Monday, September 22, 2008

உதவி!

(சிறுகதை ~நம்பிக்கைபாண்டியன்)

பாலாவுடன் பேசிகொண்டே கல்லூரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எங்களை நோக்கி ஓடி வந்த செல்வா "டேய் மச்சான் அவசரமா ஒரு ஐம்பது ரூபாய் வேண்டும்! நாளை தந்துவிடுகிறேன்" என்றான் பாலாவிடம்!

பாலாவோ சிறிதும் யோசிக்காமல் "மாதக்கடைசி ஆகிவிட்டது என்னிடமும் பணம் இல்லை"என்றான், அது பொய் என்பதை தெரிந்து கொண்டவனாய் முகத்தை சுருக்கி சலிப்பாய் பார்த்தபடி" பரவாயில்லைடா" என்றபடி நகர்ந்தான் செல்வா!


பாலா அப்படி சொன்னது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்த‌து! வசதியில் சுமாரான குடும்பம்தான் அவனுடையது! ஆனால் வகுப்பில் பாலா நன்றாக படிக்கும் மாணவன், அவன் வீடு இருக்கும் பகுதியில் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து ப‌த்தாம் வகுப்பு மற்றும் ப‌னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் சென்டர் நடத்துகிறான்,நிறைய மாணவர்கள் படிப்பதால் நல்ல வருமானம் வருகிறது அதனால் எப்போதும் பாலவிடம் பணம் இருக்கும்!நான் கூட ஒருமுறை அவசிய செலவிற்கு பாலவிடம்தான் உதவிக்கு நின்றிருக்கிறேன், மறுக்காமல் செய்திருக்கிறான்!


"ஏண்டா பணம் இல்லையென்று சொன்னாய்" என்று கேட்க நினைத்தேன் ஆனாலும் "அவன் பணத்தை அவன் என்ன வேண்டுமானலும் செய்யலாம் நாம் கேள்வி கேட்பது சரியல்ல! எனற எண்ணம் தடுக்கவே கேட்கவில்லை! இருவரும் வகுப்பறைக்குள் நுழைந்தோம்!


வெளியூரிலிருந்து வந்து கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி படிக்கும் லிங்கம் முன் பெஞ்ச்சில் தலைவைத்து சாய்ந்து படுத்தபடி அமர்ந்திருந்தான் !

"என்னடா மச்சான் சாப்பிட போகவில்லையா இன்னும் இங்கே இருக்கிறாய்"என்றேன்,


" பசியில்லைடா அதனால்தான் போகவில்லை" என்றான் லிங்கம்,


"பசிக்கவில்லையா? சாப்பிட பண‌மில்லையா உண்மையை சொல்" என்றான் பாலா!


லிங்கம் தயங்கிய படியே" இன்று தேதி 31 ஆச்சுடா, ஊரில் இருந்து அப்பா வர 2 நாள் ஆகும்!அதானால்தான் செலவை குறைத்துவிட்டேன்!காலையில் லேட்டாகத்தான் சாப்பிட்டேன்!ராத்திரி வேகமா சாப்பிட்டால் பசி தெரியாது" என்றான்.


சட்டென்று தனது சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் ஒன்றை எடுத்து அவனது சட்டைப்பையில் திணித்து" முதலில் போய் சப்பிட்டு வா" என்றான் பாலா.

தயங்கியவனின் தோள்களை பிடித்து வகுப்பறையின் வாசல் வரை தள்ளிச்சென்று "நேரமாகிறது வேகமாக‌ போய் சப்பிட்டு வா"என்றான்.


பாலவின் செயல் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, சற்று முன் செல்வா 50 ரூபாய் கேட்டபோது இல்லை என்றவன், இப்போது லிங்கம் கேட்காமலேயே 100 ரூபாய் கொடுத்தனுப்புகிறான்.என்ன காரணம்? முதலில் தயங்கினாலும் நண்பன் என்ற உரிமையில் ஏன் இந்த வித்தியாசம் என்பதை பாலவிடம் கேட்டுவிட்டேன்.


மெலிதாய் சிரித்துவிட்டு " செல்வா என்னிடம் பணம் கேட்ட போதும் என்னிடம் பணம் இருந்தது, ஆனால் அவன் எதற்காக பணம் கேட்டான் தெரியுமா? நம் வகுப்பில் சில நண்பர்கள் சேர்ந்து இன்று மதியக் காட்சிக்கு திரைப்படம் பார்க்க செல்கிறார்கள்!அத‌ற்கான‌ ப‌ண‌ப்ப‌ற்றாக்குறைக்கு என்னிட‌ம் வ‌ந்தான், நான் ம‌றுத்துவிட்டேன்" ஆனால் லிங்கம் சாப்பிடுவ‌த‌ற்கே ப‌ண‌ம் கேட்க‌ த‌ய‌ங்கி ப‌சியோடு இருந்தான்! அத‌னால்தான் கேட்க‌ம‌லேயே உத‌வி செய்தேன்!


"அடிப்ப‌டைத்தேவைக‌ளுக்காக‌ என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய‌லாம்! ஆனால் அதிக‌ப‌ட்ச‌ தேவைக‌ளுக்காக‌ எந்த‌ உத‌வியும் செய்வ‌தில்லை" என்ற பழக்கம் என‌க்கு எப்போதும் இருக்கிறது! அத‌னால் தான் அப்ப‌டி ந‌ட‌ந்துகொண்டேன் என்ற‌ பாலாவின் கொள்கையும், ந‌ட்பும் என் ம‌ன‌தின் உய‌ர‌த்தில் அமர்ந்திருந்த‌து!

Sunday, September 21, 2008

படக்கவிதை!

ஊருக்கு சென்றவள்!


ஊருக்கு சென்றவள்!

கோலமிடாத
வாசல்!
சுவையற்ற
உணவு!

துவைக்காத
துணிகள்!
துலக்காத
பாத்திரங்கள்!

தூசு படர்ந்த
அறைகள்!
சிதறிக் கிட‌க்கும்
பொருட்கள்!

பசிக்காக குரைக்கும்
வீட்டு நாய்!
நீரின்றி வாடும்
பூச்செடிகள்!
காய்ந்த பூக்களுடன்
கடவுள் புகைப்படங்கள்!

எல்லாம் உணர்த்துகின்றன
ஊருக்குச் சென்ற‌
அம்மாவின் அருமையை!

- நம்பிக்கைபாண்டியன்

Wednesday, August 06, 2008

நட்பு!

லூசு
எருமை
பன்னி
பிராடு
முட்டாள், என‌
என்ன சொல்லி
திட்டினாலும்!
சிரித்துகொண்டேதான்
பதிலளிக்கிறான்!
நண்பன் என்பதால்!

~நம்பிக்கைபாண்டியன்

மழைக்காதல்!

மழை பிடிக்கும்
என்றாலும்
குடைபிடித்து
வ‌ருகிறாய்!
எனைப் பிடிக்கும்
என்றாலும்
காத‌லிக்க
ம‌றுப்ப‌துபோல்!
~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

Thursday, July 31, 2008

நம்புங்கள் நடக்கும்! (அறிவியல் சிறுகதை போட்டிக்காக)

(கதைக்கு காலில்லை என்ற தத்துவத்தின் அடைப்படையில் படிக்கவும்)

2007 ல் நான் பிறந்தபோது இருந்ததைவிட இந்த 45 வருடத்தில் உலகம் பல மாற்றங்களை கண்டிருந்தது! இந்தியா உட்பட பலநாடுகள் வல்லரசாக மாறியிருந்தது எல்லோரும் வீடுகளிலேயே இருந்தனர்!

எல்லோரிடைய வீட்டிலும் சுவற்றில் ஒட்டிவிடும் அளவிலான மெல்லிய திரையும் அதற்குள்ளாகவே 8000ஜி.பி, மைக்ரோ மெமரி கார்டும் கொண்ட கம்யூட்டர்கள் இருந்தன, காற்று உள்ள‌ இடமெங்கும் இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும், வீட்டில் இருந்துகொண்டேதான் எல்லாக் குழந்தைகளும் படித்தன! தேர்வு எழுத ம‌ட்டும் பள்ளிக்கு சென்றன! அனைத்து அலுவலக பணிகளும் வீட்டில் இருந்தபடியே நடந்தன! மிகவும் அவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும்!குடும்பத்திற்குள் பிரச்சனைகளும் அன்பும் அதிகரித்தன! பத்துக்கு பத்து அடி கொண்ட அறைதான் 1000ம் பேர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தின் அலுவலகம்!
உங்க‌ள் வீட்டு வாச‌லிலேயே வ‌ந்து அழைத்துச்செல்லும் கால் விமான‌ங்க‌ள் வாட‌கைக்கு கிடைத்த‌ன‌

816 வது மாடியில் இருக்கும் ஒரு பெண் இன்டர்நெட்டில் ஒரு காபி ஆர்டர் செய்ததும் அடுத்த அரைமணி நேரத்தில் ஹெலிகாப்டரில் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்யப்பட்டது! நடமாடும் மொபைல் விமான‌ கோவில்க‌ளும் ,சர்ச்சுகளும், மசூதிகளும், அதிகரித்தன!ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் உடலில் பொருத்த டெஸ்ட் டியூப் இதயமும் தயாரிக்கும் கடைகள் ஒவ்வொரு தெருவிலும் தொடங்கப்பட்டன!
ஒரு மாத்திரை சாப்பிட்டால் 10 நாட்களுக்கு பசிக்காத அளவுக்கு தேவையான கலோரி சக்திகள் கொண்ட மாத்திரைகளும் கண்டிபிடிக்கப்பட்டிருந்தன,

எத்த‌னையோ பிர‌ம்மிக்க‌த்த‌க்க‌ மாற்ற‌ங்க‌ளில் மிக முக்கிய‌மான‌து சாதரணமாக இருந்த எனது கிராமத்து பள்ளி பருவத்து நண்பன் அர‌ங்க‌நாத‌னின் நிறுவ‌னம் நாட்டிலேயே கடந்த‌ 7 ஆண்டுகளாக அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது, ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 27% உயருகிற‌து!இவனுட‌ன் கூட்டு சேர்ந்து தொழில் செய்ய‌வும், இவருக்கக தொழில் முதலீடு செய்யவும் உல‌கில் ப‌ல‌நாடுகளும்.பணம் படைத்தவர்களும் ஆர்வ‌ம் காட்டுகின்ற‌ன‌ர்! உல‌கின் புகழ் பெற்ற ப‌ல‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ள் உரையாற்ற‌ அழைப்பு விடுத்த‌வ‌ண்ண‌ம் இருக்கின்றன,

என‌க்கு கொஞ்ச‌ம் பொறாமையாக‌வே இருந்த‌து, ப‌ள்ளிகூட‌த்தில் ப‌டித்த‌ போது என்னை விட‌ குறைவான‌ ம‌திப்பெண் எடுத்த‌வ‌ன்,நான் உய‌ர் தொழில் நுட்ப‌ ப‌டிப்பு படிக்கும் போது பேருக்கு ஒரு டிகிரி படிப்பை படித்தவன், ச‌ரியாக‌ ப‌டிக்காத‌தால் வேலை இல்ல‌ம‌ல் திரிந்த‌வ‌னுக்கு இவ்வ‌ள‌வு புக‌ழும் பெருமையுமா என்று ஆச்ச‌ர்ய‌மாக‌வும் இருந்த‌து!

அர‌ங்க‌நாதனின் நிறுவனத்திற்கு அவன் உலகின் எல்ல நாடுகளிலும் கிளை உள்ளது,அந்தந்த நாடுகளிலேயே ஆராய்ச்சிகூடமும் வைத்திருக்கிறார்கள், இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ன் என் ந‌ண்ப‌ன் என்ப‌தை நினைக்கும்போது ஒரு வகையில் பெருமையாக‌வே இருக்கிற‌து!ஆனால் அவனுடனிரிந்த‌ நட்பு முறிந்தநாட்களை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது!

இருபது வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் அவன் ப‌டித்து வேலையில்லாம‌ல் ஊரில் விவ‌சாய‌ம் பார்த்துகொண்டிருந்த‌ போது நான் வேலை பார்த்த‌ நிறுவ‌ன‌த்தில் மேனேஜ‌ரிட‌ம் கெஞ்சி கேட்டு ஒரு வேலை வாங்கி கொடுத்தேன்! இருபது நாட்க‌ள்தான் வேலைபார்த்திருப்பான், பிறகு வேலை பிடிக்கவில்லை என்றி சொல்லமல் கூட ஓடிவந்துவிட்டான், இவனுக்காக‌ பரிந்துரைத்த என‌க்கும் அலுவ‌ல‌க‌த்தில் கெட்ட‌ பெய‌ர் ஏற்ப‌ட்ட‌து,

ஏன்டா இப்ப‌டி செய்தாய் என்று கேட்ட‌ போது" என‌க்கு இதெல்லாம் பிடிக்க‌ல‌டா, என‌க்கு விவ‌சாய‌ம்தான் ச‌ரிப‌ட்டு வ‌ரும்" என்றான்"

என‌க்கு அதைக்கேட்டு சிரிப்பாக‌ வ‌ந்தது! ஏற்க‌ன‌வே விவ‌சாய‌ம் பார்த்தவுங்க எல்லம் விட்டுட்டு ஓடிட்டாங்க'நீ மட்டும் என்ன சாதிக்கவா போகிறாய்! விசாயத்தை பொறுத்தவரைக்கும் வாங்கி விக்கிறவனுக்குதான் லாபம், உற்பத்தி செய்யுறவனுக்கு நஷ்டம்தான்! இனி எல்லாம் கப்யூட்டர் உலகம்! சாப்ப‌ட்டுக்கு ப‌தில் சக்தி தரும் கலோரி மாத்திரைதான் சாப்பிட‌ப்போறாங்க‌! விவ‌சாய‌ம்னு சொல்லி வீணாப்போகாம‌ பொழைகிற‌துக்கு வழியை பாரு என்று சொல்லிவிட்டு வ‌ந்தேன்! அத‌ன் பிற‌கு அவ‌னை ச‌ந்திக்க‌ வில்லை!

நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌கு அவ‌னை ந‌க‌ர‌மாக‌ மாறியிருந்த‌ என் சொந்த‌ கிராம‌த்துக்குசென்ற‌ போது, அர‌ங்க‌நாத‌ன் எதிரே காரில் வ‌ந்தான், எப்ப‌டி இருக்கிறாய் என்று அழைத்த‌ப‌டியே காரில் இருந்து இறங்கி வ‌ந்தான் அதே ப‌ழைய‌ ந‌ட்புட‌னும் எளிமையுட‌னும்!

அருகில் இருந்த‌ அவ‌னுடைய‌ தோட்ட‌த்திற்கு சென்று பேசிகொண்டிருந்தோம்! தோட்ட‌த்தில் அதி ந‌வீன‌மாக‌ விவ‌சாய‌முறைக‌ள் மாறியிருந்த‌த‌ன‌! வ‌ய‌ல் வெளிக‌ளில் கூட‌ ஆங்காங்கே க‌ண்கானிப்பு கேம‌ராக்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்டிருந்த‌ன‌! தோட்ட‌ம் முழு‌தும் த‌ண்ணீர் குழாய்க‌ள் ப‌திக்க‌ப்ப‌ட்டு அவைக‌ள் க‌ம்ப்யூட்ட‌ரில் சாப்ட்வேரில் இணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌த‌ன‌ எங்கு எப்போது த‌ண்ணீர் பாய்ச்ச‌வேண்டும் என்று எங்கிருந்தாலும் இண்ட‌ர்நெட்டில் தீர்மானித்து ப‌ராம‌ரிக்க‌லாம்!

எப்படி உன்னால் இப்படி விவசாயத்தில் சாதிக்க முடிந்தது என அவனிடம் கேட்டபோது " நானும் முதலில்விவசாயம் தோல்விதான் இதில் ஜெயிக்க முடியாது என நினைத்தேன்! முதலில் சில விவசாய நண்பர்களுடன் சேர்ந்து உலகளாவிய நிறுவனம் இன்றை தொடங்கினோம், இதனால் உற்பத்தி பொருளை நல்லவிலைக்கு நாங்களே விறபது எளிதாக இருந்தது! மருத்துவ உலகில் நோய்கள் அதிகரித்து வருவதால் செயற்கை மருந்துகள் தவிர்த்து இயற்கை சார்ந்த விவசாயத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது, விவசய நிலங்கள் உலக அளவில் குறைவாக இருப்பதால் இருக்கும் மக்கள் தொகைக்கு உற்பத்தி போதவில்லை! மக்களின் வருமானமும் அதிகரித்துவிட்டதால் விளை பொருட்களுக்கு நல்ல‌ விலையே கிடைக்கிறது

புதுப்புது விவ‌சாய‌ முறைக‌ள் ஆனால் இய‌ற்கையோடு ஒன்றியே செய்யும்ப‌டி பின்ப‌ற்றுகிறோம்!இந்த நிறுவனத்திற்கு நான் வெறும் தலைமை மட்டும் தான்! முதாலளி இல்லை, இதில் உறுப்ப்பினராக உள்ள கோடிக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இதன் முதலாளிகள் நிறைய‌ ப‌ண‌ம் முத‌லீடு செய்து, விவ‌சாய‌ அபிவிருத்திக்கான‌ ஆராய்ச்சிக‌ளில் இற‌ங்கியிருக்கிறோம்!அத‌ன் விளைவாக‌ ப‌ல‌ ந‌ல்ல‌ ப‌ல‌ன்க‌ள் கிடைத்துள்ளன!

நிழ‌ல் விவ‌சாய‌ம் என்ப‌து இந்த‌ ஆராய்ச்சிக்கு கிடைத்த‌ மிக‌ப்பெரிய‌ வெற்றி! சில‌ அரிய‌ வ‌கை மூலிகைகளில் உள்கட்டமைப்புகளின் மாற்ரம் செய்வதால் ஓளிச்சேர்க்கையினால் கிடைக்கும் ப‌ச‌சைய‌த்தின் தேவையினனை குறைக்கலாம், இதனால் வீட்டிற்குள் ஒளிச்சித‌ற‌ல் மூல‌ம் கிடைக்கும் வெளிச்ச‌த்திலேயே இந்த‌ ப‌யிர்க‌ள் ந‌ன்கு வ‌ள‌ரும், சில‌வ‌கை ம‌ருந்துக‌ளுக்கான‌ தேவை அதிக‌ம் இருப்ப‌தால்! எல்லோரும் இதை ஒரு வ‌ருமான‌ வாய்ப்பாக‌ செய்கிறார்க‌ள்! அதிக‌ரித்து வ‌ரும் புவி வெப்ப‌மும் குறைந்து வீட்டிற்குள் வெப்ப‌ம் குறைகிற‌து! வீடுக‌ளில் ஜ‌ன்ன‌ல், ம‌ற்றும் மாடிக‌ளில் கூட‌ இதை வ‌ள‌ர்க்கிறார்க‌ள்! என்றான்

இய‌ந்திர மயமாகிப்போன இந்த‌ உல‌க‌த்தில் க‌லோரி மாத்திரைக‌ள் எல்லாம் வ‌ந்துவிட்ட‌ன‌, எதிர்கால‌த்தில் இன்னும் நிரைய‌ க‌ண்டிபிடிப்புக‌ள் வ‌ர‌லாம் அப்பொதும் விவ‌சாய‌ம் வெற்றி பெறுமா என்றேன்! சிரித்துகொண்டே நிச்ச‌ய‌மாக‌ என்றான்!

உலகம் எவ்வளவுதான் மாறினாலும் க‌டைசி ம‌னித‌ன் இருக்கும் வ‌ரை விவ‌சாய‌த்திற்கு தேவையும் மதிப்பும் இருக்கும் ஏனென்றால், ம‌னித‌ன் எப்போதும் உண‌ர்ச்சிகளுக்கு உட்ப‌ட்ட‌வ‌ன்! சாப்பாடு என்ப‌து சுவை என்ற‌ உண‌ர்ச்சியோடு தொட‌ர்புடைய‌து அத‌னால் அதைவிட்டு வில‌கிநிற்க‌ முடியாது!இனி வரும் காலங்களில் விவ‌சாய‌ம் எப்போதும் ஜெயிக்கும் என்று ந‌ம்பிய‌தால்தான் அது ந‌ட‌ந்திருக்கிற‌து, இன்னும் ந‌ம்புவேன் ந‌ட‌க்கும் என்றான்!


(நம்பிக்கைபாண்டியன்)

உயிரைத்தேடி..............(அறிவிய‌ல் சிறுக‌தை போட்டிக்காக‌)

(ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்)

உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் முண்ணனியில் இருக்கும் பத்து நாடுகள் சேர்ந்து "அராக்" (ARAC- Asrto Resarch Association Countries) என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு ஆரய்ச்சிகளை நடத்த ஆரம்பித்தன, "செவ்வாய் கிரகத்தில் மனிதன் இறங்கி ஆராய்ச்சி செய்ய" திட்டமிட்டு அத‌ற்காக உறுப்பு நாடுகளின் 20 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு நியமிக்கப்பட்டது!

அவர்கள் இரண்டு வருட ஆராய்ச்சியின் விளைவாக செவ்வாயில் நிலவும் தட்ப‌ வெப்பம், மற்றும் அழுத்த சூழ்நிலையில் வாழப் பழகும் ஒரு மனிதனை உருவாக்கினால் அவனால் செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய முடியும்! என முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள்! ஒரு மனிதனை குழந்தையிலிருந்தே இதற்கு தாயார்படுத்த வேண்டும் என்று இரண்டு மாத கார்ப்பிணிகள் பலர் ஆரய்ய்ச்சியில் பயன்படுத்தப்பட்டனர், கர்ப்பிணிகளில் சிலர் ஆராய்சிக்காக உத‌வும் மனப்பானமையுடன் இதற்கு சம்மதித்தனர்,இன்னும் சிலரோ பெரும் பணத்திற்காக சம்மதித்தனர்,

பெரும் வெப்பத்தையும் குளிரையும், காற்றழுத்த மாறுபாடுகளையும் தாங்கும் விதத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் உடல் எலும்புகளும் த‌சைக‌ளும் உருவாகும்ப‌டி, சில‌ விநோத‌மான‌ ஹார்மோன்க‌ளூம், வேதிபொருட்களும் க‌ருவில் செலுத்த‌ப்ப‌ட்ட‌ன!செவ்வாய் கிரகத்தில் சுவாசிக்கும் சுவாச‌ உறுப்புகளிலும் சில மாற்ற‌ங்கள் செய்யப்பட்டன.இதில் பல‌ க‌ர்ப்பிணிக‌ள் இற‌ந்த‌ன‌ர்,க‌ருவிலேயே சில‌ குழ‌ந்தைக‌ள் இற‌ந்த‌ன‌ சில‌ குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த‌வுட‌ன் இற‌ந்த‌ன‌, ஆனாலும் விஞ்ஞானிக‌ள் தொட‌ர்ந்து முயற்சித்த‌தால் 67 வது முயற்சியாக ஆண்குழந்தை ஒன்று வெற்றிகரமாக உயிர் பிழைத்தது!ஜனவரி மாதம் பிறந்ததால் கூப்பிட‌ எளிதாக அவ‌னுக்கு"ஜனா" என்று பெயரிட்டனர்,ஆராய்ச்சிச்சிக்கு இன்னொரு குழந்தை இருப்பது நல்லது எனத்தோன்றியதால் தொடர்ந்து முயற்சித்ததில் மேலும் பலர் உயிரிழக்க அடுத்த ஒருவருடத்தில் 106 வது முயற்சியாக‌ பெண்குழ‌ந்தை ஒன்று பிற‌ந்த‌து!பிப்ர‌வ‌ரி மாத‌ம் பிற‌ந்த‌ அவளுக்கு "பிபா" என‌ பெய‌ரிட்ட‌ன‌ர்!பல குழ்ந்தைகளின் இறப்பை அறிந்த ஐ.நா. சபையின் ரகசிய க‌ண்காணிப்பு பிரிவு, மேலும் இதை தொடர தடை விதித்தது!கண்காணிப்பாளரையும் நியமித்தது! இது பற்றிய தகவல்கள் வெளி உலகிற்கு தெரியாமல் ரகசியமாகவே இருந்தது!

செவ்வாய் கிரகத்தின் த‌ட்ப வெப்ப‌ சூழல், மற்றும் ஈர்ப்பு விசை மாறுபாட்டிற்கு சிறிது சிறிதாக‌ மாறும்ப‌டி‌ த‌னி ஆராய்ச்சி உள் அர‌ங்க‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள் இருவ‌ரும் 24 மணிநேர‌மும் க‌ண்கானிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்!அனைத்து விதமான கல்வியும் தகவகளும் அவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. சில நாட்கள் திட‌ உண‌வும், சில‌ நாட்க‌ள் க‌லோரி மாத்திரைக‌ளும் உண‌வாக‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ன!ஜனா சிறுனைல் இருந்தே தகவ‌ல் தொழில் நுட்பங்களை கற்றுகொள்வதிலும் பயன்படுத்துவதிலும் சிறந்த நிபுணராக இருந்தான் ,எதையும் எளிதில் புரிந்துகொள்வான்,ஆனால் சோம்பேறியாக இருந்தான். பிபா மிகவும் சுறுப்பாக இருப்பாள், ஆனாள் மெதுவாகவே புரிந்துகொள்வாள் அங்கிருந்த‌ ஏழு பெண் விஞ்ஞானிக‌ளுக்கும் "பிபா" செல்ல‌ப்பெண்ணாக‌ விள‌ங்கினாள்,இணைந்து பணியாற்றப் போவதால் பிபாவும், ஜ‌னாவும் அவ்வ‌போது ச‌ந்தித்து பேச‌ வாய்ப்பு த‌ர‌ப்ப‌டும், நலம் விசாரிக்கவும்,ஆராய்ச்சி ப‌ற்றியும்தான் பேச‌முடியும், ந‌ட்பாக‌ கூட‌ ம‌ன‌தில் நினைப்ப‌தையெல்லாம் பேச‌முடியாது தீவிர‌ க‌ண்கானிப்பில் இருப்ப‌தால்!இதை பிபா பெரிதாக‌ எடுத்துகொள்ள‌வில்லை! ஆனால் ஜனாவுக்கு இது மிக‌வும் ஏமாற்ற‌மாக‌ இருந்த‌து வ‌ருட‌ங்க‌ள் ஓட‌ ஆர‌ம்பித்த‌தும்! ஜ‌னா அவளை பார்வைக‌ளாலேயே காத‌லிக்க‌ ஆர‌ம்பித்தான்!நண்பர்களாக இருந்த விஞ்ஞானிகள் சொன்ன காதல் கதைகளை கேட்டு நிறைய கற்பனை செய்தான், தனிமையில்தான் அவளிடம் மனம் விட்டும் பேசமுடியும் என்று காத்துகொண்டிருந்தான்

செவ்வாய் பற்றி இதுவரை அறிந்த தகவல்படி முழுமையாக‌ பயிற்ச்சி கொடுத்த‌தும்! 2035 ஆம் ஆண்டு மே மாத‌ம் ப‌ய‌ண‌‌த்தேதி குறிக்க‌ப்ப‌ட்ட‌து!
இது உல‌கின் முக்கிய‌மான‌ ஆராய்ச்சி, இவர்கள் கையில் தான் அனைத்தும் இருக்கிற‌து, இவர்க‌ளின் வெற்றி பெற்றால் இன்னும் ப‌ல‌ ஆராய்சிக‌ள் தொட‌ரும், இல்லையென்றால் இது ப‌ற்றிய‌ ஆராய்ச்சிக‌ள் அனைத்தும் நிறுத்த‌ப்ப‌டும்!என‌ "அராக்" நாடுக‌ள் முடிவெடுத்த‌ன, ஜனாவும் பிபாவும் ஒரு வ‌ருட‌த்திற்கு தேவையான‌ க‌லோரி மற்றும் நீர் மாத்திரைக‌ளுடனும்,செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய சிறியரக சூரிய பேட்டரி பைக் ஒன்றையும் உடன் எடுத்துகொண்டு திட்டமிட்ட நாளில் செவ்வாயை நோக்கி "மார்ஸ்பைண்டர் 3" விண்கலத்தில் ப‌ய‌ணித்தார்க‌ள் !இவ‌ர்க‌ள் வெற்றி பெற்றால் ம‌ட்டுமே வெளி உல‌கிற்கு ஆராய்ச்சி முடிவுக‌ள் அறிவிக்க‌ப்ப‌டும் என‌ விஞ்ஞானிக‌ள் முடிவெடுத்தனர்,ஜனா சிறப்பாக விண்கலத்தை செயல்படுத்தி இடையிடையே வான் மண்டத்தில் கண்ட அபூர்வ புகைப்படங்களை பூவியின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிகொண்டிருந்தான், நான்கு மாத ப‌ய‌ண‌த்திற்கு பின்செவ்வாய் கிர‌க‌த்தின் தென் துருவ‌த்தில் இரவு நேரத்தில் இற‌ங்கிய‌து விண்க‌லம்,

தட்ப வெப்பம் பழகும் வரை தேவை என்பதால் கவச உடையுடன் இறங்க தயாரானார்கள் ,விண்வெளி சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை செவ்வாயில் முத‌லில் க‌ல‌டி வைத்த‌ ம‌னித‌ன் என்ற‌ பெருமை த‌ன் காத‌லிக்கு கிடைக்கட்டும் என்று நினைத்து "நீ, முத‌லில் இற‌ங்கு பிபா என்றான்" இல்லை ஜ‌னா கொஞ்ச‌ம் ப‌ய‌மா இருக்கு நியே முத‌லில் இற‌ங்கு என்றாள்! நான் இங்கேதானே இருக்கேன், சும்மா இற‌ங்கு என்று தைரியம் கொடுத்ததும்,அவள் வலது காலை முன்வைத்து இறங்கி செவ்வாயில் நிற்பதை கைக‌ளில் இருந்த கையடக்க கம்ப்யூட்ட‌ர் சாதன‌த்தின் மூல‌மும், விண்க‌லத்தில் பொருத்த‌ப்ப‌ட்ட‌ கேம‌ராவிலும் பதிவு செய்துவிட்டு பின் அவனும் சேர்ந்து நின்று புகைபடங்களை எடுத்துகொண்டான்,

புகைபடத்தில் மட்டுமே பார்த்த செவ்வாய் கிரகத்தை ஆச்சர்ர்யத்தோடு இருவரும் பார்த்துகொண்டிருந்தனர்!ஜன வெப்பநிலையை தன் கம்ப்யூட்டரில் பார்த்தான் ‍_120 செல்சியஸாக இருந்தது! எங்கும் சிவப்பு மயமாக இருந்தது!உறைந்து இறுகிய பனி பாறைகளாக‌ காட்சியளித்தது!வானத்தை பார்த்த பிபா"ஹேய் ஜனா,, இங்க பாரேன் இரண்டு நிலாக்கள் இருக்கிறது என்றாள் வியந்த கண்களுடன்" இதன் நான் பூமியிலேயே பார்த்திருக்கேன் உன் கண்கள் வடிவில்" என சொல்ல நினைத்தான் ஆனால் சொல்லவில்லை!எடுத்த புகைப்படஙகளையும் வீடியோக்களையும் அனுப்பினான், புகைப்படங்கள் மட்டுமே சென்றடந்தன!

பூமியில் "அராக்" அமைப்பு விஞ்ஞானிக‌ள் ம‌கிழ்ச்சியில் துள்ளி குதித்தார்க‌ள்,1972ல் மாரின‌ர்_9 விண்க‌ல‌ம் செவ்வாய்க்கு அருகில் ப‌றந்து படம் பிடித்ததே சாத‌னையாக‌ நினைத்த‌ உல‌கில் இன்று மனித‌ன் த‌ரையிற‌ங்கி விட்டான் என்ப‌தை உடன‌டியா ஆதரப்பூர்வமாக தங்கள் ஆராய்ச்சிகளை,இண்டர்நெட்டில் வெளியிட்டார்கள், அடுத்த சிலமணி நேரங்களில் உலகெங்கும் பரவியது! மிகப்‌பெரிய வெற்றிக்கு இத‌ன் உறுப்பு நாடுக‌ள் விழாக்கோல‌ம் பூண்டன!ஜனாவும், பிபாவும்"ஒரே நாளில் உலக‌‌ம்‌ முழுவதும் புக‌ழ்பெற்ற‌வ‌ர்க‌ளாக‌ மாறினார்க‌ள்,இன்னும் சிலரோ‌ இதை ந‌ம்பாம‌ல் இவை அனைத்தும் பொய் ஏதோ செட் போட்டு எடுத்திருக்கிறார்க‌ள் என்று விவாத‌ங்களில் இற‌ங்கின‌ர்!

காலையில் சிவப்பு நிறத்தில் சூரியன் உதிக்க ஆரம்பித்ததும் பைக்கை எடுத்துகொண்டு ஒரு திசைநோக்கி ப‌ய‌ணித்தார்க‌ள்,இனி அங்கிருந்த சூழலுக்கு உடல் ஒத்துழைக்கும் என்பதால் கவச உடையை தவிர்த்துவிட்டார்கள்.இன்று பைக்கில் முத‌ல் முறையாக‌ அவ‌ன் தோள்க‌ளை பிடித்த‌ப‌டி பின்னே அம‌ர்ந்தாள் பிபா, ஜ‌னா ம‌கிழ்ச்சியில் திளைத்தான்! அவ‌ள் பார்க்காத‌ போது அவ‌ள் முக‌ அழ‌கையும் சிரிப்பையும் ர‌சித்துக்கொண்டிருப்பான்!" அவ‌ன் பார்வைக‌ளின் வித்தியாச‌ம் தெரிவ‌தை பிபா உண‌ரத்தொட‌ங்கிணாலும் அதை பெரிதுப‌டுத்த‌வில்லை!செவ்வாய் கிர‌க‌மெங்கும் பனிப்பாறைக‌ளும், சிறு சிறு மணல்மேடுகளும் இருந்த‌த‌ன‌! ஒரு மண‌ல் மேட்டில் இருந்த‌ அழ‌கிய‌ க‌ல் ஒரு பெண் அம‌ர்ந்திர்ப‌து போன்ற‌ தோன்ற‌த்தை ஏற்ப‌டுத்திய‌து!"இதைதான் முன்பு பூமியில் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ பேசிகொண்டார்க‌ளாம் "என்றான் ஜ‌னா.நேர‌ம் செல்ல‌ச் செல்ல‌ வெப்ப‌ம் அதிக‌மாக‌ இருந்த‌து!ஒரு பாறையில் குகை போன்ற‌ அமைப்பு இருந்த‌து! அங்கு சிறிது நேர‌ம் அம‌ர‌லாம், சூரிய‌ ஒளியில் பைக்கின் பேட்டரி ஜார்ஜ் ஆக‌ட்டும்" என்றான், இருவ‌ரும் அம‌ர்ந்தார்க‌ள்,

தன் உடலிலும், பிபாவின் உடலிலும் இருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் தற்காலிகமாக செயலிழ‌க்க செய்து பூமியுடனான இணைப்பினை துண்டித்தான், ஏன் இப்படி செய்கிறாய் என்ற பிபாவிடம் "உன்னிடம் தனியாக பேசவேண்டும் என் பலவருட கன‌வு இது" என்றான்! உன்னை என‌க்கு பிடித்திருக்கிற‌து பிபா, உன்னை நான் காத‌லிக்கிறேன்!உன‌க்கு என்னை பிடித்திருகிற‌தா என்றான், அவ‌ள் மொளன‌மாக இருந்தாள்! நாம இங்க காதலிக்க வரலே ஆராய்ச்சி செய்ய வந்திருக்ககோம், வந்த வேலையை மட்டும் பார்ப்போம் என்று பூமிக்கு இணைப்பை கொடுத்தாள்!அத‌ற்கு மேல் அவ‌னால் பேச‌முடிய‌வில்லை!அங்கும் இன்கும் போய் ஆராய்ச்சியை தொட‌ர்ந்தார்க‌ள்!

ஆராய்ச்சியில் இங்கிருக்கும் பணிப்பாறை இர‌ண்டுவ‌கைக‌ளாக‌ இருகின்ற‌ன‌, ஒன்று நிரந்தரமானவை இன்னொன்று தற்காலிக பணிபாறைகள், தற்காலிகமன பணிப்பாறை அதிக வெப்பத்தால் பனி உருகி நீராகி பிறகு சூடாகி ஆவியாவதற்கு பதிலாக நேரடியாக ஆவியாகி விடுகிறது!( பதங்கமாதல் தத்துவ‌த்தில் கற்பூரம் காற்றில் கரைவ‌து போல) பனிப்பாறைகளில் கார்பன்டை ஆக்சைடு உறைநிலையில் இருந்தது!ஒரு காலத்தில் இங்கு நீர் இருந்ததற்காக‌ ஆதார‌மாக‌ நீர் ஓடிய‌ ஆறு ம‌ற்றும் ஏரி த‌ட‌ங்க‌ளும் இருந்த‌த‌ன!ஒரு காலத்தில் செவ்வாய் கிரக்மும் பூமியைப்போல்தான் இருந்திருக்கிறது என்பதி உண்மையாக்கும் விதமாக இருந்தது,பூமியைவிட ஈர்ப்புவிசை இரண்டு மடங்கு குறைவாக இருக்கிறது, இதனால்தான் செவ்வாயை சுற்றி வளிமண்டல வளையம் இல்லை,இன்னும் பலஅறிந்த உண்மைகளை ஆதாரமாக கண்டறிந்து இருவரும் விண்க‌ல‌த்திற்கு வ‌ந்தார்க‌ள்!

அன்று முழுவ‌தும் இருவ‌ரும் பேசிகொள்ள‌வில்லை!அடுத்த‌ நாளும் அதே போல் ஆராய்ச்சிக்கு சென்றனர் நேற்று சென்ற‌ திசைக்கு எதிர் திசையில் சென்ற‌ன‌ர்!வெகுதூர‌ம் சென்றார்க‌ள்!அவ‌ள் ப‌தில் சொல்லா கோப‌த்தில் வ‌ண்டியை உச்ச‌ வேக‌த்தில் செலுத்தினான்
ஜ‌னா ஏதாவ‌து பேசுவான் என்று எதிர் பார்த்தாள் ஆனால் அவ‌ன் அமைதியாக‌வே வ‌ந்தான்! ஒரு இட‌த்தில் சைகையால் நிறித்த‌ச் சொல்லிவிட்டு பூமியுட‌ன் இணைப்பை துண்டித்தாள்!" எவ்வ‌ள‌வு நாளா என்னை கா‌த‌லிகிறாய் ஜ‌னா" என்றாள்' உன்னை சில‌ மாத‌ங்க‌ள் என்னை பார்க்கவே விடாம‌ல்! பிற‌கு உன்னை பார்த்த‌போது நீ நிறைய‌வே மாறியிருந்தாய்!முன்பை விட‌ அழ‌காக‌ இருந்தாய்,சற்று குண்டாக இருந்தாய்!அப்போது சாத‌ர‌ண‌மாக‌ ர‌சிக்க‌ ஆர‌ம்பித்த‌வன், பிற‌கு உன்னை நினைத்து நினைத்தே காதால‌னாக‌ மாறிவிட்டேன்" என்று கண் சிமிட்டினான் "அட‌ப்பாவி அப்போ இருந்தேவா" என‌ செல்ல‌மாக கைகளால் முதுகில் குத்தினாள்! "நீ காத‌லிப்ப‌தாக‌ சொல்வ‌து கேட்க‌ ச‌ந்தோச‌மாக‌த்தான் இருக்கிற‌து ஆனால் யோசிக்கத்தான்‌ ப‌ய‌மாக‌ இருக்கிற‌து"ந‌ம்ம‌ ஆர‌ய்ச்சி என்ன‌ ஆக‌ப்போகுதோ நாம‌ ஒன்னுசேர‌முடியுமா என்றாள் க‌வ‌லையுட‌ன்!

"நாம் இருவருமே வாழ்கையில் நிறைய‌ ச‌ந்தோச‌ங்க‌ளை நாம் இழ‌ந்துவிட்டோம் பிபா" அம்மா பாச‌ம் தாம் மிக‌ உய‌ர்ந்த‌தாம் ! ப‌ள்ளிக்கூட‌த்துக்கு போய் பாட‌ம் ப‌டிப்பதும் ந‌ண்ப‌ர்களுட‌ன் விளையாடுவதும், ஊர்சுற்றுவதும் ம‌ற‌க்க‌முடியாத‌ நினைவுக‌ளாம் இள‌ம் வ‌ய‌தில் சிறு சிறு மனத்த‌விப்புகளை எல்லாம் காத‌ல் என‌ நினைத்து க‌ன‌வுக‌ளில் மூழ்குவ‌து இனிமையான‌ த‌ருண‌ங்க‌ளாம்! இதில் எதுவுமே ந‌ம‌க்கு நிக‌ழ‌வில்லை! இன்ப‌ துன்ப‌ங்க‌ள் க‌ல‌ந்த‌ திரும‌ண‌ம், குடும்ப‌ம் என்ற‌ நிக‌ழ்வுக‌ளையாவ‌து நம் வாழ்க்கையில் க‌ண்டிப்பாக‌ பெற‌ வேண்டும் பிபா"
"என‌க்கு நீதான் இருக்கிறாய், உன்னைத்தான் பிடித்திருக்கிறது கடைசிவரை சேர்ந்து வாழ்வோம் பிபா! மறுத்துவிடாதே!" என்றான் ஜ‌னா!

பிபா க‌ண்க‌ல‌ங்கினாள்!அவ‌ன்மேல் சாய்ந்து த‌ன் காத‌லை கலங்கிய கண்களால் வெளிப்ப‌டுத்தினாள்!பிற‌கு சிறிதுநேரம் இருவரும் சிரித்து பேசிய‌பின் "போக‌லாமா பூமிக்கு இணைப்பு கொடுக்க‌லாமா?" என்றாள், அத‌ற்குள்ளாக‌வா..! "ந‌ம் காத‌லின் அடையாள‌மாக‌ ஏதாவ‌து த‌ர‌லாமே என்ற‌ப‌டி அவ‌ள் உத‌டுக‌ளை பார்த்தான்" "டேய்..தொலைச்சுடுவேன்! இன்னைக்குதான் காத‌லிக்க‌வே ஆர‌ம்பிச்சுருக்கோம் அதுகுள்ள இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌மா" இதுக்கு ப‌ய‌ந்து‌தான் காத‌லிக்கவே ப‌ய‌மா இருக்கு என்றாள்! "அவ‌னவ‌ன் காதலிக்கிறதா சொல்லிட்டு என்னென்ன‌வோ செய்யுறான்‌,அதுக்கு நான் எவ்வளவோ ப‌ர‌வாயில்லை!" என்று சொன்ன‌வ‌ன் அவ‌ளுக்கு பின்னால் இருந்த‌ பாறையை உற்றுப்பார்த்தான் ஏதோ ந‌க‌ர்வ‌து போல் தெரிந்த‌து! ஓடிச்சென்று அருகில் பார்த்தான்" ஒரு மிகப்பெரிய‌ எறும்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்த‌து!
ஹே!.............வெற்றி...... வெற்றி... செவ்வாய் கிரகத்தில் இன்னும் உயிர்கள் இருக்கின்றன!என்று சந்தோசக்கூச்சலிட்டான், அந்த எறும்பை எடுத்து பைக்கில் இருந்த‌ ஒரு ட‌ப்ப‌வின் உள்ளே போட்ட்ட‌வுட‌ன் பூமிக்கு இணைப்பு கொடுக்க‌லாமா"என்ற‌ பிபாவிட‌ம் இன்னும் ச‌ற்று பொறு,, அருகில் வேறு ஏதேனும் உயிர்க‌ள் வாழுகிறதா என‌ பார்த்துவிட்டு முழுமைய‌ன‌ த‌க‌வலாக‌ த‌ருவோம் என்று சொல்லி பைக்கில் ஏறி இன்னும் அதிவேக‌மாக முன்னோக்கி சென்று ஒவ்வொரு பக்கமாக தேடிகொண்டிருந்தான் அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்களில் யாரோ பின் தொட‌ர்வ‌து போல் ஒரு உண‌ர்வு தெரிந்த‌து! உற்றுப்பார்த்தான் வான‌த்தில் இருந்த சில அடர்வுமிகு ஒளிக்க‌ற்றைக‌ள் பின் தொட‌ர்வ‌தை உண்ர‌ முடிந்த‌து, உட‌ன‌டியாக‌ பைக்கை விட்டுவிட்டு பிபாவுட‌ன் அருகில் தெரிந்த‌ குழிக்குள் ஓடி ஒளிந்துகொண்டான்.

த‌ன் கையில் கட்டியிருந்த க‌ம்யூட்ட‌ரில் ஒரு ப‌குதியை ம‌ட்டும் இய‌க்கி அந்த ஒளிக்க‌ற்றைக‌ளை க‌ண்கானித்தான், அவைக‌ள் அந்த சிவப்பு எறும்பு இருந்த‌ ட‌ப்பாவில் விழுந்த‌ன‌!ஒரு நொடியில் பைக் வெடித்து சாம்ப‌லாக‌ மாறியது, அந்த எறும்பில் இந்த கிரகத்தின் வேவுபார்க்கும் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதை உணரமுடிந்தது! இதைப் பார்த்த‌ பிபா ம‌ய‌க்க‌மானாள்!அவ‌ளை தோளில் தூக்கிகொண்டு இனி விண்க‌ல‌த்திற்கு திரும்ப‌முடியாது என‌ தெரிந்ததால் முன்னோக்கியே ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தான்! ஒரு சீரான உயரத்தில் பணிப்பாறைகளால் பெரிய‌ எல்லைச்சுற்றுச் சுவப் போன்ற அமைப்பு இருந்தது, அதைத்தாண்டிதும் த‌ரைலிருந்த பனிப்பாறைக‌ளை உடைத்துக்கொண்டு முகம் மறைத்த சில‌ போர்வீர‌ர்க‌ள் சுற்றிவ‌ளைத்த‌ன‌ர்!அடுத்த‌ நொடி என்ன‌ நிக‌ழ்ந்த‌தென்றே அவனுக்கு தெரிய‌வில்லை!‌

விழித்துப்பார்த்தால்!ஒரு பெரிய‌ ஆராய்ச்சிகூட‌த்தில், இருவருமே அருக‌ருகே க‌ட்டிவைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை உண‌ர்ந்தார்க‌ள்!அவர்களிடமிருந்த பூமிக்கான தகவல் இணைப்புக் கருவிகள் அப்புறப்படுத்தபட்டிருந்தன!அவ‌ர்க‌ளை சுற்றி சில‌ ம‌னித‌ர்க‌ள் அம‌ர்ந்திருந்தார்க‌ள்!அவர்கள் இந்த கிரகவாசிகள், ஆனால் பூமியில் வாழும் மனிதனைபோலதான் இருந்தார்கள்,அனைவருக்கும் தலைமுடி சிவப்பாகவும், உடல் முழுவதும் வெள்ளையாகவும் பார்ப்பதற்கு வித்தியாசமக இருந்தார்கள்,ஜனாவுட‌ன் ஏதோ ஒரு புதிய‌மொழியில் பேச ஆரம்பித்தார்கள்!முத‌லில் அமைதியாக இருந்த‌ ஜ‌னா அவ‌ர்களுட‌ன் அதே மொழியில் பேச‌ ஆர‌ம்பித்தான்!இவ‌னுக்கு எப்ப‌டி இவ‌ர்க‌ளின் மொழி தெரியும் இவ‌னுக்கு ஆங்கில‌ம் ம‌ட்டும்தானே தெரியும்‌! இவ்வ‌ள‌வு நாட்க‌ளாக‌ என்னுட‌ன் கூட‌ ஆங்கில‌த்தில்தானே பேசிகொண்டிருந்தான், என‌ குழ‌ப்ப‌த்தோடு அவர்களுடன் பேசிகொண்டிருந்த அவ‌னை பார்த்து "என்ன‌மொழி ஜ‌னா இது! உன‌க்கெப்ப‌டித்த் தெரியும் இந்த‌ மொழி" என்று கேட்டாள், ஜ‌னா அவ‌ளிட‌ம் திரும்பி "த‌மிழ் மொழி" என்றான்.

ஜனாவை சுற்றியிருப்பவர்கள் செவ்வாய் கிரகத்தின் வானியல் ஆராய்ச்சிகுழுவினர்,அவர்களிடம் எங்கிருந்து வருகிறோம் எதற்காக வருகிறோம், எப்படி வந்தோம்" என எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லிக்கொண்டிருந்தான்,தங்கள் உடலைல் பல மாற்றங்கள் செய்ததால்தான் இங்கு உயிரோடு இருக்க முடிகிறது என்பதையும் தெரிவித்தான்,நீண்ட‌ நேர‌ம் பேசிகொண்டிருந்தான் ஜ‌னா, முத‌லில் க‌ட்டிவைத்து பேசிக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள், பிற‌கு இவ‌ன்மேல் ச‌ற்று நம்பிக்கை வ‌ந்த‌தும் க‌ட்டுக‌ளை அவிழ்த்துவிட்டனர், ஜனா அருகில் பிபாவும் அமர்ந்துகொண்டாள்,
பலமணி நேரமாக‌ பேசிகொண்டிருந்த‌ன‌ர்! பூமியைபற்றி நிறைய‌ கேள்விக‌ள் கேட்டார்க‌ள, பொறுமையாக ப‌தில் சொன்னான்! செவ்வாய் கிர‌க‌த்தைப‌ற்றி தான் அறிந்த‌வ‌ற்றை எல்லாம் சொல்லி, "இன்றைய சூழ்நிலையில் இங்கு உயிர் வாழ்வ‌த‌ற்கு வாய்ப்பே இல்லை என்று பூமியில் கண்டுபிடித்திருந்தோம்! எப்ப‌டி உங்களால் இது சாத்திய‌மாகிறது?"என்றான்,

செவ்வாய் கிர‌க‌த்தின் தலைமை விஞ்ஞானி "செங்க‌திரான்" ச‌த்த‌மாக‌ சிரித்தார், இய‌ற்கையை ப‌ற்றி யாராலும் முழுமையாக‌ ஆராய்ச்சி செய்ய‌ முடியாது த‌ம்பி!அது நாமாக உவாக்கும் விதிமுறைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்ட‌து!முதலில் நாங்க‌ளும் வேறு கிர‌க‌த்தில் உயிர்வாழ‌ வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தோம்!அண்டவெளியில் எத்தனையோ கோள்கள் உள்ளன, அவற்றில் அங்குள சூழலுக்கு ஏற்றது போல உடலமைப்பும்,குணமும் கொண்ட மனிதர்கள் இருக்கலாம்! எங்க‌ள் ப‌குதிக்கு ஆராய்ச்சி செய்ய‌ வ‌ரும் நான்காவது கிர‌க‌ மனித‌ர்க‌ள் நீங்கள்"என்றதும், ஜனா திடுக்கிட்டான் "என்ன‌ சொல்கிறீர்க‌ள் புரிய‌வில்லை" என்றான்,

உன‌க்கு சொன்னால் புரியாது என்று' வா என்னுட‌ன் என்று ஒரு பட்டனை தட்டியதும் அவர்கள் அமர்ந்து பேசிகொண்டிருந்த அறை லிப்டாக மாறி கீழ்நோக்கிசென்றது!அறைக்கதவை திறந்து வெளியே சென்றால் அது பாதாள‌ ஆராய்ச்சிகூட‌த்தின் பாதுகாப்பு பெட்டக அறை! அங்கு மூன்று பெரிய‌ க‌ண்ணாடி அறைக‌ள் இருந்த‌ன‌ அந்த மூன்றிலுமே நொறுங்கி சேத‌ம‌டைந்த நிலையில் ச‌துரம், முக்கோண‌ம் ம‌ற்றும் வ‌ட்ட‌ வ‌டிவிலான‌ விண்க‌ல‌ன்க‌ள் இருந்த‌ன‌, அவ‌ற்றின் அருகிலேயே சில‌ மனித‌ர்க‌ளின் உட‌ல‌க‌ளும் ப‌த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ நிலையில் இருந்த‌ன‌! அவைக‌ளை காட்டிய‌ செங்க‌திரான் "அதோ இருக்கிற‌தே அதுதான் சீரிய‌ குடும்ப‌த்தின் க‌டைசி கோளின் விண்க‌ல‌ம் அத‌ன் அருகே க‌ருகிய‌ நிலையில் இருக்கும் உட‌ல்க‌ள் அந்த‌ கிர‌க‌த்தின் ம‌னித‌ர்கள் பனிக்குள்ளர்கள் என்று நாங்கள் சொல்லுவோம்! இங்கு வ‌ந்து வெப்ப‌ம் தாங்க‌ முடியாம‌ல் அவ‌ர்க‌ளாக‌வே இற‌ந்து போனார்க‌ள்! அடுத்த‌ அரையில் இருப்ப‌வ‌ர்க‌ள் வியாழன் கோளில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் இன்னொரு அறையில் இருப்பவர்கள் நம் சூரிய குடும்பத்தை போல அண்டவெளியில் எவ்வளவோ சூரியக்குடுமபம்ங்கள் உள்ளன அதில் உள்ள ஏதோ ஒரு கோளில் இருந்து வந்தவர்கள்!எங்களின் எல்லைக்குள் ஆராய்ச்சி என்று சொல்லி அத்துமீறி நுழைந்தார்கள்,நாங்கள் அழித்துவிட்டோம்! உங்க‌ள் அதிர்ஷ்ட‌ம் நீங்க‌ள் த‌ப்பித்த்க்கொண்டீர்க‌ள்,உன‌க்கு த‌மிழ் தெரிந்த‌தால் த‌ப்பித்தாய்! என்றார்.

"செவ்வாய் என் இப்படி முரண்பாடான பகுதிகளாக இருக்கிறது அப்படி என்ன மாற்றம் நடந்தது இங்கு" என்றாள் பிபா ஆங்கிலத்தில், அதையே ஜனா தமிழில் கேட்கவும் இருக்கிறது எஙகள் செவ்வாய் கிரகமும் ஒரு காலத்தில் நீ சொல்லும் பூமியைப்போல் சுபிட்சமாகத்தான் இருந்தன! ஆனால் எங்கள் மூதாதையர்கள் இயற்கைக்கு மாறாக நடந்தனர்,இங்கிருந்த‌ காடுக‌ளை அழித்த‌ன‌ர், காற்றை மாசுப‌டுத்தினார்க‌ள், நீர்நிலைக‌ளை அசுத்த‌ப்ப‌டுத்தினார்க‌ள், "இயற்கையை நாம் ம‌திக்கும்வ‌ரை அது ந‌ம்மை ம‌திக்கும்! அதை நாம் அழிக்க‌ நினைக்கும் போது அதுவும் ந‌ம்மை அழித்துவிடுகிற‌து"என்ற‌ க‌ருத்தை உண்மையாக்கும்ப‌டி இங்கு உருவான‌ எரிமைலை சீற்ற‌ங்களால் பலர் அழிந்தனர்,

வெப்பச்ச்சிர்குலைவும், கற்றழுத்த வேறுபாடுகளும் செவ்வாயின் பல மாற்றங்களை உருவாக்கின, தென் துருவ‌ப்ப‌குதியல் வாழ‌ வகையின்றி செய்துவிட்டன‌ எஞ்சியிருந்த‌ எல்லோரும் வ‌ட‌துருவ‌த்திகு வ‌ந்துவிட்டோம், எங‌க‌ள் வாழ்க்கையை இய‌ற்கையின் வ‌ழியிலேயே கொண்டுசெல்கிறோம், சூரிய‌ ஓளியும், காற்றில் இருக்கும் சிலவகை தனிமங்களை உய‌ர்அழுத்த திர‌வமாக்கியும்தான் எரிபொருளாக‌ ப‌ய‌ன் ப‌டுத்துகிறோம், ஆனால் அதே நேர‌த்தில் ஆராய்ச்சியிலும், தொழில்நுட்ப‌த்திலும் ம‌க்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டும் வித்திலும் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்துகிறோம்!இந்த இடத்தில் ம‌க்க‌ள் வளமாக‌ வாழ வழி என்ன என்பதில்தான் எங்கள் க‌வனம் இருகிறது! மற்ற கோள்களில் யார் எப்படி இருக்கிறார்கள் என்பதில் அல்ல!என்ற‌ செங்க‌திரானிடம், இங்கு தவறுகளும், பிரசச்னைகளும், நோய்களும் இல்லையா என்று கேட்டதும்! இருக்கிற்து ஆனால் குறைவாக இருக்கிறது!தீர்க்ககூடியதாக இருக்கிறது என்றார்.

செவ்வாயை ஆராய நிறைய‌ செய‌ற்கை கோள்க‌ளை நாங்க‌ள் அனுப்பியிருக்கிறோம் அதில் எதிலுமே இப்ப‌டி சூழ‌ல் இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லையே என்றான் ஜ‌னா,எங்க‌ள் எல்லைக்குள் எங்க‌ள் அனும‌தி இல்லாம‌ல் யாரும் க‌ண்காணிக்க‌ கூட‌ முடியாது!இந்த‌ ப‌குதிக்கு வ‌ரும் எத்தனையோ செய‌ற்கை கோள்க‌ளைஅத‌ற்கே தெரியாம‌ல் திசை மாற்றிவிடுவோம்,அல்ல‌து செய‌லிக்க‌ச்செய்து விடுவோம் என்றார் செங்க‌திரான்! உங்கள் உலகை பார்க்கவேண்டும் என்று இருவரும் கேட்டபோது நாளை சிற‌ப்பு விமான‌த்தில் சென்று பார்க்கலாம் போய் ஓய்வெடுங்கள்" என சொன்னவரிடம்! உங்க‌ளுக்கு எத்த‌னை வ‌ய‌து என்று கேட்டான் ஜனா, அதற்கு அவர் முப்ப‌த்தி இர‌ண்டு என்ற‌தும்!பொய் சொல்லாதிங்க‌ என்ப‌து போல் சிரித்தான்! இது உங்க‌ள் உல‌க‌ம‌ல்ல!.... செவ்வாய்!இங்கு ஒரு வ‌ருட‌த்திற்கு 687 நாட்க‌ள்!(ஒருமுறை சூரியனை சுற்றிவர) என்று சொல்லி பதிலுக்கு சிரித்துவிட்டு சென்றார்

"அறைக்கு வந்ததும் உனக்கெப்படி தமிழ் தெரியும்" என்று கேட்டாள் பிபா(ஆங்கிலத்தில்)நம் ஆராய்ச்சி குழு விஞ்ஞானிக‌ளில் இலக்கிய‌ன் என்று ஒரு விஞ்ஞானி இருந்தாரே அவ‌ர்தான் சொல்லிகொடுத்தார்,ஏதாவது புதிய விசயங்களை சொல்லிகொண்டே இருப்பார் நல்ல நண்பர்,தைழ் ஆர்வலர், இரவு ப‌ணியில் அவ‌ர்தான் அதிக‌ம் இருப்பார் அதனால் நிறைய நேரம் கிடைத்தது ,இனிமையான மொழி, இன்று நம் உயிரைக் காப்பற்றியிருக்கிறது!பூமியில் இருக்கும் த‌மிழை விட இங்குள்ள‌ தூய்மையாக‌ க‌ல‌ப்பின்றி இருக்கிற‌து! விண்வெளிக்கு நான் எடுத்துவந்த புத்தகங்களில் சில தமிழ்ப்புத்தகங்கள் இருந்ததை பார்த்தாயா! அதில் "வலைபதிவில் கவிதைகள்"என்ற புத்தகத்தின் 27ம் பாகத்தில் எனக்கு பிடித்த சில கவிதைகள் சொல்கிறேன் கேட்கிறாய என்றான்! சரி என்று சொன்னவளிடம் மொழிபெயர்த்துச் சொல்லி !தூங்கு மூஞ்சியா இல்லாம‌ நாளைல‌ இருந்து நீயும் த‌மிழ் க‌த்துக்கோ என்றான்! இவ‌ர்க‌ள் பேச்சு அங்குள்ள மைக்கில் ப‌திவாகிகொண்டிருந்த‌து!

செவ்வாயை சுற்றி பார்க்க நான்கு பேர் அம‌ர‌க்கூடிய‌ ஒரு சிறிய‌ ர‌க‌ காரை எடுத்து வ‌ந்தார்க‌ள், அதில் ஏறி அம‌ர்ந்த‌தும்,சில‌ தெருக்க‌ளில் ந‌க‌ர்ந்து சென்ற‌து, சில‌ ஊர்களிலும், விவசாய நிலங்களின்மேலும் எட்டிபிடிக்கும் அள‌விற்கு தாழ்வாக‌ ப‌றந்து இயற்கை காட்சிகளை ரசிக்கவைத்தது!சில‌ ந‌க‌ர‌ங்க‌ளில் மிக‌ உய‌ர‌த்தில் ப‌ற‌ந்த‌து!"இப்படி பறப்பது பொருளீர்ப்பு விசையை க‌ட்டுப்ப‌டுத்தும் தொழில் நுட்பம்" என்று பிபாவுக்கு விள‌க்க‌ம் சொன்னான் ஜ‌னா,சில‌ இட‌ங்க‌ளுக்கு நேரிலும் அழைத்துச் சென்றார் செங்கதிரான் இவ‌ர்க‌ளின் த‌லை முடியை எல்லோரும் ஆச்ச‌ர்ய‌மாக‌ பார்த்தார்க‌ள்!
நேற்று செங்க‌திரான் சொன்ன‌து உண்மைதான், இங்கு ம‌க்க‌ள் வ‌ள‌மாக‌வே வாழ்கிறார்க‌ள், இய‌ற்கையை மதிக்கிறார்க‌ள், பெண்ண‌டிமைத்த‌ன‌ம்,ஊழல், உயிர்கொல்லி நோய்கள்,போன்ற‌ பிரச்ச‌னைக‌ள் இல்லை!
பண்பாடும் கலாச்சாரமும் செழித்து விளங்கியது! பிபாவுக்கு இந்த உலகம் மிகவும் பிடித்திருந்தது! செங்கதிரான் பூமியில் உள்ள தமிழ் நூல்கள் பற்றி கேட்டறிந்தார்,அங்குள்ள‌ நூல்க‌ள் ப‌ற்றியும் சொல்லிகொண்டிருந்தார்.சில‌ நாட்க‌ள் இவ்வுலகை அறியும் ஆவலிலேயே ஓடியது,அடுத்து என்ன‌ செய்ய‌ப்போகிறொம் என்று தெரியாம‌ல் ஜ‌னா குழ‌ப்ப‌த்தில் இருந்தான்,

பூமியில் "அராக்"அமைப்பு விஞ்ஞானிக‌ள் எல்லொரும் இருவருக்கும் என்ன ஆயிற்று என தெரியாமல் குழ‌ப்ப‌த்தில் இருந்த‌ன‌ர், ப‌ல‌ நாடுகளும் அமைப்புகளும், ஆராய்சிக்காக பல‌ உயிர்க‌ளை கொன்றுவிட்ட‌தாக "அராக்"நாடுக‌ளின் மீது குற்ற‌ம் சாட்டின‌!எல்ல‌ மொழி பத்திரிக்கைகளிலும், வ‌லைப‌திவுக‌ளிலும் இதுப‌ற்றிய‌ பெரும் விவாத‌ம் ந‌ட‌ந்துகொண்டிருந்த‌து!

செவ்வாயில்"நீங்கள் தப்பித்துச் செல்ல வாய்ப்பிருப்பதால் உங்களை அழிக்கச் சொல்லி பல உயர்மட்டக் குழுக்களில் இருந்து வற்புறுத்தல் வருகின்றன , "உங்களிடமுள்ள‌ வானியல் துறையின் தொழில்நுட்ப‌த்திற‌மையை எங்க‌ள் உல‌க‌த்திற்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்துக‌ள் உங்க‌ளை அழிக்க‌ மாட்டோம் என்றார் செங்க‌திரான்! நாம் தப்பித்து செல்ல நினைத்தாலும் கொன்றுவிடுவார்கள்,ஒருவேளை அப்படி தப்பிச்சென்றாலும் பூமியில் இன்னும் பல ஆராய்ச்சி செய்வார்கள் இன்னும் எத்தனையோபேர் உயிரிழக்க நேரிடலாம்" இங்கேயே வாழ்ந்துவிடுவோம் ஜனா"என்றாள், அவனுக்கும் இங்கேயே வாழ‌ விருப்ப‌ம் வ‌ந்த‌தால் ச‌ம்ம‌தித்தான்!

தலைமை விஞ்ஞானி செங்க‌திரோன் உதவியுடன்,த‌க‌வ‌ல் சாத‌னங்க்க‌ளை பெற்று மீண்டும் "மார்ஸ் பைண்ட‌ர்" விண்க‌ல‌த்திற்கு சென்று பூமிக்கு இணைப்பு கொடுத்துசில‌ புகைப்ப‌ட‌ங‌களை அனுப்பிவிட்டு "செவ்வாய் தன் சுற்றுப்பாதையில் சூரிய‌னுக்கு மிக அருகில் வ‌ருவ‌தால் வெப்ப‌ம் அதிக‌ரித்துகொண்டே வ‌ருகிற‌து த‌ற்காலிக‌ ப‌னிப்ப‌றைக‌ளில் இருக்கும் கார்ப‌ன்டை ஆக்சைடு அதிக‌ அள‌வில் ஆவியாகிகொண்டு அழுததம் இப்போதே 20% அதிகரித்துவிட்டது கவச உடைகளை தாண்டி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது,இன்னும் அதிகரிக்கும் எனபதால் அடுத‌த‌ சில‌ம‌ணி நேர‌ங்க‌ளில் நாங்க‌ள் உயிரிழ‌க்க‌ நேரிட‌லாம், இனியும் இதுபோன்ற உயிர் விரோத‌ ஆராய்ச்சிகளை தொடராதீர்கள்" என வேண்டுகோள் விடுத்தபடி பிபாவும், ஜனாவும் அழுவதுபோல் விண்கலம் முன் நின்று புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டு, பூமியுடனான‌ இணைப்பை துண்டித்தான்! புதிய‌க‌ உல‌க‌த்தில், புதிய‌ வாழ்க்கை வாழப்போவதை எண்ணி ம‌கிழ்ச்சியில் மிதந்துகொண்டிருந்த ஜ‌னாவை முத்தத்தால் மூழ்க‌டித்துக்கொண்டிருந்தாள் பிபா!

Monday, July 28, 2008

அக்கறை!

(சிறுகதை)


இரவு எட்டு மணிக்கே பசியோடு வீட்டிற்குள் வந்ததும் சாப்பாடு எடுத்துவைக்க அர்ச்சனாவைத் தேடினான் சுப்பிரமணி! முழங்கால் வலி என்று சொல்லி உள் அறைக்குள் தைலம் தேய்த்துகொண்டு அம்மா அமர்ந்திருந்தாள்!அவளைக் காணாததால் "அர்ச்சனா............" என்று சத்தமாக குரல் கொடுத்தான், "கொஞ்ச நேரம் பொறுங்க வரேன்" என்று மாடியில் இருந்து குரல் வந்தது!

"ப‌சிக்குது வந்து சாப்பாடு போடு"என்றான், அந்த டேபிள் மேல எல்லாம் எடுத்து வச்சிருக்கேன், எடுத்து வச்சு சாப்பிடுங்க! இதோ வந்திடுறேன்" என்றாள்,

அவனுக்கு கோபமாக வந்தது!கணவனுக்கு சாப்பாடு எடுத்துவைக்க கூட நேர‌மில்லையா இவளுக்கு!இன்று அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக மதியமும் சாப்பிட வில்லை! அதனால் தான் இந்த பசி! என்று புலம்பிய‌ படியே உணவை எடுத்துவைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

பாதி உணவை உன்னும்போதே தொண்டையில் லேசாக விக்குவது போல் தெரிந்தது! அருகில் இருந்த தண்ணீர் குவளையில் பார்த்தான், தண்ணீர் காலியாகி இருந்தது!

தண்ணீர் பானைக்கு எழுந்து செல்ல சேம்பேறித்தனப்பட்டு " அர்ச்சனா" என்று குரல் கொடுத்தான்,

"அய்யோ!கொஞ்சம் பொறுக்க மாட்டீங்களா? அதான் வரேன்னு சொல்லுறேன்ல" என்றாள் மேலிருந்தபடியே!

"ச்...சே! சாப்பாடு எடுத்து வைக்கும்போதே தண்ணியும் எடுத்து வைக்கனும்னு தெரியாதா இவளுக்கு!எத்தனை முறை சொல்லியிருக்கேன்" என்று புலம்பியபடியே எழுந்தான்,

அதற்குள் அவன் அம்மா மெல்ல எழுந்துவந்து தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு "சாப்பிடுறப்போ கோபப்படாம சப்பிடுடா! அப்போதான் சப்பிடுற சப்பாடு உடம்புல ஒட்டும்" என்று சொல்லிவிட்டு வலிக்கும் கால்களுடன் மெதுவாக‌ நடந்து சென்றாள்.

"அம்மாக்களுக்கு பிள்ளைகள்மேல் இருக்கும் அக்கறை ஏன் இந்த மனைவிகளுக்கு கணவன்கள் மேல் இருப்பதில்லை" என்று கோபப்பட்டான், இந்த கோபத்தில் சிறிதையாவது அவளிடம் வெளிப்படுத்தினால்தான் அடுத்து இது போல் அலட்சியம் செய்ய மாட்டாள்! என்று நினைத்தபடியே சாப்பிட்ட எச்சில் கையுடன் எழுந்து மாடிப் ப‌டிக‌ளில் ஏறினான்!

மாடியில் அங்கே இடுப்பில் குழந்தையுட‌ன்,ஒரு கையில் உண‌வு த‌ட்டுட‌ன் வானில் இருந்த‌ நிலாவைக்காட்டி "நிலாவுக்கு இன்ன்னொரு "ஆ"...! சொல்லு" என்ற‌தும் வாய் திற‌ந்த‌ குழ‌ந்தையிட‌ன் உண‌வை ஊட்டிகொண்டிருந்தாள்.இவ‌னைப் பார்த்த‌தும்"இவ்வ‌ள‌வு நேர‌ம் போராடி, இப்போதான் சா‌ப்பிட‌ வைச்சிருக்கேன்! அதான் கொஞ்ச‌ம் பொறுங்க‌னு சொன்னேன்!" நல்லா சாப்பிட்டீங்களா என்றாள் புன்ன‌கையுட‌ன்!

சுப்பிர‌ம‌ணிக்கு த‌ன் அவ‌ச‌ர‌ புத்தியை நினைத்து பேச்ச‌ற்று அமைதியாகி ம‌ன‌திற்குள் முன்பு சொன்னதையே சற்று மாற்றி "மனைவிக்கு க‌ண‌வ‌ன் மேல் இருக்கும் அக்க‌றையை விட‌ அம்மாவுக்கு குழ‌ந்தை மேல் அதிக‌ அக்க‌றை இருக்கிற‌து!"என்று சொல்லிக்கொண்டான்.

நம்பிக்கைபாண்டியன்

ம‌னம்!ச‌ல‌ன‌ம‌ற்ற
‌மனம் வேண்டி,
தவறுகளை
தவிர்த்துவிட்டு
அமைதியில் ஆழ்ந்தாலும்!

கோப‌மோ,
வெறுப்போ,
பொறாமையோ,
ஏதேனும் ஒன்றை
ஏற்ப‌டுத்திவிட்டே செல்கின்ற‌ன
‌அடுத்த‌வ‌ர்க‌ளின் த‌வ‌றுக‌ள்!
~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்!

Friday, July 18, 2008

காதல்நிறம்!

படக்கவிதை
மருதாணி
இலைகளுக்குள்
மறைந்திருக்கும் சிவப்பென!
உன்
ஒவ்வொரு
பார்வைக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது காதல்!

~நம்பிக்கைபாண்டியன்கோவை வலைப்பதிவு & குழும நண்பர்கள் சந்திப்பு

கோவை சந்திப்புக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணிக்கே எழுந்து 6 மணிக்கெல்லாம் பஸ் பிடித்து மஞ்சூர் அண்ணாவின் வீட்டிற்கு செல்லும்போது நேரம் சரியாக நண்பகல் 12 மணி, சற்று முன்புதான் சுப்பையா ஐயாவின் பேச்சு அலை ஓய்ந்ததாக பேசிக்கொண்டார்கள்,என்னை அறிமுகம் செய்துகொண்டேன்,மற்றவர்களின் அறிமுக ப‌டலம் முன்பே முடிந்திருந்ததால் தமிழ்பயணி சிவா மற்றவர்களை அறிமுகம் செய்தார்.
பிறகு லதானந்த் அவர்கள் பேசினார், கொஞ்ச‌ம் நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் பேசினார், அவரின் பத்திரிகை படைப்புகள் அதனால் வந்த பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டார், ஒரு நாளில் 15 ப‌திவுகள் கூட தன்னால் எழுத முடியும் என்று சொன்ன போது என்னால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை!படிப்பவர்களுக்கு ஒரு ரிலாக்ஸா இருக்கும்படியே தான் எழுத விரும்புவதாகவும் தெரிவித்தார்,

இடையிடையே ஞானவெட்டியான் ஐயா, பல அரிய‌ நூல்களை மொழிபெயர்ப்பதாகவும் சொல்லி அதில் உள்ள பல நல்ல கருத்துக்களை குறிப்பிட்டார்,அவரது குரலும் பேசும் உச்சரிப்பும் அருமையாக இருந்தது!பதிவுகளில் ஒரு கருத்தை சொன்னால் அதில் வரிக்கு வரி ஆதாரம் கேட்டு விவாதிப்பது சரியானது அல்ல என்றார்

நண்பர் ஸ்ரீ( பால் ஜோசப்) தமிழஅமுதம் என்ற தமிழ்விக்கிபீடியா முயற்சி பற்றி தெரிவித்தார்,அதற்கு ஓசை செல்லா போன்றவ‌ர்கள் தங்கள் அனுபவங்களினை கூறி அது எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிபெறாது என்றனர் அதுபற்றி விவாதம் நடந்தது, கடைசியா தனித்துவம் வாய்ந்த கருத்துக்களுக்கு விக்கிபீடியா போன்ற தளங்கள் உகந்தது அல்ல ! பொதுத்துவமான கருத்துகளுக்கு அவைகள் சிறந்ததாக இருக்கும்,என்ற கருத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


.tk க் பற்றி விவாதிக்கப்ட்டது பலரும் பலவிதமான டெக்னிக்கல் கருத்துக்களை சொல்லி விவாதித்துகொண்டார்கள் ஒன்றும் புரியாத அப்பாவியாக இருந்த நான் என் முன் தட்டில் இருந்த சுவையான ஐந்து வடைகளில் நான்கை உள்ளே தள்ள அதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திகொண்டேன்,

பரிசல்காரன் அமைதியாகவே கேட்டுகொண்டிருந்தார் அதிகம் பேசவில்லை , வடகரை வேலன் பரிசல்காரன் இருவர் முகத்திலும் ஒரு அதிருப்தி நிலவியது தெரிந்தது, இப்போது அவர்களின் பதிவுகளை பார்த்த் போதுதான் அது ஏன் என்று புரிகிறது, கடைசிவரை இருந்திருந்திருந்தால் அவர்களுக்கு இந்த சந்திப்பு இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

திருப்பூரிலிருந்து வந்த நண்பர் வெயிலான் முன்பே அறிமுக நண்பர்போல தோன்றினார் நன்றாகவும் பேசினார், த‌ன்னுடைய வேலையின் தன்மை பற்றி கூறினார் நிர்வாகத்திற்காக வேலை பார்த்தாலும் தொழிலார்களுக்கு சாதகாமாக தன்னால் எவ்வளவு முடியுமோ அதை செய்து வருவதுபற்றி சொன்னது குறிப்பிடத்தக்கது!

காங்கேயத்திலிருந்து வந்து சந்திப்பில் வயது குறைவாக இருந்த கார்த்தி அமைதியாக ஆர்வமாக எல்லோரும் பேசுவதி உன்னிப்பாக கேட்டுகொண்டிருந்தார், சென்னையில் படிக்கிறார் எல்லொரையும் சென்னைக்கும் வாங்க என்று அழைத்தார்,கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் தமிழ்வளர வலைபதிவுகள் வளரவேண்டும் என்ற முக்கிய கருத்துக்கு அடையாளமாக சில கருத்துக்களை சொன்னார் இரவு ஊருக்கு ப்ய்ய்விட்டு சென்னை புறப்பட வேண்டும் என்பதால் அவரும் விரைவாக புறப்பட்டார்,

spb & இசைப்பிரியர் கோவை ரவி அவர்களை பற்றி அதிகம் தெரியவில்லை!

லதானந்த் கிளம்பியதும் பலரும் பல காரணங்களால் உடன‌டியாக சாப்பிடாமல் கூட புறப்பட தயாரானார்கள் பலரும் வற்புறுத்தி இருந்து சாப்பிட்டுவிட்டு சென்றனர். வடகரை வேலன் வீட்டில் அசைவ சாப்பாடுக்கா சப்பிடமாட்டேன் என்று சொன்னாரோ என்னவோ? 2 மணிக்கு ரயிலுக்கு செல்லவேண்டி இருந்தும் நண்பர்களின் வேண்டுகோளுக்காக 1.20 வரை இருந்து சப்பிட்டு விட்டுப்போன ஸ்ரீ, அவ‌ரது மகிழ்ச்சியான பேச்சும் குறிப்பிட‌த்த‌க்க‌வை! தக்காளி,லெமன், தயிர் சாதம் என சுவையான உணவு, குறிப்பாக‌ தக்காளி சாதம் சூப்பர்!

சிங்கப்பூரிலிருந்து வந்த‌ கிரியும் விரைவாக புறப்பட்டதால் அதிகம் பேசமுடியவில்லை!

சாப்பாடு முடித்ததும்,பல்வேறு தலைப்பில் பல்வேறு வகையான விவாதங்கள் நடை பெற்றது!குறிப்பாக இரண்டு விவாதங்களை சொல்லலாம்!

ஒன்று கடவுள் நமபிக்கை பற்றிய விவாதம்!கடவுள் உண்டென்ற கருத்தில் நான், ஐயா ஞானவெட்டியான், நண்பர் தொட்ட‌ராயஸ்வாமி! கடவுள் இல்லை என்ற கருத்தில் தியாகு, சஞ்சய்,தூங்கி எழுந்தமின் ஓசை செல்லா!அருமையான சொற்போர்!சஞ்சாய் அறிவுப்பூர்வமாக கருத்துக்களை முன்வைப்பார்! அதற்கு ஞான வெட்டியான் ஐயா அருமையான விளக்கம் கொடுப்பார்! தியாகு ஒரே கேள்வியை மீண்டும் கேட்பார், தொட்டராய சுவாமியும் நானும் பல விதமான பதில் சொல்லுவோம் ! ஆனால் இருதர‌ப்பினருமே ஒருவர் கருத்தை மற்ற‌வர் ஏற்க மாட்டோம்!

கடைசி கட்டத்தில் அறிவியல் அனைத்தையும் விளக்குகிறது உதாரணத்திற்கு நீரை இரு பங்கு ஹைட்ரஜன் ஒரு பங்கு ஆக்க்சிஜன் H2O என்று நிருபிக்கிறது அது மாறாது அதுபோல் கடவுளை நிரூபித்தால்தான் நம்புவோம் என்கிறார்கள், மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி உலகில் உள்ள‌து அதுதான் கடவுள் என்று வெவ்வேறு மதங்களில் வெவ்வேறு விதமாக சொல்கிறோம், அதை மனதால் உண்ரத்தான் முடியும் என்றால் அதை தியாகுவும் சஞ்ச‌யும் நம்ப மறுக்கிறார்கள்!

கடவுள் யாரும் நம்பிக்கையால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை ஏமாற்று வேலைதான் எனவே அது தேவையில்லை என்கிறார்கள்! யாரொ ஒரு சிலர் கடவுளின் பெயரில் ஏமார்றுவது உண்மைதான் ஆனால் பலரது வாழ்கையில் கடவுள் நம்பிக்கைதான் ஒரு அழுத்தமான பிடிப்பைக்கொடுக்கிறது அதனால் பலர் பயனடைகிறார்கள் என்றாலும் ஏற்க மறுக்கிறார்கள்! கடவுள் நம்ம்பிக்கை இதனால்தான் ஏற்பட்டது என்கிறார் தியாகு, அந்த காரணம் உண்மையாகவே இருக்கலாம் ஆனால் " அதுவும் ஒரு காரணம் என்று சொல்ல முடியுமே தவிர" அதுமட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது" என்றால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்! கடைசியில் எங்கும் எப்போதும் தீர்க்கமுடியாத பிரசனைகளில் கடவுள் உண்டா இல்லையா என்பதும் அடங்கும் என்ற கருத்துடன் விவாதம் முடிக்கப்பட்டது!

இன்னொன்று கல்வியால்தான் இன்று இளைஞர்களிடம் போராடும் மனபக்குவம் இல்லை! அவர்கள் கேள்வி கேட்பதில்லை என்று தியாகு சொல்லி விவாதிக்க! பல‌ரும் அதை மறுக்க ,எல்லோரிடமும் அந்த திறன் இருக்கிறது ஆனால் அதனால் ஏற்படும் விளைகள் தன்னை பாதிப்பதாக இருக்கும் போது அவன் அத சுய நலத்திற்கு சாதகமாகவே செயல்படுகிறான் என்று எல்லோரும் சொல்ல! பாவம் தியாகு, ஒரு வழி பண்ணிவிட்டார்கள் அவரை அந்த நேரத்தைல் அவரை பார்கவே பரிதாமாக இருந்தது!இன்னும் பல விவாதங்கள் நடந்தன இன்னு சொன்னால் இன்னும் பதிவு பெரிதாகிவிடும்,

தொட்டராயசுவாமி நல்ல சிந்தனையாளர், பெயர் புரியாதபடி இருக்கிறதே வேறு பயரில் எழுதலாமே என்று சிலர் பரிந்துரைத்தபோது, அதுதான் என்னுடைய சிறப்பு என்று அழுத்தமாக கூறிவிதம் அவரை நன்றாக நினைவில் நிறுத்தும்படி செய்தது


மூலிகை வளம் பற்றி வலைபதிவில் பயணுள்ள கருத்துக்களை எழுதுவரும் குப்பு சாமி அய்யா மிக முக்கியமானவர், மூலிகை மற்றும் இயற்கைவளம் பற்றிய பல பயணுள்ள கருத்துக்களை கூறியதோடு பலருடைய சந்தேகங்களையும் தெளிவு படுத்தினார்,கடைசியில் எல்லொருக்கும் சில மீலுகை தாவரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது!

நண்பர் தியாகு அதிக சமூக அக்கறையுள்ள மனிதர்களில் இவரும் ஒருவர்! கடந்த வருட சந்திப்பிலேயே நண்பரானதால் அதிக‌ நட்புடன் பழகுவார்!தொழில் வர்கத்தினருக்காக பாடுபட்டாலும் தன் வேலியின் தன்மை அதற்கு மாறாக இருப்பதாக குறைபட்டுக்கொண்டார்,பூர்வீகம் மதுரைய சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது! நன்றாக கவிதை எழுதும் திற‌மை படைத்தவர்பொதுநலம் வாந்த கருத்துக்களுக்காக தன் கவிதைத்திறணுக்கு தற்காலிகமாக தடா போட்டுள்ளார்!செம்மலர் பற்றிய சில கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தார்

விண்சண்ட் நம்முடைய வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணம் இயக்கையை மதிக்காமல், அதனுடன் ஒன்றிப்போகாமல் நடந்துகொள்வதுதான் என்ற கருத்தை பல்வேறு ஆதாரங்களுடன் புரியும்படி விளக்கினார், மரங்கள் பற்றியும் பல பயனுள்ல தகவல்களை வழங்கினார்,

தமிழ்பயணிசிவா, நல்ல உதவியாளர், டெக்னிக்கலாக புரியாத பல விசயங்களை புரியும் படி சொல்லி புடியவந்தார், எப்போது கோவை சந்திப்பு நடந்தாலும் அதில் முக்கிய பங்கு வகிப்பவர்,முக்கிய கடமை ஒன்று சமீபத்தில் முடிந்த மகிழ்ச்சியில் தற்போது தீரமாக பெண் தேடிகொண்டிருப்பவர்! அடுத்த சந்திப்பில் குடும்பஸ்த்ராக இருப்பார்!

சஞ்சய் மொக்கை மன்னன்,எந்த ஒரு விவாத சூழ்நிலையிலும் தன் கருத்தை கோபப்படாமல் நிதானமாக அழுத்தமாக சொல்லும் அறிவாளியும்கூட!கல கலப்பாக பேசி இருக்கும் இடத்தை மகிழ்ச்சிப்படுத்துபவர்!

ஓசைசெல்லா நிறைய கருத்துக்களை தெரிவித்தார் அதில் சில முரண்பாடாக இருந்தாலும்! இடையிடைய பயணுள்ள தகவல்களையும் சொன்னார் அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது ஆரோவில்லைச் சேர்ந்த பேராசிரியர் வீட்டில் வெப்பததை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் சொன்னதாகச் சொன்ன‌ ,மாடித்தோட்டம், ஜன்னல் சன் சைட் கொடிகள், வாகனப் புகை கெடுதியை உணர்த்தும் சைலன்சர் பரிசோதனை போன்ற‌ தகவல்களை விளக்கி கூறியது அருமை!
ஒன்னுமில்லாத விசயத்துகெல்லாம் பதிவு போடுறீங்க இந்தமாதிரி நல்ல விசயங்களை எல்லாம் ஏன் பதிவுகளில் போட மாட்டிங்கிறீங்க என்று யாரோ அவ‌ரிடம் சொன்னார்கள்

புரவியிடம் எழுதி ரொம்ப‌ நாள் ஆகிவிட்ட‌து ப‌ற்றி கேட்ட‌த‌ற்கு விரைவில் அதிர‌டியாக‌ ஆர‌ம்பிக்க‌ப்போவ‌தாக‌ தெரிவித்தார்!விளப்பரத்துறையில் பணியாற்றுபவர், தன் துறை ரீதியாகவும் திறமையானவர் என்பது பேச்சிலேயே புரிந்தது!

சந்திப்பில் கடைசியாக வந்திருந்தார் சுவீட் சுரேஷ்,பொறியாளர் மற்றும் விவசாயி, தான் பட்ட இழப்புகள், விவசாயத்தில் உள்ள‌ பிரச்சனைகள், விவசாயிகளிடம் இண்டர்நெட் உபயோகத்தை வளர்த்தால் அவர்கள் இன்னும் பல நல்ல முறைகளை பயன்படுத்தி விவசாயத்தை விருத்தி செய்ய முடியும், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார், வங்கிக்கடன் வாங்குவதில் இன்று உள்ள பல்வேறு சிக்கல்கள் பற்றியும் எடுத்துச்சொன்னார், விவசாயதில் லாபம் முக்கியம் ஆனால் லாமபம் ஒன்றை மட்டும் அடிப்ப‌டையாக கொண்டு அதை செய்யக்க்கூடது நாட்டின் தேவையையும் கருத்தில் கொள்ளவேன்டும் என்று அவர் சொன்ன விதம் அருமை!

மஞ்சூர் அண்ணா இந்த சந்திப்புக்கு காரணகர்த்தா! முத்தமிழ் குழுமத்தின் மூலம் பல தமிழர்களை ஒருங்கிணைத்தவர்!எல்லா விவாதங்களிலும் அளவாக பங்கேற்றுவிட்டு ஒதுங்கிக்கொண்டார்! இனி வலை பதிவுகளில் அதிகம் எழுதப்போவதாக சொன்னார்!இன்முகத்துடன் அனைவரையும் உப‌சரித்தவர், வாழ்த்துக்கும் பாராடிஆற்கும் உரியவர்!

த‌மிழ்ப‌ய‌ணி சிவா,சஞ்சய் மற்றும் புரவி மூவரும் ம‌ஞ்சூர் அண்னாவுக்கு இந்த சந்திப்பு ஏற்பாட்டில் மிக‌வும் உதவிக‌ர‌மாக‌ இருந்தார்க‌ள், ச‌ந்திப்பு முழுவதும் இடையிடையே சாக்லேட், சூடான காபி,வடை குளு குளு ஜூஸ்,என‌ மாற்றி மாற்றி ஏதாவ‌து ஒன்றை கொடுத்துக்கொண்டேதான் இருந்தார்கள்,மஞ்சூர் அண்ணாவின் குடும்பத்தினருக்கு இந்த உபசரிப்புக்காக ஒரு சிறப்பு நன்றி.

சந்திப்பு முடிந்ததும் தமிழ்பயணி சிவா அவர்கள் என்னை பைக்குல் ஏற்றி ரயில் நிலையத்தில் இறக்கிவிட இரவு 8.30 மணிக்கு ரயிலேறி சந்திப்பு நிகழ்வுகளை சந்தோசமாய் அசைபோட்டபடி பயணித்தேன் மதுரையை நோக்கி.......

--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்

Thursday, July 10, 2008

விருந்தோம்பல்

விருந்தோம்பல்
"இது எனக்குத்தான்,
அது என்னுடயது" என‌
எதற்கும்
எப்போதும்
சண்டையிடும்
சகோதரர்கள் கூட!
வீட்டிற்கு வரும்
விருந்தாளியிடம் மட்டும்!
விருப்பத்துடனே
விட்டுகொடுக்கிறார்கள்!


~நம்பிக்கைபாண்டியன்

Monday, June 30, 2008

சகுனம் ~நமக்கேற்ற குடும்பமாக இருப்பதால் எப்படியும் இந்தப்பெண்ணை சம்பந்தம் பேசி முத்துவிட வேண்டும் என்று அன்று ஆவலோடு இருந்தால் திருச்சியிலிருக்கும் ஜானகிய‌ம்மாள்.
மகனும் "பெண்ணை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது"

"நம்மைப்பற்றி அவர்களும், அவர்களை பற்றி நாமும், முன்பே நன்கு விசாரித்து பேசி முடிவெடுத்துவிடுங்கள்,பிறகு விலாசத்தையும் பெண்ணின் புகைபடத்தையும் கொடுங்கள், நான் யாருக்கும் தெரியாமல் பெண்ணை ஒருமுறை நேரில்பார்த்துவிட்டு சொல்லுகிறேன்.புகைப்படத்தில் பெண்ணுக்கும் என்னை பிடித்திருந்தால் பெண்பார்க்க போய் பூ வைத்து உறதி செய்துசெய்துவிட்டு வந்துவிடலாம், இல்லாவிட்டால் பெண்பார்க்கவே செல்லவேண்டாம்!"என்றான் !

அதன்படியே பார்த்துவிட்டு பெண்ணை பிடித்திருக்கிறது என்றான் மகன்.வீட்டில் எந்த நல்லகரியம் என்றாலும் திருச்சி‍_திருவானைக்காவில் வீற்றீருக்கும் அகிலாண்டேஸ்வரியம்மன் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து விட்டு ஆரம்பிப்பதே ஜானகியம்மாவின் வழக்கம்.

"நாளை பெண்பார்ப்பதற்கு காலை பத்துமணிக்கெல்லாம் மதுரைக்கு வருவதாக‌ சொல்லிருக்கிறோம்,அப்படியானால் காலை ஆறு மணிக்கெல்லாம் திருச்சியிலிருந்து புறப்பட‌வேண்டும்! அதனால்இன்றே கோவிலுக்கு போய்விட்டு வந்துடுவோம் வாங்க" என்று கணவன் ஜெயராமனை அழைத்துகொண்டு மாலை ஏழுமணிக்கு கோவிலுக்கு சென்றாள் ஜானகியம்மாள்.

இருவரும் அம்மன் தரிசனத்திற் வரிசையில் வந்துகொண்டிருந்தபோது அம்மனுக்கு மிக அருகில் முதல்ஆளாக ‌வந்தபோது திடீரென்று மின்சாரம் தடைபட்டது ஆலயத்திலுள்ள எல்லா மின்விளக்குகளும் அணைந்தன,ஆலயமெங்கும் இருள் சூழ்ந்தது.அடுத்த சில நிமிடங்களில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு வெளிச்சம் வந்தது, இருவரும் தரிசன‌ம்முடிந்து கோவிலை சுற்றிவந்து ஒரு இடத்தில் அமர்ந்தனர், ஜெயராமன் கவலை படிந்தமுகத்துடன் அமர்ந்திருந்தார்.


"ஏன் உம்முனு இருக்கீங்க என்றாள்"ஜானகியம்மாள்,
"ஒரு நல்ல காரியத்துக்காக கோவிலுக்கு வந்திருக்கோம் நாம பக்கத்தில் வரும்போது இப்படி அபசகுணம் மாதிரி கரண்ட் போனதால் கோவிலே இருண்டு போய்டுச்சு" அதான் ஒரு மாதிரி இருக்கு இந்த கல்யாணத்தால ஏதாவது சிக்கல் வந்திடுமோனு பயமா இருக்கு" என்றார் ஜெயராமன்.


அதை மறுக்கும் விதமாக மெலிதாக புன்னகையுடன்"கோவிலில் கரண்ட் கட் ஆன விச‌யத்தை ஏன் அப்படி யோசிக்கிறீங்க?அதற்கு பதிலா இப்படி யோசிச்சுப் பாருங்களேன்."

"கோவிலில் எங்குமே செயற்கையான மின்சார விளக்கே இல்லாமல் அம்மன் கருவறையில் இயற்கையான ‌தீபஒளியின் வெளிச்சம் மட்டும் நிரம்பியிருந்ததே அது எவ்வளவு அழகு."


"அதுவும் கருவறை முழுக்க நிறைய தீபங்கள் ஏற்றியிருந்ததால் அவ்வளவு தீபங்களின் வெளிச்சத்தில் அம்மன் பிரகாசமாக தெரிந்ததையும், தீப‌ஆராதனையின்போது அந்த வைரமூக்குத்தியும் தங்ககிரீட‌மும் ஒருநொடிஜொலித்ததை கவனித்தீர்களா!"


"நாம் எத்தனைமுறை இந்த கோவிலுக்கு வந்திருக்கிறோம் ஒருமுறை கூட இப்படி ஒரு அருமையான தரிசனம் கிடைக்கவில்லையே! எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்!" "நம்ம சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்கோங்க!வீணா கவலைபடாதீங்க! எல்லாம் நல்லபடியா நடக்கும்.நேரமாச்சு வாங்க போகலாம்"என்றாள் ஜானகியம்மாள்,அவளின் பாசிட்டிவ் சிந்தனையை கேட்டு ஆச்சர்யத்தோடு பயம் நீங்கிச்சென்றார் ஜெயராமன்.***************நம்பிக்கைபாண்டியன்******************

Friday, June 27, 2008

காரணம்!என் க‌விதைக‌ள்
ந‌ன்றாக‌ இருக்கிறதென்ற‌!
சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு
தெரியாது!
அதை
முதலில் படித்தவள்
நீ என்பது!

~நம்பிக்கைபாண்டியன்


Wednesday, June 18, 2008

பாசம்!


தாத்தா

பாட்டி

அப்பா

அத்தை

யாருக்கும்,பால்

பொம்மை

மணி சப்தம்

புத்தகம்

காக்கா

தொலைக்காட்சி

எழுதுகோல்

நாய்குட்டி

வாகனம்

பூனை,

எதற்கும்!

அழுகையை

நிறுத்தாத குழந்தை!"அம்மா வந்துட்டேன்

செல்லம்"என

அணைத்த நொடியிலேயே

அழுகையின்றி சிரித்தது!

~நம்பிக்கைபாண்டியன்

Friday, May 09, 2008

அட்சயதிருதியை கவிதைகள்!

1)

அட்சய திருதியைக்கு
உங்கள் வீட்டில்
தங்கம் வாங்குவதில்லையாமே?
நீ இருப்பதினால்!

2)

அட்சய திருதியையில்
தொடங்கும் செயல்கள்
வெற்றியில் முடிந்து
நல்ல பலனை தருமாம்!
என்னைக் காதலிக்கலாமா?
வேண்டாமா? என‌
குழப்பத்திலிருக்கும் நீயும்
இன்றிலிருந்தாவது
என்னைக்
காதலிக்க‌ தொடங்கேன்!

3)

மாதத்தில்
இரண்டுமுறை
திருதியை வந்தாலும்
சித்திரை மாத
வளர்பிறை திருதியைக்கே
அட்சய திருதியை சிறப்பு!

காணும் இடமெங்கும்
கண்ணுக்கழகாய்
பெண்கள் இருந்தாலும்!
உன் ஒருத்திக்கு மட்டுமே
என் மனதில்
காதல்சிறப்பு!


~நம்பிக்கைபாண்டியன்

Thursday, May 08, 2008

நட்பு!

ஐநூறுக்கும்
ஆயிரத்திற்கும்
அன்பளிப்பு
வாங்கி வந்திருந்த‌
நண்பர்களுக்கு மத்தியில்!

நூறு ரூபாய்
மொய்யுடன் சென்ற‌
எனக்குள் எழுந்த‌
தற்காலிக
தாழ்வு மனப்பான்மையை!

மணமகன் கோலத்தில்
மேடையிலிருந்தபடி
உற்சாகமாய் கையசைத்து
புகைப்படம் எடுக்க
அழைத்த‌ நண்பனின்
உரிமையான‌ நட்பு
உடைத்து எறிந்தது!

~நம்பிக்கைபாண்டிய‌ன்
புகைப்பட ஹைக்கூ..!தாமதத்திற்கு காரணம்
போக்குவரத்து நெரிசலென்று
பொய்சொல்ல முடியவில்லை!
இரவுப்பணி!

Wednesday, May 07, 2008

(கவிதைகள்)

1.மனம்

மதிப்பிற்குரியவர்களாக
இருந்தாலும் கூட!
3.மனதிற்குள்
திட்டிவிடுகிறேன்
மறுக்கப்படும்
நியாயங்களுக்காக!2.மழை

மாமியார் மருமகள்
சண்டையைப் போல,
நிறுத்தவும் முடியாமல்
ஓங்கியும் பெய்யாமல்
சாரலாய்
முணுமுணுத்துக்
கொண்டே இருக்கிறது
இந்த அடைமழை!


அன்பு

கம்யூட்டரில் கல்வி
கம்யூட்டரில் கடிதம்
கம்யூட்டரில் நிர்வாகம்
கம்யூட்டரில் சினிமா
கம்யூட்டரில் காதல்
கம்யூட்டரில் ஜாதகம்
கம்ப்யூட்டரில் வியாபாரம்
கம்ப்யூட்டரில் ஷாப்பிங்! என‌
தேவைகளும் சேவைகளும்
வளர்ந்துகொண்டே வந்தாலும்,

எந்தக் கம்ப்யூட்டரிலும்
வாங்குவதற்கு வாய்ப்பில்லை!
அம்மாவின் அன்பை!

~நம்பிக்கைபாண்டியன்


காதலும் இதயமும்

உடலில்
இரத்தத்தை
தூய்மைபடுத்துகிறது
இதயம்!
மனதில்
எண்ணங்களை
தூய்மைபடுத்துகிறது
காதல்!
என் இதயத்தை
பிறரால் பார்க்கமுடியாது
என்னால் மட்டுமே
உண‌ர முடியும்!
என் காதலையும்
என்னால் மட்டுமே
உணரமுடியும்!

உட‌லில்
இத‌ய‌த்தில் ம‌ட்டுமே
அறைகள் உண்டென்று,
அறிவியல் சொல்கிற‌து
அவளை
சிறை வைப்ப‌தற்கு!

நான்
இருக்கும் வ‌ரை
என் இத‌ய‌ம்
துடித்துக்கொண்டிருக்கும்!
நான் இற‌க்கும்வ‌ரை
அவ‌ள் நினைவுக‌ளும்
துடித்துக்கொண்டிருக்கும்!

--ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்
களைப்பு!
ஐநூறு
அடி தூரம்
ஓடிய போதும்
தோன்றாத களைப்பு!
ஐம்ப‌து
அடிதூரம்
நடக்கும் பொழுதே
தோன்றியது!
படிக்கட்டுகள்!

~நம்பிக்கைபாண்டியன்

--படக்கவிதை!(1)


வாழ்க்கை வாகனத்தில்
சுதந்திரமாய் ஆக்சிலேட்டர்!
கட்டுப்பாடுகளாய் பிரேக்!

முன்னேறிசெல்ல‌
சுதந்திரம்!
விபத்தின்றி செல்ல‌
கட்டுப்பாடுகள்!

இரண்டுமே இருந்தால்தான்
வாழ்க்கையில் அழகுண்டு!
சரியாக பயன்படுத்த‌
சாதிக்க வழியுண்டு!

~நம்பிக்கைபாண்டியன்

Monday, March 31, 2008

புரிதல்!
(சிறுக‌தை~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்)


அம்மாவுக்கும், மனைவிக்கும் வழக்கம் போல சண்டை வந்தாலும், இம்முறை சண்டை அதிகமாகி, கார்த்தியின் மனைவி ராகவி கோபித்துக்கொண்டு அவள் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள்!இந்த பிரச்சனைக்கு
யாரை குறை சொல்லுவது! யாரை சமாதானப்படுத்துவது! என்று தெரியாமல், இருவருக்கும் இடையில் மாட்டிகொண்டு தினமும் மனஉளச்சலை சந்திப்பது அவனுக்கு பழகிவிட்டது!

திருமணமாகி கடந்த‌ நான்கு வருடங்களில் அவ்வப்போது சண்டை பெரிதாக வ‌ந்தாலும், சண்டைக்கான காரணங்களை ஆராய்ந்துபார்த்தால் மிக மிகச் சாதரணமானதாத்தான் இருக்கும்.
சமைப்பது,தண்ணீர்பிடிப்பது, சமைத்த பாத்திரங்களை கழுவி வைப்பது! சிறு சிறு வீட்டுவேலைகள் செய்வது,டி.வி சேனல் பார்ப்பது!போன்றவற்றில் ஏற்படும் நீயா? நானா? என்ற போட்டிதான் காரணமாக இருக்கும்!

என்ன வேலை செய்தாலும் இருவருமே தாங்கள் செய்த‌ வேலைகளை மிகைப்படுத்தியும், சற்று களைத்த சலிப்புடனும் சொல்லிக்காண்பிப்பார்கள்! சிறிய புலம்பலாக ஆரம்பிக்கும் சண்டை இருவரும் மாற்றி மாற்றி கோபத்தில் பேசும்போது பெரிதாகிவிடுகிறது!

"எனகென்ன இளமையா திரும்புது" என்று தனக்கு வயதானதை காரணமாக சொல்லுவது அம்மாவின் குணம்!
"நான் என்ன சும்மாவ இருக்கேன்? ஆபீஸ்லயும் வேலை பார்த்துட்டு வீட்டுலயும் நான் இவ்வளவு வேலை பார்க்கனுமா?" என்று சொல்லுவது ராகவியின் குணம்! தனித்தனியாக இருவரையும் மாற்றி மாற்றி சமாதானம் செய்வது!கார்த்தியின் குணம்,

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் கணவரின் மறைவுக்குபின் வயதான காலத்தில் தனியாக இருப்பது சிரமம் என்பதால், அம்மாவும், இருவருமே வேலைக்குச் செல்வதால் குழந்தையின் பாதுகாப்பிற்காக ராகவியும் தனிகுடித்தனத்தைப் பற்றி யோசித்ததேயில்லை!

மனைவியை உடனே சென்று அழைத்த்து வந்தால் "பொண்டாட்டிதாசன்" என்று அம்மா திட்டுவாள்! சில நாட்கள் கழித்து போய் அழைத்தாள், உங்களுக்கு என்மேல் அக்கறையே இல்லை என்று மனைவி கோபிப்பாள்! என்ன செய்வதென்று குழப்பத்தில் மனம் இருப்பு கொள்ளாமல் தன் அக்காவுக்கு போன்செய்தான்.

குழந்தை பருவத்திலிருந்தே கார்த்திக்கு அவனது அக்கா ஒரு நல்லதோழி என்ற நிலையிருந்து நட்பான ஆலோசனைகள் சொல்லுபவள்! சண்டை பெரிதாகி ராகவி அவள் அம்மா வீட்டுக்கு போனதை சொன்னவுடன்" சரிடா எல்லாம் சரியாகிடும்!வீணாக கவலைப்படாதே!இந்த வாரம் நான் ஊருக்கு வாரேன், உன் மாமியார் வீட்டு போன் நம்பர் கொடு" என்று கேட்டு வாங்கிக்கொண்டாள். குழந்தையும் மனைவியும் சண்டையால் வீட்டில் இல்லாதது கார்த்தியின் மனதுக்கு என்னவோ போல் இருந்தது!

அடுத்தநாளே அக்கா ச‌னி,ஞாயிறு லீவுக்கு வ‌ந்த‌தாக‌ சொல்லிக்கொண்டு இரு குழ‌ந்தைக‌ளையும் அழைத்து வ‌ந்துவிட்டாள்!அக்கா குழ‌ந்தைக‌ளை வ‌ழ‌க்க‌த்திவிட‌ அதிக‌மாக‌ அதிக‌ப்பிர‌ங்கித்த‌ன‌ம் செய்து அம்மாவை வெறுப்பேற்றின‌!அக்காவும் அம்மாவிட‌ம் அவள் திரும‌ண‌த்திற்கு முன்பு வீட்டிலிருக்கும்போது அவ்வ‌ப்போது ச‌ண்டையிட்ட‌தைப்போல‌ இப்போதும் ச‌ண்டையிட‌ ஆர‌ம்பித்தாள், ஞாயிற்றுக்கிழ‌மை மாலை நேரத்தில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இருந்துவிட்டு, இரவு அடுத்த ஊரில் இருக்கும் ம‌னைவியை அழைத்து வ‌ர‌லாம் என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் கார்த்தி!

அக்கா அழுத‌ முக‌த்துட‌ன் துணிக‌ளை எடுத்து வைத்து ஊருக்கு புற‌ப்ப‌ட்டாள்! அம்மாவும் சோக‌மாக‌வே நின்றிருந்தாள், அக்கா சென்ற‌தும் அம்மா கல‌ங்கிய‌ க‌ண்க‌ளுட‌ன்!
" முப்ப‌த்தைந்து வ‌ருட‌மாக‌ என்னுட‌ன் ப‌ழ‌கிய‌ என் ம‌க‌ளே என்னைப் புரிந்துகொள்ளாம‌ல் பேசுகிறாள், அர்த்த‌மில்லாம‌ள் ச‌ண்டையிடுகிறாள், என்ன‌வெல்லாமோ பேசுகிறாள்,அவ‌ளை நாம் எல்லாரும் உதாசீன‌ப்ப‌டுத்துவ‌தாக‌ குறைப‌ட்டுக்கொள்கிறாள்" இந்த‌ கொடுமையை யாரிட‌ம் சொல்லுவேன்"
"இவ‌ளுக்கு உன் பொண்டாட்டி ப‌ர‌வாயில்லைடா, நேத்து வ‌ந்த‌வ‌ளா இருந்தாளும் இந்த‌ அள‌வுக்கு பேச‌மாட்டா! சில‌ நேர‌த்துல‌ பொறுமையா போய்டுவா" முத‌ல்ல‌ போய் அவ‌ளை கூப்பிட்டுவாட‌! என் பேத்திய‌ பார்த்து ரெண்டு நாளாகுது! என்றாள் அம்மா! உட‌னே உற்சாக‌மாய் ம‌னைவியை அழைக்க‌ சென்றான்,
அங்கே மாம‌னார் வீட்டில் இவ‌ன் வ‌ருவ‌து தெரியாவிட்டாலும் புற‌ப்ப‌ட்டு த‌யாராக வாடிய முகத்துடனே இருந்தாள் ராக‌வி!

அங்கிருந்து புற‌ப்ப‌ட்டு பேருந்தில் ப‌ய‌ணிக்கும்போது கார்த்தியின் தோள்க‌ளில் சாய்ந்துகொண்டு விம்மி அழுத‌ப‌டியெ! இந்த‌ முறை அம்மா வீட்டுக்கு ஏன்தான் வ‌ந்தோம்னு ஆகிடுச்சுங்க‌!என்ன‌ ரொம்ப‌ உதாசீன‌ப்ப‌டுத்துறாங்க‌,நான் கூட‌ ப‌ர‌வாயில்ல‌ங்க‌ ந‌ம்ம‌ குட்டி பாப்பாதான் பாவம், யாருமே அவளை ச‌ரியா தூக்க‌வே இல்ல! சரியா கவனிக்கவே இல்லங்க!அம்மா சின்ன பிள்ளைல திட்டுனது மாதிரி இப்பவும் எதையாவ‌து சொல்லி திட்டிட்டே இருக்காங்க‌! கிள‌ம்புற‌ப்போ கூட‌ அம்மாகிட்ட‌ ச‌ண்டை! அதான் போய்ட்டு வ‌ர்றேன்னுகூட‌ சொல்ல‌ல!"

"இருப‌த்தேழு வ‌ருச‌மா ப‌ழ‌கின‌ என் அம்மாவே என்ன‌ புரிஞ்சுக்காம‌ பேசுற‌ப்போ" அத்தை எவ்வ‌ள‌வோ தேவ‌லை! என்ன‌தான் ச‌ண்டை போட்டாலும் அடுத்த‌ நிமிச‌மே ம‌ற‌ந்துட்டு பேசிடுவாங்க‌!ந‌ம்ம‌ பாப்பாவையும் ரொம்ப‌ அக்க‌றையா பார்த்துக்குவாங்க!"என்றாள் ராக‌வி! அப்போதுதான் அம்மாவுக்கும் ம‌னைவிக்கும் இடையே புரிந்துகொள்ளுத‌லை அதிகரிக்க‌ அக்காவின் திட்ட‌மும்,அத‌ற்கு த‌ன் அத்தையின் உத‌வியும் கார்த்தியின் ம‌ன‌துக்கு புரிந்த‌து!இருவருக்கு இடையே புரிந்துகொள்ளுதல் அதிகரிக்கும் போது பிரச்சனைகள் வந்தாலும் சுலபமாய் தீர்க்கக்கூடியதாகத்தான் இருக்கும்! இனி கவலைப்டத் தேவையில்லை என அவர்கள் இருவருக்கும் ம‌ன‌திற்குள் ந‌ன்றிசொல்லி ந‌ம்பிக்கையோடு வீட்டிற்குச்சென்றான்!
படக்கவிதை!(2)


அருகே
நின்று பார்த்தால்
அழகாக தெரிவதில்லை!

தொலைவில்
நின்று பார்த்தால்
தெளிவாக தெரிவதில்லை!

இடையே
நின்று பார்த்தால்தான்
இயல்பாகத் தெரிகிறது!
கண்ணாடியில் முகம்!

~நம்பிக்கைபாண்டியன்


வெயிலில்
நிற்பது பேருந்துதான்!
உள்ளே அமர்ந்திருக்கும்
எனக்கு வியர்க்கிறது!
கோடைகாலம்! ~நம்பிக்கைபாண்டியன்

Friday, January 25, 2008பலன்!

தவறென்று
நினைத்து
தள்ளிவைத்த ஆசைகள்!

நல்லவன்(ள்)
என்று சொல்லி
நழுவவிட்ட வாய்ப்புகள்!

பின்விளைவுகள்
யோசித்து
விலகிவந்த சூழ்நிலைகள்!

கடவுளுக்கு
பயந்து
கடைபிடித்த கட்டுப்பாடுகள்!

அத்தனையும் சேர்ந்து
அற்புதங்கள் உணர்த்தின!
அன்பு கலந்த‌
இல்லற இரவுகளில்!

~நம்பிக்கைபாண்டியன்!

புகைப்ப‌ட‌ ஹைக்கூ...

மனம் நிறைந்த
சிரிப்பில்
எல்லோரிடமும்
இருக்கிறது அழகு!

~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்!

Thursday, January 10, 2008

சில‌ பூக்கள்
அழகிற்காக
வாங்கப்படுகின்றன!

சில பூக்கள்
ம()ணத்திற்காக
‌வாங்கப்படுகின்றன!

இரண்டுமே இல்லாமல்
வாங்குபவர் யாருமற்று
வாடிக்கொண்டிருக்கின்றன‌
சில முதிர்பூக்கள்!

இந்தப்பூக்கள்

அழும் சப்தம்
யாருக்கும் கேட்பதில்லை!
அவைகள்
மெளனமாகவே அழுகின்றன!

~நம்பிக்கைபாண்டியன்

(நண்பர் சிறில் அலெக்ஸ் நடத்தும் "நச்"கவிதை போட்டி"க்கு எழுதியது) http://cyrilalex.com/?p=365