Tuesday, October 11, 2011

கடவுள் நம்பிக்கை


கடவுள் இருக்கிறாரா? இல்லையா ?என்ற விவாதங்களை தவிர்த்து கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் அதனால் அடையும் நன்மைகள் அதிகம் என்பதை வலியுறுத்தவே இந்த பதிவு.
"நம்பினார் கெடுவதில்லை! நான்கு மறை தீர்ப்பு!" எனகிறது இந்துமதம், "நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்!"என்கிறது கிறிஸ்தவம், எந்த அளவிற்கு இறைவனை நம்புகிறீர்களோ,அந்த அளவிற்கு அவன் அருள்புரிவான்" என்கிறது இஸ்லாம்,எனவே கடவுள் நம்பிக்கையே பலரது மனக்காயங்களை ஆற்ற சிறந்த மருந்தாக பயன்படுகிறது,

மனம் உருகி பிரார்த்தனை செய்த மனமானது மழை பெய்து முடித்த வானம் போல் தெளிவாக இருக்கும்,என்கிறார்கள் ஆத்மஞானிகள், கடவுள் நம்பிக்கை இருக்கலாம, ஆனால் அது கண்மூடித்தனமானதாகவும் இருக்கக்கூடாது, உழைக்கவேண்டிய நேரத்தில் உழைத்துவிடவேண்டும், என்பதையும் மறந்துவிடக் கூடாது, மழைபெய்யும்போது உங்களால் மழையை நிறுத்த முடியாது ஆனால் மழையிலிருந்து பாதுகாக்க குடை பிடிக்க உங்களால் முடியும், அது போல்தான் கடவுள் நம்பிக்கையும் பிரச்சனைகளை தவிர்க்கமுடியாவிட்டாலும் நீங்கள் அதிலிருந்து தப்பிப்பதற்கும்,அதனை தீர்ப்பதற்கும் உங்களுக்கு வழியை கொடுக்கும்.
உங்களின் மிகச்சிறந்த நண்பனாக கடவுளைபோல் யாரும் இருக்கமுடியாது, கடவுளிடம் நீங்கள் என்ன பேசினாலும் அவர் உங்களை தவறாக நினைப்பதில்லை, உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து கூறி விவாதம் செய்வதில்லை, நீங்கள் சொல்வதை அவர் வேறுயாரிடமும் சொல்வதில்லை.

" மனம் ஒன்றாத பூஜைகளாலும் ,வெறுமனே புகழ்ந்து போற்றுவதாலும், கடவுளை கவர்ந்துவிட முடியாது, நல்ல இயல்புகளாலும், நன்மை தீமையை பிரித்தறியும் அறிவாலும், சுயநலமற்ற செயல்களாலுமே இறைவனை எளிதில் கவர முடியும்!" என்கிறார் புதுச்சேரி ஸ்ரீஅன்னை, துன்பத்தில் மட்டுமல்ல இன்பத்திலும் இறைவனை நினைப்பவனே உண்மையான பக்தன் என எல்லா மதங்களூம் வலியுறுத்துகின்றன

கடவுள்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, வேதங்களில் எவையெல்ல்லாம் பாவங்கள் என்று பட்டியலிட்டு சொல்லும்போது,"ஒரு கடவுளை விரும்பி, மற்ற கடவுளை நிந்தனை செய்வது பாவம் " என்கிறது, பெயரில்வேறுபட்டிருக்கும் கடவுளும் மதங்களும் தத்துவங்களின் அடிப்படையில் ஒன்றாகவே இருக்கின்றன,

அதுவேண்டும் இதுவேண்டும் என்று கேட்டு ஒரு சிறிய வட்டத்துக்குள் உங்கள் பிரார்த்தனைகளை அடைத்துவிடாதீர்கள், எனக்கு எது நல்லதோ அதை தா, என்று பிரார்த்தித்து உங்களை இறைவனிடம் சமர்பித்துவிடுங்கள் உங்களுக்கு இறைவன் அருள் பர்பூரனமாக கிடைக்கும்!" என்கிறார் மகான் அரவிந்தர். "உன்னுடைய பிரார்த்தனை நேர்மையானதாகவும், நீ அதற்கு தகுதியுடையவனாவும் இருக்கும் பட்சத்தில் அது நிச்சயம் நிறைவேறும் !"என்று நம்பிக்கை தருகிறார் கவிஞர் கண்ணதாசன்.
கடவுள் நம்பிக்கை பலரது வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறது,தீராத நோய்களையும் தீர்க்கவே முடியாத பல பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துவைக்கிறது,இதை பலரது அனுபவத்தில் உணரலாம்!.
எனது இறைஅனுபவங்களில் ஒன்று :-

நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது குற்றாலம் பகுதியை சேர்ந்த நண்பன் ஒருவன் உடன் படித்தான்,குற்றாலம் சீசன் வருவதால் அங்கு சென்று அவனது உறவினர் வீடு ஒன்று காலியாக இருக்கிறதென்றும் அதில் தங்கி இரண்டு நாட்கள் எல்லா அருவிகளிலும் நன்கு குளித்துவிட்டு வருவோமென்று பத்து நாட்கள் முன்பாகவே திட்டமிட்டோம் எங்கள் திட்டத்தில் 12 நண்பர்கள் சேர்ந்துவிட்ட்டார்கள், திட்டமிட்ட 3 நாட்களுக்கு முன் எனக்கு கடுமையான காய்ச்சல் , மருத்துவமனைக்கு சென்று 3 நாட்களும் ஊசிபோட்டேன், மாத்திரை வாங்கி சாப்பிட்ட்டேன் சற்று குறையும், பிறகு மீண்டும் அதிகரித்துவிடும்,மிகவும் சோர்வடந்து நான் குற்றாலம் வரவில்லை என்று சொன்னேன்,
கல்லூரிகளில் இருக்கும், அப்பாவி, படிப்பாளி, பந்தா, காமெடி, ரெளடி, குழுக்களில் நான் காமெடிக்குள் அடங்கிவிடுவதால் என்னை நண்பர்கள் அவசியம் வரவேண்டும் என்று மிகவும் வற்புறுத்தினார்கள், புறப்படும் நாள் வரை எனக்கு காய்ச்சல் விடவில்லை,வெள்ளிகிழமை இரவு புறப்படுவதால் வெளியூர் நண்பர்கள் வீட்டிலிருந்து தயாராகவே வந்துவிட்டார்கள், மாலை 5 மணிக்கு கல்லூரி முடிந்ததும் இரவு வரை பொழுபோவதற்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டார்கள், எங்கள் நண்பர்கள் குழுவிற்கு சில நல்ல பழக்கம் இருந்தது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாதத்தில் இருமுறையாவது அவசியம் சென்று விடுவோம், அன்றும் அவ்வாறே திட்டமிட்டார்கள், இவர்களுடன் சேர்ந்து குற்றாலம்தான் போகமுடியவில்லை சிறிது நேரம் கோவிலுக்காவது போவோமென்று, சோகமும் சோர்வும் கலந்து உடன் சென்றேன்.
வெளிவாசலின் உள்ளே நுழைந்ததும், ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பதால் மிக மிக அதிகமான கூட்டம், நீண்ட வரிசை நிற்கிறது வரிசையிலும் பயங்கர நெரிசல் வேறு, நாங்களும் வரிசையில் சேர்ந்துகொண்டோம் வரிசை மெதுவாக நகர்கிறது, காய்ச்சல் சிலநாட்களில் சரியாக வேண்டுமென்று வேண்டிக்கொண்டே, எனக்கு தெரிந்த 4 வரி அம்மன் பாடல்களை மனதிற்குள் பாடிக்கொண்டே செல்கிறேன், கூட்ட வரிசையில் எனக்கு வியர்த்துகொட்டுகிறது , 6 மணிக்கு உள்ளே நுழைந்தோம் மீனாட்சி அம்மன் அருகில்ல செல்ல இரவு 7.40 ஆகிவிட்டது நாங்கள் அம்மன் அருகில் வரும்போது இரவு பூஜைக்காக சன்னதியில் திரைபோட்டுவிட்டார்கள், கால்கள் வலித்தன,அரைமணி நேரம் பொறுமையாக நின்று அபிசேகம் முடிந்து, திரை நீக்கி தீபஆராதனைகள் பார்த்து , சுவாமி சன்னதி சென்று தரிசனம் செய்து பொற்றாமை குளத்தின் கரையில் அமர்ந்தபோது இரவு 9 மணி ஆகியிருந்தது.

தெப்பக்கரையில் அமர்ந்தபோது என்னால் ஒரு வித்தியாசத்தினை உணரமுடிந்தது, என் உடல் குளிர்ந்து இருந்தது கடந்த 3 மணி நேரத்திற்கு முன் இருந்த என் காய்ச்சல் இப்பொழுது முழுதாக இல்லாமல் போனது, அந்த சந்தோசமே புதிய உற்சாகத்தை தந்தது, பொறுமையாக கால்கடுக்க காத்திருந்து மனம் ஒன்றி பிரார்தித்த பலன் என்று நினைத்துக்கொண்டேன், உற்சாகமாக சேர்ந்துகொண்டேன் குற்றாலக் குழுவில். என் நண்பர்களே ஆச்சர்யபட்டார்கள், இரு நாட்கள் சந்தோசமாக கழிந்தன,
அந்த சம்பவத்திற்கு பிறகு எந்த கோவிலில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சலித்துக்கொள்ளாமல் பொறுமையாக இருந்து தரிசிக்கும் ஒரு பக்குவம் வந்துவிட்டது! ஒவ்வொருவரும் இதுபோல் வெவ்வேறு விதத்தில் இறையருளை உணர்ந்திருக்கிறார்கள், இறை நம்பிக்கையில் உறுதியாகவும் உண்மையாகவும் இருங்கள், உங்கள் நேர்மையான பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும்!

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

முழுநம்பிக்கை வைத்து மனதார வழிபட்டால் நிச்சயமாக எந்த நியாயமானப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். எனக்கும் இதில் நிறைய அனுபவங்கள் உண்டு.

நல்லதொரு பகிர்வு.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.

சீனுவாசன்.கு said...

வேர்த்து கொட்டினா ஜுரம் தானாவே பூடும் நைனா!அதான் மேட்டரு!சரி வுடு!கடவுள் இருக்காருன்னே நம்புவோம்!

அ. வேல்முருகன் said...

கடவுள்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது,

அப்படியா?......

நால்வகை வருணம் ஏன் வந்தது. நாயினும் கீழாக ஏன் மக்கள் நடத்தப்படுகின்றனர் கோயிலில்.

நம்பிக்கைபாண்டியன் said...

வை.கோபாலகிருஷ்ணன்
சீனுவாசன்.கு
அ. வேல்முருகன்

தங்களின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி!

நம்பிக்கைபாண்டியன் said...

சீனுவாசன்.கு said...

வேர்த்து கொட்டினா ஜுரம் தானாவே பூடும் நைனா!

மூன்று நாட்களாக மாறாமல் அந்த சில மணி நேரங்களில் மாறியதால் அப்படி உண்ர்ந்தேன்!

நம்பிக்கைபாண்டியன் said...

(((கடவுள்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது,

அப்படியா?.....

நால்வகை வருணம் ஏன் வந்தது. நாயினும் கீழாக ஏன் மக்கள் நடத்தப்படுகின்றனர் கோயிலில்.))))

ஒரு சிலர் என் கடவுள் உயர்ந்தது உன் கடவுள் தாழ்ந்தது என்று சொல்வது தவறு என்ற அர்த்தத்தில் அவ்வாறு சொன்னேன்!

கடவுளின் பெயரால் மனிதனால் மிகைபடுத்தப்பட்ட விசயங்கள் நிறைய இருக்கின்றன!அதை பற்றி விவாதிப்பதில் உடன்பாடில்லை எனக்கு!
நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது, அது கடவுள்! அதுவே என் அனுபவம்! உங்கள் அனுபவத்தை வைத்து உங்கள் கருத்து!

Anonymous said...

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்


- கவிஞர் கோ கண்ணதாச



திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



Online Books
http://www.vallalyaar.com/?p=409



http://sagakalvi.blogspot.com/


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி