Tuesday, January 23, 2007

என்னை சுற்றி
(வார்த்தைகளில் கவனம் வேண்டும்)


ப‌ள்ளிவாழ்க்கை நினைவுக‌ள் எல்லோருக்குமே இனிமையான‌வை என்றுமே ப‌சுமையான‌வை, நான் ப‌த்தாம் வ‌குப்பு ப‌டித்துக்கொண்டிருந்த‌போது ஆசிரிய‌ர் சில‌ நாட்க‌ளில் வ‌குப்ப‌றைக்கு வெளியே ம‌ர‌நிழ‌லில் வ‌குப்பு எடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம், வகுப்ப‌றையை விட ம‌ர‌த்த‌டியில் எல்லோருமே அதிக சேட்டைக‌ள் செய்வோம்,"நாளை '5'வ‌து பாட‌ம் ப‌ரிட்சை வ‌ச்சுருக்ன‌ல‌ எல்லோரும் அமைதியா ப‌டிங்க‌டா!"என்று சொல்லிவிட்டுபுத்த‌க‌ம் படிப்ப‌தில், மூழ்கிவிட்டார்,

சில‌ர் உண்மையாவே ப‌டித்துக்கொண்டிருந்த‌ன‌ர்,சில‌ர் புத்த‌க‌த்தை பு‌ர‌ட்டிக்கொண்டு ப‌டிப்ப‌து போல‌ ந‌டித்துக்கொண்டே மெதுவான‌ குர‌லில் பேசிக்கொன்டிருந்தோம்,சில‌ர் த‌ரையில் ம‌ண்ணை கிள‌றி விளையாடிக்கொண்டிருந்த‌ன‌ர், இன்னும் சில‌ரோ அங்கும் இங்கும் ந‌ட‌ந்துசெல்லும் 11, 12 ம் வ‌குப்பு மாண‌விக‌ளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த‌ன‌ர்(10 வ‌குப்பு வ‌ரை மாண‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் ப‌டிக்கும் ப‌ள்ளி)

ப‌ள்ளி வாழ்க்கையின் சுவ‌ர‌ஸ்ய‌மான‌ விச‌ய‌ங்க‌‌ளில் ஒன்று ப‌ட்ட‌ப்பெய‌ர்கள், ஒவ்வொருவ‌னுக்கும் அவ‌னுடைய‌ தோற்ற‌ம், ப‌ழ‌க்க‌ங்க‌ள், குண‌ம் ஆகிய‌வற்றுக்கு ஏற்ற‌து போல‌ ப‌ட்ட‌ப்பெய‌ர்க‌ள் வைத்திருப்பார்க‌ள், சில‌ பெய‌ர்க‌ளை கேட்டாலே சிரிப்பு வ‌ந்துவிடும் ,அப்படி இருக்கும் ,சொன்னால் பெரிய பட்டியலே இடலாம், ஒருவ‌ரை ஒருவ‌ர் ப‌ட்ட‌ப்பெய்ர் சொல்லி அழைக்கும் போது ப‌ல‌ நெர‌ங்க‌ளில் அது சாதார‌ண‌மாக‌ எடுத்துக்கொண்டாலும் சில‌ நேர‌ங்க‌ளில் அது பெரிய‌ ச‌ண்டையாகிவிடும்,

அன்றும் இதே போல‌ வ‌குப்பில் ராஜா என்ப‌வ‌ன் ஒருவ‌னை ப‌ட்டப்பெய‌ர் சொல்லி அழைக்க‌ அது ச‌ண்டையாகிவிட்ட‌து இருவ‌ரும் ச‌ண்டையிட்டுகொண்ட‌ன‌ர் ஆசிரிய‌ர் புத்தகத்தில்(அரைத்தூக்கம்) மூழ்கி இருந்த‌தால் இதை‌ க‌வ‌னிக்க‌வில்லை, ச‌ண்டை பெரிதாகி விட்டது.
அவன் சண்டையிட்ட அதே ஆவேசத்துடன் எழுந்து ஆசிரிய‌ரிட‌ம்"" சார், ராஜா‌ என்ன‌ அடிச்சுக்கிட்டே இருக்கான் சார், அவன‌ முத‌ல்ல‌ அடிங்க‌ சார், அப்ப‌தான் சார் ஒழுங்கா இருப்பான்,ந‌ல்லா அடிங்க‌ சார் அவ‌னை!"" என்று ச‌த்த‌மாக‌ புகார் செய்தான், ஆசிரிய‌ர் அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் அருகே அழைத்தார்,
அருகே வந்ததும் புகார் சொன்ன‌வ‌னின் ச‌ட்டையை பிடித்து 'ப‌ளார்! ப‌ளார்!' என‌ க‌ன்ன‌த்தில் நாலு அறை கொடுத்துவிட்டு "ஏண்டா நான் என்ன‌ உன‌க்கு வ‌ச்ச‌ அடியாளா? நீ சொல்லுர‌வ‌ன‌ எல்லா‌ம் அடிகிற‌துக்கு, என்ன‌ நினைச்சுட்டு இருக்க மன‌சுல, ப‌ரிட்சைக்கு படிக்க‌ சொன்னா படிக்காம‌ சண்டையா போடுறீங்க‌!முட்டி போடுங்கடா ரெண்டு பேரும்"" என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்த‌க‌த்தில் முழ்கிவிட்டார்,
பாவம்அவன் புகார் சொல்லபோய் அடிவாங்கியதுதான் மிச்சம்,இதை இப்போதும் ந‌ண்ப‌ர்க‌ள் ஒன்று சேரும்போது சொல்லி சிரிப்போம்,அவ‌ன் அடிவாங்கிய‌த‌ற்கு கார‌ணம். அவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வார்த்தைக‌ளும், ஆவேசத்தில் அவ‌ன் அதை உச்ச‌ரித்த‌வித‌மும்தான், ஆசிரிய‌ர் அதை த‌வ‌றாக‌ புரிந்துகொண்டார், என‌வே எப்போதுமே, யாரிட‌ம் பேசுகிறோம்! என்ன பேசுகிறோம்!என்று சிந்திக்காமல், அவச‌ர‌மாக ஆவேசத்தில் த‌வ‌றான‌ வார்த்தைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தினால், அது ந‌ம்மை மேலும் சிக்க‌லில் ஆழ்த்திவிடும்!‌


சர்க்கரை வியாதி
அன்று
குழந்தையில்
இனிப்பு
அதிகம் சாப்பிடாதே!என
அம்மா
அன்புடன் சொன்னபோது
கேட்காத மனம்!
இன்று
முதுமையில்
இனிப்பை
தொட்டுகூட பார்ககாதிங்க! என‌
மருத்துவர் மிரட்டி
சொல்லும்போது கேட்கிறது!


2)
எப்படிதெரிந்த‌து,

காத‌லிக்கும் போது
க‌ண‌க்கின்றி செல‌வு செய்த‌ நான்
நீ சாப்பிட்டு எறிந்த‌
சாக்லேட் காகிதங்களை
எடுத்துவந்து
பாதுகாத்ததை பார்த்து
ஏளனமாய் சிரித்த‌
என் நண்பனுக்கு
எப்படிதெரிந்த‌து,
நீ எறிந்த‌து
என்னை என்றும்!
நான் பாதுகாத்தது
உன்னை நினைவுகளை என்றும்!

Monday, January 15, 2007

பொங்கட்டும் பொங்கல்!

தைத்திருநாளான தமிழர் பெருநாளில் இனிப்பான கரும்பையும்,பொங்கலையும் போல ,மகிழ்ச்சியும் , மன நிறைவும் பொங்கி வ‌ழிய ,மஞ்சளை போல மங்களகரமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள்

பொங்கட்டும் பொங்கல்!

பசியின்றி,வேலையின்றி
எல்லோரும் பள்ளிசெல்ல‌
குழந்தைகள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

அடிமைத்தனம் அழித்துவிட்டு
பண்பாடு பாதுகாக்க‌
பெண்களின் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

போதைதரும் பாதைநீங்கி
பொறுப்புடனே உழைத்துயர‌
இளைஞர்கள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

நன்மையான வ‌ழிசொல்லி
துன்பத்தில் துணைநிற்கும்
நண்பர்கள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

இறுதிவரை பிரிவின்றி
இன்பமாய் இணைந்துவாழ‌
தம்பதிகள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

உழைப்பின் விளைச்சலுக்கு
உயர்வான விலைகிடைக்க‌
உழவர்களின் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்

ஊழலின்றி உண்மையாக‌
நேர்மையுடன் பணியாற்ற‌
அதிகாரிகள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

சாதி,மத பேதமின்றி
சமத்துவமாய் இணைந்துவாழ!
பொதுமக்கள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

துன்பத்தில் அறிவுயர்ந்து
இன்பத்தில் அன்புயர்ந்து
எல்லோரும் நல்லோராக‌
பொங்கட்டும் பொங்கல்!
~நம்பிக்கை பாண்டியன்
என்னை சுற்றி

(என்ன செய்கிறோம் என்பதில் இருக்கிறது வெற்றி)

நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறு, இருந்தாலும் சில நேரங்களில் இது தவிர்க்க முடியாத‌தாகிவிடுகிறது, அப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் நினைவில் இருப்பது நல்லது,

1).நம்மை விட உயர்ந்தவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் போது நாமும் உயர்வதற்கு தேவையான வழிமுறைகள் தெரிய வேண்டுமே தவிர , நாம் உயரவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மையும் வரகூடாது, அவர்கள் உயர்ந்துவிட்டார்களே என்றா பொறாமை மனமும் வரக்கூடாது,
2).நம்மை விட சாதரணமானவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் போது நம் நிலையை எண்ணி மனதிருப்தி வரவேண்டுமே தவிர,நாம் உயர்ந்துவிட்டோம் என்ற கர்வமும் வரகூடாது, அவர்கள் சாதாராணமானவர்கள் என்ற அல‌ட்சியமும் வரக்கூடாது,

சமீபத்தில் நானும் என்னை இப்படி ஒப்பிட்டு பார்த்தேன்,என் சக‌நண்பன் ஒருவன் இருக்கிறான் என்னைப் போலவே எண்ணங்களும் சிந்தனைகளும் உள்ளவன், படிப்பு, திறமை, பேச்சு, குடும்ப சூழ்நிலை என் எப்படி பார்த்தாலும் இருவரும் சமநிலையில்தான் இருப்போம், அவனும் நானும் பேச ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் நேரம் செல்வதே தெரியாது அந்த அளவிற்கு இருவரின் எண்ண அதிர்வுகளும் இணையாக இருக்கும்,

ஆனால் இன்று அவன் நல்ல வேலை, நல்ல சம்பளம்,வீட்டிற்கு பொறுப்பான பையன்,என மிகச்சிறந்தவனாக இருக்கிறான், ஆனால் நான் அப்படி இல்லை , மோசம் என்றும் சொல்லமுடியாது, சிறந்த நிலை என்றும் சொல்ல முடியாது, இடைப்பட்ட மத்திமமான நிலையின் இருக்கிறேன், நான் நினைப்பது போலவே அவனும் நினைக்கிறான், அவனுக்கு தெரிந்த எல்லாமே ஓரளவுக்கு எனக்கும் தெரியும். ஆனால் இருவரின் நிலையிலும் வேறுபாடு ஏன்?என்று சிந்தித்தால் அதற்க்கு பல காரணங்கள் இருக்கிற‌து , இருந்தாலும் முக்கியமான காரணம் என்னவென்றால்,வாழ்க்கையில் வெற்றிபெற‌ அவன் தன‌க்கு தெரிந்ததையும், தான் நினைத்ததையும் அதிகமாக செயல்படுத்துகிறான், நான் குறைவாக செயல் படுத்துகிறேன்,

உதாரண‌த்திற்கு ஒன்றை சொல்லலாம் . பொதுவாகவே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க , சாப்பிடுவதற்கு த‌குந்தாற்போல உழைக்கவேண்டும் , இல்லையெனில் உழைப்பதற்கு தகுந்தாற்போல சாப்பிடவேண்டும் இவை இரண்டுக்கும் இடையே வித்தியாசம் அதிகமானால் உடலுக்கு ஆபத்துதான் , இயல்பாக இருவருமே நொறுக்குத்தீனி அதிகம்சாப்பிடுவோம்,இதனால் உடல் எடை சராசரியை விட அதிகரித்துவிட்டது ,இது பற்றி ஒரு நாள் பேசும் போது அதிகாலை ஓட்டப்பயிற்சி எடுத்துக்கொண்டால் எடை குறைந்துவிடும் என்று முடிவெடுத்தோம், இருவருமே அதிகாலை எழுந்து ,அவன் வீட்டருகே அவன் ஓட ஆரம்பித்தான், நான் என் வீட்டருகே ஆரம்பித்தேன், சில நாட்களுக்கு பிறகு வேதாள‌ம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக நான் வழக்கம் போல தூங்க ஆரம்பித்துவிட்டேன், அவன் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து எடையை முழுவதும் குறைத்து சராசரிக்கு கொண்டு வந்து விட்டான்,நான் திண்பண்டங்களை குறைத்து ஓரளவிற்கு குறைத்துவிட்டேன்.இதே போல்தான் எந்த ஒரு விசய‌த்திலும் இருவருக்கும் வித்தியாசம் இருக்கிற‌து.

இதன் வழியே "வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் என்ன நினைக்கிறோம், ந‌மக்கு என்ன தெரியும் என்பதில் இல்லை! நமக்கு தெரிந்ததையும் நாம் நினைத்ததையும் கொண்டு என்ன செய்கிறோம் எனப‌தில்தான் இருக்கிறது!" என்பதை அறிந்த பிறகு இப்போது நானும் அதன் வழியில் சென்று கொண்டிருக்கிறேன்.
இதன் வழியே "வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் என்ன நினைக்கிறோம், ந‌மக்கு என்ன தெரியும் என்பதில் இல்லை! நமக்கு தெரிந்ததையும் நாம் நினைத்ததையும் கொண்டு என்ன செய்கிறோம் எனப‌தில்தான் இருக்கிறது! " என்பதை அறிந்த பிறகு இப்போது நானும் அதன் வழியில் சென்று கொண்டிருக்கிறேன்,

Tuesday, January 09, 2007

உன் காதலுக்கு நன்றி

"உன்னைப் போல
என் மனதைக் கவர்ந்தவர்கள்
யாருமே இல்லை" என்றாய் !

"உன்னைப்
பார்க்காவிட்டால் அன்று
தூக்கம் வருவதில்லை" என்றாய்!

உன்னுடன் பேசாவிட்டால்
அன்று முழுவதும் எதையோ
இழந்தது போல இருக்கிறது" என்றாய்!

"நான்" உனக்கு
மட்டும் தான்" என்றாய்!

"நீ இல்லாத
வாழ்க்கையயை என்னால்
கற்ப்பனை செய்து கூட
பார்க்க முடியவில்லை என்றாய்!

"நம்மைப் பிரிக்க
யாராலும் முடியாது"என்றாய்!

காதலின் வேகத்தில்
அடுக்கடுக்காய்
வந்து விழுந்தன வார்த்தைகள்

அத்தனையும் மறந்துவிட்டு
"இனி நாம்
பிரிவதை தவிர
வேறு வழி இல்லை"என்றாய்!

தலைஎழுத்தையும்
அடுத்த ஜென்மத்தையும் சொல்லி
போலித்தனமான ஆறுதல் தேடினாய்!
இள‌மைக்காக‌
காதலித்திருந்தால்
இதுபோனால் இன்னொன்று
என்றிருப்பேன்!

வாழ்க்கைக்காக
காத‌லித்த‌தால்தான்
வ‌லிக்கிற‌து என்கிறேன்!

அழுது கொண்டிருக்கும்
என் க‌ண்களுக்கு
காலம் ஆறுதல் சொல்லும்!

நம் காதலை
என்னால் மறக்க முடியாதுதான்!
ஆனால்
எதற்க்கும் பயன்படாத
வீண் நினைவுகளை
நிச்சயமாக குறைக்க முடியும்!


விடை த‌ராத‌ உன்
மாற்ற‌ங்க‌லை மற‌ந்து!
த‌டை வ‌ராத‌ என்
ல‌ட்சிய‌ங்க‌ளில் நிறைகிறேன்!


இனி
என் வாழ்வில்
எந்த ஒரு ஏமாற்றத்தையும்
சாதாரணமாக எடுத்துகொள்ளும்
மனப் பக்குவத்தை கொடுத்த
உனக்கு ஒரு நன்றி!
உன் காதலுக்கு ஒரு நன்றி!

~நம்பிக்கைபாண்டியன்

Monday, January 08, 2007

ஏன்?

என்னைவிட சிற‌ந்த
எத்தனையோ பெண்கள் இருக்க
என்னிடம் ஏனடா
இவ்வளவு நட்பு!
என்று நீ கேட்டதற்கு
அன்று சிரிப்பை மட்டுமே
பதிலாக தந்தேன் உனக்கு!
இன்று வரை
விடை தெரியவில்லை எனக்கு!
ஆம்!எதிர்பார்ப்புகள்
இல்லாததற்கு பெயர்தானே
நட்பு
என்னைசுற்றி,

(முன்னோர்கள் அர்த்தமுள்ளவர்கள்)

இன்றுவரை நான் பெரும்பான்மையான நாட்களில்,என் வீட்டில் தூங்குவதில்லை என் அய்யம்மா(பாட்டி(அப்பாவின் அம்மா) வீட்டில் மொட்டைமாடியில் என் அத்தை பையன்களுடன் தூங்குவதுதான் வழக்கம்,ரேடியோவை பாடவிட்டுவிட்டு தூங்காமல் நீண்ட நேரம் பேசிகொண்டே இருப்போம்,பாட்டி "இன்னும் என்னடா சத்தம் தூங்குங்கடா", என திட்டிகொண்டே இருப்பார்கள்.

அப்படி தூங்கும் போது தலை முதல் கால்வரை போர்வையால் இழுத்து போர்த்திதான் அதிகம் தூங்குவோம்,ரேடியோ பாடிக்கொண்டே இருக்கும் தூங்கிவிடுவோம் வானொலியை நிறுத்த வருவார்கள்,தூங்கிக்கொண்டிருக்கும் எங்களின் முகத்திலிருக்கும் போர்வையை விலக்கி விட்டு "மொகத்தை மூடாம படுங்கடா! அறிவு கெட்ட பயலுகளா,"" செத்த பொணத்துக்குதான் முகத்தை மூடுவாங்க என்று சொல்லி விட்டு போவார்கள், ""பேசாமா போய் தூங்குங்க அயமா"" என்று சொல்லிவிட்டு அவர்கள் போன பிறகு திரும்ப போர்த்திகொள்வோம்.அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள், ( நாங்கள் வெயில் தள்ளிவர வர சுவற்றை ஒட்டி நகர்ந்து நகர்ந்து படுப்போம்,காபி தாயாராக்கிவிட்டு கூப்பிட்டுகொண்டே இருப்பார்கள்,முகத்தில் சுள்ளென்று வெயில் அடிச்சதுக்கப்புறம் தான் எழுந்திருப்போம்,

அவர்கள் அடிக்கடி சொன்ன "முகத்தை மூடாம படுங்கடா" என்ற வார்த்தை அப்போது பெரியதாக தெரியவில்லை, சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு தொலைக்காட்சி மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியில்மருத்துவர் இதுபற்றி தெளிவாக சொன்னார்

"தூங்கும்போது முகத்தை மூடாமல் படுக்கவேண்டும் அப்போதுதான் தூக்கத்திலும் நமக்குத் தேவையான ஆக்சிஜன் திறந்தவெளியில் இருக்கும் காற்றில் இருந்து தடையின்றி கிடைக்கும்,உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்கும். போர்வையால் கால் முதல் முகம்வரை மூடிக்கொண்டு படுக்கும் போது நாம் சுவாசிப்பதற்கு போர்வைக்குள் இருக்கும் காற்று மட்டுமே கிடைக்கும் அதே காற்றே திரும்ப திரும்ப சுழற்சி ஆகும், போர்வையை ஊடுருவிச்செல்லும் காற்று குறைவு உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்காது,முகப்பொலிவும் குறைந்துவிடும்",என்று தெளிவாக சொன்னார்,

அப்போதுதான் பாட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்தது,பிணத்திற்கு ஆக்சிஜன் தேவை இல்லை என்பதால் தான் முகத்தை மூடுகிறார்கள் என்பதும் விளங்கியது அவர்களுக்கு கையெழுத்துகூட போடத்தெரியாது ஆனால் இந்த அறிவுபூர்வமான கருத்தை வேறு விதத்தில் அறிவுரையாக சொல்லியிருக்கிறாகிறார்கள். இதைப்படித்ததும் நான் முகத்தை மூடாமல் தூங்கி பார்த்தேன் தூக்கம் வரவில்லை என்னை அறிவாளியாக கற்பனை செய்துகொன்டு போர்வையில் முகத்திற்கு நேராக வரும்படி சற்று பெரிய ஓட்டை ஒன்றை ஏற்படுத்திவிட்டு தூங்கினேன், (வீட்டில் போர்வையை எலி கடித்து விட்டது என்று பொய் சொல்லி சமாளித்துவிட்டேன்,)
நம் முன்னோர்கள் சொல்லும் சில விசயங்கள் அர்த்தமில்லாததாக இருந்தாலும் பல விசயங்கள் நல்ல நோக்கத்துடன் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது, நாம் தான் அதில் பலவற்றை சரியாக புரிந்துகொள்வதில்லை, பாட்டி இரு ஆண்டுகளுக்கு முன்தான் இறைவனடி சேர்ந்தார்கள், என்னை சுற்றி இருந்தவர்களில் கடும் வைராக்கியத்துடனும் இறுதிவரை கடின உழைப்புடனும் வாழ்ந்த அவர்களிடம் கற்ற விசயங்கள் மிக அதிகம்.

Friday, January 05, 2007

என்னை சுற்றி

(பட்டால்தான் புரிகிறது)

சிறுவயதில் துருதுருவென இருப்பவர்களில் நானும் ஒருவன்,சாலையில் ஏதேனும் விளையாடிகொண்டே போவேன், மரத்தின் அருகே வரும்போது தாவி குதித்து இலைகளை பறிக்க முயற்சிப்பேன்,

அப்போது ஒரு வீண் பழக்கம் இருந்தது. தெருவிலும், சாலையிலும் நடந்து செல்லும் போது, கீழே கிட‌க்கும் பொருட்களான‌ காலி அட்டைப்பெட்டி,சிறிய டப்பாக்கள்,தின்று வீசப்பட்ட மக்காச்சோள கட்டைகள்,தேங்காய் சிரட்டைகள், போன்ற‌வற்றை காலில் உதைத்து விளையாடிகொண்டே செல்வேன்(ஹி..ஹி..ஹி..மனசுல பெரிய கால்பந்து வீரர்ங்கிற நெனப்புதான்), இந்த பழக்கத்தால் சாலையின் ஓரத்தில் கிடக்கும் பொருட்கள் கூட என்னால் நடு சாலைக்கு வந்துவிடும், ""கைய கால வச்சுகிட்டு ரோட்ட்டுல சும்மா போடா""என்று பலர் பலமுறை கண்டித்துள்ளார்கள்,நான் கேட்கவில்லை,

எங்கள் ஊர் தேசிய நெடுஞ்சாலையின் மேல் அமைந்துள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும்,ஒருமுறை பள்ளிவிட்டு வரும்போது சாலையில் கிடந்த சிறிய காலி பிளாஸ்டிக் டப்பாவை உதைத்து விளையாடிக்கொண்டே சென்றேன்,
"ஏ!ஏ! இந்தா!! சூப்பர் சாட்"" என்று சொல்லி ஆவேசமாய் ஓங்கி ஒரு உதைகொடுத்தேன் அந்த டப்பாவை! அது சாலையில், சென்று கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் பட்டு, அதே வேகத்தில் திரும்பி வந்து என் வாயில் அடித்துவிட்டு தெறித்து ஒடியது, இரு உதடுகளிலும் காயம்,சிறிது இரத்தமும் வந்து விட்டது அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றேன். இரு உதடுகளும் வீங்கி அடுத்த நாள்முழுவதும் வீங்கி பள்ளிக்கும் செல்லவில்லை பார்க்க குரங்கு போல இருந்தேன்,காயம் ஆறும்வரை வலி இருந்தது.
சரி இந்த சம்பவத்திற்கு பிறகு கீழே கிடக்கும் பொருட்களை உதைப்பதை நிறுத்தினேனா? என்றால், அதுதான் இல்லை , உதைப்பதில் சிறிய மாற்றம், முன்பு ஓரத்தில் கிட‌க்கும் பொருட்களை உதைத்து ந‌டு சாலைக்கு கொண்டு வ‌ருவேன் விளையாட்டு புத்தியுடன்,இந்த‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு பிற‌‌கு ந‌டு சாலையில் கிட‌க்கும் பொருட்க‌ளை ஓர‌த்திற்கு உதை‌த்துவிடுவேன் ச‌மூக‌ அக்க‌றையுட‌ன்,
என்னை சுற்றி ந‌ட‌ந்த இந்த‌ச‌ம்ப‌வ‌ம் அன்று அதிகம் யோசிக்க ‌வைக்க‌வில்லை, இன்று யோசித்தால் ஒரு‌ உண்மை புரிகிற‌‌து , நாம் செய்யும் த‌வ‌றுக‌ள் ந‌ம்மை பெரிய‌ அள‌வில் பாதிக்காத‌வ‌ரை அதை நாம் திருத்திக்கொள்வ‌தே இல்லை, பாதிக்க‌ப்ப‌ட்ட‌பிற‌குதான் த‌வ‌றை உண‌ர்ந்து தாம‌த‌மாக‌ திருத்திக்கொள்கிறோம் ( சில‌ர் அப்ப‌டியும் திருந்துவ‌தில்லை)
என்னை சுற்றி!
என்னை சுற்றி நான் சந்தித்த ச‌ம்பவங்கள்& மனிதர்கள்,
என்னை சுற்றி நான் அறிந்த & உணர்ந்த கருத்துக்கள்,
என்னை சுற்றி நடந்த‌ சுவரஸ்யமான நிகழ்வுகளில்
சில‌வற்றை எழுதுகிறேன்

(இது போன்று எழுதுவ‌த‌ற்கு, அறிவும், த‌குதியும் மிக‌ குறைவு இருந்தாலும் சொல்ல‌ வ‌ரும் விச‌ய‌ங்க‌ளை சிற‌ப்பாக‌ சொல்ல‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையில் எழுதுகிறேன்)

என்னை சுற்றி!

(கஷ்டம் அதிகமானல்)

கல்லூரி முடித்ததும் ,சில மாதத்தில்ஒரு விவசாயத்திற்கு தேவையான , நுண்ணுரங்கள்,பூச்சிகொல்லி மருந்துகள்,போன்றவை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் களப்பணியாளராக 3 ஆண்டுகள் வேலை பார்த்தேன்(2001,2002, 2003).
எங்கள் வேலை கிராமம் கிராமமாக விவசாயநிலங்களுக்கு விவசாயிகளை சந்தித்து எங்கள் நிறுவன தயாரிப்புகளை பரிந்துரை செய்ய வேண்டும், ஒருமுறை விளாத்திகுளம் அருகே ஒரு விவசாயியை பார்க்க சென்றிருந்தேன், அவர் கடையில் டீ சாப்பிட்டுகொண்டிருந்தார், என்னை அறிமுகம் செய்து கொண்டேன், "சற்று பொறுங்க தம்பி" என்று எனக்கும் சேர்த்து டீ சொல்லி விட்டு நண்பருடன் பேச்சில் ஆர்வமானார்,, இந்த‌ வேலைக்கு பொறுமைதானே மிகவும் அவசியம்,
அவர்களின் பேச்சை கவனித்தேன், விவசாயி பக்தி உள்ளவர், அவரது நண்பர் நாத்திகர், அந்தவழியாக திருச்செந்தூருக்க்கு சிலர் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்களை பார்த்து அவர் நண்பர் "பாத யாத்திரையாக போனால்தான் சாமி அருள் கொடுக்குமா, சாமி இப்படி வர சொல்லுச்சா உங்களை" ஏன்யா இப்படி வெட்டிவேலை செய்யுரிங்க" என்றார்,

அதற்கு விவசாயி " மாப்ள நீ ஒரு மில்லுல வேலை பார்கிற, உனக்கு 8 மணி நேர வேலைக்கு 80 ரூபா சம்பளம், அதே மில்லுல ஓவர் டைம்(O.T) நாலு மணிநேரம் சேர்த்து 12 மணி நேர‌ம் வேலை பார்க்குற 120 ரூபா சம்பளம், இதில் எது சுலபம் எது கஷ்டம்""என்றார்
"8மணி நேரம் சுலபம் 12 நேரம் கஷ்டம்"என்றார் நண்பர்
""8மணி நேர சுலப‌ வேலைக்கு 80 ரூபா சம்பளம்12 மணி நேர கஷ்டமான வேலைக்கு 120 ரூபா சம்பளம்"",

இதுல இருந்து என்னா தெரியுது கஷ்டம் அதிகமான பலன் அதிகமா கிடைக்கும், ""சும்மா சாமி கும்பிட்டா கிடைக்கிற பலன விட! மனசு சுத்தமா , விரதமிருந்து..நடந்து நம்மை நாமே கஷ்டபடுத்தி கிட்டு கும்பிட்டால் அதோட பலன் அதிகமா இருக்கும் அதான் இப்படி எல்லாம்" "சிலர் இது தெரியாம இதோட நோக்கத்தையே மற‌ந்திடுறாங்க"
" அது மட்டுமில்ல மாப்ள இந்த உலகத்துல நல்லவனா வாழுறதும் கஷ்டம் வாழ்ந்தா அதற்கு பலன் அதிகம்,"" என்று சொல்லி அவரை பதில் பேசமுடியாமல் செய்து விட்டார், என்னை சுற்றி நான் கற்றதில் அவரின் " கஷ்டம் அதிகமானல் பலன் அதிகமாகும்" என்ற‌ வார்த்தை அடிக்கடி நம்பிக்கை கொடுக்கும் வார்த்தை,