அழகிய விதமாய் தலை வாரவில்லை!
புருவத்தின் இயல்பை சீர் செய்யவில்லை!
புருவத்தின் இயல்பை சீர் செய்யவில்லை!
உதட்டிற்கு சிவப்பு சாயமிடவில்லை!
முகத்திற்கு அழகூட்ட எதுவும் பூசவில்லை!
கழுத்திலும் உடலிலும் ஆபரணங்கள் இல்லை!
விலைஉயர்ந்த நாகரீக ஆடையுமில்லை!
கையில் மணிகாட்டும் கடிகாரமில்லை!
காலில் எந்த காலணியுமில்லை!
ஆனாலும்
அழகாய் இருக்கிறது குழந்தை!
குழந்தை பருவம் என்றவுடனே முதலில் நினைவுக்கு வருவது அம்மாவுக்கும் குழந்தைக்குமிடையிலான அன்பு, ஒரு தாய் தன் குழந்தையை அன்பு மிகுதியில் வித விதமான வார்ணனைகளாலும், வார்த்தைகளாலும் கொஞ்சும் அழகும், அம்மா அடித்தாலும் அம்மாவையே கட்டிக்கொண்டு , அம்மா.. அம்மா என அழும் குழந்தைகளின் அன்பும் வார்தைகளால் விவரிக்க முடியாத அன்புக்கவிதைகள்! வீட்டிற்கு வெளியில் வீரவ்சனம் பேசிக்கொண்டும், வெட்டி பந்தா செய்துகொண்டும் இருக்கும் பல அப்பாக்கள், வீட்டுக்கு வந்ததும் குழந்தையோடு குழந்தையாக மாறி அவைகளின் மழலை கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்துக்கொண்டிருப்பது மழலை அன்பின் மகத்துவங்களில் ஒன்று!
அம்மாக்களுக்கான
குழந்தைகளின் கவிதைகளும்
குழந்தைகளுக்கான
அம்மாக்களின் கவிதைகளும்
முத்தங்களாலேயே
எழுதப்படுகின்றன!
எனக்கு நினைவில் இருக்கும் நிகழ்வுகளில் 6 வயது சிறுவனாக இருக்கும்போது விஜயகாந்த் நடித்த "கரிமேட்டுக் கருவாயன்"(86-87) என்ற திரைப்படத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது, அப்படத்தில் விஜயகாந்த் பழிவாங்குவதற்காக நிறைய பேரை வெட்டிக் கொடூரமாக கொலை செய்வார், என் அருகிலிருந்த என் அம்மா படத்தின் ஒவ்வொரு கொலை செய்யும் காட்சியிலும் நான் அந்த காட்சியை பார்க்காதபடி தன் கைகளால் என் கண்களை இருக்க மூடிக்கொள்வார், தன் குழந்தை பயந்துவிடக்கூடாது என்ற அந்த அக்கறை இன்றும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது!
குழந்தை மற்றும் சிறுவர்களின் விளையாட்டும் நட்பும் வியப்பிற்குரியது , விடுமுறை நாட்களில் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டே தெருவில் விளையாடும் சிறுவர்களை ரசிக்கும் நிகழ்வு அற்புதமானது! விளையாடும்போது சண்டையிட்ட சிறுவர்களால் பெற்றோர்கள் பெரிய அளவில் சண்டையிட மறுநாள் எதையும் மனதில் வைக்காமல் எப்போதும்போல் சேர்ந்து விளையாடும் குழந்தைகளின் நட்பு நல்ல நட்புக்கு சிறந்த உதாரணம்! குழந்தை பருவத்து சகோதரபாசம் சிறு சிறு சண்டைகள் நிறைந்திருந்தாலும் அதில் உண்மையான அன்பு ஒளிந்திருக்கும்! அவைகள் என்றும் உற்சாகம் தருபவை!குழந்தைகள் பொம்மைகளையும் சிறு விளையாட்டுப் பொருட்களையும் வைத்து விளையாடும் அழகு சுவாரஸ்யங்கள் நிறைந்தது! பொம்மைகளை குளிப்பாட்டி சோறூட்டி தோழமையோடு பரமாரிக்கும் நிகழ்வுகள் ரசிக்கத்தக்கவை!
உடைந்த கை
திருகிய கால்
களைந்த முடி
அழுக்கேறிய ஆடை
அலங்கோலமான தோற்றம்!
ஆனாலும் சிரித்துக்கொண்டேதான்
இருக்கின்றன பொம்மைகள்
உன்னுடன் இருப்பதால்!
குழந்தைகளின் சிரிப்பும் விளையாட்டும், கேட்கும் கேள்விகளும், மிக அழகான விசயங்கள் , நீங்கள் எவ்வளவு மன இருக்கத்தில் இருந்தாலும் சிரித்துகொண்டிருக்கும் ஒரு குழந்தையை சற்றுநேரம் கவனித்துக் கொண்டிருங்கள், உங்கள் மன இறுக்கம் கண்டிப்பாக குறையும், சாலையிலோ பேருந்திலோ பயணிக்கும்போது எதிர்படும் குழந்தைகளில் நிச்சயம் இதை உணர்ந்திருப்பீர்கள்!
குழந்தை பருவத்து பள்ளி நினைவுகள் என்றும் இனிமையானவை! அழுதுகொண்டே பயணிக்கும் முதல் பயணம் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மறக்கமுடியாது! பிறகு அழுகையின்றி மகிழ்ச்சியாக பயணிக்கும் நாட்களும், வளரும் பள்ளிகூட நிகழ்வுகளும் நட்புகளும் நம்மில் ஒவ்வொருவருக்கும் நம் நினைவுகளில் பசுமையானவை, திரும்ப கிடைக்காதா என ஏங்கவைக்கும் பருவம் இது!
பள்ளிக்குச் செல்லும்போது
அழுவதை நிறுத்திவிட்டாய்
இன்னும் நிறுத்தவில்லை
நீ விளையாடும் பொம்மைகள்!
எனக்கு தெரிந்த சில மழலை நினைவுகள்!
எனது சித்தப்பா பையன் (5) எப்போதும் அவர்கள் வீட்டில் இரண்டு டம்ளர் காபி குடிக்கும் பழக்கம் உடையவன், ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தபோது அங்கு கொடுத்த ஒரு டம்ளர் காபி போதாது ஒன்னொரு டம்ளர் காபி வேண்டும் என அடம்பிடிக்க, சித்தப்பா கோபத்தில் ஒரு டம்ளர் தண்னீரை கலந்து குடிச்சுக்கோ என்று சொன்னதும் ஓடிச்சென்று ஒன்னொரு டம்ளரில் நீரை எடுத்து கலந்து இரண்டு டம்ளர் காபியாக மாற்றி குடிக்க முயற்சித்து சுவை பிடிக்காமல் கீழே கொட்டிவிட்டு ஓடிவிட்டான்.
எங்கள் ஊர்திருவிழாவிற்கு பாட்டி வீட்டிற்கு உறவினர்கள் எல்லோரும் வந்திருந்த போது, குழந்தைகளாகிய எங்கள் எல்லோருக்கும் இரு கைகளிலும் மருதாணி அரைத்து வைத்து விட்டனர், நாங்கள் எல்லோரும் தூங்க பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, தூக்கத்தில் என் அத்தை பையன் ஒருவன்(8) என்ன கனவு கண்டானோ தெரியவில்லை திடீரென்று ஒவ்வொரு விரலாக வாயில் வைத்து மருதாணியை தின்ன ஆரம்பித்துவிட்டான், அதை பார்த்தவர்கள் நீரை தெளித்து துக்கம் தெளியவைத்து துப்ப வைத்தனர் இப்போதும் நாங்கள் அவரை " வாங்க மருதாணி தின்ன மச்சான்" என்று கேலியாக அழைப்பது வழக்கம்!
என் அத்தை பையன்(7) ஒரு நாள் பள்ளியிலிருந்து தமதமாக வீட்டுக்கு வர "ஏண்டா லேட்" என அத்தை கேட்க "மழை பேஞ்சுச்சுமா.. அதான் கொஞ்சம் கொஞ்சமா வந்தேன்" என்று அவன் சொல்ல எல்லோரும் ரசித்து சிரித்தார்களாம்.( மழையால் நின்று நின்று மெதுவாக வந்ததை அப்படி சொல்லியுள்ளன்)
இதுபோல் இன்னும் எவ்வளவோ மழலை நிகழ்வுகள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நிறையவே இருக்கலாம்! அத்தனையும் இனிமையானவை,
இன்றைநாளில் பணம் சம்பாதிப்பதின் நோக்கமாகவும், தனிக்குடும்பத்தின் காரணமாகவும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் செலவிடும் நேரம் குறைந்து வருகிறது! முடிந்தவரை குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள், அன்பையும் அளவாக கண்டிப்பையும் கொடுத்து அவர்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டியது நம் பொறுப்பு!
பள்ளி முடிந்து, நீ
வீடு திரும்பும் நேரத்திற்காக
உன் வீட்டுவாசலில்
ஆவலோடு காத்திருக்கும்
பூச்செடிகளையும்
நாய்க்குட்டியையும்
பார்த்து பொறாமைபடுகிறார்களாம்
உன் வேலைக்குச் செல்லும்
பெற்றோர்கள்!
இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறன் வியக்கவைக்கிறது, ஆனால் ஆரோக்கியம் கேள்விக்குறியாக இருக்கிறது! ஓடி ஆடி விளையாடும் பழக்கம் குறைந்தும், இயற்கைக்கு அப்பாற்பட்ட உணவுமுறையும் அதிகமாகவும் ஆகிவிட்டதே இதற்கு காரணம், அதை முதலில் மாற்றவேண்டும் பழங்கள் காய்கறிகள், பருப்பும் பயறுவகைகளை குழந்தையில் இருந்தே உண்ணப்பழக்க வேண்டும், குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கு சென்றால் , சாக்லேட், ஐஸ்கிரீம்,பாக்கெட் ஸ்நாக்ஸ் போன்றவற்றை குறைத்து பழங்களை வாங்கி கொடுங்கள்! அவர்களுக்கு ஆரொக்கியமும் இயற்கை வளங்களின் மீதான அக்கறையையும் அதிகமாக நாம் பழக்கப்படுத்தி எதிர்கால தலைமுறையை சிறந்ததாக மாற்றுவோம்!
~நம்பிக்கைபாண்டியன்
குறிப்பு :- வலைபதிவுலகில் பல நண்பர்கள் மழலைகள் குறித்து தொடர்பதிவு எழுதியும், அழைப்பும் விடுத்து வருகின்றனர், அதில் எனது சிறு பங்களிப்பு என் கவிதைகளுடன், (படக்கவிதையாக தனிபதிவு வரும்)! இதை படிக்கும் நண்பர்கள் நீங்களும் தொடருமாறு நட்புடன் அழைக்கிறேன்!