Wednesday, January 18, 2017

ஜல்லிகட்டு ‍ (குட்டிகதை)

                                                                                 மகன் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்திருப்பதை அறியாத‌ அப்பா " நேரத்தில வீட்டுக்கு வராம ஏண்டா இப்படி மாடு மாதிரி ஊர சுத்திட்டு வர்ற" என்றார்.


அதைகேட்ட மகன் " என்னப்பா சொன்னீங்க? மாடு மாதிரியா" என்று கேட்டு கர்வமாக சிரித்துக்கொண்டே , தன் சட்டை காலரை தூக்கி விட்டான்,


அதற்கு அப்பா "ஏண்டா உன்ன மாடுனு திட்டுறேன் இப்படி சிரிக்கிறியேடா" என்றார்

 மகன் சிரித்துக்கொண்டே " அப்பா மாடுனா சும்மா இல்லப்பா,
சாதி, மதங்களை கடந்து, ஊரை மறந்து, அத்தனை இளைஞர்களையும், ஒற்றுமையாக ஒன்று சேர்க்கும் வேலையை,

 நம்ம நாட்டில் ஒரு அரசியல்வாதியோ, ஒரு சினிமா நடிகரோ, ஒரு பெரும் பண‌க்காரனோ செய்ய முடியாததை இன்று ஒரு மாடு செய்திருக்கிறது அப்பா,
என்னை மாடு என்று திட்டுவதில் எனக்கு பெருமைதான் அப்பா" என்றான்

 அப்பா புன்னகையுடன் அமைதியானார்.

 

Friday, July 26, 2013

கபீஷ் கவிதைகள் - மழலை கவிதைகள்!

Inline image 1

கபீஷ் கவிதைகள்

                         1

தொட்டிலில் தூங்கும்போது
அவ்வப்போது அழுது சிணுங்கி
அருகினில் யாரேனும்
இருப்பதை உறுதி செய்து கொண்டு
தொடர்ந்து தூங்குகின்றன குழந்தைகள்!

                         2

தூக்கம், வலி ,பசி, என
தன் தேவைகள்  அனைத்தையும்
 "அழுகை" எனும்
ஒற்றை மொழியில்
சொல்லிவிடுகின்றன  குழந்தைகள்!

                          3

இத்தனை வருடங்களாய்
நான் தூங்கும் நேரங்களை 
நானே தீர்மானித்தேன்- இப்போதெல்லாம்
என் குழந்தை தீர்மானிக்கிறது by  அம்மா!

                           4

பொம்மைகளுடன்
விளையாடும்போது
அதன் விலைகளைப் பற்றியெல்லாம்
கவலைப்படுவதில்லை குழந்தைகள்!


(எனது மகன் கபீஷ்வர்  எனக்கு பரிசளித்த கவிதைகள் இவை!)
Thursday, February 14, 2013

ஊருக்குச்சென்றவள் (மனைவி) -காதல் கவிதைகள்

நீ
ஊருக்குச்சென்ற‌
நாளொன்றில்
உனக்கான முத்தங்கள்
அனைத்தையும் வாங்கி
சிரித்துக்கொன்டிருக்கிறது !
வீட்டிலிருக்கும்
 உன் புகைப்படம்!
                 *
நேரத்தில் சாப்பிடு
நேரத்தில் தூங்கு" என‌
எளிதில் சொல்லிவிடுகிறாய்
தொலைபேசியின் வழியே
நிச்சயம் முடிவதில்லை
 நீ இல்லாத நாட்களில்!
                 *
நீ அருகிலிருந்து கொடுக்கும்
நூறு முத்தங்களின் மகிழ்ச்சியை!
தொலைபேசி பேச்சின்
முடிவில் கொடுக்கும்
ஒற்றை முத்தம்
கொடுத்துவிடுகிறது
                  *
நீ அருகிலிருந்து
ஓயாது பேசிக்கொண்டிருந்த நாட்களிலும்
அமைதியான வீடாக உணர்ந்து
எளிதில் தூங்கிவிடுகிறேன்!
நீ ஊருக்குச்சென்ற நாட்களில்
தனிமையில் இருந்தாலும்
இரைச்சல் நிறைந்த வீடாக உணர்ந்து
தூக்கமின்றி தவிக்கிறேன்!


Monday, November 05, 2012

வீடு! - படக்கவிதை
வயல்களை அழித்து
வீட்டடி நிலமாக்கி
!
 ஆறுகளை தோண்டி
வீடு கட்ட மணல் அள்ளி!

மலைகளை உடைத்து
ஜல்லி கற்களாக்கி!

நிலங்களை குடைந்து
சுண்ணாம்பில் சிமிண்டெடுத்து!

சுரங்கங்களில் சுரண்டிய‌
தாதுக்களில் கம்பியெடுத்து!

மரங்களை கொன்று!
நிலை கதவு, ஜன்னல் செய்து!

இயற்கை வளங்களை
கொள்ளையடித்து உருவாகிய வீட்டை

சிறிதும் தயக்கமின்றி
கூறிக்கொள்கிறேன்
இது  "என் வீடு" என...!

 

             

நமது கவலைகளும், கோரிக்கைகளும்.


தருமி அவர்கள் பதிவிலிருந்து
http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html

*
 இப்பதிவில் நான் எழுதியுள்ளவை எல்லோருக்கும் சம்மதமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு வேளை ஏதேனும் இன்னும் மாற்ற வேண்டுமாயின் இன்று இரவுக்குள் எனக்குத் தெரியப்படுத்தினால் மாற்றி விடுகிறேன். அதன் பின்பு, நாளை காலையிலிருந்து இப்பதிவை அடுத்த இரு நாட்களுக்குள் தங்கள் பதிவுகளாக பலரும் இட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

*

 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12) அத்வானி கூறியுள்ளார்.


*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

Wednesday, August 08, 2012

மழலை கவிதைகள் 2 - படக்கவிதை
இரவுநேர
இரயில் பயணத்திலும்
இயற்கையை 
ரசிக்க முடிகிறது!
எதிர் இருக்கை
குழந்தைகளால்!

*****************************

வராமல் 
சோறு ஊட்டும்
 பூச்சாண்டியும்...

வந்து
சோறு ஊட்டும் 
நிலாவும்...

காற்றிலேயே 
கவர்ந்து செல்கின்றனர்
குழந்தைகளின் முத்தங்களை!

*****************************

தூங்கும்பொழுது
சிரிக்கின்ற‌ குழந்தைகள்
கடவுளுடன் பேசுகின்றவாம்!
கபடமற்ற 
சிரிப்பிருக்கும் இடங்களில்
கடவுள் இருப்பது சாத்தியம்தான்!

Tuesday, July 10, 2012

ஆனந்த விகடனின் வலையோசையில் என் வலைபதிவு!


 "ஆனந்தவிகடனின் இணைப்பு புத்தகமான என் விகடனில்,  வலைபதிவில் எழுதி வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக "வலையோசை"என்ற பகுதியில் ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு வலைபதிவை அறிமுகப்படுத்திவருகிறார்கள்,

                                         கடந்த வார (04.07.2012) ஆனந்தவிகடனில் தென்மாவட்டங்களுக்குகான மதுரை பதிப்பு என்விகடனில் வலையோசை பக்கத்தில் எனது வலை பதிவை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்! இதன் வழியாக நூற்றுக்கணக்கானவர்களை சென்றடைந்த என் எழுத்துக்களை  ஆயிரக்கணக்கானோர்  படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது, அதற்கு காரணமாக இருந்து, எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை என் எழுத்துக்களை படித்தும் &பாராட்டியும் ஊக்குவித்த  அனைத்து நண்பர்களுக்கும்,   என் வலை பதிவினை அறிமுகப்படுத்தி வெளியிட்ட‌ஆனந்த விகடன் குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

(கடந்த வாரம் எழுத வேண்டிய பதிவு இது பணிச்சூழல் காரணமாக தாமதமாகிவிட்டது)

Monday, June 25, 2012

கவிதைகளாகவும் இருக்கலாம் 4 - கவிதைகள்


சர்க்கரை வியாதி
அன்று
குழந்தையில்
இனிப்பு
அதிகம் சாப்பிடாதே! என
அம்மா
அன்புடன் சொன்னபோது
கேட்காத மனம்!

இன்று
முதுமையில்
இனிப்பை
தொட்டுகூட பார்ககாதிங்க! என‌
மருத்துவர் மிரட்டி
சொல்லும்போது கேட்கிறது!


*******************************பழிக்குப்பழி!
அன்பளிப்பாக கிடைத்த‌
அரிய புத்த‌கமொன்று
கடித்து சிதைக்கப்பட்டிருந்தது
என் வீட்டு எலிகளால்!
கொலைவெறி கோபத்தில்
வீடெங்கும் தேடியதில்
கிடைத்ததென்னவோ
புதிதாய் பிறந்த 
சில கண்திறவா குட்டிகள்தான்!


வீதியில் எடுத்தெறிந்ததும்
தூக்கிச்சென்றன சில காகங்கள்
எலிகளின் எண்ணிக்கையை
குறைத்துவிட்டதாக எண்ணி
கோபம் தணிந்தேன்!
அடுத்த சில நாட்களில்
கடித்து குதறப்பட்டிருந்தன‌
அம்மாவின் 
விலை உயர்ந்த 
பட்டுப்புடவைகள்!

*******************************