Tuesday, March 27, 2007
மனிதர்களுடன்!
மனிதர்களை
ஒப்பிட்டுப் பார்த்தால்!
தலைக்கனமும் வரும்!
தாழ்வு மனப்பான்மையும் வரும்!
பிரச்சனைகளை
செயல்களுடன்
ஒப்பிட்டுப் பார்த்தால்!
நம் தவறுகள் புரியும்!
வெற்றிகளை!
செயல்களுடன்
ஒப்பிட்டுப் பார்த்தால்!
நம் நன்மைகள் புரியும்!
வாழ்க்கையை!
சம்பவங்களுடன்
ஒப்பிட்டுப் பார்த்தால்!
வளமுடன் வாழ!
வழிகள் தெரியும்!
~நம்பிக்கைபான்டியன்
என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!
~நம்பிக்கைபாண்டியன்
Wednesday, March 21, 2007
(இனிமையான குழந்தைபருவம்)
குழந்தைப் பருவம் எல்லோராலும் விரும்பப்படும் பருவம்,கடவுள் கண்முன் தோன்றி என்ன வரம் என்று கேட்டால் மீண்டும் என்னை குழந்தையாக்கு என்று கேட்பதற்கு நிறைய மனிதர்கள் தயாராகவே இருக்கிறார்கள்! குழந்தைப்பருவத்திலும் சிறுவர்களாக இருக்கும்போதும் , ஒவ்வொருவரின் குற்றமில்லாத குறும்புகளும் பேச்சுகளும் நினைக்க நினைக்க அவ்வளவு இனிமையாவை!என் குழந்தை பருவத்து நிகழ்வுகள் எனக்கு அதிகம் நினைவில்லை நான் அறிந்த சிலரின் குழந்தைபருவ நிகழ்வுகள் நன்கு நினைவில் இருக்கிறது!
ஒரு முறை என் சித்தப்பாவின் ஊருக்கு என் வீட்டில் எல்லோரும் சென்றிருந்தோம், நாங்கள் சென்ற மாலைநேரத்தில் டீ அருந்துவதற்கு தயாரானார்கள்,எங்களை பார்தத்தும் இருந்த குறைந்த அளவிலான டீ யை எல்லோருக்கும் பாதி பாதியாக சமமாக பிரித்து ஊற்றி அருந்த கொடுத்தார்கள், அப்போது என் சித்தப்பா இளையவன் விக்னேஷ் (அப்போது 5வயது இருக்கும்) ""ம்ம் போங்க!!எனக்கு அர கிளாஸ்லாம் வேணாம் டம்ளர் நிரையா வேணும்? என்று அடம்பிடித்தான்,திரும்ப கொடுக்க முயன்ற எங்களையும் சித்தி கொடுக்கவிடாமல் தடுத்து கோபத்துடன் அவனிடம் "போடா நாயே!நிறையா வேணும்னா போய் மிச்சத்துக்கு தண்ணி ஊத்திக்க! நிறைய வந்துரும்!"" என்று சொல்ல அவனும் உடனே எழுந்து டம்ளர் நிறையவருமாறு பானையிலிருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி மட மடவென குடித்துவிட்டான், அன்று முழுவதும் அதை நினைத்து நினைத்து சிரித்தோம்!
வைகாசி மாதம் எங்கள் ஊர் திருவிழாவிற்கு அத்தைகள், சித்தப்பா, பெரியப்பா எல்லோரும் குடும்பமாக பாட்டி வீட்டில்தான் இருப்போம், அன்று இரவு முழுவதும் மொட்டை மாடியில் அதிகமான அரட்டை அடித்துக்கொண்டேதான் எல்லோரும் சேர்ந்து தூங்குவோம்,தின்பண்டங்கள் நிறைய தருவார்கள், அத்தைகள், சகோதரிகள் எல்லோரும் இருகைகளில் மருதாணி அரைத்து வைப்பார்கள்,சிறுவர்களாக இருக்கும் எங்களுக்கும் அத்தை பையன்களுக்கும் ஒரு கைகளில் மட்டும் வைத்துவிடுவார்கள், அன்று நடுஇரவு பலரும் தூங்கிவிட சிலர் மட்டும் தூங்காமல் அரட்டைஅடித்து சிரித்து பேசிகொண்டே இருந்தோம், அப்போது கைகளில் மருதாணியுடன் தூங்கிக் கொண்டிருந்த அத்தை பையன் ஒருவன் தூக்கத்திலேயே திடீரென எழுந்தான் கைகளில் இருந்த மருதாணியை லபக் லபக்கென பிரித்து வாயில்போட்டு முழுங்க ஆரம்பித்துவிட்டான், சிறிது நேரத்திற்குபிறகே பார்த்தோம், உடனே தடுத்து ,வாயில் இருந்ததையும் தோண்டி எடுத்துவிட்டார்கள்,மறுநாள் முழுக்க வயிற்றுப்போக்குடன் இருந்தான்,அவர் இப்போது சிலநேரங்களில் அதிககிண்டலுடன் பேசிகொண்டே இருப்பார், அவரின் பேச்சை நிறுத்த"நிறுத்துங்க மச்சான்!உங்களை பத்தி எங்களுக்கு தெரியாதா அரை தூக்கத்தில அரைகிலோ மருதாணிய தின்ண ஆளுதானே நீங்க! என்று சொன்னவுடன் சிர்த்துகொண்டே அமைதியாகிவிடுவார்.
சில ஆண்டுகளுக்குமுன்னால் என் நண்பன் வீட்டிற் சென்றிருந்தேன், அப்போது என் நண்பனின் சகோதரிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது , நானும் என் நண்பனும் குழந்தை அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம், அப்போது முதல் குழந்தை ஷீலா" ஏம்மா பாப்பாக்கு குட்டி கண்ணா இருக்குல, அது பாக்குறப்போ நாமலாம் அதுக்கு பூதம் மாதிரி தெரிவோமா?? என்று கேட்க உடனே அக்கா "அய்யோ!! என் பிள்ளைக்கு அறிவ பாருங்கடா நீங்களும்தான் இருக்கீங்க!! என்று சொல்லி குழந்தையை அணைத்துக்கொண்டார்கள்! அந்தக் குழந்தை சிந்தனையான கேள்வியை கேட்டதும் நாங்கள் சிறுவயதில்! "டேய் எரும்பு கண்ணுக்கு நாம எல்லாரும் அரக்கன்டா! நம்ம தெரு சாக்கடைதான் அதுக்கு கடல், இந்தக் கல்லு எல்லாமே அதுக்கு இமயமலைடா!" என்று சொல்லி விளையாடியது நினைவுக்கு வந்து சென்றது!
என் மாமா வீட்டில் நடந்தது, ஒரு நாள் என் மாமா மகன் மூத்தவர் சரவணன் ஆறு வயதில் முதல் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் அருகே உள்ள பள்ளிக்கு சென்று மழையால் தாமதாமாக வீடு திரும்பியிருக்கிறார்! அத்தை "ஏன்டா!கண்ணு இவ்வளவு நேரம் கழிச்சு வர! என்று கேட்க, அதற்கு!" மழ பேஞ்சுச்சுமா! அதான் கொஞ்சங் கொஞ்சமா வந்தேன்!என்று சொல்ல, அத்தை முதலில் புரியாமல் ,யோசித்த பிறகு மழைக்கு ஒதுங்கி மெதுவாக நின்று நின்று வந்ததை மழலை மொழியில்"கொஞ்சங் கொஞ்சமாக வந்தேன்" என்று சொன்னதை புரிந்து சிரித்தார்களாம்,
இதுபோல் எத்தனையோ வீடுகளில் எத்த்னையோ விதமான குழந்தை பருவத்து சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழ்கின்றன, குழந்தைகளின் செயல்கள் சிலநேரங்களில் கோபத்தை கொடுத்தாலும் பல நேரங்களில் குழந்தைபருவமும் அதன் நினைவுகளும் இனிமையாகவே இருகின்றன. அவர்களின் எண்ணங்களை, பேச்சுக்களை சிரிப்புகளை எல்லாம் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அந்தநேரத்தில் நம் கவலைகள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடுகின்றன!
Tuesday, February 27, 2007
Sunday, February 25, 2007

அழகு
அழகிய விதமாய்
தலை வாரவில்லை!
புருவத்தின் இயல்பை
சீர் செய்யவில்லை!
உதட்டிற்கு சிவப்பு
சாயமிடவில்லை!
முகத்திற்கு அழகூட்ட
எதுவும் பூசவில்லை!
கழுத்திலும் உடலிலும்
ஆபரணங்கள் இல்லை!
விலைஉயர்ந்த நாகரீக
ஆடையுமில்லை!
கையில் மணிகாட்டும்
கடிகாரமில்லை!
காலில் எந்த
காலணியுமில்லை!
ஆனாலும்
அழகாய் இருக்கிறது
குழந்தை!
~நம்பிக்கை பாண்டியன்
Monday, February 19, 2007
(உயர்ந்தோர் நட்பு உதவும்)
பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் நான் கல்லூரி படிப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை, படிக்க பணம் செலவாகும் என் வீட்டின் நிலமையோ அதற்குரிய வகையில் இல்லை,என்வே எந்த ஒரு கனவும் லட்சியமும் இல்லாமலே 12ம் வகுப்பை படித்தேன், கணிதப்பாடம் கவிழ்த்துவிட (படிச்சாதானே வரும்) அறிவியல் பாடங்கள் அனைத்திலும் 80% மதிப்பெண் பெற ,எப்படியாவது படிக்க வைக்கிறோம் நீ படி என்று சொல்லிவிட்டார்கள்
,
எங்கள் உறவினர் நண்பர் பிரபு என்ற ஒருவர் ஒரு கல்லுரியில் இரண்டாமாண்டு படித்துகொண்டிருந்தார் அவர் ஆலோசனைப்படி அந்த கல்லூரியில் விண்ணப்பித்தேன், இன்னொரு கல்லூரியில் வேதியியல் கிடைத்தது,வேதியியல் படித்தால் இருபாலர் கல்லூரி, இயற்பியல் படித்தால் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி எதில் சேர என்று குழப்பம் , வேதியலை விட இயற்பியல் எனக்கு படிக்க எளிது என்பதால் இயற்பியலில் சேர்ந்துவிட்டேன்,
பிரபு தான் எனக்கு கல்லூரியில் முதல் நண்பர் என்று சொல்லலாம் , எங்கள் கல்லுரியில் ராகிங் உண்டு அளவான முறையில், நாங்கள் அவர்கள் சொல்வதை மறுக்காமல் செய்வோம், பிரபுவின் உதவியால் அவரின் வகுப்பில் நிறைய மாணவர்களுக்கு அறிமுகமாகிவிட்டேன்,நேரம் கிடைக்கும்போது அவர்களின் அரட்டையில் கலந்துகொள்வேன்,சில நண்பர்கள் சீனியரிடம் ஏதேனும் புத்தகம் வாங்க வேண்டுன்றால் என்னை அழைத்து செல்வார்கள்,அப்போது துறைவாரியாக கல்லுரிகளுக்கு இடையே ஒவ்வொரு கல்லுரியிலும் போட்டிகள் நடக்கும், நிறைய கல்லுரிகளில் இருந்து வந்து கலந்துகொள்வார்கள், போட்டிகளில் அதிகம் இரண்டாமாண்டு மூன்றாமாண்டு மாணவர்கள் தான் கலந்து கொள்வார்கள், முதலாமாண்டு மாணவர்களை அழைக்க மட்டார்கள் , ஆனால் ஒரு கல்லுரியில் நடந்த போட்டிக்கு என்னை மட்டும் அழத்து சென்று .
5 பேர் கலந்து கொள்ளும் 6 நிமிட நாடகப்போட்டி என்னையும் சேர்த்துகொண்டார்கள், பள்ளியில் பேச்சு, கட்டுரை போட்டியில் பங்கேற்றுள்ளேன், இங்குதான் முதல்முறையாக மேடையேறினேன்,சீனியர் மாணவரின் கற்பனையில் உதித்த சின்ன ஸ்க்ரிப்ட், சிறப்பாக நடித்தோம். இரண்டாம் பரிசு கிடைத்தது
சிறிய நிகழ்வுதான் ,
ஆனால் என் வளர்ச்சிக்கு இது மிக பயனுள்ளதாக இருந்தது,
மேடைகூச்சம் குறைய உதவியது,
எப்படிபட்ட போட்டிகளுக்கு எப்படி கற்பனை செய்து ஸ்கிரிப்ட் தயாரிக்கவேண்டும் என்ற கற்பனை திறன் வளர உதவியது
( இது நான் மூன்றாமாண்டு படிக்கும் போது பெரிய அளவில் வெற்றிபெற உதவியது)
இது போக படிப்பு ரீதியாகவும் ,மற்ற ஆசிரியர்களை பற்றியும் சிறு சிறு பிரசனைகளை எதிர்கொள்வது என்பதிலும் அவர்கள் பல வழிகளை சொல்லி கொடுத்தார்( ஆனால் நான் சரியா படிக்கலங்க) இதன் வழியாக நான் தெரிந்துகொண்டது என்னவென்றால்
எங்கு சென்றாலும் நம்மை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் நல்ல!! நட்பை ஏற்படுத்திகொள்வது நல்லது,அது நம் வளர்ச்சிக்கு உதவும்.
இதன்பிறகு நாங்கள் பல போட்டிகளில் நம்பிக்கையுடன் பங்கேற்க செல்வோம் ,
நாட்டு நலப்பணி திட்ட 10 முகாமில் கிராமத்தில் தினமும் நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும், அதற்கு உதவியது,
அப்போது வரலாற்று துறையை சேர்ந்த மிகத்திறமையான மாணவன் சங்கர் என்பவனும் எங்களுடன் கலந்துகொள்வான் , எங்களையும் அவன் போட்டிகளுக்கு அழைத்து செல்வான் ஆனல் நாங்கள் யாரும் அதில் தொடர்ந்து ஆர்வம் செலுத்தாமல் இருந்துவிட்டோம் அவன் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி , கமெடி பாய்ஸ் குழு நடத்தி, விஜய் டி.வி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமாகி, இன்று சினிமாவிலும் நடித்துக்கொண்டிருக்கிறான், மதுரை "ரோபோ" சங்கர்
ராக்கெட்
உ ன் கண்களின்
பார்வைத் "தீ" பற்ற வைத்த
காதல் நெருப்பில்!
உற்சாகமாய் வானில் பறந்தேன்!
தீபாவாளி ராக்கெட்டைப்ப போல!
விரைவில், வெடித்து
சிதறப்போவது தெரியாமல்!
மத்தாப்பு
நீ!
ரசிக்கிறாய் என்பதற்காக
என்னை கம்பி மத்தாப்பாக!
எரித்துக்கொண்டேன்!
எரிந்து முடித்ததும்!
வீதியில் வீசியெறிந்துவிட்டாய்!
அணுகுண்டு
ஊசி வெடிக்கு
பயந்து நடுங்கியவள்!
என் இதயத்திற்கு
அணுகுண்டு வைக்கும்போது!
கவலையின்றி
சிரித்துக்கொண்டிருந்தாள்!
Thursday, February 08, 2007
(நாம் செய்யும்போதுதான் புரிகிறது)
விவசாய இடுபொருட்கள் நிறுவனத்தில் களப்பணியாளராக வேலை பார்த்தபோது ஒவ்வொரு பகுதியிலும் விவசாயத்தினை பொருத்து சில மாதங்கள் அறை எடுத்து தங்கி இருப்போம் காலையில் விவசாய நிலங்களுக்கு சென்று ஒவ்வொரு விவசாயிகளாக சந்தித்து பேசிவிட்டு மதியஉணவுக்கு ஏதேனும் உணவகத்திற்கு சாப்பிட ஊருக்குள் வந்துவிடுவோம்,பிறகு ஓய்வு எடுத்துவிட்டு எங்கள் நிறுவன பொருட்களை விற்பனை செய்யும் வியாபரிகளை பார்த்து பேசிவிட்டால் அன்றைய வேலை முடிந்துவிடும்,
விளை நிலங்களில் சில விவசாயிகள் சரியாக பேசமாட்டார்கள், சில விவசாயிகள் நன்றாக பேசுவார்கள்,எளிதில் நண்பர்களாகிவிடுவார்கள் அவர்கள் தோட்டத்தில் என்ன இருக்கிறதோ(பழங்கள்,இளநீர்,கிழங்குகள்) உண்ண கொடுப்பார்கள் மிக தாராளமனதுடன் இருப்பார்கள் , சிலர் எவ்வளவு மறுத்தாலும் காய்கறிகளை கொடுத்து "வீட்டுல கொண்டு போய் கொடுங்க தம்பி" என்பார்கள்,அங்கு தங்கியிருந்த மூன்று பேரும் இனி அவ்வப்போது சமைத்து சாப்பிட முடிவு செய்தோம், அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு போய்வரும்போது சமைப்பதற்கு தேவையான பொருட்களை ஆளுக்கொன்றாய் வீட்டிலிருந்து எடுத்து வந்துவிட்டோம்,இதில் நகைச்சுவையான விசயம் என்னவென்றால் எங்கள் யாருக்குமே சமைக்க தெரியாது,
அடுத்த வாரத்தில் ஒரு நாள் மதிய உணவுசமைக்க முடிவு செய்தோம், நான் வீட்டிலிருந்து அம்மாவிடம் கேட்டு சமைப்பதற்க்கு தேவையான சிலகுறிப்புகளை எழுதி வந்துவிட்டேன், இன்னொருவன் சமைக்கும்போது தொலைபேசியில் கேட்டு சாதத்திற்கு குக்கரில் எவ்வளவு தண்ணீர்வைப்பது, எவ்வளவு உப்பு சேர்ப்பது, காரம் சேர்ப்பது என்று கேட்டுக்கொண்டான், இன்னொருவனோ ஒரு சமையல் குறிப்பு புத்தகத்தை வாங்கிவந்துவிட்டான், இதுபோக அந்தந்த பொடி பாக்கெட்டின் பின்புறமே குறிப்பு கொடுத்திருந்தார்கள், எல்லாம் தயார் செய்து மூவரும் சேர்ந்து 1மணிக்கு சமைக்க ஆரம்பித்துவிட்டோம்,
முதலில் காய் பொறியல், அடுத்து சாதம், அடுத்து ரசம்,தயிர் கடையில் வாங்கி விட்டோம், கடைசியில் சாம்பாருக்கு பருப்பு வேகவைத்து காய், சாம்பார் பொடி விட்டுகுக்கரில் விசில்வந்துகொண்டிருந்தது "நல்லா வேகட்டும்டா" என்று 5 விசில் வரும் வரை காத்திருந்து குக்கரை கீழே இறக்கிவிட்டோம், மணி 3ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது,நல்ல பசிவேறு, அவசரமாக உள்ளே இருக்கும் வெப்பக்காற்று வெளியேற விசில்குண்டை கரண்டியால் தூக்கிபிடித்ததும் நல்ல சத்தத்துடன் வெப்பக்காற்று வேகமாக வெளியேறிக்கொண்டிருந்தது பாதி வெளியேறிய நிலையில் இனி திறக்கலாம் என நினைத்து உடனே திறந்துவிட்டேன், உள்ளே அதிக அழுத்ததில் காற்று இருந்ததால் சட்டென்று சாம்பார் பொங்கி என் இடது முழங்கால் முழுவதும் கொட்டிவிட்டது, சூடு தாங்காமல் அலறிவிட்டேன் கொட்டிய இடம் எரிச்சலுடன் வலித்தது கொப்புளம் வராமல் இருக்க உப்பை கரைத்து ஊற்றினோம், அப்படி இருந்தும் கொப்புளமாகி புண்ணாகிவிட்டது, நல்லவேளை "பேண்ட்" அணிந்திருந்ததால் சிறியகாயத்துடன் போனது இல்லையென்றால் ரொம்ப கஷ்டம்தான்,"ஆக்கப் பொறுத்தவுங்க ஆறப்பொறுக்கனும்னு" பழமொழி சொல்லுறது சரியதான் இருக்கு!
ஆர்வமாக ஆரம்பித்த சமையல் சோகத்தில் முடிந்தது, ஒரு வருத்தமான விசயம் இந்த பரபரப்பில் வாங்கி வைத்திருந்த "அப்பளத்தை" பொறிக்க முடியாமல் போய்விட்டது, ஒரு சந்தோசமான விசயம் கடைசியில் அமர்ந்து சாப்பிடும்போது சமைத்த எல்லாமே நல்ல ருசியாக இருந்தது, அன்று இரவு ஒரு சிந்தனை வந்தது ஒரு நாள் ஒருநேரம் சமைப்பதற்க்கே இவ்வளவு நேரமும், இவ்வளவு கவனமும் தேவைப்படுகிறது, ஆனால் எல்லோர் வீட்டிலும் வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு, கவனமாக, இவ்வளவு விரைவாக, இவ்வளவு சுவையாக , அம்மாக்களும் மனைவிகளும், எப்படித்தான் சமைக்கிறார்களோ, அவர்களின் சிரமங்கள் புரிந்தது,
இதற்கு முன்பு நான் என்அம்மாவின் சுவையான சமையலில் சில நேரங்களில், உப்பு, காரம் போன்றவை அளவுமாறிப் போகும்போது அதை பெரியகுறையாக குறிப்பிட்டு சொல்லுவேன், பிறகு அதை எல்லாம் குறைத்துக்கொண்டேன், சில செயல்கள் நமக்கு சாதரணமாக தோன்றினாலும் நாம் அதை செய்யும்போதுதான் அதிலிருக்கும் பிரச்சனைகளும், அதை செய்பவர்களின் சிரமங்களும் புரிகிறது."
Tuesday, January 23, 2007
பள்ளிவாழ்க்கை நினைவுகள் எல்லோருக்குமே இனிமையானவை என்றுமே பசுமையானவை, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஆசிரியர் சில நாட்களில் வகுப்பறைக்கு வெளியே மரநிழலில் வகுப்பு எடுப்பது வழக்கம், வகுப்பறையை விட மரத்தடியில் எல்லோருமே அதிக சேட்டைகள் செய்வோம்,"நாளை '5'வது பாடம் பரிட்சை வச்சுருக்னல எல்லோரும் அமைதியா படிங்கடா!"என்று சொல்லிவிட்டுபுத்தகம் படிப்பதில், மூழ்கிவிட்டார்,
சிலர் உண்மையாவே படித்துக்கொண்டிருந்தனர்,சில
பள்ளி வாழ்க்கையின் சுவரஸ்யமான விசயங்களில் ஒன்று பட்டப்பெயர்கள், ஒவ்வொருவனுக்கும் அவனுடைய தோற்றம், பழக்கங்கள், குணம் ஆகியவற்றுக்கு ஏற்றது போல பட்டப்பெயர்கள் வைத்திருப்பார்கள், சில பெயர்களை கேட்டாலே சிரிப்பு வந்துவிடும் ,அப்படி இருக்கும் ,சொன்னால் பெரிய பட்டியலே இடலாம், ஒருவரை ஒருவர் பட்டப்பெய்ர் சொல்லி அழைக்கும் போது பல நெரங்களில் அது சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் அது பெரிய சண்டையாகிவிடும்,
அன்று
குழந்தையில்
இனிப்பு
அதிகம் சாப்பிடாதே!என
அம்மா
அன்புடன் சொன்னபோது
கேட்காத மனம்!
முதுமையில்
இனிப்பை
தொட்டுகூட பார்ககாதிங்க! என
மருத்துவர் மிரட்டி
சொல்லும்போது கேட்கிறது!
2)எப்படிதெரிந்தது,
காதலிக்கும் போது
கணக்கின்றி செலவு செய்த நான்
நீ சாப்பிட்டு எறிந்த
சாக்லேட் காகிதங்களை
எடுத்துவந்து
பாதுகாத்ததை பார்த்து
ஏளனமாய் சிரித்த
என் நண்பனுக்கு
எப்படிதெரிந்தது,
நீ எறிந்தது
என்னை என்றும்!
நான் பாதுகாத்தது
உன்னை நினைவுகளை என்றும்!
Monday, January 15, 2007
தைத்திருநாளான தமிழர் பெருநாளில் இனிப்பான கரும்பையும்,பொங்கலையும் போல ,மகிழ்ச்சியும் , மன நிறைவும் பொங்கி வழிய ,மஞ்சளை போல மங்களகரமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள்
பொங்கட்டும் பொங்கல்!
பசியின்றி,வேலையின்றி
எல்லோரும் பள்ளிசெல்ல
குழந்தைகள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!
அடிமைத்தனம் அழித்துவிட்டு
பண்பாடு பாதுகாக்க
பெண்களின் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!
போதைதரும் பாதைநீங்கி
பொறுப்புடனே உழைத்துயர
இளைஞர்கள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!
நன்மையான வழிசொல்லி
துன்பத்தில் துணைநிற்கும்
நண்பர்கள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!
இறுதிவரை பிரிவின்றி
இன்பமாய் இணைந்துவாழ
தம்பதிகள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!
உழைப்பின் விளைச்சலுக்கு
உயர்வான விலைகிடைக்க
உழவர்களின் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்
ஊழலின்றி உண்மையாக
நேர்மையுடன் பணியாற்ற
அதிகாரிகள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!
சாதி,மத பேதமின்றி
சமத்துவமாய் இணைந்துவாழ!
பொதுமக்கள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!
துன்பத்தில் அறிவுயர்ந்து
இன்பத்தில் அன்புயர்ந்து
எல்லோரும் நல்லோராக
பொங்கட்டும் பொங்கல்!
~நம்பிக்கை பாண்டியன்
(என்ன செய்கிறோம் என்பதில் இருக்கிறது வெற்றி)
நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறு, இருந்தாலும் சில நேரங்களில் இது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, அப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் நினைவில் இருப்பது நல்லது,
1).நம்மை விட உயர்ந்தவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் போது நாமும் உயர்வதற்கு தேவையான வழிமுறைகள் தெரிய வேண்டுமே தவிர , நாம் உயரவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மையும் வரகூடாது, அவர்கள் உயர்ந்துவிட்டார்களே என்றா பொறாமை மனமும் வரக்கூடாது,
2).நம்மை விட சாதரணமானவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் போது நம் நிலையை எண்ணி மனதிருப்தி வரவேண்டுமே தவிர,நாம் உயர்ந்துவிட்டோம் என்ற கர்வமும் வரகூடாது, அவர்கள் சாதாராணமானவர்கள் என்ற அலட்சியமும் வரக்கூடாது,
சமீபத்தில் நானும் என்னை இப்படி ஒப்பிட்டு பார்த்தேன்,என் சகநண்பன் ஒருவன் இருக்கிறான் என்னைப் போலவே எண்ணங்களும் சிந்தனைகளும் உள்ளவன், படிப்பு, திறமை, பேச்சு, குடும்ப சூழ்நிலை என் எப்படி பார்த்தாலும் இருவரும் சமநிலையில்தான் இருப்போம், அவனும் நானும் பேச ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் நேரம் செல்வதே தெரியாது அந்த அளவிற்கு இருவரின் எண்ண அதிர்வுகளும் இணையாக இருக்கும்,
ஆனால் இன்று அவன் நல்ல வேலை, நல்ல சம்பளம்,வீட்டிற்கு பொறுப்பான பையன்,என மிகச்சிறந்தவனாக இருக்கிறான், ஆனால் நான் அப்படி இல்லை , மோசம் என்றும் சொல்லமுடியாது, சிறந்த நிலை என்றும் சொல்ல முடியாது, இடைப்பட்ட மத்திமமான நிலையின் இருக்கிறேன், நான் நினைப்பது போலவே அவனும் நினைக்கிறான், அவனுக்கு தெரிந்த எல்லாமே ஓரளவுக்கு எனக்கும் தெரியும். ஆனால் இருவரின் நிலையிலும் வேறுபாடு ஏன்?என்று சிந்தித்தால் அதற்க்கு பல காரணங்கள் இருக்கிறது , இருந்தாலும் முக்கியமான காரணம் என்னவென்றால்,வாழ்க்கையில் வெற்றிபெற அவன் தனக்கு தெரிந்ததையும், தான் நினைத்ததையும் அதிகமாக செயல்படுத்துகிறான், நான் குறைவாக செயல் படுத்துகிறேன்,
உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம் . பொதுவாகவே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க , சாப்பிடுவதற்கு தகுந்தாற்போல உழைக்கவேண்டும் , இல்லையெனில் உழைப்பதற்கு தகுந்தாற்போல சாப்பிடவேண்டும் இவை இரண்டுக்கும் இடையே வித்தியாசம் அதிகமானால் உடலுக்கு ஆபத்துதான் , இயல்பாக இருவருமே நொறுக்குத்தீனி அதிகம்சாப்பிடுவோம்,இதனால் உடல் எடை சராசரியை விட அதிகரித்துவிட்டது ,இது பற்றி ஒரு நாள் பேசும் போது அதிகாலை ஓட்டப்பயிற்சி எடுத்துக்கொண்டால் எடை குறைந்துவிடும் என்று முடிவெடுத்தோம், இருவருமே அதிகாலை எழுந்து ,அவன் வீட்டருகே அவன் ஓட ஆரம்பித்தான், நான் என் வீட்டருகே ஆரம்பித்தேன், சில நாட்களுக்கு பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக நான் வழக்கம் போல தூங்க ஆரம்பித்துவிட்டேன், அவன் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து எடையை முழுவதும் குறைத்து சராசரிக்கு கொண்டு வந்து விட்டான்,நான் திண்பண்டங்களை குறைத்து ஓரளவிற்கு குறைத்துவிட்டேன்.இதே போல்தான் எந்த ஒரு விசயத்திலும் இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது.
இதன் வழியே "வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் என்ன நினைக்கிறோம், நமக்கு என்ன தெரியும் என்பதில் இல்லை! நமக்கு தெரிந்ததையும் நாம் நினைத்ததையும் கொண்டு என்ன செய்கிறோம் எனபதில்தான் இருக்கிறது!" என்பதை அறிந்த பிறகு இப்போது நானும் அதன் வழியில் சென்று கொண்டிருக்கிறேன்.
இதன் வழியே "வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் என்ன நினைக்கிறோம், நமக்கு என்ன தெரியும் என்பதில் இல்லை! நமக்கு தெரிந்ததையும் நாம் நினைத்ததையும் கொண்டு என்ன செய்கிறோம் எனபதில்தான் இருக்கிறது! " என்பதை அறிந்த பிறகு இப்போது நானும் அதன் வழியில் சென்று கொண்டிருக்கிறேன்,
Tuesday, January 09, 2007
உன் காதலுக்கு நன்றி
"உன்னைப் போல
என் மனதைக் கவர்ந்தவர்கள்
யாருமே இல்லை" என்றாய் !
"உன்னைப்
பார்க்காவிட்டால் அன்று
தூக்கம் வருவதில்லை" என்றாய்!
உன்னுடன் பேசாவிட்டால்
அன்று முழுவதும் எதையோ
இழந்தது போல இருக்கிறது" என்றாய்!
"நீ இல்லாத
வாழ்க்கையயை என்னால்
கற்ப்பனை செய்து கூட
பார்க்க முடியவில்லை என்றாய்!
"நம்மைப் பிரிக்க
யாராலும் முடியாது"என்றாய்!
காதலின் வேகத்தில்
அடுக்கடுக்காய்
வந்து விழுந்தன வார்த்தைகள்
அத்தனையும் மறந்துவிட்டு
"இனி நாம்
பிரிவதை தவிர
வேறு வழி இல்லை"என்றாய்!
அடுத்த ஜென்மத்தையும் சொல்லி
போலித்தனமான ஆறுதல் தேடினாய்!
காதலித்திருந்தால்
இதுபோனால் இன்னொன்று
என்றிருப்பேன்!
வாழ்க்கைக்காக
காதலித்ததால்தான்
வலிக்கிறது என்கிறேன்!
அழுது கொண்டிருக்கும்
என் கண்களுக்கு
காலம் ஆறுதல் சொல்லும்!
நம் காதலை
என்னால் மறக்க முடியாதுதான்!
ஆனால்
எதற்க்கும் பயன்படாத
வீண் நினைவுகளை
நிச்சயமாக குறைக்க முடியும்!
விடை தராத உன்
மாற்றங்கலை மறந்து!
தடை வராத என்
லட்சியங்களில் நிறைகிறேன்!
இனி
என் வாழ்வில்
எந்த ஒரு ஏமாற்றத்தையும்
சாதாரணமாக எடுத்துகொள்ளும்
மனப் பக்குவத்தை கொடுத்த
உனக்கு ஒரு நன்றி!
உன் காதலுக்கு ஒரு நன்றி!
Monday, January 08, 2007
(முன்னோர்கள் அர்த்தமுள்ளவர்கள்)
இன்றுவரை நான் பெரும்பான்மையான நாட்களில்,என் வீட்டில் தூங்குவதில்லை என் அய்யம்மா(பாட்டி(அப்பாவின் அம்மா) வீட்டில் மொட்டைமாடியில் என் அத்தை பையன்களுடன் தூங்குவதுதான் வழக்கம்,ரேடியோவை பாடவிட்டுவிட்டு தூங்காமல் நீண்ட நேரம் பேசிகொண்டே இருப்போம்,பாட்டி "இன்னும் என்னடா சத்தம் தூங்குங்கடா", என திட்டிகொண்டே இருப்பார்கள்.
அப்படி தூங்கும் போது தலை முதல் கால்வரை போர்வையால் இழுத்து போர்த்திதான் அதிகம் தூங்குவோம்,ரேடியோ பாடிக்கொண்டே இருக்கும் தூங்கிவிடுவோம் வானொலியை நிறுத்த வருவார்கள்,தூங்கிக்கொண்டிருக்கும் எங்களின் முகத்திலிருக்கும் போர்வையை விலக்கி விட்டு "மொகத்தை மூடாம படுங்கடா! அறிவு கெட்ட பயலுகளா,"" செத்த பொணத்துக்குதான் முகத்தை மூடுவாங்க என்று சொல்லி விட்டு போவார்கள், ""பேசாமா போய் தூங்குங்க அயமா"" என்று சொல்லிவிட்டு அவர்கள் போன பிறகு திரும்ப போர்த்திகொள்வோம்.அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள், ( நாங்கள் வெயில் தள்ளிவர வர சுவற்றை ஒட்டி நகர்ந்து நகர்ந்து படுப்போம்,காபி தாயாராக்கிவிட்டு கூப்பிட்டுகொண்டே இருப்பார்கள்,முகத்தில் சுள்ளென்று வெயில் அடிச்சதுக்கப்புறம் தான் எழுந்திருப்போம்,
அவர்கள் அடிக்கடி சொன்ன "முகத்தை மூடாம படுங்கடா" என்ற வார்த்தை அப்போது பெரியதாக தெரியவில்லை, சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு தொலைக்காட்சி மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியில்மருத்துவர் இதுபற்றி தெளிவாக சொன்னார்
"தூங்கும்போது முகத்தை மூடாமல் படுக்கவேண்டும் அப்போதுதான் தூக்கத்திலும் நமக்குத் தேவையான ஆக்சிஜன் திறந்தவெளியில் இருக்கும் காற்றில் இருந்து தடையின்றி கிடைக்கும்,உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்கும். போர்வையால் கால் முதல் முகம்வரை மூடிக்கொண்டு படுக்கும் போது நாம் சுவாசிப்பதற்கு போர்வைக்குள் இருக்கும் காற்று மட்டுமே கிடைக்கும் அதே காற்றே திரும்ப திரும்ப சுழற்சி ஆகும், போர்வையை ஊடுருவிச்செல்லும் காற்று குறைவு உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்காது,முகப்பொலிவும் குறைந்துவிடும்",என்று தெளிவாக சொன்னார்,
அப்போதுதான் பாட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்தது,பிணத்திற்கு ஆக்சிஜன் தேவை இல்லை என்பதால் தான் முகத்தை மூடுகிறார்கள் என்பதும் விளங்கியது அவர்களுக்கு கையெழுத்துகூட போடத்தெரியாது ஆனால் இந்த அறிவுபூர்வமான கருத்தை வேறு விதத்தில் அறிவுரையாக சொல்லியிருக்கிறாகிறார்கள். இதைப்படித்ததும் நான் முகத்தை மூடாமல் தூங்கி பார்த்தேன் தூக்கம் வரவில்லை என்னை அறிவாளியாக கற்பனை செய்துகொன்டு போர்வையில் முகத்திற்கு நேராக வரும்படி சற்று பெரிய ஓட்டை ஒன்றை ஏற்படுத்திவிட்டு தூங்கினேன், (வீட்டில் போர்வையை எலி கடித்து விட்டது என்று பொய் சொல்லி சமாளித்துவிட்டேன்,)
நம் முன்னோர்கள் சொல்லும் சில விசயங்கள் அர்த்தமில்லாததாக இருந்தாலும் பல விசயங்கள் நல்ல நோக்கத்துடன் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது, நாம் தான் அதில் பலவற்றை சரியாக புரிந்துகொள்வதில்லை, பாட்டி இரு ஆண்டுகளுக்கு முன்தான் இறைவனடி சேர்ந்தார்கள், என்னை சுற்றி இருந்தவர்களில் கடும் வைராக்கியத்துடனும் இறுதிவரை கடின உழைப்புடனும் வாழ்ந்த அவர்களிடம் கற்ற விசயங்கள் மிக அதிகம்.
Friday, January 05, 2007
(பட்டால்தான் புரிகிறது)
சிறுவயதில் துருதுருவென இருப்பவர்களில் நானும் ஒருவன்,சாலையில் ஏதேனும் விளையாடிகொண்டே போவேன், மரத்தின் அருகே வரும்போது தாவி குதித்து இலைகளை பறிக்க முயற்சிப்பேன்,
அப்போது ஒரு வீண் பழக்கம் இருந்தது. தெருவிலும், சாலையிலும் நடந்து செல்லும் போது, கீழே கிடக்கும் பொருட்களான காலி அட்டைப்பெட்டி,சிறிய டப்பாக்கள்,தின்று வீசப்பட்ட மக்காச்சோள கட்டைகள்,தேங்காய் சிரட்டைகள், போன்றவற்றை காலில் உதைத்து விளையாடிகொண்டே செல்வேன்(ஹி..ஹி..ஹி..மனசுல பெரிய கால்பந்து வீரர்ங்கிற நெனப்புதான்), இந்த பழக்கத்தால் சாலையின் ஓரத்தில் கிடக்கும் பொருட்கள் கூட என்னால் நடு சாலைக்கு வந்துவிடும், ""கைய கால வச்சுகிட்டு ரோட்ட்டுல சும்மா போடா""என்று பலர் பலமுறை கண்டித்துள்ளார்கள்,நான் கேட்கவில்லை,
எங்கள் ஊர் தேசிய நெடுஞ்சாலையின் மேல் அமைந்துள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும்,ஒருமுறை பள்ளிவிட்டு வரும்போது சாலையில் கிடந்த சிறிய காலி பிளாஸ்டிக் டப்பாவை உதைத்து விளையாடிக்கொண்டே சென்றேன்,
"ஏ!ஏ! இந்தா!! சூப்பர் சாட்"" என்று சொல்லி ஆவேசமாய் ஓங்கி ஒரு உதைகொடுத்தேன் அந்த டப்பாவை! அது சாலையில், சென்று கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் பட்டு, அதே வேகத்தில் திரும்பி வந்து என் வாயில் அடித்துவிட்டு தெறித்து ஒடியது, இரு உதடுகளிலும் காயம்,சிறிது இரத்தமும் வந்து விட்டது அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றேன். இரு உதடுகளும் வீங்கி அடுத்த நாள்முழுவதும் வீங்கி பள்ளிக்கும் செல்லவில்லை பார்க்க குரங்கு போல இருந்தேன்,காயம் ஆறும்வரை வலி இருந்தது.
சரி இந்த சம்பவத்திற்கு பிறகு கீழே கிடக்கும் பொருட்களை உதைப்பதை நிறுத்தினேனா? என்றால், அதுதான் இல்லை , உதைப்பதில் சிறிய மாற்றம், முன்பு ஓரத்தில் கிடக்கும் பொருட்களை உதைத்து நடு சாலைக்கு கொண்டு வருவேன் விளையாட்டு புத்தியுடன்,இந்த சம்பவத்துக்கு பிறகு நடு சாலையில் கிடக்கும் பொருட்களை ஓரத்திற்கு உதைத்துவிடுவேன் சமூக அக்கறையுடன்,
என்னை சுற்றி நடந்த இந்தசம்பவம் அன்று அதிகம் யோசிக்க வைக்கவில்லை, இன்று யோசித்தால் ஒரு உண்மை புரிகிறது , நாம் செய்யும் தவறுகள் நம்மை பெரிய அளவில் பாதிக்காதவரை அதை நாம் திருத்திக்கொள்வதே இல்லை, பாதிக்கப்பட்டபிறகுதான் தவறை உணர்ந்து தாமதமாக திருத்திக்கொள்கிறோம் ( சிலர் அப்படியும் திருந்துவதில்லை)
என்னை சுற்றி நான் சந்தித்த சம்பவங்கள்& மனிதர்கள்,
என்னை சுற்றி நான் அறிந்த & உணர்ந்த கருத்துக்கள்,
என்னை சுற்றி நடந்த சுவரஸ்யமான நிகழ்வுகளில்
சிலவற்றை எழுதுகிறேன்
(இது போன்று எழுதுவதற்கு, அறிவும், தகுதியும் மிக குறைவு இருந்தாலும் சொல்ல வரும் விசயங்களை சிறப்பாக சொல்ல முடியும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்)
என்னை சுற்றி!
(கஷ்டம் அதிகமானல்)
கல்லூரி முடித்ததும் ,சில மாதத்தில்ஒரு விவசாயத்திற்கு தேவையான , நுண்ணுரங்கள்,பூச்சிகொல்லி மருந்துகள்,போன்றவை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் களப்பணியாளராக 3 ஆண்டுகள் வேலை பார்த்தேன்(2001,2002, 2003).
எங்கள் வேலை கிராமம் கிராமமாக விவசாயநிலங்களுக்கு விவசாயிகளை சந்தித்து எங்கள் நிறுவன தயாரிப்புகளை பரிந்துரை செய்ய வேண்டும், ஒருமுறை விளாத்திகுளம் அருகே ஒரு விவசாயியை பார்க்க சென்றிருந்தேன், அவர் கடையில் டீ சாப்பிட்டுகொண்டிருந்தார், என்னை அறிமுகம் செய்து கொண்டேன், "சற்று பொறுங்க தம்பி" என்று எனக்கும் சேர்த்து டீ சொல்லி விட்டு நண்பருடன் பேச்சில் ஆர்வமானார்,, இந்த வேலைக்கு பொறுமைதானே மிகவும் அவசியம்,
அவர்களின் பேச்சை கவனித்தேன், விவசாயி பக்தி உள்ளவர், அவரது நண்பர் நாத்திகர், அந்தவழியாக திருச்செந்தூருக்க்கு சிலர் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்களை பார்த்து அவர் நண்பர் "பாத யாத்திரையாக போனால்தான் சாமி அருள் கொடுக்குமா, சாமி இப்படி வர சொல்லுச்சா உங்களை" ஏன்யா இப்படி வெட்டிவேலை செய்யுரிங்க" என்றார்,
அதற்கு விவசாயி " மாப்ள நீ ஒரு மில்லுல வேலை பார்கிற, உனக்கு 8 மணி நேர வேலைக்கு 80 ரூபா சம்பளம், அதே மில்லுல ஓவர் டைம்(O.T) நாலு மணிநேரம் சேர்த்து 12 மணி நேரம் வேலை பார்க்குற 120 ரூபா சம்பளம், இதில் எது சுலபம் எது கஷ்டம்""என்றார்
"8மணி நேரம் சுலபம் 12 நேரம் கஷ்டம்"என்றார் நண்பர்
""8மணி நேர சுலப வேலைக்கு 80 ரூபா சம்பளம்12 மணி நேர கஷ்டமான வேலைக்கு 120 ரூபா சம்பளம்"",
இதுல இருந்து என்னா தெரியுது கஷ்டம் அதிகமான பலன் அதிகமா கிடைக்கும், ""சும்மா சாமி கும்பிட்டா கிடைக்கிற பலன விட! மனசு சுத்தமா , விரதமிருந்து..நடந்து நம்மை நாமே கஷ்டபடுத்தி கிட்டு கும்பிட்டால் அதோட பலன் அதிகமா இருக்கும் அதான் இப்படி எல்லாம்" "சிலர் இது தெரியாம இதோட நோக்கத்தையே மறந்திடுறாங்க"
" அது மட்டுமில்ல மாப்ள இந்த உலகத்துல நல்லவனா வாழுறதும் கஷ்டம் வாழ்ந்தா அதற்கு பலன் அதிகம்,"" என்று சொல்லி அவரை பதில் பேசமுடியாமல் செய்து விட்டார், என்னை சுற்றி நான் கற்றதில் அவரின் " கஷ்டம் அதிகமானல் பலன் அதிகமாகும்" என்ற வார்த்தை அடிக்கடி நம்பிக்கை கொடுக்கும் வார்த்தை,