Sunday, December 30, 2007

நட்புக்காக!

(சிறுகதை மாதிரி ஆனால் சிறுகதை அல்ல)!

""நாளைக்கு ராத்திரி எல்லோரும் குற்றாலம் போறோம்டா! இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் குற்றாலத்தில்தான் நம் ஆட்டம்!" "ஜான் அண்ணன் சுமோ கார்லதான் போறோம் நம்ம பசங்க எல்லொரும் வராங்க! ரெடியா வந்திரு மச்சான்! என்று கணேஷிடம் சொன்னான் செல்வா! ...ம்ம் சரிடா! மாசக்கடைசியாச்சுல கையில் 500 ரூபாய்தான்டா இருக்கு" என்றான்! இருக்குறத கொண்டுவாடா! நான் பார்த்துக்குறேன் என்றான்" செல்வா!

கணேஷ் வீட்டிற்கு சென்றதும் எதிர் வீட்டில் குடியிருக்கும் தன் காதலி விமலா செல்பேசியில் அழைத்தாள்! "கணேஷ் என் கூட வேலைபாக்குற அடுத்த‌ தெரு பொண்னோட அக்காவுக்கு பக்கத்து ஊர் சிவன் கோவிலில் கல்யாணம் அம்மா என்ன போக சொல்லீட்ட்டாங்க ! மறக்காம வந்திடு கணேஷ்!" என்றாள் விமலா. "கண்டிப்பா வரேன்" என்று சொல்லி விட்டு, நண்பர்களிடம் எப்படி சொல்வது என யோசித்தான்!

கணேசும் விமலாவும் சிலவருடங்களாக காதலிக்கிறார்கள்!இருவர் வீட்டிலும் தெரிந்து எதிர்த்தபின், ஒரே தெருவில் இருந்தாலும் நேரில் சந்தித்துகொள்வதில்லை! இருவரும் வேலை பார்க்கும் அலுவலகங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல், நீண்ட தொலைவில் இருக்கின்றன! எனவே அதிகம் சந்தித்துக்கொள்வதில்லை!

யாரேனும் எங்காவது இருவரையும் சேர்ந்து பார்த்ததாக் சொல்லிவிட்டால் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக முடியாது என்பதால், ஞாயிற்றுக்க்கிழமைகளில் கூட வீட்டை விட்டு எங்கும் செல்லாத சூழ்நிலையில் இருப்பவள் விமலா!ஆனாலும் பேசும் விதத்தில் பேசினால் அப்பா சம்மதிக்கும் குணம் உடையவர் என்பதால் நம்பிக்கையோடு காதலித்தால்! தொலைபேசி பேச்சு மட்டும் தினமும் நடக்கும்! இது போல அரிதாக கிடைக்கும் சந்தர்ப்பர்களில்தான் சந்தித்துக்கொள்வார்கள்!

செல்வாவுக்கு போன் செய்து" சாரிடா மச்சான் விமல பக்கத்து ஊர் சிவன் கோவிலுக்கு கல்யாணத்துக்கு போறாளாம் வர சொல்லுறா!நான் போகலாம்னு நினைக்கிறேன்! நீங்க மட்டும் குற்றாலம் போய்ட்டு வாங்கடா! நான் அடுத்த முறை வரேன்!"'என்றான் கணேஷ்.

செல்வாவிற்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது! "ஏண்டா மச்சான் இப்படி இருக்க! நீ வரலைனா நம்ம பசங்க பாதி பேரு வரமாட்டானுங்கடா எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லோரையும் ஒன்னுசேர்த்திருக்கென் தெரியுமா! லவ்வுலாம் இன்னைக்கு இருக்கும்! நளைக்கு விட்டுட்டு போனாலும் போய்டும்டா, நம்ம ஃப்ரண்ட்ஷிப் அப்படியாடா"என்றான் செல்வா!
கணேஷ்" சாரிடா மச்சான் என்ன புரிஞ்சுக்க!" என்றதும்,கோபத்தில் செல்வா இணைப்பை துண்டித்தான்!

கணேஷ் வரவில்லை என்றதும் சில நண்பர்கள் வரவில்லை என்றார்கள் அவர்கள் வரவில்லை என்றால் நாமும் போகவேண்டாம் என்றார்கள் மற்ற நண்பர்கள், கடைசியில் குற்றாலம் செல்லும் திட்டமே கைவிடப்பட்டது!
கணேஷ் திருமணத்திற்கு சென்று விமலாவுடன் சில மணிநேரங்கள் நிறைய‌ பேசிவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்ததால் மகிழ்ச்சியுடன் திரும்பினான்!

இடையில் செல்வாவின் எண்ணிற்கு போன் செய்துபார்த்தான், அவன் இன்னும் கோபம் குறையாமல் இருந்ததால் எடுக்கவில்லை! மறுநாள் எதிரே பார்த்தபோதும் கண்டும் காணாததுபோல் போய்விட்டான்!முன்று நாட்களாகியும் பேசவில்லை!SMS அனுப்பியும் எதற்கும் பதில் அனுப்பவில்லை,என்ன செய்வது என்று யோசித்த கணேஷ் அலுவகத்தில் உணவு இடைவேளையின் போது தன் இ_மெயில் முகவரியில் இருந்து செல்வாவின் இ_மெயில் முகவரிக்கு மெயில் ஒன்றை அனுப்பினான்!


""ஹாய்டா மச்சான்!
எப்பிடியிருக்க? ஏண்டா மூணு நாளா பேச‌மாட்டிங்குற!
அவ்ளோ பெரிய ஆளாகிட்டியாடா நீ! நான் வேணும்னே அப்படி செய்யலடா என் சூழ்நிலை அப்படி! உனக்கே தெரியும் நானும் விமலாவும் நேர்ல பேசி ரொம்ப நாள் ஆச்சுனு!அதான் போய்ட்டேன்!நீ கோபிக்கிற அள‌வுக்கு நான் தப்பு எதுவும் பண்ணின மாதிரி எனக்கு தோன‌லடா! உன் கோபத்த மாத்திட்டு எப்ப‌வும் போல பேசுடா!
ஃப்ரண்ர்ஷிப்பவிட காதல் பெரிசுனு நான் நினைக்கலடா! ரெண்டுமே வேற வேற மாதிரி அதுகேத்தமாதிரிதான் நான் நடந்துகிட்டேன், எப்படினு கேக்குறியா?

நீ எனக்கு ரொம்ப வருசமா பெஸ்ட் ஃப்ரண்டு! ஆனா விமலா எனக்கு மூணு வருசமாதான் லவ்வர்! எப்பவும் இதே மதிரி இருக்க முடியாது, அடுத்த வருசமே கல்யாணம் முடிஞ்சா வாழ்க்கை அன்பு ஆசை சண்டைனு எல்லாம் கலந்து நிறையவே மாறிடும்!இப்போ மாதிரி அப்போ இருக்கமுடியாது!ஆனா நம்ம ஃபிரண்ட்ஷிப் அப்படியாடா? எப்பவும் இதே மாதிரி பெஸ்ட் ஃப்ரண்ட்ஸாதானடா இருப்போம்! லவ்வ புரிஞ்சுகிட்டு ஃப்ரண்ஷிப்பா நீ நம்ம சந்தோசத்த விட்டுகொடுப்ப! ஃபிரண்டிஷிப்ப புரிஞ்சுகிட்டு தன்னோட சந்தோசத்த அவ விட்டுகொடுக்கமாட்டா! ஏன் எந்த லவ்வரும் தன்னோட சந்தோசத்த விட்டுக்கொடுக்குறதில்லை!லவ்வு பிடிவாதம் பிடிக்கும்டா!ஃபிரண்ட்ஷிப்தாண்டா ம‌ச்சான் அணுச‌ரிச்சு போகும்! அதுதாண்டா மச்சான் நம்ம ஃபிரண்ட்ஷிப்போட ஸ்பெசலே!

லவ் விசயத்துல எதாவது ப்ரோகிராம்னா வாய்ப்பு கிடைக்கிறப்போவே யூஸ் பண்ணிக்கிட்டாதான்!இல்லாட்டி அவ்ளவுதான்!ஆனா ஃப்ரண்ஷிப் ப்ரோகிராம எப்ப வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் மாத்திக்கலாம் மச்சான்!
எதாவ‌து பிர‌ச்ச‌னைனா நீங்க‌ள்லாம் உத‌வி ப‌ண்ண‌ இருப்பீங்க‌ன்ற‌ தைரிய‌த்துல‌தாண்டா நான் தைரிய‌மா காத‌லிக்கிறேன் நீயே இப்ப‌டி இருந்தா எப்ப‌டிடா? வேலை முடிஞ்ச‌தும் ஏழு ம‌ணிக்கு சிவா க‌டைக்கு வ‌ந்திருடா! நான் அங்கேயே இருக்கேன் ! ம‌ற‌ந்துடாதே!!

உன் ந‌ண்ப‌ன்
க‌ணேச‌ன்


அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளில் செல்வா செல்பேசியில் க‌ணேசை அழைத்தான்!
"டேய் மச்சான் இந்த‌ ஞாயிற்றுக்கிழ‌மை கண்டிப்பா குற்றால‌ம் போறோம்டா! எல்லார் கையில‌யும் ச‌ம்ப‌ள‌க்காசு இருக்கும் நல்லா செல‌வு செய்ய‌லாம்!" என எதுவும் ந‌ட‌க்காத‌துபோல் எப்போதும் போல‌ இய‌ல்பாக‌ பேசிக்கொண்டிருந்தான் செல்வா! மெயில் ப‌டித்ததும் ச‌மாதான‌மாகிவிட்டான் என்ப‌து கணேசுக்கு புரிந்தது!
"ச‌ம‌தான‌மான‌ அடுத்த‌ நிமிட‌மே, சண்டைகளை மறந்துவிடுவதே நட்புக்கு அழகு!" என்ப‌தை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ளாக இருவரும் பேசிகொண்டிருந்தார்க‌ள்!

~நம்பிக்கைபாண்டியன்~
முரண்பாடு
அன்றொரு நாள்
வெளியே
காத்திருப்பவனாய்,
நிறுத்தத்தில் நிற்காத‌

பேருந்தை பார்த்து
சபித்துச் சொன்ன மனசு!

மற்றொரு நாள்
உள்ளே
அமர்ந்திருப்பவனாய்,
நிறுத்தத்தில் நிற்கும்

பேருத்தை நினைத்து
"இத்தனை நிறுத்தங்களா"
என சலித்துக் கொள்கிறது!


~நம்பிக்கைபாண்டியன்
உரை பார்வை பூக்களால் முன்னுரை
எழுதத் தொடங்கிய‌
நம் காதல் கட்டுரைக்கு!
பிரிவு முட்களால்
முடிவுரை
எழுதியதேனடி?


~நம்பிக்கைபாண்டியன்

Friday, December 14, 2007

பாரதியே! எதையாவது
எழுதிவிட்டு
கவிதை
என்று சொல்லும்,
என்
தகுதியில்லா
தலைக்கணத்தில்!
நறுக்கென்று
குட்டியது!
உன்
நல்லகவிதை ஒன்று!
~நம்பிக்கைபாண்டியன்

வருடங்கள் ஓடியதால்
பருவங்கள் மாறியது!
ப‌ருவங்கள் மாறியதால்
உருவங்கள் மாறியது!

உருவங்கள் மாறினாலும்
உள்ளங்கள் மாறாமல்!
அன்றுபோல் இன்றும்
உயர்ந்தே இருக்கிறது
நம் உன்னத நட்பு!

~நம்பிக்கைபாண்டியன்

Wednesday, December 12, 2007

ப‌ல‌ன்! "க‌விதை போட்டிக‌ளில்
சில‌ ஆயிர‌ம் ப‌ரிசுக‌ள்!

ப‌த்திரிக்கை பிர‌சுர‌த்தில்
ப‌ல‌ ஆயிர‌ம் வாச‌க‌ர்க‌ள்!

இணைய‌ தொட‌ர்புக‌ளில்
இனிய நண்ப‌ர்க‌ள்!

முக‌ம‌றியாம‌ல்
பேசும்ந‌ல்ல‌ தோழிக‌ள்!

ப‌ழைய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்குள்
புதிய ம‌‌திப்புக‌ள்!" என‌

உன்னால்
நான் எழுதிய
க‌விதைக‌ளின் ப‌ல‌ன்க‌ளாய்,
நிறையவே கிடைத்தன‌
உன்னைத் த‌விர‌!!


~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்
( சிறுகதை) ~(நம்பிக்கைபாண்டிய‌ன்)புவனாவின் பேச்சைக் கேட்க விருப்பமில்லாமல் எழுந்து, நடந்துகொண்டே சிகரெட் ஒன்றை பற்றவைத்தபடி கடல் அலைகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்! புவனா இதைக க‌ண்டதும் "நான் இவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட நீ யோசிச்சது மாதிரி தெரியல‌ ரமேஷ்!என் பேச்சுக்கு இவ்வளவுதானா நீ கொடுக்கும் மரியாதை" என்றாள் கோபமாக!

"புவனா நான் உன்னை காதலிக்கிறது என்னவோ உண்மைதான்,அதற்காக‌ நீ சொல்லும் எல்லாவற்றையும் கேட்க வேன்டுமென்று நினைப்பதில் நியாய‌மில்லை! இது என் தனிப்பட்ட சுதந்திரம்! இதில் தலையிடாதே! நான் சிகரெட் பிடிப்பது முன்பே தெரிந்துதானே என்னை காதலித்தாய்! இப்போது மட்டும் ஏன் நிறுத்த சொல்லுகிறாய்!என்று சொல்லிக்கொண்டே மனதிற்குள்" ச்சே என்ன பெண்கள் இவர்கள், காதலின் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் பெண்கள், நாட்கள் செல்லச் செல்ல அதிகாரம் செய்ய ஆசைப்படுகிறார்கள்!" என நினைத்துக்கொண்டான்!ர‌மேஷின் பேச்சுக்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் மொளனமாக இருந்தாள் புவனா! சற்று கோபம் தணிந்தவனாய் " என்னால சிகரெட்ட நிறுத்த முடியாது புவனா எட்டு வருட பழக்கம்! இப்போதாவது ஒரு பாக்கெட்தான்,முன்னாடி தினமும் இரண்டு பாக்கெட் காலி செய்த காலமெல்லாம் இருக்கு! கெட்ட பழக்கங்களை பழகுவது சுலபம் ஆனால் நிறுத்துவது மிக மிக கடினம்! தவறென்று தெரிந்தாலும் தவிர்க்க முடியாத நிலமை என்னுடையது! புரிந்துகொள் புவனா!" என்றான்.


"பேசுற அளவுக்கு யோசிக்கப் பழகு ரமேஷ்! உன் நல்லதுக்கு தானே சொல்லுறேன்,இதானால் எவ்வளவு கெடுதல்னு புக்ஸ்ல படிச்சிருக்கேல‌!நீ சொல்லுற மாதிரி, "திருத்திக்கொள்ள முடியாத தவ‌றுகள் என்று எதுவுமே இல்லை!! இருக்கிறது என்று நீ சொன்னால், திருந்துவதற்கு உன் மனம் தயாராக இல்லை என்றுதான் அர்த்தம்!"

"நான் உன்னை உடனே நிறுத்த சொல்லலியே முதல்ல பாதியாக குறை! அப்படியே கொஞ்ச‌ம் கொஞ்சமாக நிறுத்த முயற்சி செய்!" "சொல்ல‌னும்னு தோனுச்சு சொல்லிட்டேன்! அப்புறம் உன் இஷ்டம்! நேரமாச்சு போகலாம்!"என்றாள் அவன் பதிலை எதிர்பாராதவளாக! இருவரும் புறப்பட்டு சென்றனர்,


கோபத்தில் மறுநாள் ரமேசிடம் புவனா சரியாக பேசுவதில்லை, செல்பேசியில் அழைத்து கேட்டால், அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் என்று சொல்லிவிட்டாள்! கோபத்தில் இவனும் "நீ எப்போ ப்ரீயா இருக்கியோ அப்போ நீயா கூப்பிட்டு பேசு!" என்று இணைப்பை துண்டித்தான்! இரண்டு நாட்களாக இருவருமே பேசுவதில்லை!சம்பிரதாயத்திற்கு காலையிலும் இரவிலும் SMS அனுப்பிக்கொள்வதோடு சரி!


ர‌மேஷ் தனியார் வ‌ங்கி ஒன்றில் உயர்ப‌ணியில் இருப்பவன். ப‌ள்ளி ஒன்றில் ந‌ட‌க்கும் விழாவிற்கு அந்த‌ வ‌ங்கியின் சார்பில் விள‌ம்ப‌ர‌த்திற்காக‌ ஸ்பான்ச‌ர் செய்திருந்தார்க‌ள், அது ப‌ற்றி பேச‌ உண‌வு இடைவேளை நேர‌த்தில் வ‌ருமாறு த‌லைமை ஆசிரிய‌ர் அழைத்திருந்தார்! அத‌ன்ப‌டியே சென்றான்.


தலைமை ஆசிரியருடன்விழா ப‌ற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ளை பிடித்து இழுத்த‌ப‌டி உள்ளே வ‌ந்த உடற்பயிற்சி ஆசிரியர்" சார் இவனுக ரெண்டுபேரும் நம்ம ஸ்கூல் மொட்டை மாடியில் சிகரெட் பிடிச்சுட்டு இருக்கப்போ பார்த்து கையோட இழுத்துட்டு வந்தேன் சார்!" என்று புகார் செய்தார்!


த‌லைமை ஆசிரிய‌ர் அம்மாண‌வ‌ர்க‌ளை பார்த்து முறைத்த‌ப‌டியே" ஏன்டா அறிவு கெட்ட பயலுகளா!இந்த‌வ‌ய‌சிலேயே சிக‌ரெட்டா? காச‌க் க‌ரியாக்கி உட‌ம்பையும் கெடுத்துக்காதிங்க‌டா" என்று திட்ட‌ ஆர‌ம்பித்தார்! ஒரு மாண‌வ‌ன் என்ன‌ செய்ய‌போகிறாரோ என்ற‌ ப‌ய‌ந்த‌ப‌டியே நின்றிருந்தான்! இன்னொருவ‌ன் எந்த‌ ப‌ய‌முமின்றி அல‌ட்சிய‌ ம‌னோபாவ‌த்துட‌ன் நின்றிருந்தான்!திட்டிக்கொண்டிருந்த‌ த‌லைமை ஆசிரியர், அதில் ஒருவ‌னை வேதியிய‌ல் ஆய்வ‌க‌த்திற்கு சென்று சுட‌ர்விள‌க்கு ஒன்றையும், க‌ண்ணாடித்துண்டு ஒன்றையும் வாங்கிவ‌ர‌ச் சொன்னார்! என்ன செய்யப்போகிறார் என்று ஆர்வ‌மாக கவணித்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.அவன் வாங்கி வ‌ந்த‌த‌தும்,"சிக‌ரெட் குடிப்ப‌து ஏன் த‌ப்புனு சொல்லுறேன்னு முத‌ல்ல‌ தெரிஞ்சுக்கோங்க‌டா!" என்று சொல்லி, முத‌லி சுட‌ர்விள‌க்கை ப‌ற்ற‌ வைத்தார், அதில் எரிந்த‌ தீச்சுட‌ருக்கு சற்று மேலே க‌ண்ணாடித்துண்டை தூக்கி பிடித்தார், தீச்சுட‌ரிலிருந்த வந்த புகை தொடர்ந்து கண்ணாடியில் ப‌டிந்ததும், ப‌ள‌ப‌ள‌ப்பாக‌ இருந்த‌ க‌ண்ணாடித்துண்டு க‌ருப்பாக‌ மாறிய‌து!
மாண‌வ‌ர்க‌ளிட‌ம் அதைக்காட்டி" சுத்த‌மாக‌ இருந்த‌ இந்த‌ க‌ண்ணாடி ஏன் இப்ப‌டி அழுக்கு பிடித்து க‌ருப்பாகா மாறிய‌துனு தெரியுமா?" என்றார்!


"தொட‌ர்ந்து புகைப‌ட்ட‌தால் இப்ப‌டி அழுக்காச்சு சார்!" என்றான் அல‌ட்சிய‌மாக‌ இருந்த‌ மாண‌வ‌ன்,"

"ம்ம்ம் அதே மாதிரிதாண்டா நம்ம உடலின் உள் உறுப்புக‌ளும், சுத்த‌மாக‌ இருக்கும் உட‌லுக்குள் தொட‌ர்ந்து புகையை இழுப்ப‌தால் அந்த‌ புகையில் உள்ள‌ ந‌ச்சுப்பொருட்கள் உள் உறுப்புகளுக்கு த‌ற்காலிக‌ இத‌ம‌ளித்தாலும், பெரிய‌ அள்வில் பாதிப்புக‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து! நிறைய‌ நோய்க‌ளை உருவாக்குகிற‌து!


இந்த‌ வ‌ய‌சுல‌ உட‌ம்புல‌ தெம்பு இருக்குற‌ப்போ ஒன்னும் தெரியாது! பின்னால‌ ரொம்ப‌ க‌ஷ்டப்‌ப‌டுவீங்க‌! இனிமேல் சிக‌ரெட் குடிக்காதீங்க‌! என்று தெளிவாக‌ ம‌ன‌தில் ப‌தியுமாறு சொன்னதும், உண்மை புரிந்த‌வ‌ர்க‌ளாக‌ மாண‌வ‌ர்க‌ள் இருவ‌ரும் "இனி நெஜ‌மாவே சிக்ரெட் குடிக்க மாட்டோம் சார்" என்று ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ சொன்னார்க‌ள்!


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த‌‌ ர‌மேசுக்கு ம‌ன‌திற்குள் ஏதோ ஒன்று சுருக்கென்ற‌து தைத்த‌து போல‌ இருந்த‌து!தெளிவாக உணர்த்திய ஆசிரியரை ஆச்சர்யமாக பார்த்தான், புவனாவும் இதை, என் நலத்திற்காகாதானே சொன்னாள்! அதை கேட்ப‌தில் என்ன‌ த‌வ‌று!இனி நானும் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என ம‌ன‌திற்குள் ம‌ன்னிப்புக் கேட்டுகொண்டே!பேசி முடித்துவிட்டு வெளியே வ‌ந்த‌தும் த‌ன் செல்பேசியில் "செல்ல‌ம்" என்ற‌ பெய‌ரில் சேமித்துவைத்திருந்த‌ புவ‌னாவின் எண்ணை அழைக்க‌ அழுத்தினான்!