Saturday, February 11, 2012

உனக்கு பிடித்ததும் எனக்கு பிடித்ததும்! - கவிதை


தொட்டிலில்
தூங்கிக் கொண்டிருந்த‌
நம் அன்புக் குழந்தையின்
முதல் பிறந்த நாளுக்கு!
ஆடை வாங்குவது பற்றி!
கட்டிலில் அமர்ந்தபடி
பேசிக்கொண்டிருந்தோம்!

 
முதல் பிறந்தநாள்!
வாழ்க்கை முழுவதும்
மங்களகரமாய் இருக்க!
உனக்கு பிடித்த‌
மஞ்சள் நிறத்தில்
ஆடை எடுக்கலாம்!
என்கிறாய் நீ,

முதல் பிறந்தநாள்
வாழ்க்கை முழுவதும்
பசுமையானதாக இருக்க!
எனக்கு பிடித்த
பச்சை நிறத்தில்
ஆடை எடுக்கலாம்!
என்கிறேன் நான்,

இருவரும்
சொன்னதையே
சொல்லிக்கொண்டிருக்க!
பேச்சு விவாதமாகி!
விவாதம் சண்டையாகி!
தலையணைகளால்
தாக்கிக்கொண்டோம்!
உன் இடை பற்றி
இழுத்தவுடன்!
என் தோள் பற்றி
சாய்ந்து கொண்டாய்.........
........................................
............................!

கூடி களைத்த பின்,
முத்தமிட்டபடி,
உனக்கு பிடித்த
மஞ்சள் நிறத்திலேயே
ஆடை எடுக்கலாம்!
என்கிறேன் நான்,
இல்லை! இல்லை!
உங்களுக்கு பிடித்த‌
பச்சை நிறத்திலேயே
ஆடை எடுக்கலாம்!
என்கிறாய் நீ!
ஆரம்பித்தோம்
அடுத்த சண்டையை....
................................!


மறுநாள் மாலை
வாங்கி வந்த‌ ஆடையில்!
மஞ்சளும் பச்சையும்!
சமமாய் கலந்திருந்தது!
நம்மைப் போல்!



9 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

இரு மனங்களின் போராட்டத்தை
கவிதை வரிகளாலும்
வண்ணங்களாலும் சொன்னவிதம் அருமை..

சசிகலா said...

சராசரி விவாதத்தையும் கவிதை வடிவில் தந்த விதம் அருமை .

ஹேமா said...

பச்சையும் மஞ்சளுமாய் காதல் காலக் கவிதை கலக்கல் !

Marc said...

அட ஒரே கவிதையில் எல்லாம் முடிந்து விட்டதே அருமை.


அருமைப்பதிவு வாழ்த்துகள்

மகேந்திரன் said...

இதுதானய்யா...
நம் இல்வாழ்க்கையின் சுவை.
சிறு ஊடலும் அதன் பின் கூடலும்..
ஏழாம் சுவை இந்த இல்லறச் சுவை.

ரசித்து படித்தேன் உங்கள் அழகிய கவிதையை.

நம்பிக்கைபாண்டியன் said...

குணா,
சசிகலா,
ஹேமா,
தனசேகர்,
மகேந்திரன்,
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி!

தீபிகா(Theepika) said...

அற்புதமான அனுபவ உண்மை அழகான வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. வாதங்கள் அர்த்தமற்றவையாயினும் அடிக்கடி கணவன் மனைவிக்குள் எழுந்து அடங்குவது இயல்பே. வாதங்களை முடித்துக்கொள்கிற அழகு வழிகாட்டுகிறது எல்லோருக்கும்.

நம்பிக்கைபாண்டியன் said...

கருத்துக்களுக்கு நன்றி தீபிகா,

வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி சம்பத்!

அருணா செல்வம் said...

எதார்த்தத்தைச் சொல்லிச் சென்ற விதம் அருமை!