Monday, January 08, 2007

என்னைசுற்றி,

(முன்னோர்கள் அர்த்தமுள்ளவர்கள்)

இன்றுவரை நான் பெரும்பான்மையான நாட்களில்,என் வீட்டில் தூங்குவதில்லை என் அய்யம்மா(பாட்டி(அப்பாவின் அம்மா) வீட்டில் மொட்டைமாடியில் என் அத்தை பையன்களுடன் தூங்குவதுதான் வழக்கம்,ரேடியோவை பாடவிட்டுவிட்டு தூங்காமல் நீண்ட நேரம் பேசிகொண்டே இருப்போம்,பாட்டி "இன்னும் என்னடா சத்தம் தூங்குங்கடா", என திட்டிகொண்டே இருப்பார்கள்.

அப்படி தூங்கும் போது தலை முதல் கால்வரை போர்வையால் இழுத்து போர்த்திதான் அதிகம் தூங்குவோம்,ரேடியோ பாடிக்கொண்டே இருக்கும் தூங்கிவிடுவோம் வானொலியை நிறுத்த வருவார்கள்,தூங்கிக்கொண்டிருக்கும் எங்களின் முகத்திலிருக்கும் போர்வையை விலக்கி விட்டு "மொகத்தை மூடாம படுங்கடா! அறிவு கெட்ட பயலுகளா,"" செத்த பொணத்துக்குதான் முகத்தை மூடுவாங்க என்று சொல்லி விட்டு போவார்கள், ""பேசாமா போய் தூங்குங்க அயமா"" என்று சொல்லிவிட்டு அவர்கள் போன பிறகு திரும்ப போர்த்திகொள்வோம்.அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள், ( நாங்கள் வெயில் தள்ளிவர வர சுவற்றை ஒட்டி நகர்ந்து நகர்ந்து படுப்போம்,காபி தாயாராக்கிவிட்டு கூப்பிட்டுகொண்டே இருப்பார்கள்,முகத்தில் சுள்ளென்று வெயில் அடிச்சதுக்கப்புறம் தான் எழுந்திருப்போம்,

அவர்கள் அடிக்கடி சொன்ன "முகத்தை மூடாம படுங்கடா" என்ற வார்த்தை அப்போது பெரியதாக தெரியவில்லை, சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு தொலைக்காட்சி மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியில்மருத்துவர் இதுபற்றி தெளிவாக சொன்னார்

"தூங்கும்போது முகத்தை மூடாமல் படுக்கவேண்டும் அப்போதுதான் தூக்கத்திலும் நமக்குத் தேவையான ஆக்சிஜன் திறந்தவெளியில் இருக்கும் காற்றில் இருந்து தடையின்றி கிடைக்கும்,உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்கும். போர்வையால் கால் முதல் முகம்வரை மூடிக்கொண்டு படுக்கும் போது நாம் சுவாசிப்பதற்கு போர்வைக்குள் இருக்கும் காற்று மட்டுமே கிடைக்கும் அதே காற்றே திரும்ப திரும்ப சுழற்சி ஆகும், போர்வையை ஊடுருவிச்செல்லும் காற்று குறைவு உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்காது,முகப்பொலிவும் குறைந்துவிடும்",என்று தெளிவாக சொன்னார்,

அப்போதுதான் பாட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்தது,பிணத்திற்கு ஆக்சிஜன் தேவை இல்லை என்பதால் தான் முகத்தை மூடுகிறார்கள் என்பதும் விளங்கியது அவர்களுக்கு கையெழுத்துகூட போடத்தெரியாது ஆனால் இந்த அறிவுபூர்வமான கருத்தை வேறு விதத்தில் அறிவுரையாக சொல்லியிருக்கிறாகிறார்கள். இதைப்படித்ததும் நான் முகத்தை மூடாமல் தூங்கி பார்த்தேன் தூக்கம் வரவில்லை என்னை அறிவாளியாக கற்பனை செய்துகொன்டு போர்வையில் முகத்திற்கு நேராக வரும்படி சற்று பெரிய ஓட்டை ஒன்றை ஏற்படுத்திவிட்டு தூங்கினேன், (வீட்டில் போர்வையை எலி கடித்து விட்டது என்று பொய் சொல்லி சமாளித்துவிட்டேன்,)
நம் முன்னோர்கள் சொல்லும் சில விசயங்கள் அர்த்தமில்லாததாக இருந்தாலும் பல விசயங்கள் நல்ல நோக்கத்துடன் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது, நாம் தான் அதில் பலவற்றை சரியாக புரிந்துகொள்வதில்லை, பாட்டி இரு ஆண்டுகளுக்கு முன்தான் இறைவனடி சேர்ந்தார்கள், என்னை சுற்றி இருந்தவர்களில் கடும் வைராக்கியத்துடனும் இறுதிவரை கடின உழைப்புடனும் வாழ்ந்த அவர்களிடம் கற்ற விசயங்கள் மிக அதிகம்.

No comments: