Friday, July 26, 2013

கபீஷ் கவிதைகள் - மழலை கவிதைகள்!

Inline image 1

கபீஷ் கவிதைகள்

                         1

தொட்டிலில் தூங்கும்போது
அவ்வப்போது அழுது சிணுங்கி
அருகினில் யாரேனும்
இருப்பதை உறுதி செய்து கொண்டு
தொடர்ந்து தூங்குகின்றன குழந்தைகள்!

                         2

தூக்கம், வலி ,பசி, என
தன் தேவைகள்  அனைத்தையும்
 "அழுகை" எனும்
ஒற்றை மொழியில்
சொல்லிவிடுகின்றன  குழந்தைகள்!

                          3

இத்தனை வருடங்களாய்
நான் தூங்கும் நேரங்களை 
நானே தீர்மானித்தேன்- இப்போதெல்லாம்
என் குழந்தை தீர்மானிக்கிறது by  அம்மா!

                           4

பொம்மைகளுடன்
விளையாடும்போது
அதன் விலைகளைப் பற்றியெல்லாம்
கவலைப்படுவதில்லை குழந்தைகள்!


(எனது மகன் கபீஷ்வர்  எனக்கு பரிசளித்த கவிதைகள் இவை!)








Thursday, February 14, 2013

ஊருக்குச்சென்றவள் (மனைவி) -காதல் கவிதைகள்





நீ
ஊருக்குச்சென்ற‌
நாளொன்றில்
உனக்கான முத்தங்கள்
அனைத்தையும் வாங்கி
சிரித்துக்கொன்டிருக்கிறது !
வீட்டிலிருக்கும்
 உன் புகைப்படம்!
                 *
நேரத்தில் சாப்பிடு
நேரத்தில் தூங்கு" என‌
எளிதில் சொல்லிவிடுகிறாய்
தொலைபேசியின் வழியே
நிச்சயம் முடிவதில்லை
 நீ இல்லாத நாட்களில்!
                 *
நீ அருகிலிருந்து கொடுக்கும்
நூறு முத்தங்களின் மகிழ்ச்சியை!
தொலைபேசி பேச்சின்
முடிவில் கொடுக்கும்
ஒற்றை முத்தம்
கொடுத்துவிடுகிறது
                  *
நீ அருகிலிருந்து
ஓயாது பேசிக்கொண்டிருந்த நாட்களிலும்
அமைதியான வீடாக உணர்ந்து
எளிதில் தூங்கிவிடுகிறேன்!
நீ ஊருக்குச்சென்ற நாட்களில்
தனிமையில் இருந்தாலும்
இரைச்சல் நிறைந்த வீடாக உணர்ந்து
தூக்கமின்றி தவிக்கிறேன்!