Monday, November 05, 2012

வீடு! - படக்கவிதை
வயல்களை அழித்து
வீட்டடி நிலமாக்கி
!
 ஆறுகளை தோண்டி
வீடு கட்ட மணல் அள்ளி!

மலைகளை உடைத்து
ஜல்லி கற்களாக்கி!

நிலங்களை குடைந்து
சுண்ணாம்பில் சிமிண்டெடுத்து!

சுரங்கங்களில் சுரண்டிய‌
தாதுக்களில் கம்பியெடுத்து!

மரங்களை கொன்று!
நிலை கதவு, ஜன்னல் செய்து!

இயற்கை வளங்களை
கொள்ளையடித்து உருவாகிய வீட்டை

சிறிதும் தயக்கமின்றி
கூறிக்கொள்கிறேன்
இது  "என் வீடு" என...!

 

             

நமது கவலைகளும், கோரிக்கைகளும்.


தருமி அவர்கள் பதிவிலிருந்து
http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html

*
 இப்பதிவில் நான் எழுதியுள்ளவை எல்லோருக்கும் சம்மதமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு வேளை ஏதேனும் இன்னும் மாற்ற வேண்டுமாயின் இன்று இரவுக்குள் எனக்குத் தெரியப்படுத்தினால் மாற்றி விடுகிறேன். அதன் பின்பு, நாளை காலையிலிருந்து இப்பதிவை அடுத்த இரு நாட்களுக்குள் தங்கள் பதிவுகளாக பலரும் இட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

*

 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12) அத்வானி கூறியுள்ளார்.


*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

Wednesday, August 08, 2012

மழலை கவிதைகள் 2 - படக்கவிதை
இரவுநேர
இரயில் பயணத்திலும்
இயற்கையை 
ரசிக்க முடிகிறது!
எதிர் இருக்கை
குழந்தைகளால்!

*****************************

வராமல் 
சோறு ஊட்டும்
 பூச்சாண்டியும்...

வந்து
சோறு ஊட்டும் 
நிலாவும்...

காற்றிலேயே 
கவர்ந்து செல்கின்றனர்
குழந்தைகளின் முத்தங்களை!

*****************************

தூங்கும்பொழுது
சிரிக்கின்ற‌ குழந்தைகள்
கடவுளுடன் பேசுகின்றவாம்!
கபடமற்ற 
சிரிப்பிருக்கும் இடங்களில்
கடவுள் இருப்பது சாத்தியம்தான்!

Tuesday, July 10, 2012

ஆனந்த விகடனின் வலையோசையில் என் வலைபதிவு!


 "ஆனந்தவிகடனின் இணைப்பு புத்தகமான என் விகடனில்,  வலைபதிவில் எழுதி வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக "வலையோசை"என்ற பகுதியில் ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு வலைபதிவை அறிமுகப்படுத்திவருகிறார்கள்,

                                         கடந்த வார (04.07.2012) ஆனந்தவிகடனில் தென்மாவட்டங்களுக்குகான மதுரை பதிப்பு என்விகடனில் வலையோசை பக்கத்தில் எனது வலை பதிவை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்! இதன் வழியாக நூற்றுக்கணக்கானவர்களை சென்றடைந்த என் எழுத்துக்களை  ஆயிரக்கணக்கானோர்  படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது, அதற்கு காரணமாக இருந்து, எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை என் எழுத்துக்களை படித்தும் &பாராட்டியும் ஊக்குவித்த  அனைத்து நண்பர்களுக்கும்,   என் வலை பதிவினை அறிமுகப்படுத்தி வெளியிட்ட‌ஆனந்த விகடன் குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

(கடந்த வாரம் எழுத வேண்டிய பதிவு இது பணிச்சூழல் காரணமாக தாமதமாகிவிட்டது)

Monday, June 25, 2012

கவிதைகளாகவும் இருக்கலாம் 4 - கவிதைகள்


சர்க்கரை வியாதி
அன்று
குழந்தையில்
இனிப்பு
அதிகம் சாப்பிடாதே! என
அம்மா
அன்புடன் சொன்னபோது
கேட்காத மனம்!

இன்று
முதுமையில்
இனிப்பை
தொட்டுகூட பார்ககாதிங்க! என‌
மருத்துவர் மிரட்டி
சொல்லும்போது கேட்கிறது!


*******************************பழிக்குப்பழி!
அன்பளிப்பாக கிடைத்த‌
அரிய புத்த‌கமொன்று
கடித்து சிதைக்கப்பட்டிருந்தது
என் வீட்டு எலிகளால்!
கொலைவெறி கோபத்தில்
வீடெங்கும் தேடியதில்
கிடைத்ததென்னவோ
புதிதாய் பிறந்த 
சில கண்திறவா குட்டிகள்தான்!


வீதியில் எடுத்தெறிந்ததும்
தூக்கிச்சென்றன சில காகங்கள்
எலிகளின் எண்ணிக்கையை
குறைத்துவிட்டதாக எண்ணி
கோபம் தணிந்தேன்!
அடுத்த சில நாட்களில்
கடித்து குதறப்பட்டிருந்தன‌
அம்மாவின் 
விலை உயர்ந்த 
பட்டுப்புடவைகள்!

*******************************

Monday, June 18, 2012

உன் ரசிகன் - காதல் கவிதைகள்


 யார் நீ?

தூரத்தில் இருக்கும்
சூரியன்தான்
நட்சத்திரமாம்!
அருகில் இருக்கும்
நட்சத்திரம்தான்
சூரியானாம்!

உருவத்தால்
எனக்கு
தூரத்திலிருந்தாலும்
உள்ளத்தால்
என்
அருகிலிருக்கும் நீ,
சூரியனா? நட்சத்திரமா?

வேகத்தடை!
விரைந்து செல்லும்
என்
வாகனத்திற்கு!
சாலைக்கு வெளியே
ஒரு வேகத்தடையாய்,
உன்
பெயர் கொண்ட‌
கடையொன்றின்
விளம்பர பலகை!


ரசிகன்
அம்மன் கோவில்
நாய்க்குட்டி
சூரிய உதயம்
மலர்ந்த பூக்கள்
குறுக்கெழுத்துப்போட்டி
குழந்தைகளின் முத்தம்
குட்டி கவிதைகள்!
ஜோடிப் பறவைகள்!
தன்னம்பிக்கை புத்தகங்கள்
வெனிலா ஐஸ்கிரீம்
வண்ணக் கோலங்கள்
வாழ்த்துஅட்டை சேகரிப்பு
மொட்டைமாடி நட்சத்திரங்கள்
நிலா வெளிச்சத்தில் உணவு!

மழைபெய்து முடித்த‌தும்
மாச‌ற்ற‌ காற்று!
அழுது தீர்த்த‌தும்
அமைதியாகும் ம‌ன‌சு!
இமைமூடி ர‌சிக்கும்
இர‌வுநேர 
மெல்லிசைப்பாட‌ல்க‌ள்!" என‌
உன‌க்கு பிடித்த‌
எல்லாவ‌ற்றையும்
ர‌சிக்க‌த் தொட‌ங்கிவிட்டேன்!
உன்னை என‌க்கு
பிடித்த‌ நாளிலிருந்து!

Wednesday, May 16, 2012

திருமண அழைப்பிதழ்

வலைபதிவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
வரும் மே 25 ல் எனது திருமணம் நடைபெற இருக்கிறது
அனைவரும் அவசியம் வருகை தந்து வாழ்த்தி சிறப்பிக்கவும்!வருகை தரும் நண்பர்கள், தங்கும் வசதி ஏற்பாடுகள் செய்ய முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும்!

9787777468
9092267222

நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்

Tuesday, May 15, 2012

குழப்ப கவிதைகள்!

நிறைய பேரின்
மனதில் இருக்கும்!
நிறைய பேரில்
ஒருவராய் இருப்பது
நட்பு!
ஒருவர் மனதில்
மட்டும் இருக்கும்!
ஒருவராய் இருப்பது
காதல்!


********************

எழுதுவதெல்லாம்
அனுபவமென்றால்
எல்லா மனிதர்களும்
கவிஞர்களே!

எழுதுவதெல்லாம்
கற்பனையென்றால்
எந்தக்கவிஞனும்
மனிதனல்ல! 


மனிதர்களாய் இருக்கும்
கவிஞர்களைப் போல‌
அனுபவமாய் இருக்கும்
கற்பனையே கவிதை!


**********************

பெண்களை
புரிந்துகொள்ள முடியாது
என்ற உண்மையை
புரிந்து கொண்டவர்கள் தான்!
பெண்களை!
உண்மையிலேயே!
புரிந்து கொண்டவர்கள்


            
Friday, April 27, 2012

என் ரயிலில் நீ! - காதல் கவிதைகள்


சிறுவனாய் பயணித்த
முதல் ரயில் பயணத்தின்
உற்சாகத்தை
மீண்டும் உணர்ந்தேன்
உன்னுடனான
முதல் ரயில்பயணத்தில்...

******************************


சில நேரங்களில்
அருகருகே அமர
இடம் கிடைத்தாலும்
எதிரே அமர்ந்து
பயணிப்பதையே விரும்புகிறேன்
உன்னை பார்த்துக்கொண்டே
பயணிப்பதால்!

*********************************
உன்னை வழியனுப்ப
வரும்போதெல்லாம்
உனக்கான ரயிலில்
நீ விடைபெற்றுச்
சென்ற பின்னும்
ரயில் நிலையத்தில்
சிறிதுநேரம் அமர்ந்துவிட்டே
வீடு திரும்புகிறேன்
அங்கு நிறைந்திருக்கும்
உன் நினைவுகளை
சுவாசிப்பதால்!


*********************************

 


 

Wednesday, April 11, 2012

எழுதப்படாத நடைமுறைகள்! - கவிதை மாதிரி1
ஒவ்வொரு ரயில்பயணத்திலும் தவறாமல் கிடைத்துவிடுகின்றன புதிதாய் சில அறிமுகங்கள்

2
ஊருக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகளில் எடைகுறைந்த பையே(bag) மனைவியிடம் இருக்கிறது!

3
பேருந்து பயணத்தின் மூன்றுநபர் இருக்கையில் மூன்றாவதாக வரும் நபருக்கு, நடுவிலேயே இடமளிக்கப்படுகிறது!

4
குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போதுதான் உணரத்துவங்குகிறோம் நமக்கு தெரிந்தது குறைவு தெரியாதது அதிகம் என்பதை!

5)

நேரம் கிடைக்கும்போது பேசிக்கொள்கிறார்கள் நண்பர்கள், பேசுவதற்காகவே நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் காதலர்கள்!
                                      
                                              --நம்பிக்கைபாண்டியன்

Friday, March 23, 2012

கவிதைகளாகவும் இருக்கலாம்! 3 - படக்கவிதைகள்

வலியுணராதவர்கள்
நள்ளிரவில் 
அழும் குழந்தையை
தொந்தரவாக 
நினைக்கும் தம்பதிகள்
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை
குழந்தையற்றவர்களின் 
மனவலியை!

நட்பு
பத்திரிக்கை 
கொடுக்கப்படாத 
திருமணத்திற்கும்
நேரில் சென்று
வாழ்த்தும் குணம் 
நட்பில் மட்டுமே
சாத்தியமாகிறது!

ஏக்கம்
தினமும்
எங்கள் ஊரைக்

கடந்துதான் செல்கின்றன!
ஒருநாள் கூட‌
நின்றதேயில்லை
இந்த விமானங்கள்! 


Thursday, March 08, 2012

உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம்! 1- தொடர் பதிவு

                                                                        ஒரு மனிதன் அதிக நாட்கள் தொடர்ந்து கவலையின்றி மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் என்று பார்த்தால், நிச்சயம் அது பள்ளிப்பருவத்து நாட்களாத்தான் இருக்கும்! பலருடைய நினைவுகளை ஏற்றிக்கொண்டு வலைபதிவுகளில்  தொடர்பதிவாக உற்சாகமாக சுற்றிவரும் இந்த பள்ளிப்பேருந்து வசந்த மண்டபம்  மகேந்திரன் அவர்களால் இங்கு வந்து என் பதிவில் நின்று சில நினைவுகளை ஏற்றிச்செல்கிறது!

பால் வாடி!
மூன்று வயது முடிந்து நான்காவது வயது தொடங்கும் போது சத்துணவுகூடம் என்று சொல்லப்படும் பால்வாடியில் சேர்த்து உள்ளே தள்ளி கதவை பூட்டிவிட்டார்கள்! கதறி அழுதுகொண்டிருப்பேன், என்னைபோல் இன்னும் சிலர் அழுதுகொண்டிருப்பார்கள்! அழுவதும் தூங்குவதும்தான் வேலை! பிறகு அது பழகிவிட்டது!அ.ஆ.இ.ஈ.... மற்றும் ABCD  யை அடையாளம் காட்ட கற்றுக்கொண்ட நாட்கள் அவை!

UKG
ஒரு வருடம் மட்டும் ஆங்கில வழி தனியார் பள்ளியில் யுகேஜி சேர்த்தார்கள், கூண்டு அடைக்கப்பட்ட சைக்கிள் ரிக்க்ஷாவில்தான் பள்ளிப்பயனம்! அழாமல் பள்ளிக்கு செல்ல தினமும் காலை ஒரு தேன் மிட்டாய் பரிசளிக்கப்படும்! ஒரே ஒரு சிலேடு, உடைந்த சிலேட்டுக்குச்சிகள், ஒரு குட்டி டிபன் பாக்ஸ் , அதற்கு ஒரு மஞ்சள் பையுடன் ப்ள்ளிசெல்வோம், 1,2,3 மற்றும் தமிழ் ஆங்கில வார்த்தைகள் எழுத கற்றுக்கொண்ட நாட்கள் அவை!

ஒண்ணாப்பு
வீட்டிற்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப்ப பள்ளியில் செர்க்க போகும்போது, கையால் தலையை சுற்றி காதை தொட சொன்னார்கள் எனக்கு எட்டவில்லை! சேர்க்க முடியாது என்று சொல்லிவிட, வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு தனியார் தமிழ் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்! மாலை4 மனிக்கு பள்ளிவிடும். 3.50க்கு உமாராணி என்ற பெயருடைய பேருந்து பள்ளியை கடந்து செல்லும், அந்த பேருந்தின் சத்தம் கேட்டதுமே மனதில் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்! மணி அடித்த நொடியில் அத்தனை பேரும் ஹே.... என் கத்திக்கொண்டே பள்ளியை விட்டு மகிழ்ச்சியோடு ஓடிவருவோம்! சில நாட்களில் அப்படி ஓடிவரும்போது ஒருவன் தடுமாறி கீழே விழ அடுத்தடுத்து வருபவர்களும் விழுவார்கள்!சிரிப்பாக இருக்கும். எழுத்துக்களை அழகாக்கும் ரெண்டு கோடு மற்றும் நான்கு கோடு நோட்டுகளுடன் பள்ளிசெல்வோம். வீட்டுப்பாடம் கொடுக்கப்படும்! கூட்டல் கழித்தல் கணக்குகளும், தமிழ் ஆங்கில வார்த்தைகளை வரிகளாக்குவதையும் கற்ற நாட்கள் அவை!

ரெண்டாப்பு!
அதுவரை சுதந்திரமாக இருந்தவர்கள், படிப்பு ,கண்டிப்பான வீட்டுப்பாடம், தேர்வு போன்ற வளையங்களுக்குள்  கொண்டுவரப்பட்ட வகுப்பு அது!  வகுப்பு ஆசிரியை பாப்பா டீச்சர், வீட்டிலிருந்து கொண்டு செல்லும் உணவினை நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம், பள்ளிக்கு செல்ல வீட்டில்  மிட்டாய்களுக்கு பதிலாக காசு(5&10 பைசா)  வாங்க ஆரம்பித்த வகுப்பு இது! பள்ளிக்கு வெளியில் தின்பண்டம் விற்பவர்களிடம் பிடித்தை வாங்கி சாப்பிடுவோம்! நீண்ட நேரம் சாப்பிடும் "கமர்கட்" அதிகபேரால் வாங்கப்படும். பள்ளி ஆண்டுவிழாவில் பாட்டுப்பாடும் குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள், "அதோ அந்த பறவை போல வாழவேண்டும்...." பாடல் பாடியது நன்றாக நினைவில் இருக்கிறது! இரண்டு கோடு நீட்ட்ய்கள் மறைந்து ஒற்றைக்கோடு போட்ட நோட்டுகளில் எழுத ஆரம்பித்த வகுப்பு இது!

மூணாப்பு!

மீண்டும் வீட்டருகில் உள்ள அரசு பள்ளிக்கு வந்துவிட்டேன் அன்று சேர்க்காதவர்கள் இப்போது சேர்த்துக்கொண்டார்கள்! வகுப்பு ஆசிரியை சிறுமணி டீச்சர்! கடிகாரத்தில் மணி பார்ப்பது எப்படி என்று சொல்லி கொடுத்தார்கள், தினமும் மதியம் பள்ளி சத்துணவுதான், முதலில் பிடிக்கவிட்டாலும் பிறகு பிடித்துவிட்டது! சிறிய ரக வாடகை சைக்கிள் எடுத்து பக்கத்து வீட்டு அண்ணன்கள் உதவியுடன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். ரீஜஸ் & உணவு இடைவேளையில் தின்று எறிப்பட்ட மக்காச்சோள கட்டையில் கால்பந்து விளையாடுவோம்! வித்தியாசமான பட்டபெயர்களுடன் நண்பர்கள் இருந்தார்கள், அதில் ஒருவன் பெயர் "பாட்டன்" ,அவன் தலை முடி நரைத்திருப்பதால் அந்த பெயர்! முதல் பதினாறு வாய்பாடுகளை மனப்பாடம் செய்த வகுப்பு இது!

நாலாப்பு!

வகுப்பு ஆசிரியை வீரம்மாள் டீச்சர், அந்த நேரத்தில் அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லாததால்! அடிகடி மெடிக்கல் லீவ் எடுத்துவிடுவார்கள், அதனால் பெரும் பான்மையான நாட்கலிள் ஆசிரியர் இல்லாமலே அமர்ந்திருந்தோம், பக்கத்து வகுப்பு ஆசிரியர் வந்து ஒவ்வொருவராக எழுந்து ஒவ்வொரு பக்கமாக வசியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்!  சத்தம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அமைதியாக இருக்கசொல்லி பேசுபவர்களின் பெயர்கள் கரும்பலகையில் எழுதச்சொல்லப்படும்! கடைசியில் அதில் உள்ள பெயர்களுக்கெல்லாம் பிரம்படி கொடுக்கப்படும்! அந்த பட்டியலில் நான் அடிக்கடி வந்துகொண்டிருந்ததால், பேசுபவர்களின் பெயரெழுதும் பணியை என்னிடமே கொடுத்தது சுவாரஸ்யமான நிகழ்வு! மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அடிக்கடி சண்டை வரும். "குண்டு சார்" என்ற பெயரில் ஒரு ஆசிரியர் இருந்தார், அற்புதமான மனிதர். வகுப்பில் யாரையில் அடிக்க மாட்டார், பொறுமையாக எதையும் எடுத்துச்சொல்வார், சற்று குண்டாக இருப்பார், அவரை மாணவர்களே, "குண்டுசார், வணக்கம் சார்" என்றுதான் அழைப்போம், கோபிக்க மாட்டார் அவர் டீக்கடையில் இருக்கும்போது  மாணவர்கள் யாரைபார்த்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் டீ வங்கி தந்துவிடுவார்! வித்தியாசமான பட்டப்பெயரில் "கள்ளுக்கடை" என்று ஒருவன் இருந்தான், அவன் அப்பா சாரயக்கடையில் வேளை பார்ப்பதால் அவனுக்கு இந்த பெயர்! விடுமுறை என்றால் ஆச்சி ஊருக்கும், பெரியப்பா ,அத்தைகளின் ஊருக்கும் செல்ல அடம்பிடிப்பேன் வீட்டில் உடனே வரமாட்டார்கள் வீட்டில் அனுமதியும் காசும் மட்டும் வாங்கிகொண்டு நானாக பஸ் ஏறிச்செல்ல பழகிக்கொண்ட வகுப்பு இது!


அஞ்சாப்பு!
வகுப்பு ஆசிரியை சரஸ்வதி டீச்சர், அதிரடியான ஆசிரியை சிறு தவறு என்றாலும் அடிதான் பேச்சுக்கே இடமில்லை! நன்றாக சொல்லி கொடுப்பார்! அடிக்கடி தேர்வு வைப்பார் (கோடிட்ட இடம் நிரப்புதல்,சரியா தவறா,பொருத்துக) மாணவர்களின்  விடைகளை
மாணவிகளிடமும், மாணவிகளின் விடைகளை மாணவ்ர்களிடமும் மாற்றி கொடுக்க சொல்லி, சரியான விடையை அவர் சொல்லி திருத்த சொல்லுவார். அப்போது சில பெண்களிடம் தங்கள் விடைதாள் களை கொடுப்பதற்கு பெரிய போட்டியே  நடக்கும், சில மாணவர்களிடம் எந்த பெண்ணும் விடைதாள்களை கொடுக்க மாட்டார்கள், ஒரே காமெடியாக இருக்கும்! இந்தவகுப்பில் படிக்கும்போதுதான் எங்கள் ஊர்பகுதியில் கரகாட்டக்காரன் பட சூட்டிங் நடந்தது! 11.30 மணிக்கு ரீஜஸ் இடைவேளையில் சூட்டிங் பார்க்கச்சென்றோம், "குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா..." பாடல் எடுத்துக்கொண்டிருந்தார்கள், கனகாவும் அவரின் அம்மா தேவிகாவும் காரில் அமர்ந்து இருந்தார்கள், கவுண்டமனி செந்தில்,&குரூப்ஸ் சுற்றி அமர்ந்து ரம்மி விளையாடிக்கொண்டிருந்தார்கள்! ராமராஜன் பட்டு சட்டை, லிப்ஸ்டிக்லாம் போட்டு சோகமாக மாட்டுவண்டியில் அமர்ந்திருந்தார்!  ஒரே வரிகளை மீண்டும் மீண்டும், போட்டு பல டேக்குகள் எடுப்பது ஆச்சர்யமாக இருந்தது! பள்ளிக்கு திரும்பும்போது மணி 3 ஆகிவிட்டது, எங்களுக்கு அன்று விழுந்த பிரம்படி அந்தபாடலை டி.வியில் பார்க்கும்போது இப்போதும் நினைவுக்கு வரும்!, பள்ளியில் உள்ள அனைவரையும் ஒரு முதலை படத்திற்கு அழைத்துச்சென்ற நியாபகம் இருக்கிறது! பட்டப்பெயரில் ஒருவன் பெயர் "குறத்தி" , மிகவும் அப்பாவி பையன், ஏன் வைத்தார்கள் என்றே காரணம் தெரியவில்லை! சிலேடுகளும் கோடு போட்ட நோட்டுகளும்,  எங்களிடமிருந்து விடைபெற்ற வகுப்பு இது!

ஆறாப்பு!
(அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி!-வாடிப்பட்டி)

சேர்ந்து படித்தபோது சண்டை போட்டுக்கொண்டிருந்த பெண்களின் முக்கியத்துவம், அவர்கள் இல்லாததின் எதோ ஒரு நட்பின் வெறுமை, ஆண்கள் பள்ளியில் சேர்ந்தபோதுதான்  புரிந்தது! பெண்கள் பள்ளியை தாண்டிதான் எங்கள் பள்ளிக்கு செல்வோம், அவ்வப்போது பார்த்து சிரித்துக்கொள்வோம், பேச முயற்சித்தாலும் பேசமாட்டார்கள் பாடங்கள் சற்று கடுமையாக இருந்த்துபோல் தோன்றியது , குறிப்பாக கணிதம்! வகுப்பு ஆசியரிடமே(மேரி சரோஜா டீச்சர்)  டியூசன் செல்ல ஆரம்பித்தோம், எங்கள் வகுப்பறை நிழல்நிறைந்த மரத்தடிதான், வெயில் நகர நகர நாங்களும் நகர்ந்து அமர்ந்துகொள்வோம், உடற்பயிற்ச்சி வகுப்பு, கைத்தறி வகுப்பு போன்றவைகள் வாரத்தில் இரண்டு வகுப்பு மட்டும் இருக்கும், கைத்தறி ஆசிரியர் உணர்ச்சிப்பூர்வமாக சவுண்டு எபெக்டுகளுடன் கதை சொல்லுவார்! pt வகுப்புகளுக்கு கண்டிப்பாக பனியன் அணிந்து செல்லவேண்டும் இல்லையென்றால் தண்டனை கிடைக்கும்( பள்ளி மைதானத்தை 3முறை சுற்றிவருவது), அடிக்கடி விளையாடுவது ரப்பர் பந்துகளில் கால்பந்து விளையாட்டுதான்! பள்ளி முடிந்துவீட்டுக்கு வந்ததும் ஏதாவது சாப்பிடவேண்டும் போல் தோன்றும்! ரேங்க் கார்டுகளும், அப்பவின் கையெழுத்துகளும் முக்கித்துவம் பெற ஆரம்பித்தன! வகிப்பில் இருக்கும் 40 மாணவர்களும் முதல் 8 ரேங்குகள் பெறுவர்கள் தலைமையில் 5 மாணவர்கள் கொண்ட குழுவாக பிரித்து, அந்த குரூப்பில் யார் சொன்ன செய்தாலும் அந்த குரூப் லீடருக்குதான் தலைவலி, அவர்களை படிக்க வைப்பதும் அவர்களின் பொறுப்பே! நானும் அதில் ஒரு குரூப் லீடராக வந்தது மகிழ்ச்சியான விசயம்!                    சுதந்திர தினம், குடியரசு தினத்தில் நண்பர்கள் எல்லோரும், அருகில் உள்ள பெருமாள் மலைக்குச்செல்வோம்!  வித்தியாசமான பட்டப்பெயர்களில் உள்ளவர்களில் ஒருவரன் "உலகப் பிராடு" இவனைப்போல் யாரும் பொய்சொல்ல முடியாது அப்படி நம்பும்படி சொல்லுவன்அவன் சொன்ன பொய்களில் மிகபிரபலமானது " எங்கப்ப ஏரோ பிளைனை ஒத்த கையில ஓட்டுவார்" " தென்ன மரத்தில் இளநீர் பறிக்க எங்க மாமா மரத்துல ஓங்கி உதைப்பார், எல்லா இளநீரும் கீழே விழுந்துவிடும்!  என்பான். ( அன்றைய சூழ்நிலையில் இதை நாங்கள் நம்புவோம்) , சேமிக்கும் பழக்கம் அவசியம் என பள்ளியில் சஞ்சாய்கா திட்டத்திலும் சேர்த்து விட்டார்கள்! பள்ளிக்கு செல்லும் போது குட்டிநாய் ஒன்று தெருவோரத்தில் விளையாடிக்கொண்டி என் பின்னாடியே வந்தது, அதன் அருகில் சென்று கையில் பிடிக்க நினைத்தபோது விரலில் கடித்துவிட்டது, மதுரை பெரிய ஆஸ்பத்தியில் 12 நாட்கள் தினமும் தொப்புளை சுற்றி ஊசி போட்டது மறக்கமுடியதது! நண்பர்களுடன் சேர்ந்து  ஆறு, கிணறுகளில் நீச்சல் கற்றுக்கொண்ட வகுப்பு இது!
குறிப்பு!
பெரியபதிவாக தெரிந்ததால் இரண்டாக பிரித்துவிட்டேன் நாளை இன்னொரு பகுதி வரும்!

Sunday, March 04, 2012

சில பெண்ணியவாதிகள் - கவிதை

ஒழுக்க
குணங்களுக்கு பெயர்
அடிமைத்தனம்!

ஆபாசமின்றி
ஆடை உடுத்தச் சொன்னால்
ஆணாதிக்கம்!

அருவருப்பின்றி
கவிதை எழுதச் சொன்னால்
அடக்குமுறை!

சட்டங்கள்
பாதுகாப்பதற்கல்ல
பழிவாங்குவதற்கே!

அர்த்தங்கள்
மாறிவருகின்றன
சில பெண்ணியவாதிகளின்
அகராதிகளில்!

குறிப்பு: - பெண்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் பல சிறந்த பெண்ணியவாதிகளை பெரிதும் மதிக்கிறேன், ஆனால் சிலரோ, சில பெண்களின் அர்த்தமற்ற ஆணவத்தையும், தவறுகளையும் பெண்ணியம் என்ற போர்வைக்குள் மறைக்கின்றனர் (நியாயப்படுத்துகின்றனர்), அதில் எனக்கு உடன்பாடு இல்லை அந்த சிலருக்காக எழுதப்பட்டதே இந்த கவிதை!Wednesday, February 29, 2012

உனக்கான கவிதைகள்!


நீ
சாலையோரத்தில்
ஒதுங்கி நிற்கும்போது
அடர்த்தியாக
பெய்துகொண்டிருந்த மழை
நடக்க ஆரம்பித்ததும்
மாறிவிடுகிறது
சிறு தூரலாக...

**************************

உன் ஊரின்
பெயர் தாங்கி
என்னைக்
கடந்து செல்லும்
ஒவ்வொரு
பேருந்தின் பின்னாலும்
ஓடிக்கொண்டிருக்கிறது
என் மனது!

**************************

நான் எழுதும்
ஒவ்வொரு 
கவிதைக்கும்
ஒரு முத்தம் என்கிறாய்
என் டைரி
நிரம்பி வழிகிறது!

**************************Friday, February 24, 2012

அனுமதியற்றவர்கள் - கவிதை

எறும்பு எலி,
பாம்பு  பூரான்
தெருநாய், என
தன் அனுமதியின்றி
வீட்டிற்குள் நுழையும்
எந்த  ஒரு உயிரையும்
அடித்து விரட்டியோ, கொன்றோ
வெளியேற்றுகிறான் மனிதன்!

காடுகளை அழித்து
வயல்களை நகராக்கி
குடியேறும் மனிதர்களை
என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக்கொண்டிருக்கின்றன
விலங்குகளும் பறவைகளும் !


Wednesday, February 15, 2012

மரண குறிப்புகள்! - கவிதை

என்மரணம்
நிகழந்தது தெரிந்ததும்,
எனைப்பற்றி
ஒவ்வொருவரும்
பேசிக்கொண்டிருந்ததையெல்லாம்
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் கடவுள்!
எனக்கான இடம்
சொர்கத்திலா? நரகத்திலா?
என்பதை தீர்மானிக்க!
                     

Saturday, February 11, 2012

உனக்கு பிடித்ததும் எனக்கு பிடித்ததும்! - கவிதை


தொட்டிலில்
தூங்கிக் கொண்டிருந்த‌
நம் அன்புக் குழந்தையின்
முதல் பிறந்த நாளுக்கு!
ஆடை வாங்குவது பற்றி!
கட்டிலில் அமர்ந்தபடி
பேசிக்கொண்டிருந்தோம்!

 
முதல் பிறந்தநாள்!
வாழ்க்கை முழுவதும்
மங்களகரமாய் இருக்க!
உனக்கு பிடித்த‌
மஞ்சள் நிறத்தில்
ஆடை எடுக்கலாம்!
என்கிறாய் நீ,

முதல் பிறந்தநாள்
வாழ்க்கை முழுவதும்
பசுமையானதாக இருக்க!
எனக்கு பிடித்த
பச்சை நிறத்தில்
ஆடை எடுக்கலாம்!
என்கிறேன் நான்,

இருவரும்
சொன்னதையே
சொல்லிக்கொண்டிருக்க!
பேச்சு விவாதமாகி!
விவாதம் சண்டையாகி!
தலையணைகளால்
தாக்கிக்கொண்டோம்!
உன் இடை பற்றி
இழுத்தவுடன்!
என் தோள் பற்றி
சாய்ந்து கொண்டாய்.........
........................................
............................!

கூடி களைத்த பின்,
முத்தமிட்டபடி,
உனக்கு பிடித்த
மஞ்சள் நிறத்திலேயே
ஆடை எடுக்கலாம்!
என்கிறேன் நான்,
இல்லை! இல்லை!
உங்களுக்கு பிடித்த‌
பச்சை நிறத்திலேயே
ஆடை எடுக்கலாம்!
என்கிறாய் நீ!
ஆரம்பித்தோம்
அடுத்த சண்டையை....
................................!


மறுநாள் மாலை
வாங்கி வந்த‌ ஆடையில்!
மஞ்சளும் பச்சையும்!
சமமாய் கலந்திருந்தது!
நம்மைப் போல்!Thursday, February 09, 2012

மனைவியானவள்! - கவிதைகள்


தாமதமாகத் தொடங்கி
நீடித்துப் பெய்யும்
மரத்தடி மழையாகவே
உன் காதல்!


**************************

அவசியங்கள் எதுவுமற்று
அன்பால் எழுதப்பட்டதால்
நிபந்தனைகளின்றி நீடிக்கிறது
நம் இருவருக்கும் 
பொதுவிலான
கற்பெனும் நற்குணம்!


**********************************

*வலிமையான முத்தம்*


மகிழ்ச்சி
நிறைந்த நேரங்களில்,
ஆசையாக‌
உதடுகளில்
கொடுத்ததை விட! 

கவலை
மிகுந்த தருணங்களில்
ஆறுதலாக‌
நெற்றியில் கொடுத்தது
அதிகம் இனிக்குதடி!


******************************Sunday, February 05, 2012

வானத்தில் ஹைக்கூ - கவிதைகள்

1)
 மேகங்களில்
பொம்மை செய்து
விளையாடும் குழந்தை
காற்று!

     ******
2)
 காற்றில் கரையும்
பலவண்ண  கற்பூரம்
வானவில்!

    ******
3)
 கீழ்நோக்கி வளரும்
மழையின் வேர்கள்
வானத்தில் இருக்கிறது
மின்னலாக!

     ******
4)
 பதினெட்டு பட்டிக்கும்
ஒரே ஸ்பீக்கர்
இடி!Wednesday, February 01, 2012

தாய்மொழி - கவிதை

நேற்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
காலை மிதித்துவிட்டு
"SORRY" என்றவனிடம்
சண்டையிட்டு வந்த நான்!

இன்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
காலை மிதித்துவிட்டு
"மன்னிச்சுடுங்க " என்றவனிடம்
புன்னகைத்தபடி வருகிறேன்!
வார்த்தைளின்  வலிமை
மொழியில் இருக்கிறது‍...!

Friday, January 27, 2012

ம‌ழலை கவிதைகள்! - படக்கவிதை

அம்மாக்களுக்கான
 குழந்தைகளின் கவிதைகளும்
குழந்தைகளுக்கான 
அம்மாக்களின் கவிதைகளும்
முத்தங்களாலேயே
எழுதப்படுகின்றன!
Monday, January 23, 2012

ஹைக்கூ...! - படக்கவிதை (மீள்பதிவு)


1}

தினமும்
பருகினாலும்
திகட்டாத நீர்...
காதல்.....
******************************
2}

மனம் நிறைந்த
சிரிப்பில்
எல்லோரிடமும்
இருக்கிறது!
அழகு!...

*******************************
3}

மனம் ஒன்றிய
பிரார்த்தனைகள்
எளிதில் சாத்தியமாகிறது !
துன்பங்களால்..... 

*******************************