இடையில் நாம் மாட்டிகொண்டு முழிக்கிறோம்!" என செல்வியிடம் புலம்பி தவித்தான் மூர்த்தி!

"உங்கள் வீட்டில் நீங்கள் எடுத்துச்சொல்லி சமாதானம் செய்யலாமே என்றாள் செல்வி!"
"சொல்லிவிட்டேன்!செல்வி,எங்கள் வீட்டில் பணத்தாசைக்காக மறுக்கவில்லை! உன் பெற்றோர்கள் பொறுமையாக பேசாமல் எடுத்தெறிந்து பேசும் விதமாக பதில் சொன்ன விதம் பிடிக்கவில்லை! அதனால்தான் இப்பொழுதே இப்படியா? என்று யோசிக்கிறார்கள்,என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க மறுக்கிறார்கள்!
உன் அப்பாவிடமும் நான்கு சவரன் நகைக்குரிய செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் திருமணத்தை நிறுத்தாதீர்கள் என்று சொல்லி பார்த்துவிட்டேன்! "எங்கள என்ன வக்கத்த குடும்பம்னு நினைச்சுட்டிங்களா!உங்க வாக்கு சுத்தத்திற்கு இவ்வளவு செய்யுறதே போதும்!னு சொல்லுறார்!
இருதரப்பினரையும் இப்போது சமாதனம் செய்வதை விட நாமாக திருமணம் செய்துவிட்டு பிறகு சமாதானம் செய்வது சுலபம்! என்றான்!

அவள் சற்று முன் செய்திதாளில் சில வரதட்சனை கொடுமைசெய்திகளை படித்ததில், அதிலிருந்த ஆண்களை விட மூர்த்தி உயர்ந்தவனாக் தெரிந்தான்!அப்படி என்ன! இவ்வளவு பிரியம் என்மேல் என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டே அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் செல்வி!

அவளின் பார்வையின் அர்த்தன் புரிந்தவன் போல் "உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு செல்வி! பார்த்தவுடன் பிடித்துப்போன உன் இயல்பான முகம்!கடந்த மூன்று மாதத்தில் உன்னுடன் தொலைபேசியில் பேசியபோதும், என் வீட்டிற்கு தெரியாமல் உன் வீட்டிற்கு இரண்டு முறை உன் வீட்டிற்கு வந்த போதும் நீ பேசிய விதமும்,உன் குணமும் பிடித்திருந்தது! "நான்கு சவரன் நகைக்காக நல்ல வாழ்க்கையை இழக்க நான் தயாராக இல்லை!"அதனால்தான் உன் வீட்டில் கொடுக்கும் நகையோ எதுவுமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை!நீ வந்தால் போதும்!செல்வி!

நகரத்து வாழ்க்கைக்கு என்றால் என் சம்பளம் போதாதுதான்!நம் பகுதிக்கு வாழ்க்கைக்கு என் சம்பளம் அதிகம் தான்! வாழப்போவது நாம் தான் நம் பெற்றோர்கள் அல்ல அவர்களை பிறகு சமாதானப்படுத்தலாம் வா போகலாம் என்று கையை பற்றி இழுத்தான்!
சட்டென்று அவன் கைகளை உதறிவிட்டு உள அறைக்குள் ஓடினாள்!அவன் வாடிய முகத்துடன் வாசலில் வந்து நின்றான்!

உள்ளே சென்றவள் சில நாட்களுக்கு தேவையான ஆடைகளை பையில் எடுத்து வைத்துவிட்டு!"பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை! பணத்தைவிட என்னைக் நேசிப்பவன் கிடைக்கும் போது என் திருமணத்திற்காகவே எடுத்த நகைகளின் உரிமையை நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்" என்று நினைத்தபடியேஅலமாரி சாவியை எடுத்து நகைகளையும் எடுத்து பையில் வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள் செல்வி!அது தெரியாமலேயே மனம் மகிழ்ந்து பைக்கை இயக்கினான் மூர்த்தி! அவன் தோள்களை பற்றியபடி அவள் பின்னே அமர்ந்ததும், இணையப்போகும் இரு உள்ளங்களை சுமந்த பைக் உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்தது!

~(நம்பிக்கைபாண்டியன்)

Monday, September 17, 2007

முதல்நண்பன்(கடவுள்)
தவறிழைக்க
மனம் முயன்று
மறந்து சென்றேன் உன்னை!

தடை கொடுத்து
வழி மாற்றி
சீர் செய்தாய் என்னை!

உன்னால்
மன்னிக்கப்பட்டவன் நான்!
என்னால்
மறக்கமுடியாதவன் நீ!

~நம்பிக்கைபாண்டியன்

Sunday, August 05, 2007

நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!




ந‌ம்நட்பு!

அர்த்தமின்றி சிரிக்கும்
காதலை தவிர்த்து,

ஆதாயம்தேடி சிரிக்கும்
சொந்தங்களை தவிர்த்து,

உள்ளத்திலிருந்து வரும்
உண்மையான சிரிப்பில்
இருக்கிறது நம் நட்பு!


~நம்பிக்கை பாண்டியன்

Monday, July 30, 2007

காதல் நிலை!

அழகின் ஆர்வ‌த்தில்
புரியாத வேகத்தில்
பக்குவமின்றி
பரிமாறிக்கொண்ட‌
அவசரக் காதல்கள்!
மழைக் காலத்துக்
காளான்களாக‌
எளிதில் அழிந்து
மறைகின்றன!

சூழ்நிலை உணர்ந்து
பேசிப் புரிந்து
பொறுமையாக வளர்ந்த
சீரான காதல்கள்!
மலைப் பிரதேசத்து‌
மரங்களாக‌,
உறுதியாய் உயர்ந்து
நிலைக்கின்றன!

~நம்பிக்கைபாண்டிய‌ன



பட்டிமன்ற மடல் உரை!


கூகுள் தளத்தின் அன்புடன் குழுமத்தில்(groups)
"""காதல் குளத்தில் கல்லெறிவது "ஆண்களே"! "பெண்களே!"""" என்ற தலைப்பில் இரு அணிகளாக பட்டிமன்றம் நடந்தபோது, "பெண்களே!" என்ற அணியின் சார்பாக நான் எழுதி அனுப்பிய மடல் உரை!

காதல் குளத்தில் கல்லெறிவது பெண்களே!

அழகான த‌லைப்பில் இந்த‌ப‌ட்டிம‌ன்ற‌த்தை சிற‌ப்பாக‌ ந‌ட‌த்திவ‌ரும் அன்புட‌ன் குழுநிர்வாக‌த்திற்கும், ஆர்வ‌மாக‌ ப‌டித்து ர‌சித்துக்கொண்டிருக்கும் குழுந‌ண்ப‌ர்களுக்கும்,காத‌ல் குளத்தையெல்லாம் தாண்டி, காதல் க‌ட‌லில் மூழ்கி முத்தெடுத்து க‌ம்பீர‌மாக‌ வீற்றிருக்கும்ம் ந‌டுவ‌ர் அவர்களுக்கும்! இன்னும் த‌லைப்பிற்கு அர்த்த‌மே புரியாம‌ல் பேசிகொண்டிருக்கும் எதிர‌ணி ந‌ண்பர்களுக்கும்! அருமையான பல‌க‌ருத்துக்க‌ளை சொல்லி, இன்னும் சொல்ல‌ப்போகும் என‌து அணி ந‌ண்பர்களுக்கும்,என் அன்பு வ‌ண‌க்க‌ங்க‌ள்,
எங்கள் அணியின் சார்பாக‌ ஏற்க‌ன‌வே விரிவாக‌, அருமையாக‌ க‌ருத்துக்க‌ளை ச‌ஞ்ச‌ய்காந்தி அவ‌ர்க‌ளும்! மீரான் அவ‌ர்க‌ளும் சொல்லி இருக்கிறார்க‌ள், சுருக்க‌மாக‌ தெளிவாக‌ ம‌துமிதா அவ‌ர்க‌ள் சொல்லி இருகிறார்க‌ள்! எதிர‌ணியின‌ர் அணியின் பலத்தை உயர்த்த என்னென்னமோ சொல்லித்தான் பார்த்தாங்க‌‌! ஆனால் எதிர் பார்த்த‌ ப‌ல‌ம் இல்லை, ரொம்ப வீக்கா இருக்காங்க‌! எங்க‌ள் அணியின் ப‌ல‌த்தை பார்த்து பாதியிலேயே எஸ்கேப் ஆகிடாதிங்க‌‌! கடை‌சி வ‌ரை இருந்து எங்க‌ள் வெற்றிய‌ பார்த்துட்டு போங்க‌!
ந‌டுவ‌ர் அவர்க‌ளே,இங்கே ந‌ம‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் த‌லைப்பு, ச‌ப‌ல‌க்குள‌த்தில் க‌ல்லெறிவ‌து யார் என்ப‌த‌ல்ல!

ஈவ் டீசிங் குள‌த்தில் க‌ல்லெறிவ‌து யார் என்ப‌த‌ல்ல!

காதல் குளத்தில் கல்லெறிவது யார் என்பதுதான்,

உண்மையான காதலுக்கு மனம் தான் முக்கியபங்கு வகிக்கிறது, அப்படி பார்த்தால் யார் முதலில் மனப்பூர்வமாக காதலிக்கிறார்களோ அவர்கள்தான் காதல் குளத்தில் கல்லெறிவதாக அர்த்தம்!இதை எதிர‌ணியிண‌ர் இன்னும் புரிந்துகொள்ள‌வில்லை! ஆண்க‌ள் தான் அதிக‌ம் சைட் அடிக்கிறார்க‌ள், ஆண்தான் பெண்ணின் பின்னால் அலைகிறான், ஆண்தான் பெண்னுக்காக‌ அங்கும் இங்கும் சுற்றுகிறான் என்றெல்லாம் சொல்கிறார்க‌ள்! இதெல்லாம் காத‌லாகி விடுமா??

காத‌ல் என்ப‌து ம‌ன‌தை அடிப்படையாக‌ கொண்ட‌ விச‌ய‌ம், ஆண் பெண்ணின் பின்னால் சுற்றும் போதும் அவ‌ள் ம‌ன‌தில் இட‌ம்பிடிப்ப‌த‌ற்காக, ப‌ல‌ பொய்க‌ளும்,சாக‌ச‌ முய‌ற்சிக‌ளும் செய்யும்போதெல்லாம் அவ‌ன் ம‌ன‌ப்பூர்வ‌மான‌ காதலை உண்ர்வ‌தில்லை!இது மனித இயல்பிற்க்கே உரிய பாலின ஈர்ப்பு,அதனால்தான் ஆண்கள் நிறையபேரை காதலித்துக்கொண்டிருகிறார்கள் !உண்மை காதலை உணரும் முன்பே அவளிட‌ம் காத‌லிப்பதாக‌ உள‌றி கொட்டிவிடுகிறான், இவனுடைய‌ செய‌ல்க‌ள் அவள் மனதிற்கு பிடித்து, முன்பே இவனை காதலிக்க ஆரம்பித்திருந்தாலும் தாம‌த‌மாக‌வே பெண் காதலை வெளிப்ப‌டுத்துகிறாள்! அவ‌ள் ம‌ன‌ம்திற‌ந்து த‌ன் காத‌லை சொல்லும்போதுதான் ஒரு ஆண் உண்மையாக‌வே அவ‌ளை காத‌லிக்க‌ ஆர‌ம்பிக்கிறான்! இதை ஒரு க‌விதையாக‌வே சொன்னால்!

பார்வைகளால்
நான் உன்னை
காதலிக்க‌ ஆர‌ம்பித்த‌
நாட்க‌ளை விட‌
ம‌ன‌தால்
நீ என்னை
காத‌லித்த பிறகுதான்
இத‌ய‌த்தால் உண்ர்ந்தேன்
உண்மைக் காத‌லை!


காத‌லுக்கும், விருப்ப‌த்திற்கும் நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கிற‌து இதைப் புரிந்துகொண்டால், காத‌ல் குள‌த்தில் க‌ல்லெறிவ‌து பெண்கள்தான் என்ப‌து புரியும்!

காத‌லை 4 நிலைக‌ளாக‌ பிரிக்க‌லாம்! என்ப‌து என்னுடைய‌ க‌ருத்து! அதில் மூன்றை ம‌ட்டும் இங்கு சொல்லுகிறேன்!

1) விருப்ப‌ம்!(ஈர்ப்பு)

நாம் ஒவ்வொருவ‌ருமே வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைக‌ளில் வெவ்வேறுவித‌மான‌ ம‌னித‌ர்க‌ளை ச‌ந்திக்கிறோம், அப்ப‌டி ச‌ந்திப்ப‌வ‌ர்க‌ளில் சில‌ர் ம‌ட்டும் ந‌ம்ம‌ன‌தில் ஏதேனும் ஒருவகையில் ஒரு தாக்க‌த்தை ம‌ன‌தில் ஏற்ப‌டுத்திவிட்டுசெல்வதால் அவர்களை!நமக்கு பிடிக்கும்!
சில‌ரை அழ‌கால் பிடிக்கும், சில‌ரை அறிவுத்திறமையால் பிடிக்கும், சில‌ரை ந‌ல்ல‌ குண‌ங்க‌ளால் பிடிக்கும்! சில‌ரை சூழ்நிலைக்கேற்றார்ப்போல் பேசும் க‌ல‌க‌ல‌ப்பான‌ பேச்சால் பிடிக்கும்! இது ந‌ம் வாழ்வில் நிறைய‌பேரிட‌ம் வ‌ரும்!இது காத‌ல் அல்ல!இந்த குளத்தில்தான் ஆண்கள் முதலில் கல்லெறிகிறார்கள்!

2) விருப்ப‌த்தின் பிர‌திப‌லிப்பு!

அவ‌ர்க‌ளை ந‌ம‌க்கு பிடிப்ப‌துபோல! நம்மையும் அவர்களுக்கு பிடிக்கும்! ஆனால் இருவ‌ருமே காதலை சொல்லிகொள்ள‌ மாட்டார்க‌ள்! சாத‌ர‌ண‌மாக‌வோ, போலியான‌ ந‌ட்பாக‌வோ பேசிக்கொள்வார்க‌ள்! பார்ப்பார்க‌ள், சிரிப்பார்க‌ள்,ச‌ம்ப‌ந்த‌மே இல்லாம‌ல் ஏதேதோ பேசிகொள்வார்கள்!சூழ்நிலைகள் பொருந்தாது என்றால் கடைசிவரை சொல்லாமலே பிரிந்துவிடுவார்கள்! எனவே இதையும் காத‌ல் என்று சொல்ல‌ முடியாது, ஆனால் காத‌லுக்கு அடிப்ப‌டை நிலை இதுதான்! இங்கே ஆண்பெண் இருவ‌ருமே சம‌மாக‌வே க‌ல்லெறிகிறார்க‌ள்!

3)புரிந்துகொள்ளுத‌ல்

இந்த நிலையில் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்திக்கொள்வார்கள், மனம்விட்டு நிறைய பேசிக்கொள்வார்கள், ஒருவரை பற்றி ஒருவர் நன்கு பேசி புரிந்துகொள்வார்கள்! ஒருவர் மீது ஒருவர்அதீதமான அன்பும் அக்கைறையும் செலுத்துவார்கள்! எல்லை மீறாமல் நடந்துகொள்வார்கள்! இங்கே காதல் என்பது மனதை மையமாககொண்டிருக்கும்!இங்கேதான் உண்மையான காதல் ஆரம்பிக்கிறது!மனம் என்னும் கல்லை பெண்தான் முதலில் எறிகிறாள்!

எந்த ஒரு காதலிலும் ஒருபெண் என்ன மனநிலையில் இருக்கிறாளோ அதை பொறுத்தே அந்த காதலின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது!காதலர்களுக்குள் மனப்பூர்வமான காதல் என்பது ஒரு பெண்ணில்தான் முதலில் தொடங்குகிறது, வார்த்தைகளால் வேண்டுமானால் ஆண்வெளிப்படுத்தலாம், ஆனால் பெண்கள் பார்வைகளாலும் பேசும்போது மறைமுகமாக சிலவார்த்தைகளாலும் காதலை வெளிப்படுத்துவார்கள்! ஆண் முதலில் சொல்லட்டும் என் எதிர்பார்ப்பார்கள்!சொன்னாலும் உடனே சம்மதிக்க மாட்டார்கள்! (சொன்னால் அவர்கள் இமேஜ் குறைஞ்சுடுமாம், கல்யாணத்துக்கப்புறம் சண்டை வரும்போது "நீங்கதானே என்ன துரத்தி துரத்தி காதலிச்சிங்க!" என்று சொல்லி திட்டுவதற்கும் உதவுமாம்),

சைட் அடிக்கும்போதும், முதல் முதலில் காதலிக்க ஆரம்பிக்கும்போதும் பெண்களின் மாற்றங்களினை கவனித்து பாருங்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கும்! சமீபத்தில் நான் எழுதிய உளறல் கவிதையின் வரிகளின் இடையே இதை எழுதி இருப்பேன்!

.....................
எல்லோருக்கும் தெரியும்படி
முகத்தை திருப்பி
உன்னை பார்க்கிறேன் நான்!
யாருக்கும் தெரியாமல்
கண்களை திருப்பி
என்னை பார்க்கிறாய் நீ!
இயல்‌பாய் இருந்த‌ நீ,
நான் பார்ப்ப‌தை அறிந்ததும்
ப‌ர‌வ‌ச‌மாகி உன்
செய‌ல்க‌ளை மாற்றுகிறாய்!

நான் பா‌ர்க்காத‌போது
மெதுவாக‌ விழிக‌ளை
ந‌க‌ர்த்தி பார்க்கிறாய்
அதை நான் பார்க்கும்போது
மின்ன‌ல்வேக‌மாய் திருப்பி
விழிக‌ளை ம‌றைக்கிறாய்!

ந‌ன்றாக‌ இருக்கும் உடைக‌ளை
ச‌ரி செய்வ‌துபோல் ந‌டிக்கிறாய்!
க‌டிகார‌த்தில் அடிக்க‌டி
ம‌ணிபார்க்கிறாய்!
உன் விர‌ல் ந‌க‌ங்க‌ளை
கடிப்ப‌து போல
பாவ‌னை செய்கிறாய்!

நெற்றியின் முன்னே
இட‌து ப‌க்க‌த்தில்
சுருண்ட‌ முடிக‌ளை
அழ‌காக‌ வ‌ல‌து கைக‌ளால்
பின்னால் இழுத்து விடுகிறாய்!
கழுத்தில் இருக்கும்
மெல்லிய சங்கிலியை
அவ்வப்போது கைகளால்
பிடித்து உருட்டி பார்க்கிறாய்!

உன் தோழியுடன்
பேசிகொண்டே
க‌ண்க‌ளை ம‌ல‌ர‌விட்டு
ப‌ற்க‌ள் தெரியும்ப‌டி
பேசும் வார்தைகளுக்கு
சிறிதும் ச‌ம்ப‌ந்த‌மின்றி
அழ‌காக‌ சிரிக்கிறாய்!
ப‌ள‌ப‌ள‌ப்பு குறையாம‌ல்
உன் உத‌டுக‌ளை அவ்வ‌ப்போது
சுழித்து ஈர‌ப்ப‌டுத்துகிறாய்!

பேச ஆர‌ம்பிக்கும்போது
பேச‌ம‌றுக்கிறாய்!
பேசிப்ப‌ழ‌கிய‌ பிற‌கு
பேச்சை
நிறுத்த‌ ம‌ற‌க்கிறாய்!.........
....................>


காத‌லித்து கொண்டிருக்கும்போது பெண்களின் பேச்சை க‌வ‌னித்துபாருங்க‌ள், ஆண்க‌ள் கேட்கும் பெரிய‌ கேள்விக‌ளுக்கு சுருக்க‌மாக‌ தெளிவாக‌ ப‌தில் சொல்லிவிடுவார்க‌ள்! ஆனால் அவ‌ர்க‌ள் கேட்கும் சிறிய‌ கேள்விக‌ளுக்கு கூட‌ ஆண்க‌ள் ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ ப‌தில் சொல்லவேண்டிய‌திருக்கும்!அவ‌ள் ம‌ன‌தில் உயர்ந்த‌இட‌ம் பிடிக்க‌ ஆண், புகழ்ந்தும்,பாரட்டியும் கெஞ்சியும், கொஞ்சியும் ஏதேதோ முய‌ற்சிகள் செய்துகொண்டிருப்பான்! ஆனால் பெண்க‌ளோ சில‌ பார்வைக‌ளாலும் சில‌ வார்த்தைகளாளும் அவ‌ன் ம‌ன‌தில் மிக‌ உய‌ர்ந்த் இட‌த்தை பிடித்துவிடுவார்க‌ள்!

காதலில் பொறுப்புணர்ச்சியும் பெண்களுக்கே அதிகம் இருக்கிறது! ஆண் நிகழ்காலத்தைப்பற்றியே அதிகம் பேசுவான், பெண்தான் காதலில் எதிர்காலத்தைபற்றி யோசிப்பாள்!காதலிக்கும்போது நிறைய பேசவேண்டும், நிறைய அன்பு செலுத்தவேண்டும், நிறைய அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என பெண்களின் ஆர்வமும் வேகமும்தான் அதிகமாக இருக்கும்!

பெண்களின் காதல் உணர்வை கண்ணதாசன் இரண்டே வரிகளில் அருமையாக சொல்லி இருப்பார்!
""ஆணை விட பெண்ணுக்கு ஐந்து மடங்கு ஆசைகள் அதிகம்! ஆனால் பத்து மடங்கு அடக்கம் அதிகம்!""

நன்றாக காதலித்துவிட்டு பிரச்சனைகள் வரும்போது , காதலை உதறிவிட்டு காதல் தோல்விக்கும் பெண்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள்,காதலில் கடைசிவரை உறுதியாக இருந்து காதலின் வெற்றியிலும் பெண்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்!

இதை எல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் காதலில் எந்த ஒரு நிலையிலும் பெண்தான் சிறந்தவளாக இருக்கிறாள்! சிலபெண்கள் கல்லுடன் சேர்த்து குப்பைகளையும் எறிந்து காதல் குளத்து நீரை பயன‌ற்றதாக்குகிறார்கள், பல பெண்கள் கல்லுடன் சேர்த்து கற்கண்டையும் எறிந்து காதல் குளத்தின் நீரின் சுவையை கூட்டுகிறார்கள்! எனவே காதல் குளத்தில் ஆண்கள் எறிவெதெல்லாம் கல் அல்ல! வெறும் மண்!அவைகள் காதலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதையும் ஏற்படுத்துவதில்லை! பெண்கள் எறிவதுதான் உண்மையான கல்!அவைகள்தான் அலை அலையாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன!

நடுவர் அவர்க்ளே,மனதை மையமாக கொண்ட ""உண்மையான காத‌ல்குள‌த்தில், உண்மையாக‌வே க‌ல்லெறிவ‌து பெண்களே! பெண்களே! பெண்க‌ளே!"" என்று சொல்லி! கருத்துக்களில் எதிரணியை விட நாங்கள் நிறைந்திருந்தாலும் நபர்களின் எண்ணிக்கையில் அவர்களை விட(10)எங்க‌ள் அணி‌ குறை‌ந்துள்ள‌தால்(8) கடைசி க‌ட்ட‌த்தில் பதில் பேச‌ யாரேணும் இருவ‌ருக்கு கூடு‌த‌ல் வாய்ப்பு கொடுக்கும்ப‌டி கேட்டுகொண்டு," உண்மையான‌காதல் எனும் குளத்தில் கல்லெறிவது பெண்களே!" என்ற தீர்ப்பினை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்!

ந‌ண்ப‌ன்
ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

(காதலை
உணர்ந்து எழுதுபவனல்ல !
எழுதி உணர்பவன்!)


Wednesday, June 20, 2007

எனனைச்
சுற்றியிருப்பவர்களுக்காக
மட்டும் பிரார்த்திக்கும்‌
சுயநலம் மிகுந்த எனக்குள்!
காதலை விதைத்து!

உலகெங்குமுள்ள
காதலர்கள் எல்லோரும்
பிரியாமல் வாழ பிரார்த்திக்கும்
பொதுநலத்தை வளர்த்தவள்(ன்) நீ!




எத்தனையோ நாட்கள்
எவ்வளவோ முயற்சித்தாலும்
விழிப்பிற்க்கும்
தூக்கத்திற்குமிடையிலான‌
சந்திப்பு நொடிகளை
உணர முடிவதே இல்லை!
~
nambikaipandian