Monday, March 31, 2008

புரிதல்!
(சிறுக‌தை~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்)


அம்மாவுக்கும், மனைவிக்கும் வழக்கம் போல சண்டை வந்தாலும், இம்முறை சண்டை அதிகமாகி, கார்த்தியின் மனைவி ராகவி கோபித்துக்கொண்டு அவள் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள்!இந்த பிரச்சனைக்கு
யாரை குறை சொல்லுவது! யாரை சமாதானப்படுத்துவது! என்று தெரியாமல், இருவருக்கும் இடையில் மாட்டிகொண்டு தினமும் மனஉளச்சலை சந்திப்பது அவனுக்கு பழகிவிட்டது!

திருமணமாகி கடந்த‌ நான்கு வருடங்களில் அவ்வப்போது சண்டை பெரிதாக வ‌ந்தாலும், சண்டைக்கான காரணங்களை ஆராய்ந்துபார்த்தால் மிக மிகச் சாதரணமானதாத்தான் இருக்கும்.
சமைப்பது,தண்ணீர்பிடிப்பது, சமைத்த பாத்திரங்களை கழுவி வைப்பது! சிறு சிறு வீட்டுவேலைகள் செய்வது,டி.வி சேனல் பார்ப்பது!போன்றவற்றில் ஏற்படும் நீயா? நானா? என்ற போட்டிதான் காரணமாக இருக்கும்!

என்ன வேலை செய்தாலும் இருவருமே தாங்கள் செய்த‌ வேலைகளை மிகைப்படுத்தியும், சற்று களைத்த சலிப்புடனும் சொல்லிக்காண்பிப்பார்கள்! சிறிய புலம்பலாக ஆரம்பிக்கும் சண்டை இருவரும் மாற்றி மாற்றி கோபத்தில் பேசும்போது பெரிதாகிவிடுகிறது!

"எனகென்ன இளமையா திரும்புது" என்று தனக்கு வயதானதை காரணமாக சொல்லுவது அம்மாவின் குணம்!
"நான் என்ன சும்மாவ இருக்கேன்? ஆபீஸ்லயும் வேலை பார்த்துட்டு வீட்டுலயும் நான் இவ்வளவு வேலை பார்க்கனுமா?" என்று சொல்லுவது ராகவியின் குணம்! தனித்தனியாக இருவரையும் மாற்றி மாற்றி சமாதானம் செய்வது!கார்த்தியின் குணம்,

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் கணவரின் மறைவுக்குபின் வயதான காலத்தில் தனியாக இருப்பது சிரமம் என்பதால், அம்மாவும், இருவருமே வேலைக்குச் செல்வதால் குழந்தையின் பாதுகாப்பிற்காக ராகவியும் தனிகுடித்தனத்தைப் பற்றி யோசித்ததேயில்லை!

மனைவியை உடனே சென்று அழைத்த்து வந்தால் "பொண்டாட்டிதாசன்" என்று அம்மா திட்டுவாள்! சில நாட்கள் கழித்து போய் அழைத்தாள், உங்களுக்கு என்மேல் அக்கறையே இல்லை என்று மனைவி கோபிப்பாள்! என்ன செய்வதென்று குழப்பத்தில் மனம் இருப்பு கொள்ளாமல் தன் அக்காவுக்கு போன்செய்தான்.

குழந்தை பருவத்திலிருந்தே கார்த்திக்கு அவனது அக்கா ஒரு நல்லதோழி என்ற நிலையிருந்து நட்பான ஆலோசனைகள் சொல்லுபவள்! சண்டை பெரிதாகி ராகவி அவள் அம்மா வீட்டுக்கு போனதை சொன்னவுடன்" சரிடா எல்லாம் சரியாகிடும்!வீணாக கவலைப்படாதே!இந்த வாரம் நான் ஊருக்கு வாரேன், உன் மாமியார் வீட்டு போன் நம்பர் கொடு" என்று கேட்டு வாங்கிக்கொண்டாள். குழந்தையும் மனைவியும் சண்டையால் வீட்டில் இல்லாதது கார்த்தியின் மனதுக்கு என்னவோ போல் இருந்தது!

அடுத்தநாளே அக்கா ச‌னி,ஞாயிறு லீவுக்கு வ‌ந்த‌தாக‌ சொல்லிக்கொண்டு இரு குழ‌ந்தைக‌ளையும் அழைத்து வ‌ந்துவிட்டாள்!அக்கா குழ‌ந்தைக‌ளை வ‌ழ‌க்க‌த்திவிட‌ அதிக‌மாக‌ அதிக‌ப்பிர‌ங்கித்த‌ன‌ம் செய்து அம்மாவை வெறுப்பேற்றின‌!அக்காவும் அம்மாவிட‌ம் அவள் திரும‌ண‌த்திற்கு முன்பு வீட்டிலிருக்கும்போது அவ்வ‌ப்போது ச‌ண்டையிட்ட‌தைப்போல‌ இப்போதும் ச‌ண்டையிட‌ ஆர‌ம்பித்தாள், ஞாயிற்றுக்கிழ‌மை மாலை நேரத்தில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இருந்துவிட்டு, இரவு அடுத்த ஊரில் இருக்கும் ம‌னைவியை அழைத்து வ‌ர‌லாம் என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் கார்த்தி!

அக்கா அழுத‌ முக‌த்துட‌ன் துணிக‌ளை எடுத்து வைத்து ஊருக்கு புற‌ப்ப‌ட்டாள்! அம்மாவும் சோக‌மாக‌வே நின்றிருந்தாள், அக்கா சென்ற‌தும் அம்மா கல‌ங்கிய‌ க‌ண்க‌ளுட‌ன்!
" முப்ப‌த்தைந்து வ‌ருட‌மாக‌ என்னுட‌ன் ப‌ழ‌கிய‌ என் ம‌க‌ளே என்னைப் புரிந்துகொள்ளாம‌ல் பேசுகிறாள், அர்த்த‌மில்லாம‌ள் ச‌ண்டையிடுகிறாள், என்ன‌வெல்லாமோ பேசுகிறாள்,அவ‌ளை நாம் எல்லாரும் உதாசீன‌ப்ப‌டுத்துவ‌தாக‌ குறைப‌ட்டுக்கொள்கிறாள்" இந்த‌ கொடுமையை யாரிட‌ம் சொல்லுவேன்"
"இவ‌ளுக்கு உன் பொண்டாட்டி ப‌ர‌வாயில்லைடா, நேத்து வ‌ந்த‌வ‌ளா இருந்தாளும் இந்த‌ அள‌வுக்கு பேச‌மாட்டா! சில‌ நேர‌த்துல‌ பொறுமையா போய்டுவா" முத‌ல்ல‌ போய் அவ‌ளை கூப்பிட்டுவாட‌! என் பேத்திய‌ பார்த்து ரெண்டு நாளாகுது! என்றாள் அம்மா! உட‌னே உற்சாக‌மாய் ம‌னைவியை அழைக்க‌ சென்றான்,
அங்கே மாம‌னார் வீட்டில் இவ‌ன் வ‌ருவ‌து தெரியாவிட்டாலும் புற‌ப்ப‌ட்டு த‌யாராக வாடிய முகத்துடனே இருந்தாள் ராக‌வி!

அங்கிருந்து புற‌ப்ப‌ட்டு பேருந்தில் ப‌ய‌ணிக்கும்போது கார்த்தியின் தோள்க‌ளில் சாய்ந்துகொண்டு விம்மி அழுத‌ப‌டியெ! இந்த‌ முறை அம்மா வீட்டுக்கு ஏன்தான் வ‌ந்தோம்னு ஆகிடுச்சுங்க‌!என்ன‌ ரொம்ப‌ உதாசீன‌ப்ப‌டுத்துறாங்க‌,நான் கூட‌ ப‌ர‌வாயில்ல‌ங்க‌ ந‌ம்ம‌ குட்டி பாப்பாதான் பாவம், யாருமே அவளை ச‌ரியா தூக்க‌வே இல்ல! சரியா கவனிக்கவே இல்லங்க!அம்மா சின்ன பிள்ளைல திட்டுனது மாதிரி இப்பவும் எதையாவ‌து சொல்லி திட்டிட்டே இருக்காங்க‌! கிள‌ம்புற‌ப்போ கூட‌ அம்மாகிட்ட‌ ச‌ண்டை! அதான் போய்ட்டு வ‌ர்றேன்னுகூட‌ சொல்ல‌ல!"

"இருப‌த்தேழு வ‌ருச‌மா ப‌ழ‌கின‌ என் அம்மாவே என்ன‌ புரிஞ்சுக்காம‌ பேசுற‌ப்போ" அத்தை எவ்வ‌ள‌வோ தேவ‌லை! என்ன‌தான் ச‌ண்டை போட்டாலும் அடுத்த‌ நிமிச‌மே ம‌ற‌ந்துட்டு பேசிடுவாங்க‌!ந‌ம்ம‌ பாப்பாவையும் ரொம்ப‌ அக்க‌றையா பார்த்துக்குவாங்க!"என்றாள் ராக‌வி! அப்போதுதான் அம்மாவுக்கும் ம‌னைவிக்கும் இடையே புரிந்துகொள்ளுத‌லை அதிகரிக்க‌ அக்காவின் திட்ட‌மும்,அத‌ற்கு த‌ன் அத்தையின் உத‌வியும் கார்த்தியின் ம‌ன‌துக்கு புரிந்த‌து!இருவருக்கு இடையே புரிந்துகொள்ளுதல் அதிகரிக்கும் போது பிரச்சனைகள் வந்தாலும் சுலபமாய் தீர்க்கக்கூடியதாகத்தான் இருக்கும்! இனி கவலைப்டத் தேவையில்லை என அவர்கள் இருவருக்கும் ம‌ன‌திற்குள் ந‌ன்றிசொல்லி ந‌ம்பிக்கையோடு வீட்டிற்குச்சென்றான்!
படக்கவிதை!(2)


அருகே
நின்று பார்த்தால்
அழகாக தெரிவதில்லை!

தொலைவில்
நின்று பார்த்தால்
தெளிவாக தெரிவதில்லை!

இடையே
நின்று பார்த்தால்தான்
இயல்பாகத் தெரிகிறது!
கண்ணாடியில் முகம்!

~நம்பிக்கைபாண்டியன்


வெயிலில்
நிற்பது பேருந்துதான்!
உள்ளே அமர்ந்திருக்கும்
எனக்கு வியர்க்கிறது!
கோடைகாலம்! ~நம்பிக்கைபாண்டியன்