என்னை சுற்றி
(பட்டால்தான் புரிகிறது)
சிறுவயதில் துருதுருவென இருப்பவர்களில் நானும் ஒருவன்,சாலையில் ஏதேனும் விளையாடிகொண்டே போவேன், மரத்தின் அருகே வரும்போது தாவி குதித்து இலைகளை பறிக்க முயற்சிப்பேன்,
அப்போது ஒரு வீண் பழக்கம் இருந்தது. தெருவிலும், சாலையிலும் நடந்து செல்லும் போது, கீழே கிடக்கும் பொருட்களான காலி அட்டைப்பெட்டி,சிறிய டப்பாக்கள்,தின்று வீசப்பட்ட மக்காச்சோள கட்டைகள்,தேங்காய் சிரட்டைகள், போன்றவற்றை காலில் உதைத்து விளையாடிகொண்டே செல்வேன்(ஹி..ஹி..ஹி..மனசுல பெரிய கால்பந்து வீரர்ங்கிற நெனப்புதான்), இந்த பழக்கத்தால் சாலையின் ஓரத்தில் கிடக்கும் பொருட்கள் கூட என்னால் நடு சாலைக்கு வந்துவிடும், ""கைய கால வச்சுகிட்டு ரோட்ட்டுல சும்மா போடா""என்று பலர் பலமுறை கண்டித்துள்ளார்கள்,நான் கேட்கவில்லை,
எங்கள் ஊர் தேசிய நெடுஞ்சாலையின் மேல் அமைந்துள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும்,ஒருமுறை பள்ளிவிட்டு வரும்போது சாலையில் கிடந்த சிறிய காலி பிளாஸ்டிக் டப்பாவை உதைத்து விளையாடிக்கொண்டே சென்றேன்,
"ஏ!ஏ! இந்தா!! சூப்பர் சாட்"" என்று சொல்லி ஆவேசமாய் ஓங்கி ஒரு உதைகொடுத்தேன் அந்த டப்பாவை! அது சாலையில், சென்று கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் பட்டு, அதே வேகத்தில் திரும்பி வந்து என் வாயில் அடித்துவிட்டு தெறித்து ஒடியது, இரு உதடுகளிலும் காயம்,சிறிது இரத்தமும் வந்து விட்டது அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றேன். இரு உதடுகளும் வீங்கி அடுத்த நாள்முழுவதும் வீங்கி பள்ளிக்கும் செல்லவில்லை பார்க்க குரங்கு போல இருந்தேன்,காயம் ஆறும்வரை வலி இருந்தது.
சரி இந்த சம்பவத்திற்கு பிறகு கீழே கிடக்கும் பொருட்களை உதைப்பதை நிறுத்தினேனா? என்றால், அதுதான் இல்லை , உதைப்பதில் சிறிய மாற்றம், முன்பு ஓரத்தில் கிடக்கும் பொருட்களை உதைத்து நடு சாலைக்கு கொண்டு வருவேன் விளையாட்டு புத்தியுடன்,இந்த சம்பவத்துக்கு பிறகு நடு சாலையில் கிடக்கும் பொருட்களை ஓரத்திற்கு உதைத்துவிடுவேன் சமூக அக்கறையுடன்,
என்னை சுற்றி நடந்த இந்தசம்பவம் அன்று அதிகம் யோசிக்க வைக்கவில்லை, இன்று யோசித்தால் ஒரு உண்மை புரிகிறது , நாம் செய்யும் தவறுகள் நம்மை பெரிய அளவில் பாதிக்காதவரை அதை நாம் திருத்திக்கொள்வதே இல்லை, பாதிக்கப்பட்டபிறகுதான் தவறை உணர்ந்து தாமதமாக திருத்திக்கொள்கிறோம் ( சிலர் அப்படியும் திருந்துவதில்லை)
No comments:
Post a Comment