Wednesday, June 06, 2007

என்னை சுற்றி
(தவறான சூழ்நிலைகளை தவிர்த்தால், தவறுகளை தவிர்க்கலாம்!)

நம்மை சுற்றி இருக்கும் சில மனிதர்களின் தவறான செயல்களின் விளைவுகளை சிந்தித்து பார்த்தால் நம் சொந்த அனுபவமின்றியே சில பாடங்களை கற்றுகொள்ளலாம்! என்னுடைய நண்பன் ஒருவனின் அண்னனுடைய திருமணவிழா!பொதுவாகவே சிறந்த நண்பர்களின் வீட்டுத்திருமணவிழா என்றால் முதல் நாள் இரவே சென்று நண்பனுக்காக திருமணவீட்டில் சிறு சிறு உதவிகள் செய்வது, அரிதாகவே சந்திக்கும் பல நண்பர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே இரவு முழுவதும் ஊர்சுற்றி திருமணவாழ்த்து போஸ்டர் ஒட்டுவது,பிறகு பெரிய அரட்டை கச்சேரிநடத்துவது வழக்கம் !ஒரு குழுவினருக்கு கூடுதலாக "உற்சாகமான கவனிப்பு" கச்சேரியும் நடப்பதுண்டு ,இப்போதெல்லாம் நண்பர்களின் திருமண வீடுகளில் இரவு தாமதமாக சென்றால் உண்பதற்கு உணவை பார்க்க முடிகிறதோஇல்லையோ!உற்சாகமான "கவனிப்பை" பார்க்க முடியும்!

மது அருந்துவதை, தவறு என்றும், அடிகடி குடித்தால்தான் தவறு, அவ்வப்போது அருந்தினால் தவறில்லை என்றும், அளவாக குடித்தால் தவறில்லை என்றும் எவ்வளவு குடித்தாலும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருந்தால் தவறில்லை என்றும்! எவ்வளவு ஆர்ப்பாட்டாமானலும் வெளியில் செய்யாமல் விட்டிற்குள் செய்தால் தவறில்லை என்றும்!ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நினைக்கிறார்கள், பாதிப்புகள் வரும்போதுதான் அதை தவறு என்று உணருகிறார்கள். அந்த நண்பனும், நண்பர்களில், உறவினர்களில், சிலரின் பிடிவாதமான அன்புக்கட்டளைகளால் ஒரு அட்டைபெட்டி நிறைய பாட்டில்களுடன் ஏற்பாடு செய்திருந்தான்!

அன்று இரவு அவனுடைய சொந்த மாமா ஒருவரை பார்த்து!"" மாமா, இன்னிக்கு ஒருநாளைக்கு ஒழுங்கா இருங்க மாமா அசிங்கபடுத்திடாதிங்க" என்று கெஞ்சி சொல்லிவிட்டு வந்தான்! என்னவென்று விசாரித்ததில் "அவர் சிறந்த"குடிமகன்" என்றும்!இது போன்ற விழா வைபவ சூழ்நிலைகளில் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியாதென்றும்! மது அருந்திவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் கூட பரவாயில்லை! அளவில்லாத ஆர்ப்பாட்டம் செய்வார் என்றும்! இன்று ஒரு நாள் அவர் குடிக்காமல்இருப்பது நல்லது, இல்லாவிட்டால் வந்திருக்கும் உறவினர்களுக்குள் ஏதாவதுசண்டையை ஏற்படுத்திவிடுவார்! அதனால்தான் அவ்வாறு கேட்டுகொண்டதாகவும் தெரிவித்தான்.

நாங்கள் மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டோம்! எங்கள் நண்பர்களிலும் சிலர் தங்கள் கடமைகளை சரியாக மு(கு)டித்துவிட்டு வர எல்லோரும் திருமண மண்டபத்தின் மாடியில் சுற்றி அமர்ந்து பேசி சிரித்துகொண்டிருந்தோம்! திடீரென கீழே ஒரே கூச்சலும்,கலவரமுமாக இருந்து! என்னவென்று ஓடிச்சென்று பார்த்தால்! அங்கே நண்பனின் மாமா முழுபோதையில், பேச்சின் வேகத்தில் நான்கு மனிதர்களுக்கு சமமாகவும்! நிதானத்தில் அரை மனிதனாகவும் நின்றிருந்தார்! அவருடன் உறவினர்கள் சில வாக்குவாதத்தில் இருந்தனர்,அந்த சண்டையில் அவர் பழைய குடும்ப சண்டைகளை எல்லம் சொல்லி விளக்கம் கேட்க! ஒருவருக்கொருவர் தவறான வார்த்தைகளை பயன்படுத்த பலர் தடுத்தும் இரு தரப்பிலும் சமாதானமாகவில்லை!சண்டை வளர்ந்துகொண்டே போனது,திருமணவீடு மெல்ல மெல்ல பெரிய சண்டைக்களமாக மாறிக்கொண்டிருந்த்து.

"மது உள்ளே போனால் மதி வெளியே போய்விடுகிறது" என்ற கண்ணதாசனின் அனுபவ வரிகளுக்கு மிகச்சிறந்த உதாரணமாக அவர்கள் இருந்தார்கள்! இந்த கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் மாம்ஸ் தான்!
என் நண்பன் நண்பர்கள் சிலரிடமும் , உறவினர்கள் சிலரிடம் கண்சாடை காண்பித்து காரை காண்பித்தான்! உடனே சிலர் சேர்ந்து! மாமாவை ஒரே அச்சாக தூக்கி, அவர் திமிறிக்கொண்டு வர! விடாமல் அமுக்கி டாடாசுமோ காருக்குள் தூக்கிவைத்து அழுத்தி பிடித்துகொண்டு! ஒருவீட்டிற்கு இழுத்துச்சென்று வீட்்டிற்குள் அடைத்து, சற்று நிதானத்தில் இருந்த அவருடைய நண்பர் ஒருவரை உடன் இருக்கவைத்து விட்டு திரும்பினோம்!இன்னொரு தரப்பினை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது, மறுநாள் தாமதமாகவே சென்று போதை தெளிந்த பிறகு அவர்களை எழுப்பி, கிளப்பி கூட்டி வர! நண்பனிடம்" மாப்ள மன்னிச்சுக்கடா மாப்ள!நானும் குடிக்க கூடாதுனாதான்டா நினைச்சேன் , சொந்தகார பயலுக எல்லம் சேர்ந்து கூப்பிடவும் பழக்கதோசத்து ஆசைல போய்ட்டேன்! சரி அதிகம் குடிக்காம அளவா! குடிச்சுட்டு நிதனாம இருக்கலாம்னு தான் நினச்சேன், ஆனால் அங்கே போய் அப்படி இருக்க முடியல! மனசு மாறிடுச்சு!அவனுகளோட சேர்ந்து நானும் மாறிட்டேன்!" போதைல இருந்ததாலதான் மாப்ள அப்படி நடந்துகிட்டேன்! இல்லாட்டி அப்படி செய்வேனா!?"" என்றெல்லாம் ஏதேதோ சொல்லி மன்னிப்பு கேட்டுகொண்டிருந்தார்!

பலர் மத்தியில் அவரின் மதிப்பும் மரியாதையும் குறைந்ததுதான் மிச்சம்!தவறான சூழ்நிலைகளில் அவர் கொஞ்சம் யோசித்திருந்தால் இதுபோல அவமரியாதைகளைலிருந்து தப்பித்திருக்கலாம் மனம் அடிமையானதால் முடியவில்லை! பொதுவாக எந்த ஒரு தவறையும் திருத்திக்கொள்ள நினைப்பவர்கள், தவறான சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டு தவறுகளை தவிர்ப்பது கடினம்! ஆனால் அதற்குபதிலாக தவறான சூழ்நிலைகளையே தவித்துவிடுவது சுலபம்!

~~நம்பிக்கை பாண்டியன்

No comments: