Monday, October 31, 2011

நூடுல்ஸ் - சிறுகதை (வம்சி சிறுகதை போட்டிக்கு)


                                                      பிரகாஷ் வீட்டிற்குள் வந்ததும், சற்றுமுன் பணி முடிந்து வீட்டிற்கு வந்து. தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த விஜி சட்டென எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள், உடை மாற்றிவிட்டு அவனும் சமயலறைக்குள் வந்தான், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், அவனாக பேசுவான் என்று அவள் எதிர்பார்த்தாள், அவளாக பேசுவாள் என்று அவன் எதிர்பார்த்தான் இருவரும் பேசிகொள்ளவில்லை, தண்ணீரை குடித்து விட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தான் பிரகாஷ்
                                                             
                                                      விஜி பிரகாசுடன் பேசி இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது! இருவரும் ஒரே மென்பொருள் துறையில் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கும் காதல் தம்பதிகள், பிரகாஷ் விஜியை விட அந்த நிறுவனத்தில் மூன்று வருடம்  சீனியர்,  ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது அவ்வப்போது நட்பாக பேசிகொண்ட பழக்கம்.  புத்தகம்,கதை, கவிதை, திரைப்படம் என பல விதங்களில் ஒரேவித ரசனை கொண்டவர்களாக இருந்ததால் நாளடைவில் அது காதாலாக மாறியது! முதலில் இருவர் வீட்டிலும் மறுத்தாலும் சில நண்பர்கள் உதவியுடன் சமாதானம் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இணைந்தனர்.

                                                      இப்பொழுது இருவரும் அதிக சம்பளத்திற்காக வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறிவிட்டனர். காதலிக்கும்போது பிடித்த குணங்களை மட்டும் கவனித்து ரசித்தவர்கள் திருமணமாகி சில மாதங்களுக்கு பிறகு பிடிக்காத குணங்களை குறை சொல்லி கண்டிக்கத்தொடங்கும்போது   பிரச்சனைகள் ஆரம்பமானது, ஒரே ரசனை கொண்டவர்கள் என்பது காதலுக்கு காரணமாக இருந்தது போல் அதுவே பிரச்சனைகள் பெரிதாகவும் காரணமாக இருந்தது, அவளுக்கு கோபம் வந்தால் அவனுக்கும் கோபம் வருகிறது, சண்டைக்குப் பின் அவள் முதலி இறங்கி சமாதானத்திற்கு வராமல் அவன் இறங்கி வரட்டும் என நினைப்பாள் , அவளும் அவன் இறங்கி வரட்டும் என நினைப்பான், இருவருக்குமே ஈகோ அதிகம்.

                                       இப்படியே ஒரு வாரம் கூட ஒரே விட்டிற்குள் பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள், பிரகாஷ் வெளியில் சாப்பிட்டு வருவான், விஜி அவளுக்கு மட்டும் சமைத்து சாப்பிட்டுக்கொள்வாள், ஒரு வாரத்திற்கு பிறகு அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு வரும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது வீட்டிற்கு வரும்போது எதுவுமே நடக்காதது போல் பேசிக்கொண்டு அதை அப்படியே தொடர்ந்து இணைந்துகொள்வார்கள், அவ்வப்போது பிரிதல் சேர்தல் என சில மாதங்களாக இது தொடர்கிறது, அந்த பிரிவுக்காலம் இருவருக்குமே மிக இம்சையானதாவே இருக்கும் ஆனால் இருவ்ரும் அதை வெளிகாட்டமாட்டார்கள், 
                                                                                   மற்ற தம்பதிகளைப்போல் அன்றைய சண்டைக்கு அன்றே சமாதானமாகிவிடவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கு தான் முதலில் இறங்கிச்செல்ல வேண்டும் எண்ணத்தை, இத்தனை வருடங்களாக அவர்களுடன் வளர்ந்து வந்த ஈகோ எண்ணம் தடுத்தது! இதற்கு ஏதேனும் தீர்வு காணவேண்டும் என்று நினைத்த படியே தொலைக்காட்சியில் இருவருக்கும் பொதுவாக பிடித்தமான, எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அந்த சேனலுக்கு மாற்றினான் பிரகாஷ். அந்த சேனலின் அன்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல புதுக்கவிதை மற்றும்  நவீனத்துவ எழுத்தாளர் தமிழன்பனும், அவரது மனைவி மரபு கவிதை மற்றும் பாரம்பரியம் பற்றி எழுதும் கவிதாயினி ரமணிகா வும் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். 

                                                      அவர்களிடம் பேட்டியாளர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் சொல்லிகொண்டிருந்ததை, விஜி, பிரகாஷ் இருவருமே சற்று தள்ளி அமர்ந்து ஆர்வமாக ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சியின் பேட்டியாளர் " தம்பதிகளாக இருந்தாலும் எழுதுவதில் இருவரும் நிறைய முரண்பாடுகளுடன் இருக்கிறீர்கள், உங்களுக்கு நிச்சயம் சண்டை வரும் எப்படி சமாதானம் ஆவீர்கள்" என்று கேள்வி ஒன்றை கேட்டார், அதற்கு தமிழன்பன் சில நேரங்களில் அவுங்களே வலிய வந்து பேசிருவாங்க நாங்க சமாதானம் ஆகிடுவாங்க, சில நேரங்களில் என் மீதே அதிக தவறு இருக்கும் அப்போது அவுங்க பேச மாட்டாங்க, எனக்கு கொஞ்சம் ஈகோ அதிகம், அதானல் நானும் வலிய போய் பேச மாட்டேன் அதுக்கு பதிலா அவுங்களுக்கு ரொம்ப பிடிச்ச எதாவது ஒன்ன வாங்கிட்டு போவேன், அது நான் மன்னிப்பு கேட்பதாக அர்த்தம், , "வார்த்தைகளால் மன்னிப்பு கேட்க முடியாத சில இடங்களில் செயல்களால் மன்னிப்பு கேட்பது சுலபம்!" என்னை அவுங்க புரிஞ்சுகிட்டு சிரிச்சுடுவாங்க,அப்புறம் சகஜமாகிடுவோம் என்றார்'. அடுத்த சில நிமிடங்களில் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டாலும் அவர் சொன்ன விசயம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடக்க ஆரம்பித்தான் பிரகாஷ், 

                                                     இனி நாமும் அவளுக்கு பிடித்ததை வாங்கிகொடுத்து உடனே சமாதானமாகிவிட வேண்டும், அவளுக்கு என்ன பிடிக்கும் என யோசித்தான் பெரிய பட்டியலே வந்தது, அதில் இப்பொழுது உடனே வாங்கக்கூடியது என்ன என்று நினைத்தபோது "நூடுல்ஸ்" நியாபகம் வந்தது, காதலிக்கும்போது உணவகத்திற்கு செல்லும்போது பலநேரங்களில் நூடுல்ஸ்தான் ஆர்டர் சொல்லி சாப்பிட்டிருக்கிறார்கள்!, திருமணமான புதிதில் வீட்டில் சாதம் சமைக்காத நேரங்களில் நூடுல்ஸ்தான் சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள், உடனே அருகில் இருந்த கடையில் ஒரு நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்தான் பிரகாஷ்,
                                                           முதலில் எதாவது பேசி அவளிடம் இதை கொடுப்போமா? அல்லது இதை வாங்கி அவள் சிரித்த பின்பு எதாவது பேசுவோமா? என்று யோசித்துகொண்டே சாப்பிடும் மேசையில் அமர்ந்தான், அப்பொழுது விஜி சமையலறையிலிருந்து சூடாக ஆவிபறக்க அவனக்கும் பிடித்தமான சமைத்த நூடுல்ஸுடன் அவன்முன் வந்து நின்றாள், அவன் கையிலிருந்த நூடுல்ஸ் பாக்கெட்டை அவள் பார்த்தாள், அவள் கையிலிந்த சூடான நூடுல்ஸை அவன் பார்த்தான்.சற்றே கலங்கிய கண்களுடன் இருவரும் சிரித்துக்கொண்டார்கள். அதன்பின் அவர்களின் சண்டைகளை அப்போதே தீர்க்கும் அவர்களுக்கு பிடித்தமான "நூடுல்ஸ்" இப்பொழுது அவர்களின் குழந்தைக்கும் பிடிக்கிறது!

-- 

(குறிப்பு:- ஒரேவித  ரசனைக்காக மட்டும் காதலிப்பவர்களின் வாழ்க்கையில் அதே ரசனையே பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்ற ,எப்போதோ ஏதோ ஒரு கதையில் படித்த கருத்தை  இதில் சேர்த்திருக்கிறேன்)

Friday, October 28, 2011

வினை - சவால் சிறுகதை-2011


                                                             காவல்துறை உயரதிகரிகளின் முக்கிய கலந்தாய்வில் இருந்த எஸ்,பி.கோகுல்ராமின் கையில் இன்பார்மர் விஷ்னு அனுப்பிய கடிதம் கொடுக்கப்பட்டதும் மிகவும் பரபரப்பாக இருந்தார்.
விஷ்னு சென்னையின் மாநகர பகுதியில் உள்ள
ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியின் உரிமையாளர்  தயாளனுக்கு உதவியாளராக புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளவன், ஒருவரை பின் தொடந்து உளவு பார்த்து அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி அனுப்புவதே அவர்களின் பணி, பல்வேறு காரணங்களுக்க்காக இந்த பணியை பலருக்கு செய்தாலும்
காவல்துறைக்காகவும் சில முக்கிய வழக்குகளில் உதவுவார்கள்,

                                                          உளவுத்துறை சமீபத்தில் "வெளிநாட்டு தீவிரவாதிகளின் புதிய திட்டத்தின் படி ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் நட்டிற்குள் வந்து இங்கிருக்கும் உள்ளூர் நபர் மூலமாக தங்கள் திட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள், என தகவல் அனுப்பியிருந்தது. அதை உறுதிப்படுத்துவது போல் சில நாட்களுக்கு முன் சென்னை புறநகர் பகுதியில்
தேர்தலில் பணபரிமற்றத்தினை தடுக்க நடந்த வாகன சோதனையின் போது, பெரும் பணத்துடன் பிடிபட்டவன் வெளிநாட்டினை சேர்ந்த தீவிரவாதி கசாப் என்று தெரிந்தது,  இதன் ரகசிய விசாரணையின் போதுதான் தயாளனின் டிடெக்டிவ் ஏஜென்சியின் உதவியையும் நாடினார் எஸ்.பி.கோகுல் , அவர் தந்த சில தகவலின் படி விஷ்னுவும் தயாளனும் விசாரிக்க தொடங்கினர்,
இந்த சூழ்நிலையில் விஷ்ணு அனுப்பிய கடிதத்தில்

Mr.கோகுல்
S W H2 6F இதுதான் குறியீடு கவனம்.
விஷ்ணு
என்று அந்த குறிப்பிடப்பட்டிருந்தது, இதை பல விதங்களில் யோசித்துபார்த்தும் அந்த குறியீட்டின் அர்த்தம் புரியவில்லை, விஷ்னுவின் செல்பேசி எண்ணுக்கு அழைத்தாலும் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது,நேராக அருகில் இருந்த தயாளனின் அலுவலகத்திற்கு செல்லுமாறு தன் டிரைவருக்கு உத்தரவிட்டார்,
அலுவலகத்திற்கு சென்றதும் அங்கு செக்யூரிட்டி மட்டும் இருந்தார், தயாளனுக்கு "எங்கு இருக்கிறீர்கள்" என போன் செய்தால்
 " அலுவலகத்திற்குதான் வந்து கொண்டிருக்கிறேன் அங்கு இருங்கள் பத்து நிமிடங்களில் வந்துவிடுகிறேன்" என்றார்.

அலுவலகத்தில் தயாளனின் அறைக்குள் சென்ற எஸ்.பி.கோகுல் மின்விசிறியை சுழலவிட்டு இருக்கையில் அமர்ந்து, சுற்றும் முற்றும் பார்த்தபோது மேசையின் மீதிருந்த டைரியினுள் கவர் ஒன்று இருந்தது! அதை பிரித்து படித்த போது அந்த கடிதத்தில்

Sir
எஸ்.பி.கோகுலிடம் தவறான குறியீட்டைதான் கொடுத்திருக்கிறேன் கவலை வேண்டாம்.
-விஷ்ணு
என்று குறிப்பிடப்பட்டிருந்தது,தனக்கு விஷ்ணு அனுப்பிய கடித்தையும் எடுத்து இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தார்,  ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட பிரிண்ட் போல் தோன்றியது, விஷ்ணு ஏன்தவறான தகவல் கொடுத்தான், தாயாளன் ஏன் அப்படி கொடுக்க சொன்னார். அப்படியானால் இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏதோ தொடர்பிருக்கிறதா என கோகுல் மேலும் குழப்பமடைந்தார்,. அந்த நேரத்தில் அவர் செல்பேசி ஒலித்தது, எடுத்து பார்த்தால் இன்பார்மர் விஷ்ணு ,அழைப்பை ஏற்றதும்   கோபமாக "ஏன் போனை அணைத்து வைத்திருந்தாய் என்றார் கோபமாக,
                                                                    எதிர் முனையில் விஷ்ணு " சார் மன்னிக்கவும் ஒரு கையில் வாகனம் ஓட்டிகொண்டே தயாளன் சாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எனது போன் கீழே விழுந்து ரிப்பேராகிவிட்டது அதனால் இரண்டு மணி நேரமாக என்னால் யாருடனும் பேசமுடியவில்லை, யாருடைய போன் நம்பரும் எனக்கு நினைவில் இல்லை அனைத்தும் சிம் கார்டில்தான் உள்ளது ,அதனால் தான் எனக்கு கிடைத்த தகவலை உடனடியாக தெரிவிக்க முடியவில்லை,   விரைவாக தெரிவிப்பதற்காகவே என்னுடைய உயிர் நண்பன் ராகவனுடைய போன் நம்பர் நினைவில் இருப்பதாலும், அவன் உங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருப்பதாலும் அவனிடம் கடிதம் மூலம் தகவலை தெரிவிக்க சொன்னேன் இப்பொழுது கூட என்னுடைய சிம்கார்டை இன்னொரு நண்பரின் போனில் பொருத்தி பேசுகிறேன், நான் அனுப்பிய குறியீடு கிடைத்ததா சார்" என்றான். மறு முனையில் கோகுல் அதே கோபத்துடன் "நீயும் தயாளனும் என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள், எதற்காக எனக்கு தவறான தகவலை கொடுத்ததாக தயாளனுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறாய்? உண்மையை சொல்!" என்றார் கோகுல்,

"அதை பார்த்துட்டீங்களா சாரி சார், நான் உங்களுக்கு அனுப்பிய குறிப்பு  உண்மைதான்,அந்த குறிப்பின் அர்த்தம் SW means Street name Wamanan  H2 means House number 2
6F means Six Face, அதாவது நீங்கள் தீவிரவாதியை பிடித்த அதே பகுதியில் உள்ள வாமணன்  தெருவில் 2ம் எண் வீட்டில் உள்ள ஆறுமுகம் என்பவனுக்கும் பிடிபட்ட அந்த தீவீரவாதி கசாப்பிற்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கிறது! உங்களிடம் விரிவாக சொல்லச் சொல்லி நண்பனிடம் சொன்னேன் நீங்கள் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாக சொல்லி அனுமதி மறுத்துவிட்டனர்.                    நான் இங்கு வந்தபோது அந்த ஆறுமுகம் தங்கியிருந்த வீடு நமது தயாளன் சாருடைய மாமனாருக்கு சொந்தமானது என்றும் , அவனை பற்றி எதுவும் தெரியாமல் கூடுதல் வாடகைக்கு ஆசைப்பட்டு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளனர், யாரோ, யாரையோ கொல்வதற்கு தெரியாமல் உதவும் கொசுறு வேலைக்கு கூட தூக்கு தண்டனை கொடுக்கும் சூழல் இங்கு நிலவுவதால் அவர்களுக்கு ஏதாவது ஆகி, அதனால் தன் மனைவியின் கோபத்தில் தன் குடும்ப வாழ்க்கை பாதிக்கும் என நினைத்து தங்கியிருக்கும் இடத்தை மட்டும் சொல்லவேண்டாம் என்றார், அதற்குள் போன் கீழே விழுந்துவிட்டதால், காப்பாற்ற நீங்கள் இருக்கும் தைரியத்தில் அவரின் தற்காலிக ஆறுதலுக்கு அப்படி ஒரு கடிதத்தை
அதே நண்பனின் மூலம் அனுப்பினேன்! நான் சொன்ன தகவல் முற்றிலும் உண்மை! நான் இப்போது அங்குதான் அருகிலிருப்பவர்களிடம் விசாரித்துகொண்டிருக்கிறேன் உடனே வாருங்கள்" என்றான் விஷ்ணு, குழப்பம் நீங்கினார் எஸ்,பி.கோகுல்.

தீவிரவாதிக்கு உதவிய ஆறுமுகம் இருந்த வீட்டை எஸ்,பி.கோகுல் தலைமையிலான காவல்படை சூழ்ந்தது, வீட்டருகே இஸ்திரி செய்பவரிடம் விசாரித்ததில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அந்த பையன் முதுகில் காலேஜ் பேக் ஒன்றுடன் பைக்கில் புறப்பட்டு சென்றதாக கூறினார் என்று விஷ்ணு தகவல் சொன்னான். பூட்டியிருந்த வீட்டை உடைத்து   உள்ளே சென்றால் அங்கு ஒரு பையில் சில லட்சங்கள் மதிப்புள்ள பணமும்
 ஒரு சில ஆடைகளும் சில சமையல் பாத்திரங்களும் பட்டுமே இருந்தது அறை மிழுவதும் தேடியும் எந்த தடயமும் காணப்படவில்லை, எஸ்,பி.கோகுல்ராம் அங்கிருந்த ஆடைகளின் சட்டைப்பை மற்றும் பேண்ட்பைகளில்
 கைகளை விட்டு தேடி பார்த்தார் இரு சிறு காகிதம் இருந்தது அதில் "அன்றைய தேதி , தியேட்டர், ரயில்வே ஸ்டேசன் ,பஸ்டாண்டு, மார்க்கெட்,என்று குறிப்பிடப்பட்டிருந்தது,  எங்கோ வெடி குண்டு வெடிக்க சதி செய்துள்ளார் என்ற உண்மை புரிந்ததும் உடனடியாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனையிட உத்தரவிடப்பட்டது,

                                               அதே நேரத்தில் ஆறுமுகம் கிடத்த சில லட்சங்களையும் காரியம் முடித்தபின் கிடைக்க போகும் பல லட்சங்களையும் நினைத்து இனி இப்போது செய்வது போல் சிறு சிறு திருட்டு கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிப்பது, கூலிக்கு அடியாளாக வேலைக்கு செல்வது போன்ற வேலைகளை செய்யாமல் இது போன்ற பெரிய காரியங்கள் சிலவற்றை செய்து வாழ்க்கையில் பெரிய அளவில் செட்டிலாகிவிட வேண்டுமென்று எண்ணி உற்சாகமாக பைக்கை விரட்டினான்! வெடிகுண்டு வெடிப்பதற்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது , பத்து நிமிடத்தில் மார்க்கெட் போய்விடலாம்  அங்கு தன் முதுகிலிருக்கும் வெடிகுண்டு பையை ஒரு ஓரமாக வைத்து வந்துவிட்டால் வேலை முடிந்தது,

                                              அதிக மக்கள் கூடும் காய்கனி மார்க்கெட்டை நெருங்கிக் கொண்டிருக்கையில் அவனை மறித்து பெரிய சுமோ வேன் ஒன்று நின்றது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் உள்ளே இழுக்கப்பட்டு அதன் கதவுகள் சாத்தப்பட்டன, வேன் ஆட்களற்ற புறநகர் பகுதியை நோக்கி திரும்பியது. உள்ளே  இருந்த விஜயாவின் அப்பா, அண்னன், அவனது நண்பர்களை பார்ததும் அதிர்ச்சியடைந்தான் ஆறுமுகம், மற்றவர்கள் பிடித்துகொள்ள விஜயாவின் அண்னன் அவன் முகத்தில் எட்டி உதைத்து "ஏண்டா திருட்டுநாயே, உன்ன நல்லவன்னு நம்புன என் தங்கச்சிய காதலிக்கிறதா சொல்லி நெருங்கி பழகிட்டு , அவள் கர்பமானதும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஏமாத்திட்டு ஊரைவிட்டு ஓடி வந்துட்ட,  அவ அவமானத்துல தற்கொலை பண்ணிக்கிட்டா தெரியுமா, உன்ன தேடிட்டு இருந்தோம், நீ இங்க இருக்குறதா நேத்துதான் தகவல் கிடைச்சது, அவ சாவுக்கு காரணமான நீ இந்த உலகத்துலேயே இருக்க கூடாதுடா" என்று கோபமாக கூறிய படியே அவன் வயிற்றில் முதல் கத்தியை இறக்கினான். அடுத்த சில நொடிகளில் மேலும் சில கத்திகள் இறங்க தன் தவறுகள் அனைத்தும் நினைவில் தெரிய உயிரற்ற உடலாய் சரிந்தான் ஆறுமுகம், கண்ணுக்கெட்டும் தூரம்வரை  கட்டிடமோ, ஆட்களோ யாருமில்லாத   புற நகரின் ஒதுக்குபுற பகுதியில் அவனது உடலை முதுகில் தொங்கிய பையுடனே வீசிவிட்டு சென்றார்கள். அவர்கள் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் ஆறுமுகத்தின் உடலும் தீவிரவாதிகளின் திட்டமும் வெடித்து சிதறிக்கொண்டிருந்தன.

(குறிப்பு:- யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதை போட்டிக்கு எழுதியது)

Sunday, October 23, 2011

கவிதைகளாகவும் இருக்கலாம்! - படக்கவிதை

1

காற்றின் கோபத்தை
தாங்கமுடியாத மரம்
தற்கொலையால் வீழ்ந்து கிடக்கிறது!

2

திடீரென்று தோன்றி
சில நிமிடங்களில் முழுமையடைந்து
வெளியேறும் கவிதைகளை!

பல மாதங்களாகியும்
முற்றுப்பெறாமல்
காத்திருக்கும் கவிதைகள்
பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தன!

3

காத்திருக்கும்
நேரங்களில் கிடைக்காமல்
எதிர்பாராத தருணங்களில்
தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்
அரசுப் பேருந்துகளாகவே
என் கவிதைகள்!







Tuesday, October 18, 2011

நீ படித்த கவிதைகள்! - படக்கவிதை

1

எழுதத் தொடங்கும்போதே
எண்ணிக் கொள்கிறேன்
படித்துவிட்டு
நீ பாராட்டுவதாக
மேலும் மேலும்
அழகாகின்றன கவிதைகள்!

2

நீ என்ன சொன்னாலும்
அதை நம்பிவிடும் என்னை
ஏமாளி என்கிறாய்!

நான் என்ன சொன்னாலும்
அதை நம்பிவிடும் உன்னை
குழந்தையாகவே என்னுகிறேன்!



3

என் கவிதையை
படித்துவிட்டு
அதில் ஏதோ ஒன்று
குறைகிறதே என்கிறாய்!

ஒருவேளை அது
என் பெயருக்கு 
பின்னால் சேர்க்கப்படாத
உன் பெயராக கூட இருக்கலாம்!






Saturday, October 15, 2011

ஹைக்கூ...! -படக்கவிதை

1

கடலில் கலந்த
நதிகளும், மழைகளும்,
உப்புச்சுவை பிடிக்காமல்
வெளியேறத்துடிக்கின்றன! அலைகளாக...

2

நொடிகளில் 
தீர்மானிக்கப்படுகிறது வாழ்க்கை! விபத்து...


3

மழையில் நனைந்ததால்
உடல்நிலை சரியில்லை
பிரேக்கடிக்க தாமதிக்கிறது டயர்...






Friday, October 14, 2011

மனிதர்களுக்கான மழை! - கவிதை

மனிதர்களுக்கான மழை
நிறுத்தப்பட்டு,
ஆண்டுகள் பல ஆகிவிட்டன!

இப்போது பெய்வதெல்லாம்,
மரங்களுக்கும் 
விலங்குகளுக்குமான மழைதான்!
அதனையும் அழித்துவரும் மனிதர்களே!

"உலகம் நீரில் அழியும்" என்ற
கடவுளின் கடைசி அத்தியாயத்தை
மாற்றி எழுதிக்கொள்ளுங்கள்!
"உலகம் நீரின்றி அழியும்!"

Wednesday, October 12, 2011

நகர்வலம்! - கவிதை


நாளைய திருவிழவிற்கு வந்த
கம்பீர யானையொன்று
இன்றே நகர்வலம் வந்தது
பாகனின் வருவாய்க்காக!

தெருவில் நுழைந்ததும்
"ஐ! யானை"என்று
யானையை நோக்கி
உற்சாகமாய் ஓடினர் சிறுவர்கள்!

"ஐ! யானை"என்று
அதே உற்சாகத்தோடு
வீட்டை நோக்கி ஓடினார்
எதிர்வீட்டு தாத்தா,

யானையை பார்த்த
குழந்தைகளின் உற்சாகம்
இயல்பானது!
தாத்தாவின் உற்சாகம்
சற்றே விநோதமானது!

விநோதத்தின் விடையாய்
கையில் பேத்தியுடன்
சிரித்து வந்த
தாத்தாவை நோக்கி
உற்சாகமாக வந்துகொண்டிருந்தது யானை!

Tuesday, October 11, 2011

இரயில் நிலையம்! - கவிதை

******************
வழியனுப்ப வந்தவர்களும்
வரவேற்க வந்தவர்களும்
இல்லாத இரயில்நிலையம்
நட்சத்திரங்களற்ற வானம்போன்றது!
******************

கடவுள் நம்பிக்கை


கடவுள் இருக்கிறாரா? இல்லையா ?என்ற விவாதங்களை தவிர்த்து கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் அதனால் அடையும் நன்மைகள் அதிகம் என்பதை வலியுறுத்தவே இந்த பதிவு.
"நம்பினார் கெடுவதில்லை! நான்கு மறை தீர்ப்பு!" எனகிறது இந்துமதம், "நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்!"என்கிறது கிறிஸ்தவம், எந்த அளவிற்கு இறைவனை நம்புகிறீர்களோ,அந்த அளவிற்கு அவன் அருள்புரிவான்" என்கிறது இஸ்லாம்,எனவே கடவுள் நம்பிக்கையே பலரது மனக்காயங்களை ஆற்ற சிறந்த மருந்தாக பயன்படுகிறது,

மனம் உருகி பிரார்த்தனை செய்த மனமானது மழை பெய்து முடித்த வானம் போல் தெளிவாக இருக்கும்,என்கிறார்கள் ஆத்மஞானிகள், கடவுள் நம்பிக்கை இருக்கலாம, ஆனால் அது கண்மூடித்தனமானதாகவும் இருக்கக்கூடாது, உழைக்கவேண்டிய நேரத்தில் உழைத்துவிடவேண்டும், என்பதையும் மறந்துவிடக் கூடாது, மழைபெய்யும்போது உங்களால் மழையை நிறுத்த முடியாது ஆனால் மழையிலிருந்து பாதுகாக்க குடை பிடிக்க உங்களால் முடியும், அது போல்தான் கடவுள் நம்பிக்கையும் பிரச்சனைகளை தவிர்க்கமுடியாவிட்டாலும் நீங்கள் அதிலிருந்து தப்பிப்பதற்கும்,அதனை தீர்ப்பதற்கும் உங்களுக்கு வழியை கொடுக்கும்.
உங்களின் மிகச்சிறந்த நண்பனாக கடவுளைபோல் யாரும் இருக்கமுடியாது, கடவுளிடம் நீங்கள் என்ன பேசினாலும் அவர் உங்களை தவறாக நினைப்பதில்லை, உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து கூறி விவாதம் செய்வதில்லை, நீங்கள் சொல்வதை அவர் வேறுயாரிடமும் சொல்வதில்லை.

" மனம் ஒன்றாத பூஜைகளாலும் ,வெறுமனே புகழ்ந்து போற்றுவதாலும், கடவுளை கவர்ந்துவிட முடியாது, நல்ல இயல்புகளாலும், நன்மை தீமையை பிரித்தறியும் அறிவாலும், சுயநலமற்ற செயல்களாலுமே இறைவனை எளிதில் கவர முடியும்!" என்கிறார் புதுச்சேரி ஸ்ரீஅன்னை, துன்பத்தில் மட்டுமல்ல இன்பத்திலும் இறைவனை நினைப்பவனே உண்மையான பக்தன் என எல்லா மதங்களூம் வலியுறுத்துகின்றன

கடவுள்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, வேதங்களில் எவையெல்ல்லாம் பாவங்கள் என்று பட்டியலிட்டு சொல்லும்போது,"ஒரு கடவுளை விரும்பி, மற்ற கடவுளை நிந்தனை செய்வது பாவம் " என்கிறது, பெயரில்வேறுபட்டிருக்கும் கடவுளும் மதங்களும் தத்துவங்களின் அடிப்படையில் ஒன்றாகவே இருக்கின்றன,

அதுவேண்டும் இதுவேண்டும் என்று கேட்டு ஒரு சிறிய வட்டத்துக்குள் உங்கள் பிரார்த்தனைகளை அடைத்துவிடாதீர்கள், எனக்கு எது நல்லதோ அதை தா, என்று பிரார்த்தித்து உங்களை இறைவனிடம் சமர்பித்துவிடுங்கள் உங்களுக்கு இறைவன் அருள் பர்பூரனமாக கிடைக்கும்!" என்கிறார் மகான் அரவிந்தர். "உன்னுடைய பிரார்த்தனை நேர்மையானதாகவும், நீ அதற்கு தகுதியுடையவனாவும் இருக்கும் பட்சத்தில் அது நிச்சயம் நிறைவேறும் !"என்று நம்பிக்கை தருகிறார் கவிஞர் கண்ணதாசன்.
கடவுள் நம்பிக்கை பலரது வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறது,தீராத நோய்களையும் தீர்க்கவே முடியாத பல பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துவைக்கிறது,இதை பலரது அனுபவத்தில் உணரலாம்!.
எனது இறைஅனுபவங்களில் ஒன்று :-

நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது குற்றாலம் பகுதியை சேர்ந்த நண்பன் ஒருவன் உடன் படித்தான்,குற்றாலம் சீசன் வருவதால் அங்கு சென்று அவனது உறவினர் வீடு ஒன்று காலியாக இருக்கிறதென்றும் அதில் தங்கி இரண்டு நாட்கள் எல்லா அருவிகளிலும் நன்கு குளித்துவிட்டு வருவோமென்று பத்து நாட்கள் முன்பாகவே திட்டமிட்டோம் எங்கள் திட்டத்தில் 12 நண்பர்கள் சேர்ந்துவிட்ட்டார்கள், திட்டமிட்ட 3 நாட்களுக்கு முன் எனக்கு கடுமையான காய்ச்சல் , மருத்துவமனைக்கு சென்று 3 நாட்களும் ஊசிபோட்டேன், மாத்திரை வாங்கி சாப்பிட்ட்டேன் சற்று குறையும், பிறகு மீண்டும் அதிகரித்துவிடும்,மிகவும் சோர்வடந்து நான் குற்றாலம் வரவில்லை என்று சொன்னேன்,
கல்லூரிகளில் இருக்கும், அப்பாவி, படிப்பாளி, பந்தா, காமெடி, ரெளடி, குழுக்களில் நான் காமெடிக்குள் அடங்கிவிடுவதால் என்னை நண்பர்கள் அவசியம் வரவேண்டும் என்று மிகவும் வற்புறுத்தினார்கள், புறப்படும் நாள் வரை எனக்கு காய்ச்சல் விடவில்லை,வெள்ளிகிழமை இரவு புறப்படுவதால் வெளியூர் நண்பர்கள் வீட்டிலிருந்து தயாராகவே வந்துவிட்டார்கள், மாலை 5 மணிக்கு கல்லூரி முடிந்ததும் இரவு வரை பொழுபோவதற்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டார்கள், எங்கள் நண்பர்கள் குழுவிற்கு சில நல்ல பழக்கம் இருந்தது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாதத்தில் இருமுறையாவது அவசியம் சென்று விடுவோம், அன்றும் அவ்வாறே திட்டமிட்டார்கள், இவர்களுடன் சேர்ந்து குற்றாலம்தான் போகமுடியவில்லை சிறிது நேரம் கோவிலுக்காவது போவோமென்று, சோகமும் சோர்வும் கலந்து உடன் சென்றேன்.
வெளிவாசலின் உள்ளே நுழைந்ததும், ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பதால் மிக மிக அதிகமான கூட்டம், நீண்ட வரிசை நிற்கிறது வரிசையிலும் பயங்கர நெரிசல் வேறு, நாங்களும் வரிசையில் சேர்ந்துகொண்டோம் வரிசை மெதுவாக நகர்கிறது, காய்ச்சல் சிலநாட்களில் சரியாக வேண்டுமென்று வேண்டிக்கொண்டே, எனக்கு தெரிந்த 4 வரி அம்மன் பாடல்களை மனதிற்குள் பாடிக்கொண்டே செல்கிறேன், கூட்ட வரிசையில் எனக்கு வியர்த்துகொட்டுகிறது , 6 மணிக்கு உள்ளே நுழைந்தோம் மீனாட்சி அம்மன் அருகில்ல செல்ல இரவு 7.40 ஆகிவிட்டது நாங்கள் அம்மன் அருகில் வரும்போது இரவு பூஜைக்காக சன்னதியில் திரைபோட்டுவிட்டார்கள், கால்கள் வலித்தன,அரைமணி நேரம் பொறுமையாக நின்று அபிசேகம் முடிந்து, திரை நீக்கி தீபஆராதனைகள் பார்த்து , சுவாமி சன்னதி சென்று தரிசனம் செய்து பொற்றாமை குளத்தின் கரையில் அமர்ந்தபோது இரவு 9 மணி ஆகியிருந்தது.

தெப்பக்கரையில் அமர்ந்தபோது என்னால் ஒரு வித்தியாசத்தினை உணரமுடிந்தது, என் உடல் குளிர்ந்து இருந்தது கடந்த 3 மணி நேரத்திற்கு முன் இருந்த என் காய்ச்சல் இப்பொழுது முழுதாக இல்லாமல் போனது, அந்த சந்தோசமே புதிய உற்சாகத்தை தந்தது, பொறுமையாக கால்கடுக்க காத்திருந்து மனம் ஒன்றி பிரார்தித்த பலன் என்று நினைத்துக்கொண்டேன், உற்சாகமாக சேர்ந்துகொண்டேன் குற்றாலக் குழுவில். என் நண்பர்களே ஆச்சர்யபட்டார்கள், இரு நாட்கள் சந்தோசமாக கழிந்தன,
அந்த சம்பவத்திற்கு பிறகு எந்த கோவிலில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சலித்துக்கொள்ளாமல் பொறுமையாக இருந்து தரிசிக்கும் ஒரு பக்குவம் வந்துவிட்டது! ஒவ்வொருவரும் இதுபோல் வெவ்வேறு விதத்தில் இறையருளை உணர்ந்திருக்கிறார்கள், இறை நம்பிக்கையில் உறுதியாகவும் உண்மையாகவும் இருங்கள், உங்கள் நேர்மையான பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும்!