Thursday, December 21, 2006

பொய்

"ஆ!..காட்டு,ஆ!..காட்டு!"
"அப்பாக்கு இல்லை, இல்லை சொல்லிரு!"
"காக்கா தூக்கிட்டு போகபோகுது,ச்சூ!..ச்சூ!"

"நிலா பாரு!நிலா பாரு
"நாய்க்கு அப்புறம் தான்!
"மண்டை பூனை வரபோகுது! மியாவ்!..."
"பூச்சாண்டிகிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்!"

"பஸ்ல ,டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்... போவோமா?"
"அம்மா சாக்லேட் வாங்கிதாரேன்!"
"ஊசி, ஊசி போட்ருவேன்"

"தூங்குரப்போ, சாமி வந்து
வயிர தொட்டு பார்க்கும்!
வெறும் வயிரா இருந்தா
கண்ணு ரெண்டையும்
தோண்டிட்டு போய்டும்"என‌

அன்று அன்புடன்
உணவு கொடுக்க
விதம் விதமாய்
பொய் சொன்னாள் அம்மா!

இன்று அன்புடன்
உணவு கொடுக்காமல்‌
முதியோர் இல்லத்தில் சேர்த்ததற்கு!
விதம் விதமாய்
பொய் சொல்லுகிறான் மகன் !

--நம்பிக்கை பாண்டியன்

Sunday, December 10, 2006

பயணம்

அன்று நான்
ந‌டை ப‌ய‌ண‌த்தில்!
நீ! சைக்கிள் பயணத்தில்!

பின்பு நான்
சைக்கிள் பயணத்தில்!
நீ! பைக் பயணத்தில்!

இன்று நான்
பைக் பயணத்தில்!
நீ! கார் பயணத்தில்!

அன்று முத‌ல்
இன்று வ‌ரை!
நாம் இருவ‌ருமே
ந‌ட்பு ப‌ய‌ண‌த்தில்!

~நம்பிக்கைபாண்டியன்

Saturday, December 09, 2006

காதல் குறும்புகள்!
(தேன் கூடு இணைய தளத்தின் போட்டிக்கான படைப்பு(குறும்பு)

உன் விழிகளின்
பார்வை குறும்புகளால் என்னிலும்!
என் பேச்சின்
நகைச்சுவை குறும்புகளால் உன்னிலும்!

ஏற்பட்ட ஈர்ப்பின் விளைவாய்

நம்மில் அரும்பியது காதல்!

எத்தனையோ நாட்கள்
எத்தனையோ விதமான
வார்த்தைக் குறும்புகளால்
ஒருவரை ஒருவர்
வசீகரித்திருக்கிறோம்!
வசை பாடியிருக்கிறோம்!
அத்தனையும் நினைவில்
அழியாமல் நிற்கிறது!

ஒருநாள் நான் உன்னை
"தேவ‌தை" என்று‌ வ‌ர்ணித்துவிட‌!
ம‌றுநாள் வ‌ந்து
"நேற்று என்னை தேவதை என்று சொல்லி
தூங்க‌ விடாம‌ல் செய்து விட்டாய்!"என்று,
நீ மகிழ்ச்சியுட‌ன் சொன்ன‌போது!

"உன்னை அப்ப‌டி தவறாக வ‌ர்ணித்த‌ற்காக‌
நானும்தான் தூங்க‌வில்லை" என்றேன்!
"என்ன‌ உள‌ருகிறாய் "என்று
கோப‌த்துட‌ன் புரியாம‌ல் கேட்டாய்!

"ஆமாம்! நீ ஒன்றும் தேவ‌தை அல்ல‌!
தேவ‌தைகள் சிறகுகள் விரித்தால்தான் அழ‌கு
ஆனால் நீயோ சிரித்தாலே அழ‌கு!

தேவ‌தைக‌ளின் பாத‌ம் பூமியில் படாதாம்!
கடினமான பூமியில் உன் மெல்லிய பாதங்கள்
பதிந்து ந‌டந்து வரும்போதுதானே நீ இன்னும் அழகு!

தேவ‌தைகளின் க‌ண்க‌ள் இமைப்ப‌தில்லையாம்!
அவ்வப்போது மேலும் கீழும் பட படவென
அடித்துக் கொண்டு அதை பார்க்கும் என் இதயத்துடிப்பை
அதிகரிக்கும் உன் இமைப்பார்வை கொள்ளை அழகு!

தேவ‌தைக‌ள் தங்க‌ளின் இத‌ய‌த்தில் பாரபட்சமின்றி
எல்லோரையும் ச‌ம‌மாக‌வே நினைப்பார்க‌ளாம்!
நீ! என்னை, உன் இத‌ய‌த்தில்
காத‌ல் என்னும் அன்பின் உய‌ர‌த்தில் அம‌ர்த்தியிருக்கிறாயே!
அத‌னால்தான் சொன்னேன் நீ தேவ‌தை அல்ல!" என்ற‌தும்!

"போடா!உன் குறும்பு பேச்சால்
இன்றும் என்னை தூங்க‌விடாம‌ல் செய்து விட்டாய்" என்ற‌வ‌ளே!

இன்னொருநாள்


உன் கோபத்தை ரசிப்பதற்காக!
உன்னைப்போல ஒரு முட்டாளை
நான் பார்த்ததே இல்லை! என்று
நான் குறும்பாய் சொன்னபோது!
கோபப்படாமல் சிரித்துக்கொண்டே!அதனால் தானடா!
உன்னை காதலித்திருக்கிறேன் என்று
குறும்பாக பதில் சொல்லி
உன் புன்னகையை ரசிக்கவைத்தவளே!

மற்றொருநாள்!


சாப்பிடும் பொழுது
"இவ்வளவு கொஞ்சமாக சாப்பிட்டு!
எப்படி உங்களால்
இப்படி குண்டாக இருக்க முடிகிறது"என்று
நான் குறும்பாய் கேட்டதும்,
"பெண்ணாய் பிறந்து பார்!
அப்போது தெரியும்" என்றவளே!


நீ ஆணாகா பிறந்து
என்னை காதலிப்பாயென்றால்!
நான் பெண்ணாய் பிறக்க
சம்மதிக்கிறேன்! என்றதும்
உன் மகிழ்ச்சிக் கண்ணீரால்
குறும்பை மறைத்து
அன்பை நிறைத்தவளே!

எல்லை மீறாத!
ந‌ம் காத‌ல் குறும்புக‌ள்!
விரைவில் எல்லைக‌ள‌ற்ற‌
க‌ல்யாண‌ குறும்புக‌ளாய் மாற‌ட்டும்!
அதை‌யே உல‌க‌ம் பாராட்டும்!

~ந‌ம்பிக்கை பாண்டிய‌ன்

பூவும்! நீயும்!

பெண்ணே !
பேசிக்கொண்டே ஒருநாள
்நடந்து செல்லும் போது
"எத்தனையோபெண்கள் இருக்க
என்னை எப்படி?
உன் காதலியாக
நீ தேர்ந்தெடுத்தாய்!"என்றாய்

"சற்று முன ்ரோஜா
மலர் ஒன்றை வாங்கும்போது!
அங்கிருந்த அழகிய
எத்தனையோ பூக்களில
்ஒன்றை மட்டும்
எப்படி தேர்ந்த்தெடுத்தாய்!" என்றேன்

"என் பார்வைக்கும்!
என் மனதிற்கும் அது
மிகவும் பிடித்திருந்தது!" என்றாய
்"அதே போல்தான்
உன்னையும் எனக்கு!
பிடித்திருந்தது!" என்றேன்!

"ஓ! அப்படியா!
நான் தேர்ந்தெடுக்கும் பூவும்!
நீ தேர்ந்தெடுக்கும் நானும் !
ஒன்றென்றால்! நான்
வெவ்வேறு நாட்களில்,
வெவ்வேறு பூக்களை
தேர்ந்தெடுப்பது போல்!
நீயும் வெவ்வேறு
பெண்களைதேர்ந்தெடுப்பாயா!" என்றாய்!
கேலிப் புன்னகையுடன்!

"ஆம்! பூவை
தேர்ந்தெடுக்கும் நீயும்!
உன்னை தேர்ந்தெடுக்கும்
நானும்!ஒன்றுதான்!
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்!

ஒரு நாளுக்கு
ஒரு பூவை
நீ தேர்ந்தெடுக்கிறாய் !
ஒரு ஜென்மத்திற்கு
ஒரு பெண்ணை
நான் தேர்ந்தெடுக்கிறேன்!

இந்த நாளுக்கு
அந்த பூ! மட்டும் உனக்கு!
இந்த ஜென்மத்திற்கு
நீ! மட்டும் எனக்கு! "என்றதும்

உன் கண்கள்
மகிழ்ச்சியில் மலர்ந்தன!
என் கன்னங்கள
்முத்தத்தால் சிவந்தன!
~நம்பிக்கை பாண்டியன்

Saturday, November 18, 2006

நம் நட்பு

"இவ்வளவு நேரம்
சிரிச்சு சிரிச்சு
அவளிடம் என்னடா
பேச்சு வேண்டியிருக்கு!"என்று
திட்டிய என் அம்மா!

"இனி அவனிடம்
பேசுறத பார்த்தா
அடிச்சே கொன்னுடுவேன்!"என்று
கோபித்த உன் அப்பா!

"காதல் மட்டுமா!
கல்யாணம் வரைக்குமா!"என‌
கேலி பேசிய என் நண்பர்கள!

"ஜோடிப் பொருத்தம்
நல்லா இருக்குடி"என‌
கிண்டலடித்த உன் தோழிகள்!

இவர்கள்
யாருக்குமே தெரியாது !
நம் நட்பான பேச்சில்
வார்த்தைகள் கூட‌
எல்லை மீறியதில்லை என்பது!

~நம்பிக்கை பாண்டியன்

Wednesday, November 15, 2006

தெரிவதில்லை !

பகல் முழுவதும்

நட்ச்சத்திரங்கள் இருக்கின்றன !
இருந்தாலும்
சூரியன்
இருப்பதினால்
அவைகள்
கண்ணுக்கு தெரிவதில்லை !

உலகம் முழுவதும்
பெண்கள் இருக்கிறார்கள்
இருந்தாலும்
நீ !
இருப்பதினால்
அவர்கள் என்
மனதிற்கு தெரிவதில்லை !

~ நம்பிக்கை பாண்டியன்

Monday, November 13, 2006

மனசு

பெண்ணே!
விடுமுறை நாட்களில்
என் ஊருக்கு வந்த நீ!
விடுமுறை முடிந்து
உன் ஊருக்குச் செல்கிறாய்!
வழியனுப்ப வந்த
உறவினர்களுள் ஒருவனாய்
இரயிலின் ஓரத்தில்
நானும் நின்றிருக்கிறேன்!

எப்போதும் உற்சாகமாய்

இருக்கும் நீ, இன்று
என்னை கண்டும்
காணாதது போல்!
கலங்கிய கண்களுடன்
இரயிலின் உள்ளே

அமைதியாக அமர்ந்திருக்கிறாய்!

உன்னை பார்த்துக் கொண்டும்,
நீ பார்க்கும் போது
பார்க்காதது போல
நடித்துக் கொண்டிருக்கிறேன் நான்!

எல்லோரிடமும்!
"ஊருக்கு ஒருநாள் வாங்க!"
என்று சொன்ன நீ !
என்னிடம் மட்டும்
எதுவும் சொல்லவில்லை!
உன் மனதை விட்டு
பிரிந்தால் தானே!
மீண்டும் உன் ஊருக்கு வருவதற்க்கு!

உன்னுடன்
பயணிக்கும் எல்லோருக்கும்
கையசைத்து விடை சொல்லி!
"திருவிழாவுக்கு கண்டிப்பா வாங்க"
என்று சொன்ன நான்
உன்னிடம் மட்டும்
எதுவும் சொல்லவில்லை!
என் மனதை விட்டு
பிரிந்து சென்றால் தானே
மீண்டும் உன்னை அழைப்பதற்கு!
நம் பிரிவை எண்ணி

கூ.....என அலறி அழுது கொண்டு
தட.. தட....வெணும்
இதயத் துடிப்புடன் மெதுவாக
நகர்கிறது இரயில் வண்டி!

ஜன்னல் கம்பியில்
கன்னம் பதித்து
என்னைப் பார்த்தபடி நீ!
ரயிலுடன் சேர்ந்து
நகர்ந்து கொண்டே
உன்னைப் பார்த்தபடி நான்!

என் இதயத்துடிப்ப்பை போல
ரயிலின் வேகமும் அதிகரிக்க!
என்னை கடந்து சென்ற ரயிலை
நின்றபடி பார்த்துகொண்டிருந்தேன்!

ரயிலில்
பயணித்துக் கொண்டிருந்த
உன் மனம்,
என்னுடன் நின்று கொண்டிருந்தது!
நின்று கொண்டிருந்த
என் மனம்
உன்னுடன் பயணித்துக்கொண்டிருந்தது!

~நம்பிக்கை பாண்டியன்

Tuesday, November 07, 2006

ஆரோக்கியமே அழகு!

(தேன்கூடு இணைய‌த‌ள‌ம் ந‌ட‌த்தும் போட்டிக்கான‌ சிறுகதை(க‌ரு த‌லைப்பு--இல‌வ‌ச‌ம்)

"அம்மா பசிக்குது சாப்பாடு ரெடியா?" என்ற கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தாள் அருணா.
அடுப்படியில் அம்மாவின் இருமல் சத்தம் கேட்டது.

"மழையில் நனைஞ்சதால விறகு சரியா எரியமாட்டேங்குதுடி! இப்பதான் சாதம் அடுப்புல இருக்கு இன்னும் நேரமாகும்"

"சரிம்மா, நீ போய் குழம்புக்கு மசால் அரைச்சுடு! அடுப்ப நான் பார்த்துக்குறேன்" என்று அடுப்பில் நெருப்பை ஊதுகுழலால் ஊதி எரியும் வேகத்தை அதிகப்படுத்தி விட்டு காய்களை நறுக்கத் துவங்கினாள்.

சாதம் வடித்துக்கொண்டிருந்தப்பொழுது "அருணா வேகமா வாடி நாடகம் ஆரம்பிக்க போறாங்க" என்று பக்கத்து வீட்டு தோழி ப்ரியா அழைப்பது கேட்டது.
"அம்மா நீ குழம்பை பார்த்துக்கோ, நான் டி.வி யில நாடகம் முடிஞ்சதும் வந்து சாப்பிட்டுக்குறேன்"

"முதலில் சாப்பிடு! அப்புறம் உன் துணியெல்லாத்தயும் துவை; அழுக்கு நிறைய இருக்குது, நாடகம் ஒரு நாள் பாக்காட்டி ஒண்ணும் குறைஞ்சிடமாட்ட!" என கோபித்தாள் அம்மா

"ஏம்மா இப்படி இருக்கெ?" நல்ல மார்க் வாங்கியும் என்னெ மேல படிக்க அனுப்பாம நம்ம ஊரு மில்லுல வேலைக்கு சேர்த்துவிட்டுட்டடெ! என்கூட படிச்சவளுக எல்லாம் காலேஜ் முடிக்க போறாங்க, வேலை முடிச்சு வீட்டுக்கு வர 6.30 மணி ஆகுது. வந்து வீட்டு வேலையும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன். ஏதோ இந்த நாடகத்தை மட்டும் பக்கத்து வீட்டு பிரியா கூட போய் பாக்கலாம்னா அதுக்கு கூட விடமாட்டேங்கறியே? போகவேண்டாம்னா அப்பாவ முதலில் டி.வி வாங்க சொல்லு".

"நான் என்னடி செய்ய?, நம்ம சூழ்நிலை அப்படி இருக்கு. அவர் சம்பளம் சாப்பாட்டுக்கும் உன் தம்பி தங்கச்சி படிப்புக்கும் சரியா இருக்கு. உன் சம்பளத்தில் காசு சேர்த்தாதான் உன் கல்யாணத்த‌ நடத்தமுடியும். எனக்கு மட்டும் உன்ன நல்லா படிக்க வைக்கணுங்கற ஆசை இல்லையா என்ன? நம்ம சூழ்நிலை அப்படி இருக்கு. ம்ம் சரி சரி போய்ட்டு சீக்கிரமா வா."

"அடியே! இப்போதானெ பசிக்குதுன்னு சொன்ன‌. நாடகம் பார்த்தா பசி அடங்கிடுமா? முதலில் சாப்பிடு. நேரத்துக்க்கு சாப்பிடாம அப்புறம் வயிறு வலிக்குதுனு சொல்லாதேடி!" என்று அக்கறையான கோபத்துடன் திட்டினாள் அருணாவின் பாட்டி!

அருணாவின் முதிய தோழி என்று சொல்லலாம் பாட்டியை! அம்மாவுக்கும் பாட்டிக்கும் சரிப்பட்டுவராது. அம்மா திருமணமாகி வந்த புதிதில் பாட்டி அம்மாவிடம் கடுமையாக நடந்துகொள்ளும்போது, அம்மா பொறுமையாக இருந்தாள், இன்று காலம் மாறிவிட்டது. அம்மா பாட்டியிடம் கடுமையாக நடந்துகொள்கிறாள். பாட்டியும் தன் நிலை அறிந்து பொறுமையாக இருக்கிறாள்.

பாட்டிக்கு அன்பான ஒரு துணை என்றால் அது அருணா தான். வயதானவர்களுக்கு அன்பு தான் அவசிய தேவை என்பதை தனக்கே தெரியாமல் பாட்டிக்கு அளித்துக்கொண்டிருந்தாள் அவள்.

படிக்கும்போதும் சரி, இப்போது வேலைக்குப் போகும்போதும் சரி, பாட்டியுடன் அதிகம் இருப்பாள் அவள். வீட்டில் இருக்கும் நேரங்களில் தம்பி தங்கைகளுடன் விளையாடி, சண்டையிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பாட்டியிடம் தான் கதை பேசிக்கொண்டு இருப்பாள். பாட்டி தனது கடந்த கால வாழ்க்கையை கதைபோல சுவாரஸ்யமாக சொல்லுவதை ரசித்துக் கேட்பாள். அவளும் தனது பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளையும், திரைபடங்களைப் பற்றியும் பாட்டியிடம் சொல்லுவாள்.

"அப்புறம் சாப்பிடுறேன் பாட்டி" என்று சொல்லி வேகமாக பிரியாவின் வீட்டுக்கு ஓடி பிரியாவின் அருகே அமர்ந்தாள் . நாடகம் ஆரம்பித்தது. விளம்பர இடைவேளை வந்தது. அருணா விளம்பரங்களை ஆர்வமாக பார்ப்பாள். உலகம் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை விளம்பரங்களை பார்த்துதான் தெரிந்துகொள்வாள்.அப்போது தான் அந்த புது விளம்பரம் வந்தது.

"ஆரோக்கியத்துடன் அழகு இலவசம்" என்ற வாசகத்துடன் அவள் வீட்டில் எல்லோரும் வழக்கமாக பயன்படுத்தும் பதினைந்து ரூபாய் மதிப்புள்ள ஆரோக்கியத்தை பாதுகாக்கும் குளியல் சோப்புடன், ஐந்து ரூபாய் மதிப்பில் முகத்தை அழகு படுத்தும் சிவப்பழகு க்ரீம் இலவசம்" என்று காட்டியது விளம்பரம்.
ஏழே நாட்களில் முகம் சிவப்பாகும் என்ற கூடுதல் வாசகமும் வந்தது. அடுத்த விளம்பர இடைவேளையிலும் அந்த விளம்பரம் வந்து அவள் மனதை பாதித்து விட்டுச் சென்றது.

சாப்பிட்டு படுக்கும் வரை, அந்த விளம்பரத்தையே நினைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவிடம் சொல்லி எப்படியும் அந்த சோப்புடன் இலவசமாக சிகப்பழகு க்ரீமை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அருணாவை அதிகம் கவலை கொள்ளச் செய்வது அவளின் நிறம் தான். சற்று அதிகமான கருப்பு. சிலர் அவளை " கருவாச்சி" என்று சொல்லும் போது அந்த நேரத்தில் அவள் அதை பொருட்படுத்தாவிட்டாலும் வீட்டிற்கு வந்து அதை நினைத்து நினைத்து தனிமையில் அழுவாள்.

அப்போதெல்லாம் அவளின் பாட்டி "அரசனுக்கு உள்ளங்கால் சிவப்பா இருந்தாலும் அதுக்கு கிடைக்கிறது செருப்புதான், உச்சந்தலை கருப்பா இருந்தாலும் கிரீடம் அதுக்குதாண்டி! என்று சொல்லியும் ,"வாழ்க்கை நிறத்தில் இல்லை நினைப்பில் இருக்கிறது! என்றும் ,ராமயணத்தில் ராமனும் கருப்புதான் என்றும், கருப்பாக இருந்த சாதனையாளர்களை பற்றியும் , நிறைய‌ சொல்லி சமாதானப்படுத்துவாள்.

"கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் நாம் இன்னும் கொஞ்சம் சிவப்பா அழகா பிறந்திருக்கலாமே" என்று வேதனையுடன் நினைப்பாள். அம்மாவிடம் முன்பே சிவப்பழகு க்ரீம் வாங்கித் தர சொல்லி பலமுறை கேட்டிருக்கிறாள்.

"குடிகிறது கூழு! குளிக்க பன்னீரா! "நம்ம நிலமைக்கு இருக்கிற அழகு போதும் போய் வேலையப் பாருடி !" என்ற திட்டுதான் கிடைத்தது. அம்மாவுக்கு பிடிக்காதது எது செய்தாலும் அடி தான் விழும்! எனவே அதை அத்தோடு மறந்துவிடுவாள்.
ஆனால் இந்த விளம்பரத்தைப் பார்த்தப் பிறகு இந்தமுறை எப்படியும் சோப்பு வாங்கும் போது இலவசமாய் கிடைக்கும் சிவப்பழகு கிரீமை வாங்கி விடவேண்டும் என்று முடிவு செய்தாள். அம்மா திட்டினாலும் இலவசமாய் கிடைப்பதை காரணமாக சொல்லிவிடலாம். அம்மாவுக்கு தெரியாமல், தனியா இரண்டு சிவப்பழகு கிரிம் வாங்கி சில நாட்களுக்கு தொடர்ந்து வச்சுக்கணும், அம்மா கேட்டா இன்னும் அது தீரலைனு சொல்லி சமாளிச்சுக்கலாம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டே தூங்க ஆரம்பித்தாள். அன்றைக்கு பார்த்து வீட்டிற்கு வெளியே பலத்த மழை பெய்துகொண்டிருந்தது.

காலை விடிந்ததும் விரைவில் எழுந்து அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். அப்போது "அம்மா!!!!!!!!!!" என்ற பாட்டியின் அலறல் சத்தம் கேட்டது, பதற்றத்துடன் ஓடிச்சென்று பார்த்தப்பொழுது பாட்டி இரத்தம் வழிந்த தலையுடன் தரையில் வீழ்ந்து கிடந்தாள்!
மழையினால் ஏற்பட்ட ஈரத்தில் கால் வழுக்கி கீழே விழுந்திருக்கிறாள். விழுந்த இடத்தில் துவைப்பதற்க்கு பயன்படுத்தும் கல் இருந்ததால் தலையில் பலத்த அடி. உடனடியாக எங்கெங்கோ தேடி வண்டி பிடித்து வருவதற்க்குள் நிறைய இரத்தம் வெளியேறியிருந்தது. ஏழைகளுக்கென்றே இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

முதலுதவி மட்டும் செய்து விட்டு "உடனே அருகே இருக்கும் மதுரை பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்ல வண்டி மதுரைக்கு மருத்துவமனைக்கு சென்றது!
அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே இதைவிட இன்னும் மோசமான நிலையில் பலர் காத்திருந்தனர், அவர்களைப்பார்த்த அருணா அதிர்ச்சி அடந்தாள். உடலெங்கும் இரத்த காயஙகள். சிலர் விபத்து என்று சொன்னார்கள். சிலர் சண்டை அடிதடிகளால் என்று சொன்னார்கள். தேவையான விவரங்களை பதிவு செய்தபின் சிகிச்சைக்கு அனுப்பினார்கள்.

மருத்துவர்கள் பாட்டிக்கு உடனடியாக செய்யவேண்டிய சிகிச்சைகளை செய்து தனி பிரிவில் இடப்பற்றாக்குறையால் தீவிர சிகிச்சையில் இருக்கும் பொது பிரிவிற்கு மாற்றினார்கள்.

மருத்துவமனை வாசமும், காட்சிகளும் அருணாவுக்கு புது உலகத்தை அறிமுகப்படுத்தின. இந்த பிரிவில் இருக்கும் எல்லோருமே உயிருக்கு போராடுபவர்கள். ஏழு மாத குழந்தை முதல் எழுபது வயது முதியவர்கள் வரை விதம் விதமான விபத்துகள், விதம் விதமான நோய்கள். பலருடைய உடம்பிலும் பல குறைகள்.

திடீர் திடீரென பலர் சேர்ந்து கதறி அழுவார்கள், போய் பார்த்தால் யாராவது இறந்திருப்பார்கள். பிணத்தின் முகத்தை மூடி பிரேத பரிசோதனைக்கு கைவண்டியில் இழுத்துச் செல்வார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் பாட்டி பிழைக்க வேண்டும் என்று பயத்துடன் அருணா பிரார்தனை செய்வாள்.
மறு நாள் வரை பாட்டியின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை, மருத்துவர்கள் இரண்டு நாட்கள் ஆனால் தான் தெரியும், உறுதியாக எதையும் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டார்கள்.

அப்பா பணத்தேவைக்களுக்கும் வேலைக்கு விடுப்பு சொல்லவும் போய்விட்டார். தேர்வு நேரம் என்பதால் வீட்டு வேலைகளையும், தம்பி தங்கையை பள்ளிக்கு அனுப்பி பார்த்துக்கொள்ளவும் அம்மா போய் விட்டாள்! இருவரும் அவ்வப்போது சாப்பாடு வேளைகளில் ஒருவர் மாறி ஒருவர் வருவார்கள்!அருணாதான் அதிகம் இருப்பாள். அவர்கள் இருக்கும் நேரத்தில் அருணா அங்கிருக்கும் ஒவ்வொரு சிகிச்சை பிரிவாக சுற்றி வருவாள்.

எவ்வளவு பேர் எவ்வளவு பிரச்சனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நம் நிலமை எல்லாம் எவ்வளவோ நன்றாக இருக்கிறது என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தாள்.
நாம் சிவப்பாக அழகாக இல்லையே என்று வருத்தப்படும் போது " நோய் நொடியில்லாம நல்ல மனசோட இருந்தா போதும்டி அதவிடவா அழகு வேணும்" என்று பாட்டி அன்று சொன்ன போது வார்த்தைகளாக மட்டுமே புரிந்த விசயம், இன்றுதான் உணர்வுகளால் அவளுக்கு புரிந்தது.

ஒரு அறையில் படுக்க வைக்கப்பட்டு இருந்த ஒரு வயது குழந்தையின் உடல் முழுவதும் ஏதேதோ கருவிகளை இணைத்து இருந்த காட்சி அவள் மனதை மிகவும் பாதித்துவிட்டது. சத்தமில்லாமல் மனதிற்குள் அழுகை வந்தது. கடவுளின் மேல் ஒரு பக்கம் கோபம் வந்தது. மறு பக்கம் "என்னை இப்படி ஆரோக்கியமாக படைத்திருக்கிறாயே" என்று கடவுளின் மீது நன்றியுணர்வும் வந்தது.

இப்படியே இரண்டு நாட்கள் சென்றன. பாட்டியின் உடல் நிலையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் அன்று மாலை எல்லோரையும் விட்டுவிட்டு கடவுளிடம் சென்றுவிட்டாள். அருணாவால் பாட்டியின் இழப்பை தாங்க முடியவில்லை. அழுதுக்கொண்டே இருந்தாள்.

பாட்டிக்கு செய்யவேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் செய்து விட்டு, இரண்டு நாட்களில் எல்லோரும் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினர்கள். ஆனால் அருணா மட்டும் இன்னும் பாட்டியின் மருத்துவமனை நினைவிலேயே இருந்தாள்.

அப்போது அம்மா அவளிடம் "இந்தாடி ரொம்பநாளா நீ கேட்ட முகத்தை சிவப்பாக்குற க்ரிம். இன்னைக்கு குளிக்கிற சோப்பு வாங்குறப்போ இலவசமா கொடுத்தாஙக" என்று அவள் கையில் திணித்துவிட்டுப்போனாள்.

அருணாவின் கண்கள் மட்டும் அதைப்பார்த்துக் கொண்டிருந்தன.
அழகு குறைந்திருப்பதாக நினைப்பதால் வரும் கவலைகள் தவறானது! ஆரோக்கியமான வாழ்க்கையே உண்மையில் அழகானது! என்ற எண்ணம் மனதிற்குள் வந்தது.

இந்த முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை பலர் பல காலம் கழித்து கஷ்டங்களை விலையாக கொடுத்து ஏகப்பட்ட அனுபவங்களுக்கு பிறகு புரிந்துகொண்டிருக்க அதை தனது வாழ்க்கையின் இறுதி பயணத்தின் போது மிக எளிமையாக இலவசமாகவே புரியவைத்த பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய அவளின் மனம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது.

நட்புடன்
நம்பிக்கை பாண்டியன்

கல்லூரி நட்பு!


எங்கோ பிறந்தோம்!
எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால
சிந்தித்துக கொண்டோம்!

முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!

எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை
இடம் மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

கவலைகளை
கிள்ளி அறிவோம்!
இலட்சியஙகளை
சொல்லி மகிழ்வோம்!

உழைப்பை பெருக்க
உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க
நம்பிக்கை தருவோம்!

நன்மைகள் வளர
முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து
சாதிப்போம்!
~நம்பிக்கை பாண்டியன்


Sunday, October 29, 2006

தந்தை!

என் சிந்தையில்
மறைந்திருக்கும் தந்தையே !

நீங்கள் உழைத்து கொடுத்த
உணவால்தான்
என் உடல் வளர்ந்தது !
உணர்ந்து செலுத்திய
அக்கறையால்தான்
என் உள்ளம் வளர்ந்தது !!

எங்கள் நலனுக்காக
நீங்கள் பட்ட
சிரமங்களின் முன்னால்
சிகரங்கள் உயரம் குறைந்தவை !

எத்தனையோ தீபாவளிக்கு
எங்களுக்கு மட்டும்
புது ஆடை உடுத்தி அழகு பார்த்தவரே !

கோவிலில் உங்கள்
பிரார்த்தனை முழுவதும்
எங்களுக்காகவே இருக்கும் !

நீங்கள் திட்டுவதெல்லாம்
எங்கள் பொறுப்பை
உணர்த்துவதற்க்குதான்!
நாங்கள் தான் அதை
தவறாக நினைக்கிறோம்!
என் முன்னால்திட்டினாலும்
மற்றவர்கள் முன்னால்
விட்டுக் கொடுக்காமல் பேசுபவரே !

ஒவ்வொரு முறை
சாப்பிடும் போதும்
அம்மாவிடம் ,அவன் சாப்பிட்டனா?
என்று அன்பு விசாரிப்பவரே !

நீங்கள் எனக்கு,நீச்சல்
தண்ணீரில் மட்டும்
கற்றுக் கொடுக்கவில்லை
வாழ்க்கையிலும்தான் !

எப்படி வாழவேண்டும்?
என்ற கேள்வி
எனக்குள் எழாத வண்ணம் !
இப்படித்தான் வாழவேண்டும் !
என்று வாழ்ந்து கொண்டிருப்பவரே !

உழைப்புக்கும், சிக்கனத்திற்க்கும்!
பொறுமைக்கும், தூய்மைக்கும்
முன் மாதிரியாய் வேறு யாரையும்
நான் பார்க்கத் தேவை இல்லை !
உங்களை பார்த்தாலே போதும் !

உங்கள் சொற்களை
நான் மீறி இருக்கலாம் !
நீங்கள் காட்டிய
நல்ல வழியில் இருந்து
கண்டிப்பாக மாறமாட்டேன் !

உங்களை நினைத்து
நான் பெருமைப்படும்படி
நீங்கள் வாழ்கிறீர்கள் !
என்னை நினைத்து
நீங்கள் பெருமைப்படும்படி
நிச்சயமாய் நானும் வாழ்வேன் !

~நம்பிக்கை பாண்டியன்

Friday, October 27, 2006

நீதானே அம்மா!


அன்பை

எனக்கு அறிமுகப்படுத்தி!
இன்றுவரை
அளவின்றி அளிப்பவள்
நீதானே அம்மா!

என் தேவைகளை
பூர்த்தி செய்வதற்க்காக!
உன் தேவைகளை
குறைத்துக் கொண்டவள்!
நீதானே அம்மா!

பொது நலத்திலும்!
சுயநலத்தைக் காட்டும்!
சிலரைப்போல இல்லாமல்!
சுயநலத்திலும் சிறிது
பொதுநலத்தைப் பார்ப்பவள்
நீதானே அம்மா!


சில நாட்கள்
நீ ஊரில் இல்லாவிட்டால்!
உருமாறிப்போகும் நம் வீட்டை!
என்றும் அழகுபடுத்துபவள்
நீதானே அம்மா!

உனக்கு கொடுக்காமல்
நான் எவ்வளவோ சாப்பிட்டிருந்தாலும்!
எனக்கு எடுத்து வைக்காமல்!
எதுவும் சாப்பிடாதவள்
நீதானே அம்மா!

என் உடலில் ஏற்ப்படும்
காயத்தின் வலிகளை!
உன் மனதில் உணர்பவள்
நீதானே அம்மா!

என்னதான் சண்டையிட்டாலும்
சாப்பிடும் நேரத்தில்!
சமாதானத்திற்க்கு வருபவள்
நீதானே அம்மா!

சமைக்கும்
அனைத்து உணவிலும்,
அன்பையும் கலந்து! அதன்
சுவையை அதிகரிப்பவள்
நீதானே அம்மா!

அப்பாவின் உழைப்பையும்!
வீட்டின் நிர்வாகத்தையும்!
சிக்கனத்துடன் சிறப்பாக
வழி நடத்திச் செல்பவள்!
நீதானே அம்மா!

சிறுபிள்ளைத் தனமாக
தவறுகள் செய்தால்!
பிறரைப் போல தண்டிக்காமல்!
சரியானதைச் சொல்லி கண்டித்து!
அழுது நடித்தால்!
அதையும் மன்னிப்பவள்
நீதானே அம்மா!

"ஒரு குடும்பம்
அழிந்து போவதற்கு!
யார் வேண்டுமானலும்
காரணமாக இருக்கலாம்!
நன்றாக இருப்பதற்ககு
ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"!
என்ற உலக கருத்தின்படி!
நம் குடும்பத்தின் நலத்திற்கு
அது நீதானே அம்மா!

இன்னும் பல
ஜென்மங்கள் இருக்குமென்றால்!
அதிலும் நீயே என் தாயாக
வேண்டுமென! கேட்டு! கடவுளிடம்
தொந்தரவு செய்யா மாட்டேன் அம்மா!
இந்த ஜென்மத்தில்!
நான் பெற்ற நன்மைகள்!
வரும் ஜென்மங்களில்
இன்னும் சிலருக்கு !
கிடைக்கட்டும் அம்மா

~நம்பிக்கை பாண்டியன்Wednesday, October 18, 2006

காத்திருப்பு!


கவிதை வடிவில் குட்டி கதை,

(திருமண‌த்திற்க்கு காத்திருக்கும் ஒரு முதிர்கன்னியின் நிலை)

1)
குடி போதையில்
வீடு திரும்பாத அப்பா

கட்டுப்பாடின்றி!
காதலியுடன்
ஊர் சுற்றும் தம்பி!

தொலைக்காட்சி நாடகங்களிலும்!
ஊர்க்கதை பேசுவதிலும்
மூழ்கிப் போன அம்மா!

இவர்கள் சொல்கிறார்கள்
நான் அடக்கமாக
இருக்க வேண்டுமாம்!
கோபத்துடன் கொஞ்சம்
சிரிப்பும் வருகிறது!

பருவங்கள் தவறுவதால்
தனிமையை தவிர்க்கிறேன்!
கனவுகளை சொல்ல
வழியின்றி தவிக்கிறேன்!

அம்மாவிடம் சொன்னால்
ஆவேசமாய் திட்டுவாள்!
தோழியிடம் சொன்னால்
ஏளனமாய் சிரிப்பாள்!

இறைவா!
கல்யாண‌த்திற்குப் பிறகுதான்!
காதலும்! காமமும்!
உண‌ர்வுக்கு வ‌ருமென்று!
எல்லோரையும் ப‌டைத்திருந்தாள்
நிறைய‌ பேரின் வாழ்க்கை!
நிம்ம‌தியாக‌ இருந்திருக்குமே!

த‌ப்பிக்க‌வும் வ‌ழியில்லை!
த‌வ‌று செய்ய‌வும் ம‌ன‌மில்லை!
எப்போது கிடைக்கும் ம‌ண‌மாலை!
அப்போதுதான் இதில் விடுத‌லை!

த‌குதியான‌வ‌ர்க‌ளுக்கு
த‌குதியான‌து கிடைக்கும்!
என்ற‌ ந‌ம்பிக்கையில்!
இன்னும் காத்திருக்கிறேன்!
என்னைக் க‌ர‌ம் பிடிக்கும்
ந‌ல்ல‌ க‌ண‌வ‌னுக்காக!


(அவ‌ளின் ந‌ல்ல‌ ம‌ன‌ம் போல‌வே அவ‌ளுக்கு ந‌ல்ல‌ க‌ண‌வ‌ன் கிடை‌த்தான்!. திரும‌ண‌மாகி ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்னாலும்! மாறாத‌ அன்புட‌ன்! அவ‌ன் தன் மனைவிக்காக! எழுதிய‌ க‌விதை.)

அன்பு
கிடைக்கும்போது !
அதில் என் அன்னையை
உண‌ர்ந்தேன் !

அக்க‌றை
கிடைக்கும்போது!
அதில் என் த‌ந்தையை
உண‌ர்ந்தேன்

அறிவு
கிடைக்கும்போது !
அதில் என் ஆசானை
உண‌ர்ந்தேன்!

என் க‌வ‌லைக‌ள்
தீரும்போது! அதில்
க‌ட‌வுளின் அருளை
உண‌ர்ந்தேன்!

உற்சாக‌ம்
கிடைக்கும் போது !
அதில் என் ந‌ட்பை
உண‌ர்ந்தேன்!

இவை அனைத்தும்
ஒன்றாய் சேர்ந்து
கிடைக்கும் போது
என் ம‌னைவியே!
அதில் உன்னை
உண‌ர்ந்தேன்!

(அவ‌ன் மேல் குறையாத‌ அன்பு கொண்ட‌ அவ‌ள்! தன் கணவனுக்காக‌ சொன்ன‌ க‌விதை)ஒவ்வொரு
காத்திருப்பிலும்!
ஒரு அர்த்த‌ம்
இருக்குமென்று!
புத்த‌க‌ங்க‌ளில் ப‌டித்த‌போது!
அத‌ன் உண்‌மையை
உண‌ர‌வில்லை!

உன்னை க‌ண‌வ‌னாக‌
அடைந்த‌பின்தான்!
தேடி வ‌ந்த
காத‌லை எல்லாம்!
ம‌றுத்துக் காத்திருந்த‌த‌ன்
அர்த்த‌த்தை உண‌ர்ந்தேன்!

(இறுதிக்காலம் வரை இதே அன்புடன் வாழ்ந்தார்கள்)

நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
மாறா நட்பு


குழந்தையாக!
ஆடித் திரிந்த‌
தெருமுனைப் !
பிள்ளையார் கோவில்!

சிறுவர்களாக!
விளையாடி ம‌கிழ்ந்த
மைதான‌த்து மரநிழ‌ல்!

இளைஞர்க‌ளாக‌
பேசி சிரித்த!
பேருந்து நிறுத்த நிழற்குடை!

இவையெல்லாம்
இன்னும் மாறாமல்
அப்படியே இருக்கிற‌து!
எங்கெங்கோ
பிரிந்திருந்தாலும்

நம‌க்குள் இருக்கும்
நட்பைப் போல!
~நம்பிக்கை பாண்டியன

Thursday, September 14, 2006

சமாதானம்

அப்பாவுடன்
சண்டையிட்டால்
அடுத்த சில வாரங்களில்
சமாதானமாகிறேன்!
நண்பனுடன்
சண்டையிட்டால்
அடுத்த சில நாட்களில்
சமாதானமாகிறேன்!
அம்மாவுடன்
சண்டையிட்டால்
அடுத்த வேளை சாப்பாட்டில்
சமாதானமாகிறேன்!
உன்னுடன்
சண்டையிட்டால் தான்
அடுத்த சிலநிமிடங்களிலேயே
சமாதானமாகிறேன்!
~நம்பிக்கை பாண்டியன்

Friday, September 08, 2006

காதல்

நிமிடத்தில் பலமுறை
மூடித்திறக்கும் இமைகள்!
கண்களின் பார்வையை
மறைப்பதில்லை!


காதலில் இதுபோல்
மனப்பக்குவம் இருந்தால்!
இலட்சியங்கள் ஒருபோதும்
தோற்பதில்லை!்
~நம்பிக்கை பாண்டியன்

Thursday, September 07, 2006

நட்பு
கனவில் ஒருநாள்
கடவுளிடம்
"உலகை திருத்த!
ஒரு வழிசொல்!"என்றேன்
மூன்றே எழுத்தில்!
விடை சொல்லி
முடித்துக் ்கொண்டான்!
ந--ட்--பு !
~நம்பிக்கை பாண்டியன்

Sunday, August 27, 2006

அடுக்கு மாடி
உணவகத்தில்
அறுசுவை உணவுகளை!
அளவின்றி செலவு செய்து!
ஆடம்பரமாய் சாப்பிட்டாலும்
நம் கல்லூரி நாட்களில்
நட்புடன்
பகிர்ந்து கொண்ட!
தயிர் சாதத்திற்க்கு எதுவும்!
ஈடாகாது நண்பனே!
~நம்பிக்கை பாண்டியன்

Saturday, August 26, 2006

எறும்பின் பாடம்

இது கதையுமல்ல கவிதையுமல்ல,
ஒரு நிகழ்வு!!


ஒருநாள்
மாலை நேரத்திலே!
இளையராஜாவின் இசையினிலே!
இதயம் வருடும் பாடல்களை!
சுவற்றில் சாய்ந்து கண்கள் மூடி!
இதமாய் ரசித்து அமர்ந்திருந்தேன்!


கழுத்தில் ஏதோ சுருக்கென்றது!
திரும்பிப் பார்த்தால்!
எறும்பின் வரிசை!
நாளைய தேவைக்கு!
இன்றே இரை தேடி!
சீரான வரிசையில் சிறப்புடனே!

சுறு சுறுப்பாக
இயங்கிக்கொண்டிருந்தது!

எறும்பிடம் பாடம் கற்கலாமென்று்!
பள்ளிப் பாடத்திலும்!
அறிஞர்கள் பலரின்
கருத்திலும் கவிதையிலும்
அறிந்திருக்கிறேன்!

எத்தனை உயர்ந்த சுறு சுறுப்பு!
எதிர்கால தேவைக்கு சேமிப்பு!
இனிப்பில் மண் கலந்திருந்தாலும் ,
இனிப்பை மட்டும் பிரித்தெடுக்கும்!
இஷ்டப்படி இயங்காமல்!
சீராய் செல்லும் அதன் பாதையிலே!

இப்படி நிறைய நன்மைகளை
முன்பே அதனிடம் கற்றிருந்தாலும்!
புதிதாய் கற்க்கும் ஆர்வத்தில்!
தடையற்ற அதன் பாதையிலே!
தடைகள் போல

என் விரல் வைத்தேன்!

பிரச்சனையற்ற அதன் பயணத்திலே!
பிரச்சனையாக இப்போது
என விரல்கள்!
வரிசைப்பயணம் தடை பட்டதால்!
வழி தெரியாத எறும்பெல்லாம்
தாறு மாறாய்ச் சிதறியது!

அவற்றில் சில எறும்புகளோ!
என் விரலைக் கண்டு
மிரண்டு பயந்து!
தொடர்ந்து முன்னேறிச் செல்லாமல்!
வந்த வழியே திரும்பியது!

இன்னும் சிற்சில எறும்புகளோ!
என் விரலை விட்டு விலகிச் சென்று
சுற்றி வளைந்து மறுபுறம் சென்று!
மீண்டும் பயணத்தை தொடங்கியது!

இன்னும் சிற்சில எறும்புகளோ!
என் விரலின் தடைய
எளிதென எண்ணி! ஒருபுறம் ஏறி
மறுபுறம் இறங்கி இனிதாய்
பயணத்தை தொடங்கியது!

இன்னும் சிற்சில எறும்புகளோ!
என் விரலை தடையென கருதாமல்!
தைரியமாய் ஏறி நருக்கென்று கடித்ததும் !
வலி தாங்காமல் விருட்டென்று
விரல்களை இழுத்துக் கொண்டேன்!

இவ்வளவு சிறிய எறும்புகளுக்குள்!
இத்தனை பல குணங்களா!!
அழகாய் அறிவு உணர்த்தியது!
நம்மிலும் இது போல் பலர் உண்டு!

வாழ்வின் நல்ல முயற்சிகளை
பிரச்சனைகளுக்கு பயந்து தொடராமல்!
திரும்பி விடுபவர்கள்!

பிரச்சனைகளை விட்டு விலகிச் சென்று
அமைதியாய் இருந்து உயர்பவர்கள்!

பிரச்சனைகளை எளிதென நினைத்து!
சமாளித்து சாதிப்பவர்கள்!

பிரச்சனைகளுக்கே
பிரச்சனைகளை கொடுத்து!
எதிர்த்து நின்று வெற்றி பெறுபவர்கள்!

அற்புதமான பாடம் தந்த
எறும்புகளுக்கு நன்றி சொல்லி!
இமைகள் மூடி இசையில் கலந்தேன்!
~நம்பிக்கை பாண்டியன


ஸ்ரீ அன்னையின் அருள் மொழிகள்

1)உன் விருப்பம் நேர்மையானதாக இருக்குமானால், உன்னை சுற்றி இருக்கும் எல்லாமே ! அதை நீ அடைய உதவி செய்யும்.

2)நீ நினைத்த போதெல்லாம் உனக்கு அருள் புரிய தெய்வம் ஒன்றும் உனக்கு கடமைப்படிருக்கவில்லை! அவன் அருளைப் பெற தகுதியானவனாக உன்னை மாற்றிக் கொள்!

3) நீ செய்யும் ஓவ்வொரு தீய செய்யலுக்கும் ஒரு தீய பலன் நிச்சயம் உண்டு!
நீ செய்யும் ஓவ்வொரு நல்ல செய்யலுக்கும் ஒரு நல்ல பலன் நிச்சயம் உண்டு!


4)ஒரு பூவைப் போல, வெளிப்படையாக, எளிமையாக, தெளிவாக, இனிமையாக, மென்மையாக, பாரபட்சமின்றி உயர்ந்த பண்புடன் இருங்கள்!

5)கடவுளிடம் நம்பிக்கையோடு இரு!
நம்பிக்கைக்குரியவனாய் இரு!

6)தன்னம்பிக்கை எனும் சூரியன் இருள் சூழ்ந்த இதயத்திற்கு வரட்டும், எல்லாமே எளிதாகிவிடும்.

7)உன் உள்ளத்தில் ஏற்படும் எண்ணம் எதுவாக இருந்தாலும்! உன் வாழ்வின் உண்மைகளையும் நன்மைகளையும் சிதைத்துவிடாதபடி இருக்கட்டும்!

8)உலகம் துயரங்கள் நிறைந்ததுதான், ஆனால் நம்மால் அதை உருமாற்றம் செய்ய முடியும்!

9)கோபமும் பயமும் உங்கள் நோயை நீட்டிக்கும்!
அமைதியும் சாந்தமும் உங்களை குணபடுத்தும்!

10)அற்புதமான பேச்சைவிட! ஒரு துளி அன்பினால் அதிகமாக சாதிக்க முடியும்!

11)தீமைகள் ஏன் வருகின்றன, எப்படி வருகின்றன என்று ஆராய்ச்சி செய்வதில் பயன் இல்லை. அவைகள் எங்கும் இருக்கின்றன! அவைகளை அசட்டை செய்! நல்ல விசயங்களில் மனதினை செலுத்து எல்லாம் நலமாகும்!

12)அறிவது நல்லது! வாழ்வது நல்லது! அறிந்து வாழ்வது! அதினிலும் நல்லது!

13)பிரச்சனைகளை புரிந்துகொண்டாலே அதில் பாதி தீர்ந்துவிடுகிறது! அதைப் புரிந்துக் கொள்ள முதலில் உன் மனம் அமைதியாக இருக்க வேண்டும்!

14)இதுவரை நீ எப்படி இருந்தாய் என்பதைவிட
இனி நீ எப்படி இருக்க விரும்புகிறாய் ! என்பதை மட்டும் நினைத்து செயல்படு கண்டிப்பாக முன்னேற்றம் அடைவாய்!

Friday, August 25, 2006


"எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாகும் "!உலகத்தில்
என் எண்ணங்களை
நான் அழகு படுத்துகிறேன்!
என் வாழ்வை
உன் அருளால்
நீ அழகு படுத்து
இறைவா!