Wednesday, June 20, 2007

எனனைச்
சுற்றியிருப்பவர்களுக்காக
மட்டும் பிரார்த்திக்கும்‌
சுயநலம் மிகுந்த எனக்குள்!
காதலை விதைத்து!

உலகெங்குமுள்ள
காதலர்கள் எல்லோரும்
பிரியாமல் வாழ பிரார்த்திக்கும்
பொதுநலத்தை வளர்த்தவள்(ன்) நீ!
எத்தனையோ நாட்கள்
எவ்வளவோ முயற்சித்தாலும்
விழிப்பிற்க்கும்
தூக்கத்திற்குமிடையிலான‌
சந்திப்பு நொடிகளை
உணர முடிவதே இல்லை!
~
nambikaipandian

Wednesday, June 06, 2007

எனக்கு நீ! உனக்கு நான்!

(முத்த‌மிழ் குழுமத்தின் போட்டியில் ஆறுத‌ல் ப‌ரிசு பெற்ற‌ சிறுகதை)

குமரன் திருமணகோல‌த்தில் மணமேடையில் இறுகிய முகத்துடன் நின்றிருந்தான், மணமகளாக நிற்கும் கோமதியை சுற்றியிருந்த அவளின் நண்பர்கள் கூட்டம்தான் அவன் முகஇறுக்கத்திற்கு காரணம்,கல்லூரி முடித்து வேலைக்கு போய் ஒன்றரை வருடத்திற்கு பிறகு சந்தித்ததால் எல்லோரும் ஆவலோடு பேசிக்கொண்டும் சத்தமாக சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்,

சில தோழிகளும் நண்பர்களும் அவள் காதில் ரகசியமாய் ஏதோசொல்ல இவளும் பலமாக சிரித்தாள். நன்கு படித்தவர்களாக இருந்தும் பலர் பார்க்கும் மணமேடையில் சிறிது அமைதி காக்கவேண்டும் என்று தெரியவில்லையே? என்று அவன் மனம் புலம்பிக்கொண்டிருந்தது, அதை அதிகப்படுத்துவது போல அந்த கூட்டத்திலிருந்த ஒருவன் போகும்போது "ஹேப்பி பர்ஸ்ட் நைட்" என்று கேலியாக வாழ்த்திவிட்டு போக அவன் முகம் இன்னும் இறுகியது,

கீழே அமர்ந்த நண்பர்கள் அவளை பார்த்து ஏதோ சொல்லி அங்கிருந்தபடியே கையசைத்து சிரித்துகொண்டிருந்தார்கள்,இறுகிய அவன் முகத்தை புகைப்படம் எடுப்பவர்கள் பலமுறை சிரிக்க சொல்லி வற்புறுத்தியதால் வலிய சிரிப்பை வரவழைத்துக்கொண்டான்,இதைப்பற்றி நினைத்துக்கொண்டேயிருந்தால் இருக்கும் சந்தோசம் குறைந்துவிடுமென்று தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டு, அவளின் கண்களையும், சிரிப்பையும் பேசும்போது மாறும் சின்னசின்ன‌ முக பாவனைகளையும் ரசித்து அவளில் மனம் ஒன்றினான்,

இனியதொரு இல்லற வாழ்க்கை ஆரம்பித்த‌ சில நட்களில் அவளின் வீட்டிற்கு சென்ற‌ போது அவளுடைய கடந்த கால புகைப்படங்களை எடுத்து ,குழந்தைப் பருவத்திலிருந்தது எப்போது, எங்கே, யாருடன் எடுத்தது என்று சொல்லிகொண்டே வந்தாள், அதில் சிறுகுழந்தையாக ஆடையின்றி இருந்த‌ புகைப்ப‌ட‌த்தை பார்த்து அவ‌ள் காதில் கும‌ர‌ன் ஏதோ ர‌க‌சிய‌மாய் சொல்ல ந‌றுக்கென்று கிள்ளிவிட்டு அவ‌னை வினோத‌மாய் பார்த்து ர‌சித்து சிரித்தாள் , அவள் க‌ல்லுரிமாணவியாக இருந்த‌ புகை‌ப்ப‌ட‌ங்க‌ளை பார்க்கும்போது க‌ல்லூரியிலும் , சுற்றுலா‌ சென்ற‌ இட‌ங்க‌ளிலும் வ‌குப்பு மாண‌வ‌ர்களுடன் ப‌ல‌ருட‌ன் அர‌ட்டை அடித்த‌ப‌டி நின்றிருந்தாள் ,அவ‌ர்களை ப‌ற்றி சில‌ விச‌ய‌ங்களை எடுத்து சொல்லி தன்சிற‌ந்த ந‌ண்ப‌ர்க‌ள் என அறிமுக‌ம் செய்தாள்‌. சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ ப‌ல புகைப‌ட‌ங்க‌ளில் இவளுடன் நின்றிருந்த‌ன‌ர், தொட‌ர்ந்து பார்க்க‌ ம‌ன‌மின்றி வேகமாக‌ ஆல்பத்தை புர‌ட்டி முடித்தான்,ம‌ன‌ம் குழ‌ப்ப‌த்தில் ஏதேதோ சிந்தித்த‌து, கோவிலுக்கு செல்ல‌ அழைத்த‌தும் அங்கு அவ‌ளுடன் நீண்ட‌ நேர‌ம் பேசிகொண்டிருந்த‌தும் இய‌ல்புக்கு வ‌ந்தான்,

இருவ‌ரும் வேலைக்கு செல்வ‌தால் ஒவ்வொரு ஞாயிற்றுகிழ‌மையும் உற‌வின‌ர்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் வீட்டுக்கு விருந்துக்கு சென்றன‌ர், இரு மாத‌ங்க‌ள் ஆகிவிட்ட‌து "இந்த‌ வார‌ம் என் தோழி விஜ‌யா வீட்டுக்கு போக‌லாம்ங்க" என்று அழைத்தாள் கோமதி. ஞாயிற்றுக்கிழ‌மை அங்கு சென்றார்க‌ள் மதிய உண‌வாக விதம் விதமாக சமைத்திருந்தார்கள். சாப்பிட்டதும் ‌விஜ‌யாவும் கோமதியும் வரவேற்பு அறையில் அமர்ந்து சிறிது நேர‌ம் இவ‌னிட‌ம் பேசிவிட்டு பிறகு த‌ங்க‌ள் க‌ட‌ந்த‌கால‌ வாழ்க்கையைபற்றி பேச‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.

நீண்ட‌ நாட்க‌ள் ஆன‌‌தால் பல நண்பர்களுடைய ‌ வாழ்க்கை‌ கதைகளை பேசிகொண்டார்கள். த‌ங்க‌ள் ந‌ட்பின் நினைவுக‌ளில் மூழ்கியதால் இவ‌ன் இருப்ப‌தை ம‌ற‌ந்து பேசிகொண்டே இருந்தார்கள். கும‌ர‌னும் அவ‌ர்க‌ளின் பேச்சை க‌வ‌னித்தான் ஒன்றும் புரிய‌வில்லை. உல‌கில் மிக‌க் க‌டின‌மான‌ விச‌ய‌ம் புரியாத ஒன்றை புரிந்த‌துபோல‌ நடித்துக்கொண்டு நீண்ட‌ நேர‌ம் கேட்பது, அத‌ற்கு மேல் நடிக்க‌விருப்ப‌மின்றி டி.வி யை பார்த்தான் எல்ல சேன‌ல்க‌ளிலும் வெறுப்பேற்றும் நாட‌க‌ங்க‌ள்,கேட்டு ச‌லித்த புதிய பாட‌ல்க‌ள், எழுந்து அடுத்த‌ அறைக்குள் அம‌ர்ந்து ஜ‌ன்ன‌லை வெறித்து பார்த்தபடி"நட்புள்ள‌ இர‌ண்டு பெண்க‌ள் சேர்ந்தால் உல‌கில் வான‌த்திற்கு கீழிருக்கும் அத்தனை விச‌ய‌ங்க‌ளைப‌ற்றியும் அள‌வின்றி பேசிக்கொண்டிருக்கிறர்க‌ள்! எல்லா பெண்க‌ளுமே ஏன் இப்ப‌டி இருக்கிறார்கள்?" என்று மனதிற்குள் கேள்வி கேட்டுகொண்டான்,

அவ‌ர்க‌ளின் பேச்சை மீண்டும் க‌வ‌னித்தான் "ஹே உன‌க்கு க‌ல்யாண‌ம்னு தெரிஞ்ச‌வுட‌னே ந‌ம்ம‌ செந்தில் ரொம்ப‌ சோக‌ம் ஆகிட்டான்டி" என்றாள் விஜ‌யா,"அதுக்கு நான் என்ன‌டி செய்ய‌ முடியும்,வேற‌ எதாவ‌து பேசு" என்று சொல்லி பேச்சை மாற்றினாள் கோம‌தி,

கும‌ர‌ன் ம‌ன‌தில் புதிதாய் ஒரு ச‌ந்தேக‌ம‌ர‌ம் தோன்றியது ,மனம் இருப்பு கொள்ளாமல் அறையிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வெளியே இருந்த‌ பெட்டி க‌டைக்குள் நுழைந்து சிக‌ரெட் ஒன்றை வாங்கி ப‌ற்ற‌வைத்தான். யார் அவன்? எத‌ற்காக‌ அவன் சோகமாக‌ வேண்டும்,?ஒருவேளை இவ‌ளை காத‌லித்திருப்பானோ, இருக்க‌லாம், இவ‌ளின் அறிவுத்திற‌மைக்கும் ந‌ல்ல‌ குண‌த்திற்கும் நிறைய பேர் இவ‌ளை காத‌‌லித்திருக்க‌லாம். அது இய‌ல்புதான், ஆனால் அதில் யாரையாவ‌து இவ‌ள் காத‌லித்திருப்பாளா? என்று ம‌ன‌தில் இருந்த‌ ச‌ந்தேக‌ ம‌ர‌ம் புதிதுபுதிதாக‌ கிளைவிட்ட‌து,அவ‌ளிட‌மே கேட்டுவிட‌லமா, என‌ யோசித்தான்.
"ச்சீ வேண்டாம்" பிற‌கு என்னை ப‌ற்றி என்ன‌ நினைப்பாள். அப்படி எதுவும் இல்லாவிட்டால் அத‌ற்கு பிற‌கு நா‌ன் சாத‌ரணமாக‌‌ பேசுவ‌துகூட‌ அவ‌ளுக்கு சந்தேக‌மாக‌த்தானே தெரியும், பிற‌கு பிரச்ச‌னைக‌ள் வ‌ள‌ர்ந்துகொண்டே போகும்,இப்போது வேண்டாம் நேர‌ம் வ‌ரும்போது கேட்க‌லாம் என் நினைத்து அன்று மாலை வீடுவந்து சேர்ந்த‌ர்க‌ள், அந்த‌ வார‌ம் முழுவ‌தும் அவளிடம் குழப்ப‌ ம‌ன‌துட‌னே நெருங்கினான், "என்ன‌ ஆச்சு உங்க‌ளுக்கு ஒரு மாதிரியாவே இருக்கீங்க" என்று கேட்ட‌வ‌ளுக்கு ஒன்றுமில்லை என்று பொய்யான‌ ப‌தில் சொன்னான்,

அடுத்த‌‌ ஞாயிற்றுகிழ‌மை "என்னுடன் ப‌டித்து என்னுட‌னே வேலை பார்க்கும் நீண்ட‌ வ‌ருட‌ ந‌ண்ப‌ன் விட்டிற்கு போக‌லாம்" என்று அழைத்துசென்றான்.

அன்று இர‌வு வீடு திரும்பிய‌தும் எதுவும் பேசாம‌ல் அமைதியாக படுக்கையில் சென்று ப‌டுத்துகொண்டாள்‌ ‌, ப‌ல‌முறை அழைத்து பார்த்தான் ப‌தில் வ‌ர‌வில்லை , அருகில் சென்று முக‌த்தை திருப்பி பார்த்தான், க‌ண்ணீர் வ‌ழிந்திருந்தது.
"என்ன‌ ஆச்சு மதி, ஏன் இப்ப‌ அழுகிற‌" என்றான் , அவளிடமிருந்து ப‌தில் வ‌ர‌வில்லை,அவள் அருகிலேயே அமர்ந்தான், மெதுவான குரலில் பேச ஆரம்பித்தாள் "உங்க ப்ரண்டு வீட்டுல நான் ஒருத்தி இருக்கிற‌தையே ம‌ற‌ந்துட்டு அவ‌ர்கிட்ட‌யே பேசிட்டு இருக்கீங்க‌ என‌க்கு அப்போ எவ்வ‌ள‌வு கோப‌ம் தெரியுமா? நீங்க ரெண்டுபேரும் பேசுறப்போ, உங்க‌ ப்ர‌ண்டு "அவ‌ள‌ பார்த்தேண்டா ஆளே மாறிட்டா, பார்த்தும் பார்க்காத‌து மாதிரி போய்ட்டா, ந‌ல்ல‌வேளைடா ம‌ச்சான் நீ த‌ப்பிச்சுட்ட‌ இல்ல‌ட்டி ரொம்ப‌ க‌ஸ்ட‌ப்பட்டிருப்படா"னு சொன்ன‌து காதில் விழுந்துச்சு.
"அவள் யாரா இருக்கும்! உங்க வீட்டுல அன்னிக்கு ஆல்ப‌ம் பார்க்குற‌ப்போ உங்க‌கூட நிறைய‌ போட்டோவில‌ ப‌க்க‌த்தில் நின்னுருந்தாளே அது அவளா இருக்குமோ? ,
"ந‌ம்ம‌ க‌ல்யாண‌மேடைல‌ உங்க‌ள‌ சுற்றி நிறைய‌ பொண்ணுங்க‌‌ அரட்டை அடிச்சு கிண்ட‌ல் பண்ணிட்டு இருந்தாங்க‌ளே அதுல‌ ஒருத்தியா இருக்குமோனு ம‌ன‌சுல‌ புதுசு புதுசா குழ‌ப்ப‌ம் வ‌ருதுங்க‌!
நமக்‌குள்ள‌ பிரச்ச‌னை எதுவும் வ‌ந்துருமோனு ப‌யமா இருக்கு!"என்று அழுதுகொண்டே நகர்ந்து அவ‌ன் ம‌டியில் ப‌டுத்துக்கொண்டாள்.

கும‌ர‌னுக்கு என்ன‌ சொல்வ‌தென்றே புரியாமல் யோசித்தான், இதே போல‌தானே நாமும் அவளை த‌வ‌றாக‌ நினைத்தோம்,அவளை பற்றி மட்டுமே யோசித்துகொண்டிருந்த நான் என் நிலையை எப்படி மறந்தேன்,இதே போல் அவளிடமும் நானும் கேள்வி கேட்கலாம், ஆனால் அது சந்தோசத்திற்கு உதவாது,பிர‌ச்சனையை பெரிதாக்கும்,

ஒவ்வொருவருமே தன் வழ்க்கைதுணையின் மனதில் தான் மட்டுமே உயர்ந்திருக்க வேண்டும், தனக்கு மட்டுமே சொந்தமாக‌ இருக்க வேண்டும் என்று நினைகிறார்கள், அதற்கு மாறாக ஏதாவது தெரிய வரும்போது அங்கே பிரச்சனைகள் வளர்கிறது,அதை த‌விர்த்துவிட்டால் சந்தோச‌ம் பெருகிவிடும்! என்று புரிந்த‌தும், அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளை பிடித்து தூக்கி "நீ பயப்படுற‌ மாதிரிலாம் எதுவும் ந‌ட‌க்காது வீணா மனச குழப்பிக்காதே மதி," அது ஒரு சாத‌ர‌ண‌ விச‌ய‌ம் ,இன்னொருநாள் புரியுற‌ம‌திரி சொல்லுறேன். இப்போ நினைச்சா சிரிப்புதான் வ‌ருது, சொன்னா‌ நீயும் சிரிப்ப! ஒருவிச‌ய‌ம் ந‌ல்ல‌ யோசிச்சு பாரு, வாழ்க்கைல‌ எவ்வ‌ள‌வோ பேரை பார்க்குறோம் அதில‌ ய‌ராவ‌து ஏதா‌வ‌து ஒரு கார‌ணத்தால‌ ந‌ம‌க்கு பிடிக்கும், அது ஒரு ச‌தார‌ண‌ ஈர்ப்பு, உன‌க்கும் கூட‌ இருந்திருக்கலாம், அது முடிஞ்சு போன‌ விச‌ய‌ம் ,

இப்போ ந‌ம்ம‌ புது வாழ்கையை ஆர‌ம்பிச்சு இருக்கோம், என் மன‌சுல இனி என்னைக்கும் நீ மட்டும்தான் உன் ம‌ன‌சுல நான் ம‌ட்டும்தான்! இதுல‌ எந்த‌ மாற்ற‌மும் இல்ல! ந‌ம‌க்குள்ள‌ இந்த‌ விச‌ய‌த்தில இனி எந்த‌பிர‌ச்ச‌னையும் வ‌ர‌க்கூடாது.ம‌ற்ற விச‌ய‌ங்க‌ளில் சின்ன‌ சின்ன‌ பிர‌ச்சனைகள் வரலாம், ஆனால் அதை எல்லாம் நான் சரிபண்ணிடுவேன் ம‌தி" என்று சொல்லி அவள் கண்ணீரை துடைத்தான் .

அவளும் ம‌ன‌ம் மாறி சந்தோசமாய் அவன் தோள்க‌ளில் சாய்ந்துகொண்டு "எப்ப‌டி சரிப‌ண்ணுவிங்க" என்று ஆர்வ‌மாய் கேட்டாள், "இப்ப‌டித்தான்" என்று சொல்லி உற்ச‌க‌மாய் அவ‌ளை அணைத்துகொண்டான்.


~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

சுதந்திரத்தை உணர்வோம்

நினைத்ததும்
கிடைத்துவிடவில்லை
சுதந்திரம்!
எத்தனை பேரின்
காயங்கள்!
எவ்வளவு பேரின்
கண்ணீர்கள்!

அளவில்லாத கொடுமைகள்!
அர்த்தமிள்ளாத
அடக்கு முறைகள்!
அத்தனையும் மாற!
அன்று!
சுயநலம் எதுவுமின்றி
பலர் ரத்தம் சிந்தியதால்தான்
இன்று
அடிமைபயம் சிறிதுமின்றி!
சுதந்திரமாய் வாழ்கிறோம்!

இன்று நாம்!
சுதந்திர காற்றை சுவாசிக்க!
அன்று அவர்கள்
சுவாசத்தை இழந்து
தன் உயிருக்கும்! நமக்கும்
சுதந்திரம் அளித்தார்கள்!

நம்மை
அடிமைப்படுத்தியவர்களின்!
ஆங்கிலப் புத்தாண்டையும்!
காயப்படுத்தியவர்களின்
காதலர் தினத்தையும்!
கொண்டாடுவதில் இருக்கும்
ஆர்வத்தில் பாதி கூட!
சுதந்திர தினத்திற்க்கு இருப்பதில்லை!

ஒருபுறம்
வளர்ச்சிப்பாதையில்!
மறுபுறம் அழிவுப்பாதையில்!
இலக்கில்லாத பாதையில்
பலரது வாழ்க்கைப் பயணம்!
இதற்காகவா பெற்றோம் சுதந்திரம்!

தீமைகளின்
சுதந்திரத்தைஅழித்துவிட்டு!
இனி நன்மைகளுக்கு
அடிமையாவோம்!
சுதந்திரத்தின்
அருமை உணர்வோம்!
~நம்பிக்கை பாண்டியன்
என்னை சுற்றி
(தவறான சூழ்நிலைகளை தவிர்த்தால், தவறுகளை தவிர்க்கலாம்!)

நம்மை சுற்றி இருக்கும் சில மனிதர்களின் தவறான செயல்களின் விளைவுகளை சிந்தித்து பார்த்தால் நம் சொந்த அனுபவமின்றியே சில பாடங்களை கற்றுகொள்ளலாம்! என்னுடைய நண்பன் ஒருவனின் அண்னனுடைய திருமணவிழா!பொதுவாகவே சிறந்த நண்பர்களின் வீட்டுத்திருமணவிழா என்றால் முதல் நாள் இரவே சென்று நண்பனுக்காக திருமணவீட்டில் சிறு சிறு உதவிகள் செய்வது, அரிதாகவே சந்திக்கும் பல நண்பர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே இரவு முழுவதும் ஊர்சுற்றி திருமணவாழ்த்து போஸ்டர் ஒட்டுவது,பிறகு பெரிய அரட்டை கச்சேரிநடத்துவது வழக்கம் !ஒரு குழுவினருக்கு கூடுதலாக "உற்சாகமான கவனிப்பு" கச்சேரியும் நடப்பதுண்டு ,இப்போதெல்லாம் நண்பர்களின் திருமண வீடுகளில் இரவு தாமதமாக சென்றால் உண்பதற்கு உணவை பார்க்க முடிகிறதோஇல்லையோ!உற்சாகமான "கவனிப்பை" பார்க்க முடியும்!

மது அருந்துவதை, தவறு என்றும், அடிகடி குடித்தால்தான் தவறு, அவ்வப்போது அருந்தினால் தவறில்லை என்றும், அளவாக குடித்தால் தவறில்லை என்றும் எவ்வளவு குடித்தாலும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருந்தால் தவறில்லை என்றும்! எவ்வளவு ஆர்ப்பாட்டாமானலும் வெளியில் செய்யாமல் விட்டிற்குள் செய்தால் தவறில்லை என்றும்!ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நினைக்கிறார்கள், பாதிப்புகள் வரும்போதுதான் அதை தவறு என்று உணருகிறார்கள். அந்த நண்பனும், நண்பர்களில், உறவினர்களில், சிலரின் பிடிவாதமான அன்புக்கட்டளைகளால் ஒரு அட்டைபெட்டி நிறைய பாட்டில்களுடன் ஏற்பாடு செய்திருந்தான்!

அன்று இரவு அவனுடைய சொந்த மாமா ஒருவரை பார்த்து!"" மாமா, இன்னிக்கு ஒருநாளைக்கு ஒழுங்கா இருங்க மாமா அசிங்கபடுத்திடாதிங்க" என்று கெஞ்சி சொல்லிவிட்டு வந்தான்! என்னவென்று விசாரித்ததில் "அவர் சிறந்த"குடிமகன்" என்றும்!இது போன்ற விழா வைபவ சூழ்நிலைகளில் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியாதென்றும்! மது அருந்திவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் கூட பரவாயில்லை! அளவில்லாத ஆர்ப்பாட்டம் செய்வார் என்றும்! இன்று ஒரு நாள் அவர் குடிக்காமல்இருப்பது நல்லது, இல்லாவிட்டால் வந்திருக்கும் உறவினர்களுக்குள் ஏதாவதுசண்டையை ஏற்படுத்திவிடுவார்! அதனால்தான் அவ்வாறு கேட்டுகொண்டதாகவும் தெரிவித்தான்.

நாங்கள் மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டோம்! எங்கள் நண்பர்களிலும் சிலர் தங்கள் கடமைகளை சரியாக மு(கு)டித்துவிட்டு வர எல்லோரும் திருமண மண்டபத்தின் மாடியில் சுற்றி அமர்ந்து பேசி சிரித்துகொண்டிருந்தோம்! திடீரென கீழே ஒரே கூச்சலும்,கலவரமுமாக இருந்து! என்னவென்று ஓடிச்சென்று பார்த்தால்! அங்கே நண்பனின் மாமா முழுபோதையில், பேச்சின் வேகத்தில் நான்கு மனிதர்களுக்கு சமமாகவும்! நிதானத்தில் அரை மனிதனாகவும் நின்றிருந்தார்! அவருடன் உறவினர்கள் சில வாக்குவாதத்தில் இருந்தனர்,அந்த சண்டையில் அவர் பழைய குடும்ப சண்டைகளை எல்லம் சொல்லி விளக்கம் கேட்க! ஒருவருக்கொருவர் தவறான வார்த்தைகளை பயன்படுத்த பலர் தடுத்தும் இரு தரப்பிலும் சமாதானமாகவில்லை!சண்டை வளர்ந்துகொண்டே போனது,திருமணவீடு மெல்ல மெல்ல பெரிய சண்டைக்களமாக மாறிக்கொண்டிருந்த்து.

"மது உள்ளே போனால் மதி வெளியே போய்விடுகிறது" என்ற கண்ணதாசனின் அனுபவ வரிகளுக்கு மிகச்சிறந்த உதாரணமாக அவர்கள் இருந்தார்கள்! இந்த கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் மாம்ஸ் தான்!
என் நண்பன் நண்பர்கள் சிலரிடமும் , உறவினர்கள் சிலரிடம் கண்சாடை காண்பித்து காரை காண்பித்தான்! உடனே சிலர் சேர்ந்து! மாமாவை ஒரே அச்சாக தூக்கி, அவர் திமிறிக்கொண்டு வர! விடாமல் அமுக்கி டாடாசுமோ காருக்குள் தூக்கிவைத்து அழுத்தி பிடித்துகொண்டு! ஒருவீட்டிற்கு இழுத்துச்சென்று வீட்்டிற்குள் அடைத்து, சற்று நிதானத்தில் இருந்த அவருடைய நண்பர் ஒருவரை உடன் இருக்கவைத்து விட்டு திரும்பினோம்!இன்னொரு தரப்பினை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது, மறுநாள் தாமதமாகவே சென்று போதை தெளிந்த பிறகு அவர்களை எழுப்பி, கிளப்பி கூட்டி வர! நண்பனிடம்" மாப்ள மன்னிச்சுக்கடா மாப்ள!நானும் குடிக்க கூடாதுனாதான்டா நினைச்சேன் , சொந்தகார பயலுக எல்லம் சேர்ந்து கூப்பிடவும் பழக்கதோசத்து ஆசைல போய்ட்டேன்! சரி அதிகம் குடிக்காம அளவா! குடிச்சுட்டு நிதனாம இருக்கலாம்னு தான் நினச்சேன், ஆனால் அங்கே போய் அப்படி இருக்க முடியல! மனசு மாறிடுச்சு!அவனுகளோட சேர்ந்து நானும் மாறிட்டேன்!" போதைல இருந்ததாலதான் மாப்ள அப்படி நடந்துகிட்டேன்! இல்லாட்டி அப்படி செய்வேனா!?"" என்றெல்லாம் ஏதேதோ சொல்லி மன்னிப்பு கேட்டுகொண்டிருந்தார்!

பலர் மத்தியில் அவரின் மதிப்பும் மரியாதையும் குறைந்ததுதான் மிச்சம்!தவறான சூழ்நிலைகளில் அவர் கொஞ்சம் யோசித்திருந்தால் இதுபோல அவமரியாதைகளைலிருந்து தப்பித்திருக்கலாம் மனம் அடிமையானதால் முடியவில்லை! பொதுவாக எந்த ஒரு தவறையும் திருத்திக்கொள்ள நினைப்பவர்கள், தவறான சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டு தவறுகளை தவிர்ப்பது கடினம்! ஆனால் அதற்குபதிலாக தவறான சூழ்நிலைகளையே தவித்துவிடுவது சுலபம்!

~~நம்பிக்கை பாண்டியன்