Monday, January 15, 2007

என்னை சுற்றி

(என்ன செய்கிறோம் என்பதில் இருக்கிறது வெற்றி)

நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறு, இருந்தாலும் சில நேரங்களில் இது தவிர்க்க முடியாத‌தாகிவிடுகிறது, அப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் நினைவில் இருப்பது நல்லது,

1).நம்மை விட உயர்ந்தவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் போது நாமும் உயர்வதற்கு தேவையான வழிமுறைகள் தெரிய வேண்டுமே தவிர , நாம் உயரவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மையும் வரகூடாது, அவர்கள் உயர்ந்துவிட்டார்களே என்றா பொறாமை மனமும் வரக்கூடாது,
2).நம்மை விட சாதரணமானவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் போது நம் நிலையை எண்ணி மனதிருப்தி வரவேண்டுமே தவிர,நாம் உயர்ந்துவிட்டோம் என்ற கர்வமும் வரகூடாது, அவர்கள் சாதாராணமானவர்கள் என்ற அல‌ட்சியமும் வரக்கூடாது,

சமீபத்தில் நானும் என்னை இப்படி ஒப்பிட்டு பார்த்தேன்,என் சக‌நண்பன் ஒருவன் இருக்கிறான் என்னைப் போலவே எண்ணங்களும் சிந்தனைகளும் உள்ளவன், படிப்பு, திறமை, பேச்சு, குடும்ப சூழ்நிலை என் எப்படி பார்த்தாலும் இருவரும் சமநிலையில்தான் இருப்போம், அவனும் நானும் பேச ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் நேரம் செல்வதே தெரியாது அந்த அளவிற்கு இருவரின் எண்ண அதிர்வுகளும் இணையாக இருக்கும்,

ஆனால் இன்று அவன் நல்ல வேலை, நல்ல சம்பளம்,வீட்டிற்கு பொறுப்பான பையன்,என மிகச்சிறந்தவனாக இருக்கிறான், ஆனால் நான் அப்படி இல்லை , மோசம் என்றும் சொல்லமுடியாது, சிறந்த நிலை என்றும் சொல்ல முடியாது, இடைப்பட்ட மத்திமமான நிலையின் இருக்கிறேன், நான் நினைப்பது போலவே அவனும் நினைக்கிறான், அவனுக்கு தெரிந்த எல்லாமே ஓரளவுக்கு எனக்கும் தெரியும். ஆனால் இருவரின் நிலையிலும் வேறுபாடு ஏன்?என்று சிந்தித்தால் அதற்க்கு பல காரணங்கள் இருக்கிற‌து , இருந்தாலும் முக்கியமான காரணம் என்னவென்றால்,வாழ்க்கையில் வெற்றிபெற‌ அவன் தன‌க்கு தெரிந்ததையும், தான் நினைத்ததையும் அதிகமாக செயல்படுத்துகிறான், நான் குறைவாக செயல் படுத்துகிறேன்,

உதாரண‌த்திற்கு ஒன்றை சொல்லலாம் . பொதுவாகவே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க , சாப்பிடுவதற்கு த‌குந்தாற்போல உழைக்கவேண்டும் , இல்லையெனில் உழைப்பதற்கு தகுந்தாற்போல சாப்பிடவேண்டும் இவை இரண்டுக்கும் இடையே வித்தியாசம் அதிகமானால் உடலுக்கு ஆபத்துதான் , இயல்பாக இருவருமே நொறுக்குத்தீனி அதிகம்சாப்பிடுவோம்,இதனால் உடல் எடை சராசரியை விட அதிகரித்துவிட்டது ,இது பற்றி ஒரு நாள் பேசும் போது அதிகாலை ஓட்டப்பயிற்சி எடுத்துக்கொண்டால் எடை குறைந்துவிடும் என்று முடிவெடுத்தோம், இருவருமே அதிகாலை எழுந்து ,அவன் வீட்டருகே அவன் ஓட ஆரம்பித்தான், நான் என் வீட்டருகே ஆரம்பித்தேன், சில நாட்களுக்கு பிறகு வேதாள‌ம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக நான் வழக்கம் போல தூங்க ஆரம்பித்துவிட்டேன், அவன் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து எடையை முழுவதும் குறைத்து சராசரிக்கு கொண்டு வந்து விட்டான்,நான் திண்பண்டங்களை குறைத்து ஓரளவிற்கு குறைத்துவிட்டேன்.இதே போல்தான் எந்த ஒரு விசய‌த்திலும் இருவருக்கும் வித்தியாசம் இருக்கிற‌து.

இதன் வழியே "வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் என்ன நினைக்கிறோம், ந‌மக்கு என்ன தெரியும் என்பதில் இல்லை! நமக்கு தெரிந்ததையும் நாம் நினைத்ததையும் கொண்டு என்ன செய்கிறோம் எனப‌தில்தான் இருக்கிறது!" என்பதை அறிந்த பிறகு இப்போது நானும் அதன் வழியில் சென்று கொண்டிருக்கிறேன்.
இதன் வழியே "வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் என்ன நினைக்கிறோம், ந‌மக்கு என்ன தெரியும் என்பதில் இல்லை! நமக்கு தெரிந்ததையும் நாம் நினைத்ததையும் கொண்டு என்ன செய்கிறோம் எனப‌தில்தான் இருக்கிறது! " என்பதை அறிந்த பிறகு இப்போது நானும் அதன் வழியில் சென்று கொண்டிருக்கிறேன்,

No comments: