Thursday, February 08, 2007

என்னை சுற்றி

(நாம் செய்யும்போதுதான் புரிகிற‌து)

விவசாய இடுபொருட்கள் நிறுவனத்தில் களப்பணியாளராக வேலை பார்த்தபோது ஒவ்வொரு பகுதியிலும் விவசாயத்தினை பொருத்து சில மாதங்கள் அறை எடுத்து தங்கி இருப்போம் காலையில் விவசாய நிலங்களுக்கு சென்று ஒவ்வொரு விவசாயிகளாக சந்தித்து பேசிவிட்டு மதியஉணவுக்கு ஏதேனும் உணவகத்திற்கு சாப்பிட ஊருக்குள் வந்துவிடுவோம்,பிறகு ஓய்வு எடுத்துவிட்டு எங்கள் நிறுவன பொருட்களை விற்பனை செய்யும் வியாபரிகளை பார்த்து பேசிவிட்டால் அன்றைய வேலை முடிந்துவிடும்,

விளை நிலங்களில் சில விவசாயிக‌ள் சரியாக பேசமாட்டார்கள், சில விவசாயிகள் நன்றாக பேசுவார்கள்,எளிதில் நண்பர்களாகிவிடுவார்கள் அவர்கள் தோட்டத்தில் என்ன இருக்கிறதோ(பழங்கள்,இளநீர்,கிழங்குகள்) உண்ண கொடுப்பார்கள் மிக தாராள‌மனதுடன் இருப்பார்கள் , சிலர் எவ்வளவு மறுத்தாலும் காய்கறிகளை கொடுத்து "வீட்டுல‌ கொண்டு போய் கொடுங்க தம்பி" என்பார்கள்,அங்கு தங்கியிருந்த மூன்று பேரும் இனி அவ்வப்போது சமைத்து சாப்பிட முடிவு செய்தோம், அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு போய்வரும்போது சமைப்பதற்கு தேவையான பொருட்களை ஆளுக்கொன்றாய் வீட்டிலிருந்து எடுத்து வந்துவிட்டோம்,இதில் நகைச்சுவையான விசயம் என்னவென்றால் எங்கள் யாருக்குமே சமைக்க தெரியாது,

அடுத்த வாரத்தில் ஒரு நாள் மதிய உணவுசமைக்க முடிவு செய்தோம், நான் வீட்டிலிருந்து அம்மாவிடம் கேட்டு சமைப்பதற்க்கு தேவையான சில‌குறிப்புகளை எழுதி வந்துவிட்டேன், இன்னொருவன் சமைக்கும்போது தொலைபேசியில் கேட்டு சாதத்திற்கு குக்கரில் எவ்வளவு தண்ணீர்வைப்பது, எவ்வளவு உப்பு சேர்ப்பது, காரம் சேர்ப்பது என்று கேட்டுக்கொண்டான், இன்னொருவனோ ஒரு சமையல் குறிப்பு புத்தகத்தை வாங்கிவந்துவிட்டான், இதுபோக‌ அந்தந்த பொடி பாக்கெட்டின் பின்புறமே குறிப்பு கொடுத்திருந்தார்கள், எல்லாம் தயார் செய்து மூவரும் சேர்ந்து 1மணிக்கு சமைக்க ஆரம்பித்துவிட்டோம்,

முதலில் காய் பொறியல், அடுத்து சாதம், அடுத்து ரசம்,தயிர் கடையில் வாங்கி விட்டோம், கடைசியில் சாம்பாருக்கு பருப்பு வேக‌வைத்து காய், சாம்பார் பொடி விட்டுகுக்கரில் விசில்வந்துகொண்டிருந்தது "நல்லா வேகட்டும்டா" என்று 5 விசில் வரும் வரை காத்திருந்து குக்கரை கீழே இறக்கிவிட்டோம், மணி 3ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது,நல்ல பசிவேறு, அவசரமாக‌ உள்ளே இருக்கும் வெப்பக்காற்று வெளியேற‌ விசில்குண்டை கரண்டியால் தூக்கிபிடித்ததும் நல்ல சத்த‌த்துடன் வெப்பக்காற்று வேகமாக வெளியேறிக்கொண்டிருந்தது பாதி வெளியேறிய நிலையில் இனி திறக்கலாம் என நினைத்து உடனே திற‌ந்துவிட்டேன், உள்ளே அதிக அழுத்ததில் காற்று இருந்ததால் சட்டென்று சாம்பார் பொங்கி என் இடது முழங்கால் முழுவதும் கொட்டிவிட்டது, சூடு தாங்காமல் அலறிவிட்டேன் கொட்டிய இடம் எரிச்சலுடன் வலித்தது கொப்புளம் வராமல் இருக்க உப்பை கரைத்து ஊற்றினோம், அப்படி இருந்தும் கொப்புளமாகி புண்ணாகிவிட்டது, நல்லவேளை "பேண்ட்" அணிந்திருந்ததால் சிறியகாயத்துடன் போனது இல்லையென்றால் ரொம்ப கஷ்டம்தான்,"ஆக்கப் பொறுத்த‌வுங்க‌ ஆற‌ப்பொறுக்க‌னும்னு" ப‌ழ‌மொழி சொல்லுற‌து ச‌ரிய‌தான் இருக்கு!

ஆர்வ‌மாக‌ ஆர‌ம்பித்த‌ சமைய‌ல் சோக‌த்தில் முடிந்த‌து, ஒரு வ‌ருத்த‌மான‌ விச‌யம் இந்த பரபரப்பில் வாங்கி வைத்திருந்த‌ "அப்பள‌த்தை" பொறிக்க‌ முடியாம‌ல் போய்விட்ட‌து, ஒரு சந்தோச‌மான‌ விச‌ய‌ம் க‌டைசியில் அம‌ர்ந்து சாப்பிடும்போது சமைத்த எல்லாமே ந‌ல்ல ருசியாக‌ இருந்த‌து, அன்று இரவு ஒரு சிந்த‌னை வ‌ந்த‌து ஒரு நாள் ஒருநேர‌ம் ச‌மைப்ப‌த‌ற்க்கே இவ்வள‌வு நேரமும், இவ்வ‌ள‌வு க‌வ‌னமும் தேவைப்ப‌டுகிற‌து, ஆனால் எல்லோர் வீட்டிலும் வீட்டு வேலைக‌ளையும் பார்த்துக்கொண்டு, கவனமாக, இவ்வள‌வு விரைவாக, இவ்வ‌ள‌வு சுவையாக , அம்மாக்களும் மனைவிகளும், எப்ப‌டித்தான் சமைக்கிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளின் சிர‌ம‌ங்க‌ள் புரிந்த‌து,

இத‌ற்கு முன்பு நான் என்அம்மாவின் சுவையான‌ சமைய‌லில் சில‌ நேர‌ங்க‌ளில், உப்பு, காரம் போன்றவை அள‌வுமாறிப் போகும்போது அதை பெரிய‌குறையாக‌ குறிப்பிட்டு சொல்லுவேன், பிறகு அதை எல்லாம் குறைத்துக்கொண்டேன், சில‌ செய‌ல்கள் ந‌ம‌க்கு சாத‌ரணமாக‌ தோன்றினாலும் நாம் அதை செய்யும்போதுதான் அதிலிருக்கும் பிரச்ச‌னைக‌ளும், அதை செய்பவ‌ர்க‌ளின் சிர‌ம‌ங்க‌ளும் புரிகிற‌து."

2 comments:

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் பாண்டியன். தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்தாயிற்றா :)

நம்பிக்கைபாண்டியன் said...

ஆமாங்க சேதுக்கரசி, வளர்ச்சிக்கான சிறுமுயற்சிதான், வாழ்த்துக்களுக்கு நன்றி1