Wednesday, February 29, 2012

உனக்கான கவிதைகள்!


நீ
சாலையோரத்தில்
ஒதுங்கி நிற்கும்போது
அடர்த்தியாக
பெய்துகொண்டிருந்த மழை
நடக்க ஆரம்பித்ததும்
மாறிவிடுகிறது
சிறு தூரலாக...

**************************

உன் ஊரின்
பெயர் தாங்கி
என்னைக்
கடந்து செல்லும்
ஒவ்வொரு
பேருந்தின் பின்னாலும்
ஓடிக்கொண்டிருக்கிறது
என் மனது!

**************************

நான் எழுதும்
ஒவ்வொரு 
கவிதைக்கும்
ஒரு முத்தம் என்கிறாய்
என் டைரி
நிரம்பி வழிகிறது!

**************************Friday, February 24, 2012

அனுமதியற்றவர்கள் - கவிதை

எறும்பு எலி,
பாம்பு  பூரான்
தெருநாய், என
தன் அனுமதியின்றி
வீட்டிற்குள் நுழையும்
எந்த  ஒரு உயிரையும்
அடித்து விரட்டியோ, கொன்றோ
வெளியேற்றுகிறான் மனிதன்!

காடுகளை அழித்து
வயல்களை நகராக்கி
குடியேறும் மனிதர்களை
என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக்கொண்டிருக்கின்றன
விலங்குகளும் பறவைகளும் !


Wednesday, February 15, 2012

மரண குறிப்புகள்! - கவிதை

என்மரணம்
நிகழந்தது தெரிந்ததும்,
எனைப்பற்றி
ஒவ்வொருவரும்
பேசிக்கொண்டிருந்ததையெல்லாம்
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் கடவுள்!
எனக்கான இடம்
சொர்கத்திலா? நரகத்திலா?
என்பதை தீர்மானிக்க!
                     

Saturday, February 11, 2012

உனக்கு பிடித்ததும் எனக்கு பிடித்ததும்! - கவிதை


தொட்டிலில்
தூங்கிக் கொண்டிருந்த‌
நம் அன்புக் குழந்தையின்
முதல் பிறந்த நாளுக்கு!
ஆடை வாங்குவது பற்றி!
கட்டிலில் அமர்ந்தபடி
பேசிக்கொண்டிருந்தோம்!

 
முதல் பிறந்தநாள்!
வாழ்க்கை முழுவதும்
மங்களகரமாய் இருக்க!
உனக்கு பிடித்த‌
மஞ்சள் நிறத்தில்
ஆடை எடுக்கலாம்!
என்கிறாய் நீ,

முதல் பிறந்தநாள்
வாழ்க்கை முழுவதும்
பசுமையானதாக இருக்க!
எனக்கு பிடித்த
பச்சை நிறத்தில்
ஆடை எடுக்கலாம்!
என்கிறேன் நான்,

இருவரும்
சொன்னதையே
சொல்லிக்கொண்டிருக்க!
பேச்சு விவாதமாகி!
விவாதம் சண்டையாகி!
தலையணைகளால்
தாக்கிக்கொண்டோம்!
உன் இடை பற்றி
இழுத்தவுடன்!
என் தோள் பற்றி
சாய்ந்து கொண்டாய்.........
........................................
............................!

கூடி களைத்த பின்,
முத்தமிட்டபடி,
உனக்கு பிடித்த
மஞ்சள் நிறத்திலேயே
ஆடை எடுக்கலாம்!
என்கிறேன் நான்,
இல்லை! இல்லை!
உங்களுக்கு பிடித்த‌
பச்சை நிறத்திலேயே
ஆடை எடுக்கலாம்!
என்கிறாய் நீ!
ஆரம்பித்தோம்
அடுத்த சண்டையை....
................................!


மறுநாள் மாலை
வாங்கி வந்த‌ ஆடையில்!
மஞ்சளும் பச்சையும்!
சமமாய் கலந்திருந்தது!
நம்மைப் போல்!Thursday, February 09, 2012

மனைவியானவள்! - கவிதைகள்


தாமதமாகத் தொடங்கி
நீடித்துப் பெய்யும்
மரத்தடி மழையாகவே
உன் காதல்!


**************************

அவசியங்கள் எதுவுமற்று
அன்பால் எழுதப்பட்டதால்
நிபந்தனைகளின்றி நீடிக்கிறது
நம் இருவருக்கும் 
பொதுவிலான
கற்பெனும் நற்குணம்!


**********************************

*வலிமையான முத்தம்*


மகிழ்ச்சி
நிறைந்த நேரங்களில்,
ஆசையாக‌
உதடுகளில்
கொடுத்ததை விட! 

கவலை
மிகுந்த தருணங்களில்
ஆறுதலாக‌
நெற்றியில் கொடுத்தது
அதிகம் இனிக்குதடி!


******************************Sunday, February 05, 2012

வானத்தில் ஹைக்கூ - கவிதைகள்

1)
 மேகங்களில்
பொம்மை செய்து
விளையாடும் குழந்தை
காற்று!

     ******
2)
 காற்றில் கரையும்
பலவண்ண  கற்பூரம்
வானவில்!

    ******
3)
 கீழ்நோக்கி வளரும்
மழையின் வேர்கள்
வானத்தில் இருக்கிறது
மின்னலாக!

     ******
4)
 பதினெட்டு பட்டிக்கும்
ஒரே ஸ்பீக்கர்
இடி!Wednesday, February 01, 2012

தாய்மொழி - கவிதை

நேற்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
காலை மிதித்துவிட்டு
"SORRY" என்றவனிடம்
சண்டையிட்டு வந்த நான்!

இன்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
காலை மிதித்துவிட்டு
"மன்னிச்சுடுங்க " என்றவனிடம்
புன்னகைத்தபடி வருகிறேன்!
வார்த்தைளின்  வலிமை
மொழியில் இருக்கிறது‍...!